Sunday, 25 November 2012

திடீர் கோடீஸ்வரர்கள் மரணம்

சாராய சக்கரவர்த்தி என்று அழைக்கப்படும் சத்தாவும் அவரது சகோதரரும் துப்பாக்கி சண்டையில் உயிரை இழந்திருக்கிறார்கள். சிவசேனா தலைவர் பால்தாக்கரே மரணம் அடைந்திராவிட்டால் டெல்லியில் நடந்த இந்த சம்பவம்தான் தேசிய அளவில் ஊடகங்களில் பிரதான இடத்தை பெற்றிருக்கும். கொலை செய்யப்பட்ட சத்தாவுக்கு ரூ.7 ஆயிரம் கோடி சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இது மிகவும் குறைந்த தொகை; சொத்துக்களின் மதிப்பு ரூ.50 ஆயிரம் கோடியை தாண்டும் என்று வேறு சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஆச்சரியமாக தெரியவில்லை. ஏனென்றால் தமிழகத்தில் மது விற்பனை மூலம் அரசாங்கத்துக்கு ஆண்டுக்கு ரூ.22 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கிறது. தமிழகத்தைவிட மூன்று மடங்கு பெரிய மாநிலமான உத்தரபிரதேசம் முழுவதற்கும் மது சப்ளை செய்தவர் சத்தா ஒருவர்தான். இந்த அளவுக்கு ஒருவர் சொத்து குவிப்பது இந்தியாவில் இப்போது செய்தியே அல்ல. ஆனால் கடற்கரையில் சுண்டல் விற்று பிழைப்பு நடத்திய ஒருவர் மிகவும் குறுகிய காலத்தில் இத்தனை ஆயிரம் கோடிகளுக்கு அதிபதி ஆவது பொருத்தமற்ற உண்மை. நிச்சயமாக குறுக்கு வழியில் பயணம் செய்தால் மட்டுமே ஒரு ஏழையால் இந்த உயரத்தை தொட முடியும். அந்த குறுக்குவழி பயணத்தில் அவருக்கு அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் தாராளமாக உதவியிருக்கிறார்கள். சமாஜ்வாடி கட்சி ஆட்சியில் இருந்தபோது சத்தாவுக்கு மாநிலம் முழுமைக்கும் மது வினியோகம் செய்யும் உரிமம் வழங்கப்பட்டது. அப்போது முலாயம்சிங் முதல்வராக இருந்தார். அமர்சிங் அவருடைய கட்சியில் முக்கிய பொறுப்பைவகித்தார். இப்போது அரசியலில் இருந்து ஒதுங்கிவிட்ட அமர்சிங், டெல்லி அரசியலில் ஒரு முக்கியமான அதிகார தரகராக செயல்பட்டார் என்பது ரகசியமல்ல. சமாஜ்வாடிக்கு பிறகு உ.பி.யில் ஆட்சியை பிடித்த பகுஜன் சமாஜ், சத்தாவின் சாராய சாம்ராஜ்யத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் அப்படி நடக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் முதல்வர் மாயாவதி, முலாயம் சிங்கை காட்டிலும் சத்தாவுக்கு ஆதரவாக செயல்பட்டார். ஒவ்வொரு மாநிலத்திலும் சத்தா போன்ற திடீர் கோடீஸ்வரர்கள் இருக்கிறார்கள். இந்திய அரசியலில் ஒரு அசிங்கமான முகமாக மக்கள் இதைப்பார்க்கிறார்கள். இதற்கு முடிவு கட்டினால்தான் அரசியலை தூய்மைப்படுத்தும் பணியை தொடங்க முடியும்.





நன்றி: Dinakaran

No comments:

Post a Comment