Saturday, 3 November 2012

தெற்கும் வளரட்டும்


வித்தை தெரிந்தவனுக்கு மெத்தை யோகம் என்று கிராமங்களில் சொல்வார்கள். கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் என்று தொடங்கும் பாடலுக்கு மாற்றாக யாரேனும் உருவாக்கி இருக்கக்கூடும். இரண்டுமே உண்மை என்று சென்னைவாசிகள் வேகமாக ஆமோதிப்பார்கள். வீட்டுக்கு பெயின்ட் அடிக்க, கசியும் குழாயை சரி செய்ய, சுவர் விரிசலை அடைக்க, தூக்கத்தில் புரளும்போது ஒலியெழுப்பும் கட்டிலை செப்பனிட வேலைக்கு ஆள் கிடைக்காமல் திண்டாடுகின்றனர் மாநகரவாசிகள். பொருட்கள் கருவிகள் ஏதேனும் கோளாறானால் தூக்கி போட வேண்டியதுதான். ரிப்பேர் பார்க்க முடியாது. சர்வீஸ் சென்டரில் இருந்து வரும் தொழில்நுட்ப கில்லாடிகளே, 'ரிப்பேர் செய்கிற செலவுக்கு புதிதாக வாங்கி விடுங்கள்' என்று விற்பனை விளம்பரத்தை ஆலோசனை பொட்டலத்தில் சுற்றி கொடுக்கிறார்கள். நடுத்தர குடும்பங்கள்தான் இப்படி எந்த வேலைக்கும் ஆள் கிடைக்காமல் தவிக்கின்றன என்று நினைத்தால் தவறு. அரசாங்கமே அல்லாடுகிறது. மின்சார கோளாறு குறித்த புகார்களை கவனிக்க இப்போது இருப்பதைவிட 6 மடங்கு ஊழியர்கள் தேவையாம் வாரியத்துக்கு. பெரும் செலவில் வாங்கப்பட்ட 108 ஆம்புலன்ஸ் வண்டிகளை ஓட்ட டிரைவர்கள் கிடைக்காமல் மழை வெயிலில் நனைய விட்டிருக்கிறது நலத்துறை. மிகப்பெரிய கட்டுமான நிறுவனங்கள் வடகிழக்கு மாநிலங்களில் இருந்தும் வங்க தேசத்தில் இருந்தும் தொழிலாளர்களை இறக்குமதி செய்கின்றன. எதிர்பாராமல் ஒரு தொழிலாளர் தென்பட்டால் மணிக்கு 200, 300 கூலி கேட்கிறார். செய்யும் தொழிலின் நுட்பம் அறிந்தவனுக்கு வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள வாய்ப்பு கிடைப்பது நல்ல விஷயம். ஆனால் சென்னையிலும் சுற்று வட்டாரத்திலும் மட்டுமே இந்த நிலைமை. இந்த வட்டத்துக்கு வெளியே, குறிப்பாக தென் மாவட்டங்களில் நிலைமை நேர்மாறாக இருக்கிறது.
திருநெல்வேலியில் ஒரு கார்பென்டர் வறுமையின் கொடுமை தாங்காமல் குடும்பத்தோடு தற்கொலை செய்திருப்பது அதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. ஜவுளி, நகை கடைகள், கார் ஷோரூம்கள், டாஸ்மாக் பார்கள் அதிகரிப்பதை தவிர எந்த விதமான தொழில் வளர்ச்சியையும் காணவில்லை அந்த பிராந்தியம். தெற்கும் வளரட்டும்




நன்றி: Dinakaran 

No comments:

Post a Comment