Saturday, 11 August 2012

திரை போடும் காலம்: சென்னையில் காலரா

திரை போடும் காலம்: சென்னையில் காலரா 

சென்னையில் காலரா பரவுகிறது. அது செய்தியாக வரும்போது மக்களுக்கு பயம் ஏற்படும். உஷாராக இருப்பார்கள். அதிகாரிகள்  கூடுதல் கவனம் செலுத்த வாய்ப்பு கிடைக்கும். சமீபகாலம் வரையில் இதுதான் நடைமுறை. இப்போது இல்லை. காலரா பரவுவதாக செய்தி போடாதீர்கள் என்று அதிகாரிகள் அன்பாக எச்சரிக்கிறார்கள். காலரா இல்லை என்று இவர்கள் சத்தியம் செய்யும் நேரத்தில் காலரா பலி கிடுகிடு. இந்த ஆண்டில் இதுவரை 29 பேர் மரணம். முந்தைய ஐந்து ஆண்டுக்கு மொத்தமாக பார்த்தாலும் இதில் பாதி இல்லை. வருடத்தில் ஒருவர் இருவர் இறப்பதுண்டு. சென்ற ஆண்டு 7 ஆனதுமே அதிகாரிகள் விழித்திருக்கலாம். இல்லை. நகரெங்கும் குப்பை மலையாக குவிகிறது என்ற செய்தி அவர்களை உசுப்பவில்லை. அரைமணி  மழையில் குடிசைகளும் வீடுகளும் தண்ணீரில் மிதப்பதை பத்திரிகைகள் படம் பிடித்து போட்டும் உறைக்கவில்லை. வெயில் கொளுத்தியபோதும் தேங்கிய நீர் நீங்காத காட்சியும் அசைக்கவில்லை. எல்லாம் சேர்ந்து ஈக்கள், கொசுக்கள் பெருக வழி வகுத்து இன்று காலரா பீதியில் மக்கள் புலம்பும் நிலை வந்த பிறகும் சாதிக்கிறார்கள், காலராவே இல்லை என்று. வாந்தியும் பேதியும் காலரா ஆகிவிடாது என்று விளக்கமும் தருகின்றனர். மாநகராட்சியில் ரகசியமாக பராமரிக்கப்படும் பதிவேட்டிலேயே காலரா பலி எண்ணிக்கை குறிக்கப்பட்டுள்ளதை ஒரு நிருபர் சுட்டிக்காட்டிய நிலையிலும் சமாளிக்க முனைகிறார்கள். குடிநீரில் சாக்கடை கலப்பதால் வாந்தி பேதி வருகிறது என புகார் சொன்னால் 'குடிநீர் வடிகால் வாரியத்துக்கும் மாநகராட்சிக்கும் சம்பந்தமில்லை' என்று பதில் வருகிறது. வீதிகளில் குப்பை பறப்பதற்கு தனியார் குப்பை அள்ளும் நிறுவனம்தான் பொறுப்பு என்று கைகாட்டியதற்கும் இதற்கும் வேறுபாடு இல்லை.

முன்பெல்லாம் மக்களை பாதிக்கும் விஷயங்கள் தொடர்பாக படமோ செய்தியோ கிடைத்தால் அதை பிரசுரிப்பதற்கு முன் தங்களுக்கு ஒருநாள் அவகாசம் தருமாறு உயர் அதிகாரிகள் பத்திரிகை ஆசிரியர்களிடம் வேண்டுகோள் வைப்பார்கள். பத்திரிகை பார்த்ததும் டெலிபோனில் அழைத்து முதலமைச்சர் டோஸ் விடுவார் என்ற பயம் அவர்களுக்கு இருந்தது.முழு பூசணிக்காயை உள்ளங்கையில் ஒளித்து வைக்க ஊக்குவிக்கப்படும் இன்றைய சூழ்நிலையில் அதிகாரிகள் அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை




நன்றி: Dinakaran

No comments:

Post a Comment