ஊழல் காரணமாக, பயனாளிகளுக்கு முழுமையான பலன் போய்ச் சேருவதில்லை என்பதால்தான், இவ்வாறு நேரடியாகப் பணமாகக் கொடுக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக அரசு தெரிவிக்கிறது. எந்த அளவுக்கு இந்தத் திட்டம் செயல்படும், பயன் தரும் என்பது சந்தேகத்துக்குரியது.
கல்வி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் ஆகியவற்றில் இவ்வாறு பயனாளியின் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பணம் செலுத்தும் நடைமுறை ஏற்கெனவே அமலில் உள்ளது. இவற்றில் எல்லாம் ஊழல் ஒழிந்துவிட்டது என்றா சொல்லிவிட முடியும்?
வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் வேலை செய்தவர்களுக்கான ஊதியத்தை வங்கியில் செலுத்திவிட்டதாக அதிகாரிகள் கூறினாலும், வங்கிக் கணக்கில் பணம் முறையாக வந்து சேர்வதில்லை. கிராம மக்கள் மறியல் செய்கின்றபோதுதான் "நேரடிப் பணப் பரிமாற்றம்' ("டைரக்ட் கேஷ் டிரான்ஸ்பர்') அந்த அதிகாரிகளுக்கு ஆகாததுதான் பிரச்னை என்று தெரிகிறது.
பயனாளிகளுக்கான உதவித்தொகையை வங்கியில் செலுத்த வேண்டிய அதிகாரம் உள்ளூர் அளவில் இருந்தால், ஊழல் வேறு வடிவம் கொள்கிறது என்பதுதான் உண்மை நிலை. இத்தகைய நிலைமை முதியோர் உதவித்தொகை திட்டத்தில் இல்லை என்பதற்குக் காரணம், அது மாவட்ட அளவில் ஒரே நேரத்தில் வழங்கப்படுவதுதான். மேலும் முதியோர் ஓய்வூதிய ஆணை வழங்கும்போது ஒரே தவணையாக ரூ.3,000 முதல் ரூ.5,000 வரை "நேரடிப் பணப் பரிமாற்றம்' ஆகிவிடுவதும் மற்றொரு காரணம்.
இந்தச் சிக்கல்கள் உதவித்தொகைகளை மட்டுமே பொருத்தவை. ஆனால், மறைமுகமாக ஒவ்வொரு குடிமகனுக்கும் கிடைத்துக்கொண்டிருக்கும் மானியத்தின் பயன் வேறானது. அதனையும் நேரடியாகப் பயனாளிக்குப் பணமாக வழங்குவது முறையாக இருக்காது. ஏனெனில் இத்தகைய மானியத்தை, ஒரு பயனாளி முன்கூட்டியே பெற முடியாது என்பதுதான் இதில் உள்ள சிக்கல்!
தற்போது உர நிறுவனங்களுக்கு வழங்கப்படும் உரமானியத்தை சந்தையில் விற்பனையாகும் உரத்தின் அளவுக்கு ஏற்ப வழங்குவது என்ற புதிய நடைமுறையை மத்திய அரசு இந்த ஆண்டு அமல்படுத்தியுள்ளது. இதன்படி, ஒவ்வொரு உர நிறுவனமும் விற்பனை செய்துள்ள உர மூட்டைகளின் அளவை அந்நிறுவன முகவர்கள் விற்றுள்ள மூட்டைகளையும், விவசாயிகள் வாங்கியுள்ள யூரியா மூட்டைகளையும் சரிபார்த்து, பிறகு அதற்கான மானியத்தை அந்த உரநிறுவனத்துக்கு வழங்குவார்கள்.
இந்தப் புதிய நடைமுறை பெரிய நிறுவனங்களுக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம். அவர்களால் இந்த மானியம் கிடைக்கும் வரை சில மாதங்கள் பொறுத்திருக்க முடியும். சாதாரண ஏழைக்கு இது பொருந்தாது.
