இதுவரை பிரதமர் மன்மோகன் சிங் மீது பரவலாகக் கூறப்படும் குற்றச்சாட்டு திரைக்குப் பின்னணியில் இருந்து சோனியா காந்தியால் இயக்கப்படும் பிரதமராக அவர் செயல்படுகிறார் என்பதுதான். தனக்கென மக்கள் செல்வாக்கோ, எம்.பி.க்களின் ஆதரவோ இல்லாத நிலையில் "நிழல்' பிரதமராக சோனியா காந்தியைச் செயல்பட அனுமதித்தவர் என்கிற அவப்பெயரைச் சம்பாதித்துக் கொண்டவராக மன்மோகன் சிங் பதவியில் தொடர்கிறார் என்றுதான் இதுவரை அவரைக் குற்றம்சாட்டி வந்தனர்.
சமீபத்திய அமைச்சரவை மாற்றத்தில் பெட்ரோலியத் துறை அமைச்சராக இருந்த ஜெய்பால் ரெட்டியை அறிவியல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இலாகா மாற்றம் செய்ததன் மூலம், அரசியலுக்கு அப்பாற்பட்ட சக்திகளும் அவர்மீது ஆதிக்கம் செலுத்துகின்றன என்பது வெளிச்சம் போடப்பட்டிருக்கிறது. இதற்குக் கட்சித் தலைவி சோனியா காந்தியின் ஒப்புதலும் ஆதரவும், ஏன், பரிந்துரையும் இருந்திருக்கக் கூடும் என்றாலும், பாரதப் பிரதமர் என்கிற முறையில், அமைச்சர் ஜெய்பால் ரெட்டிக்கு இருந்த தேசநலனிலான அக்கறையும், பதவிக்கே உரித்தான கௌரவமும் ஏன் மன்மோகன் சிங்குக்கு இல்லாமல் போயிற்று என்பதுதான் அதிர்ச்சி அளிக்கிறது.
கிருஷ்ணா } கோதாவரிப் படுகையில் வெளிவரும் பெட்ரோலிய வாயுவை உற்பத்தி செய்யும் உரிமை நியாயமாக இந்திய அரசு நிறுவனமான கேஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா (கெய்ல்)வுக்குத் தரப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தங்களது பணபலத்தையும், செல்வாக்கையும் பயன்படுத்தி கிருஷ்ணா } கோதாவரிப் படுகையில் காணப்படும் பெட்ரோலிய வாயுவை எடுத்து, சுத்திகரித்து விற்கும் உரிமையை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் பெற்றது. 2010-இல் மத்திய அமைச்சரவையின் சிறப்புக் குழுவின் தீர்மானப்படி ஏப்ரல் 2014 வரை, ரிலையன்ஸ் நிறுவனம் கிருஷ்ணா } கோதாவரிப் படுகையில் உற்பத்தி செய்யும் வாயுவுக்கு அரசு தரும் கட்டணம் மாற்றப்படக் கூடாது என்பது.
இந்த நிலையில்தான், கடந்த 2011 ஜனவரி மாதம் ஜெய்பால் ரெட்டி, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சராகப் பதவி ஏற்கிறார். எல்லா தரப்பிலிருந்தும், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அரசால் தரப்படும் எரிவாயுவுக்கான கட்டணத்தை அதிகரிக்கும்படியான நெருக்கடியை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி நிராகரிக்கிறார். அத்துடன் நின்றிருந்தால் பரவாயில்லை. எரிவாயுக் கிணறுகள் கண்டுபிடிப்பு மற்றும் வாயு உற்பத்தியில் ரிலையன்ஸ் நிறுவனம் அடைந்திருப்பதாகச் சொல்லப்படும் இழப்புகள் பற்றிய அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்யத் தனது அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறார்.
கடந்த மார்ச் 2010-இல் உற்பத்தியான சுமார் 540 லட்சம் கனமீட்டர் வாயு உற்பத்தி, 2011-இல் 275 லட்சம் கனமீட்டராகக் குறைந்திருப்பதற்குக் காரணம், எரிவாயுக் குறைவு ஏற்பட்டிருப்பது என்கிற ரிலையன்ஸ் நிறுவனத்தின் கூற்றை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. 2011-12-இல் உற்பத்தி 700 லட்சம் கனமீட்டராக உயர்வதற்குப் பதிலாக 420 லட்சம் கனமீட்டர்கள் மட்டுமே இருப்பதால், அரசுக்கான இழப்பு 20,000 கோடி ரூபாய் என்றும், 2012-13-இல் 800 லட்சம் கனமீட்டருக்குப் பதிலாக வெறும் 250 லட்சம் கனமீட்டர் மட்டுமே இருப்பதால் இழப்பு 45,000 கோடி ரூபாய் என்றும், அதை அனுமதிக்க முடியாது என்றும் கறாராக ஜெய்பால் ரெட்டி தெரிவித்தது முதலே, அவரை அந்தத் துறையிலிருந்து அகற்றும் முயற்சிகள் தொடங்கிவிட்டன.
