Saturday, 11 August 2012

புதிய தீண்டாமை

புதிய தீண்டாமை

பெங்களூரில் குழந்தைகள் தலைமுடியை வெட்டியிருக்கிறது பள்ளி நிர்வாகம். ஆங்காங்கே சொட்டையாக தெரியும் வகையில் தாறுமாறாக சிதைத்துள்ளனர். ஒவ்வொரு பள்ளியும் 25 சதவீத இடங்களை ஏழை குழந்தைகளுக்கு  வழங்க வேண்டும் என்ற கல்வி உரிமை சட்டத்தின் பலனாக சேர்ந்த குழந்தைகள் இவை. நிர்வாகம் சூட்டிய பெயர் ஓசி கிராக்கிகள். அதை அடையாளப்படுத்த கட்டிங். செய்தி வெளியானதும் சமூகம் கொதித்து எழுந்து பள்ளிக்கு சாபம் விடுகிறது.பழைய செய்தி ஒன்று. 1977 தேர்தலில் ஜனதா கட்சி வென்று கூட்டணி ஆட்சி அமைந்தது. விலைவாசியை சமாளிக்க மக்கள் திண்டாடினர். 'ஜனதா சாப்பாடு' திட்டத்தை ஓட்டல்கள் செயல்படுத்த அரசு உத்தரவிட்டது. அதிக விலை கொடுத்து அளவு சாப்பாடு சாப்பிட விரும்பாதவர்களுக்காக அரசு நிர்ணயித்த மலிவு விலையில் ஜனதா சாப்பாடு. சாதம், கூட்டு, பொரியல் எல்லாம் எத்தனை கிராம் என்பது அரசு உத்தரவில் அடக்கம். வேறு வழியின்றி அமல்படுத்தினர் ஓட்டல் அதிபர்கள். எப்படி? ஜனதா சாப்பாடு கேட்பவர்களை ஏளனமாக மேலிருந்து கீழ் பார்ப்பது, இருண்ட மூலையில் இடம் ஒதுக்குவது, அலட்சியமாக பரிமாறுவது, விக்கினால் மட்டும் தண்ணீர் தருவது என சகல வித்தைகளையும் பிரயோகித்து புதிய தீண்டாமை உருவாக்கி திட்டத்தை சீர்குலைத்தனர். அன்று ஓட்டல். இன்று பள்ளி. கூச்சல் போடலாம். தடுக்க முடியாது. 'ஏழைகளுக்கு கல்வி கொடுக்கும் பொறுப்பு அரசாங்கத்தை சேர்ந்தது; அதற்காக நாங்கள் ஏன் தியாகம் செய்ய வேண்டும்' என்று பள்ளி முதலாளிகள் கேட்கின்றனர். லாபத்தை குறைத்துக் கொள்ள எந்த வியாபாரிக்கு மனம் வரும்? 'மலிவு விலையில் நிலம் கொடுத்தோம்; மானியம் கொடுக்கிறோம்; அதனால் சட்டம் போடுகிறோம்' என அரசு வாதாடலாம்.

அதெல்லாம் கொடுத்து கல்வி வர்த்தகர்கள் லாபத்தில் கொழிக்க அரசு ஏன் ஊக்குவிக்க வேண்டும்? அதைவிட அரசே தேவையான அளவுக்கு புதிய பள்ளிகள் நிறுவி எல்லோருக்கும் இலவச கல்வி கொடுக்கலாமே. லாபமே குறிக்கோளாக கொண்ட தனியாரை போல் அல்லாமல் கணிசமான ஊதியம் கொடுத்து தகுதியான ஆசிரியர்களை நியமித்தால் எல்லோருக்கும் தரமான கல்வி கிடைக்கும். அதிக செலவின்றி குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதைவிட நாட்டுக்கு வேறென்ன வேண்டும்?





நன்றி: Dinakaran

No comments:

Post a Comment