நியாயவிலைக் கடையில் இப்போது சர்க்கரையின் விலை கிலோ ரூ.13.50. வெளிச்சந்தை விலை தோராயமாக ரூ.35. இத்திட்டம் அமலுக்கு வந்தால், ஒரு நுகர்வோர் கிலோ ரூ.35 கொடுத்துதான் சர்க்கரையை வாங்கியாக வேண்டும். அந்த மாதம் சர்க்கரை வாங்கினார் என்ற புள்ளிவிவரம் வட்ட, மாவட்ட அளவில் பதிவாகும்போதுதான், இவர் ஒரு கிலோவுக்குக் கூடுதலாகச் செலுத்திய ரூ.20 இவரது வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
இதேபோன்றதுதான் எரிவாயு உருளையிலும். தற்போதைய நடைமுறைப்படி 6 சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் தரப்படுகிறது. இத்திட்டம் அமலுக்கு வந்தால், அன்றைய சந்தை விலையைக் கொடுத்து வாங்க வேண்டும். பிறகு, காஸ் ஏஜன்ஸி மூலமாக எண்ணெய் நிறுவனங்களுக்குத் தகவல் போய், அவர்கள் இதற்குரிய மானியத்தை வங்கிக் கணக்கில் போடுவார்கள்.
இந்த நடைமுறையை ஒவ்வொரு சிலிண்டருக்கும் செய்யாமல், அரையாண்டுக்கு ஒருமுறை மானியத்தை வழங்குதல் என்று அறிவிக்கவும் வாய்ப்பு உள்ளது. ஏனென்றால், கூடுதல் பணிப்பளு, போதுமான ஆட்கள் இல்லை என்கின்ற வழக்கமான பதில் கிடைக்கும். அதுவரை ஒரு நடுத்தர, ஏழைக் குடும்பம் தாக்குப்பிடிக்க வேண்டும்.
இதனால் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட முடியும் என்று அரசு கூறினாலும், இவ்வாறு வங்கிகள் மூலம் நேரடியாக மானியம் வழங்கும்போது, போலிப் பயனாளிகளை உருவாக்கி, மானியத்தை ஒருபக்கம் ஒதுக்கிக் கொள்ள அதிகாரிகளால் முடியும். அல்லது, தற்போது வசதிபடைத்தவர்களின் குடும்ப அட்டைகளில் அரிசி, கோதுமை வாங்கப்பட்டதாக அவர்களே எழுதிக்கொள்வதைப்போல, மானியத்தை வேறு கணக்கில் செலுத்தும் முறைகேடுக்கும் வாய்ப்பு உள்ளது.
இந்த நேரடிப் பணப் பரிமாற்றம் என்பதை மிகவும் உன்னிப்பாகப் பார்த்தால் ஒன்றைப் புரிந்துகொள்ள முடியும். இது ஊழலை ஒழிப்பதற்காகக் கொண்டு வரப்பட்ட திட்டமல்ல. மானியத்தை ஒழிப்பதற்கான திட்டம் என்பதுதான் அது.
உலக வங்கி தொடர்ந்து, ""மானியத்தை ரத்து செய்யுங்கள், குறையுங்கள்'' என்று கூறி வருகிறது. மானியத்தைக் குறைத்தால் எதிர்க்கட்சிகளும் மக்களும் குரல் எழுப்புகிறார்கள். ஆகவே இந்தப் புதிய திட்டத்தின் மூலம், ஒவ்வொரு குடிமகனையும் சந்தை விலையைக் கொடுத்து வாங்கப் பழக்குவதற்கான முதற்கட்ட நடவடிக்கைதான் இந்த "நேரடிப் பணப் பரிமாற்றம்'. சில காலத்துக்கு மானியம் கிடைக்கும். பிறகு குறைக்கப்படும். அப்புறம் சில இனங்களுக்கு மானியம் ரத்தாகும். பிறகு மானியம் முழுவதுமே விலக்கிக்கொள்ளப்படும். அப்போது, இதை மக்கள் எதிர்க்க மாட்டார்கள். ஏனென்றால், அவர்கள் சந்தை விலையைக் கொடுத்து வாங்கப் பழக்கிவிடப்பட்டிருப்பார்கள்.
ஒரு நல்ல அரசுக்கு அடையாளம், அமைச்சர்கள், அதிகாரிகள் அளவிலான ஊழலை ஒழித்து, மக்களின் வாங்குசக்தியை அதிகரிக்கச் செய்வதன் மூலம், மானியம் பெறுவதை மக்கள் ஒரு அவமானமாகக் கருதும் நிலையை உருவாக்குவதுதான். மாறாக, இவ்வாறு மானியத்தை மறக்கடிக்க வைப்பதல்ல. தாய்ப்பாலை குழந்தை வெறுக்கச் செய்வதற்காக வேப்பெண்ணெய் தடவிக் கொடுப்பது போலத்தான் இதுவும்!