ஒருலட்சம் கனமீட்டர் வாயு உற்பத்திக் குறைவு ஏற்பட்டால், 210 மெகாவாட் மின்சார உற்பத்தி குறையும். ரசாயன உர உற்பத்தி குறையும். பல தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கப்படும். இதெல்லாம் தெரிந்தும், தங்களுக்குத் தரப்படும் அரசுக் கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதற்காக ரிலையன்ஸ் நிறுவனம் கொடுத்த நெருக்கடிதான் திட்டமிட்ட உற்பத்திக் குறைவு. இதன் விளைவாக, மின்சார உற்பத்தி, உர உற்பத்தி போன்றவை பாதிக்கப்படுவதால் ஏனைய அமைச்சகங்கள், ரிலையன்ஸýக்கு அதிகக் கட்டணம் அளிக்கப் பெட்ரோலியத் துறையை வலியுறுத்தத் தொடங்கின.
தடாலடியாக, ரிலையன்ஸ் நிறுவனத்தின் செயல்பாடுகளைத் தணிக்கைக்கு உட்படுத்த உத்தரவிட்டார் அமைச்சர் ஜெய்பால் ரெட்டி. எங்கள் செயல்பாடுகளைத் தணிக்கை செய்யும் உரிமை அரசுக்கு இல்லை என்கிற ரிலையன்ஸ் நிறுவனத்தின் வாதத்தைப் புறந்தள்ளி, அரசுடனான உற்பத்திப் பங்கீட்டு ஒப்பந்தத்தின் பிரிவு 1.9-ன் கீழ் அரசுக்குத் தணிக்கை உரிமை உண்டு என்று கூறி, தலைமைக் கணக்குத் தணிக்கையாளருக்கு ரிலையன்ஸ் நிறுவனத்தின் செயல்பாடுகளைத் தணிக்கைக்கு உள்படுத்தப் பரிந்துரையும் அனுப்பி விட்டார் ஜெய்பால் ரெட்டி.
அரசு செய்திருக்க வேண்டிய வேலையைத் தனியார் நிறுவனத்துக்குக் கொடுத்ததே தவறு. தனியாரிடம் நிலத்தடி எரிவாயுவை எடுக்கும் உரிமையைக் கொடுத்துவிட்டு, தனியார் நிறுவனத்தின் நலனுக்குப் பாதுகாப்பாகவும், அரசுக்கு இழப்பு ஏற்படும் விதத்திலும் நடந்துகொண்டது அதைவிடத் தவறு. நடக்கும் தவறுகளைத் தட்டிக் கேட்ட அமைச்சரைப் பாராட்டாமல், அவருக்கு உறுதுணையாக நிற்காமல் அவரை இலாகா மாற்றம் செய்தது மிகமிகப் பெரிய தவறு.
இந்த நிலைமையில் இந்த அரசு தொடருமானால், கிருஷ்ணா கோதாவரிப் படுகையிலுள்ள எரிவாயுவையும், இந்தியாவின் கனிம வளங்களையும் மட்டுமல்ல, இந்தியாவையே தனியாருக்குத் தாரை வார்த்து விடுவார்களோ என்னவோ? இந்நாட்டு நிறுவனங்களும், பன்னாட்டு நிறுவனங்களும்தான் இந்திய அரசின் செயல்பாடுகளைத் தீர்மானிக்கப் போகின்றன என்றால், எதற்காக நமக்குச் சுதந்திரமும், மக்களாட்சியும்? பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி, பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனி, போர்ச்சுகீசியக் கிழக்கிந்தியக் கம்பெனி போல, ரிலையன்ஸ், வால்மார்ட், டாடா, வேதாந்தா போன்ற நிறுவனங்களுக்கு ஒவ்வொரு மாநிலத்தையும் குத்தகைக்குக் கொடுத்து நிர்வகிக்கச் சொல்லி விடலாமே...!
ஒரு தர்மசங்கடமான கேள்வி எழுகிறது. பிரதமர் தெரியும். அவர் பெயர் மன்மோகன் சிங். "நிழல்' பிரதமர் தெரியும். அவர் பெயர் சோனியா காந்தி. "நிஜப்' பிரதமர் யார்? அதுதான் தெரியவில்லை!
No comments:
Post a Comment