சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் நெருக்கடியில் சிக்கியிருப்பது துரதிர்ஷ்டம். சரியாக 83 ஆண்டுகளுக்கு முன்னால் ராஜா அண்ணாமலை செட்டியார் கொடையாக அளித்த 20 லட்சம் ரூபாய் உதவியுடன் நிறுவப்பட்ட சிறு பல்கலைக்கழகம் இன்று மருத்துவ, பொறியியல் கல்லூரிகளும் 49 துறைகளும் கொண்ட மிகப்பெரிய நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது. ஏனைய பல்கலைக்கழகங்களில் இருந்து மாறுபட்டு இங்கு இணை வேந்தர் பொறுப்பை கொடையாளர் வாரிசுகள் வகித்து வருகின்றனர். அதனால் நிர்வாகத்தில் அரசாங்கத்தின் பங்களிப்பு பெயரளவில் மட்டுமே இருந்து வருகிறது. பணியாற்றுவோர் ஊதியத்துக்காக அரசு ஆண்டுக்கு 61 கோடி வழங்குகிறது. அதுவும் சரியாக கிடைப்பதில்லை என்று பதிவாளர் தெரிவித்துள்ளார்.எனினும், அரசு ஒப்புதல் தந்த 860 ஆசிரியர் பதவிகளுக்கு பதிலாக 3,896 ஆசிரியர்களும், அங்கீகரித்த 1,820 பணியாளர்களுக்கு பதில் 9,434 பேரும் வேலை செய்வதாக தெரியவந்துள்ளது. பெரும்பாலான நியமனங்கள் கணிசமாக பணம் பெற்றுக் கொண்டு செய்யப்பட்டவை என்றும், அந்த நிதி பல்கலைக்கழக கணக்கில் சேர்க்கப்படவில்லை என்றும் ஆசிரியர் & ஊழியர் கூட்டமைப்பு குற்றம் சாட்டுகிறது. பட்ஜெட்டில் 48 கோடி துண்டு விழுவதாக 1999ம் ஆண்டிலேயே அறிக்கை அளித்த நிர்வாகம், அதன் பின்னர் ஆறாயிரம் பேரை நியமனம் செய்தது ஏன் என்று கேட்கிறது. துணைவேந்தர் தரும் விளக்கம் தவறாக தெரிய வில்லை. 'கடந்த 15 ஆண்டுகளில் பல்கலைக்கழ கம் பெரிதும் வளர்ச்சி அடைந்துள்ளது. பாட திட்டங்கள், மாணவர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. நாலாயிரம் பேர் பயின்ற தொலைதூர கல்வி பிரிவில் தற்போது நாலரை லட்சம் பேர் பயில்கிறார்கள். ஆகவே ஆசிரியர் & ஊழியர் தேவையும் அதிகரித்தது' என்கிறார் அவர். ஆசிரியர், பணியாளர் நியமனம் மட்டுமின்றி மாணவர் சேர்க்கையிலும் நிறைய பணம் புழங்குவதாக பல காலமாக பேச்சு இருந்து வருகிறது. இதனால் உரிய தகுதிகள் இல்லாதவர்களும் பலன் அடைந்திருப்பார்கள். ஆசிரியர், பணியாளர் எண்ணிக்கையை குறைக்கவும், ஊதியத்தை பாதியாக குறைக்கவும் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. பல்கலைக்கழகத்தை காப்பாற்ற வேண்டுமானால் தற்காலிகமாவது இந்த சிக்கனம் அவசியம் என்கிறது. தேவையற்ற நியமனங்கள் என்ற புகாரை முன்வைத்துள்ள கூட்டமைப்பு, இந்த வாதத்தை முற்றிலுமாக நிராகரிக்க முடியாது. தகுதி அனுபவம் உள்ளவர்களுக்கு பாதிப்பு நேரக்கூடாது என்பதை வலியுறுத்தலாம்.
ஆனால், இந்த ஏற்பாடு பாரபட்சமின்றி செயல்படுத்தப்பட வேண்டும் என்றால் தனி அதிகாரம் கொண்ட வல்லுனர் குழுவை கூட்டமைப்புடன் ஆலோசித்து நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும். ஊதிய குறைப்பு என்ற பிற்போக்கான நடவடிக்கையை கைவிட்டு, கட்டணங்களை நியாயமான முறையில் சீரமைத்து வருவாயை பெருக்கலாம். பல்கலைக்கழகம், அதன் முப்பதாயிரம் + நாலரை லட்சம் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இரு தரப்பும் இணைந்து முயற்சி செய்தால் நிச்சயமாக பலன் கிடைக்கும். அது நடக்காவிட்டால் அரசின் தலையீட்டையும் அதன் விளைவுகளையும் தடுக்க முடியாது.
நன்றி: Dinakaran
No comments:
Post a Comment