அசாதாரண பெண்மணி கேப்டன் லட்சுமி
பெண்கள் இரவு வேலைக்கு போகலாமா, ஈவ்டீசிங்கை தவிர்க்க எத்தகைய உடை அணிவது போன்ற கேள்விகள் இன்னமும் ஓயாத இந்த நாட்டில், 70 ஆண்டுகளுக்கு முன்பே சிங்கப்பூர் சென்று இந்திய தேசிய ராணுவத்தில் (ஐ.என்.ஏ) சேர்ந்திருக்கிறார் லட்சுமி. பெரிய வழக்கறிஞருக்கும் பிரபலமான சமூக சேவகிக்கும் மகளாக பிறந்து சென்னை மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ் முடித்தவர் வசதியான வாழ்க்கையில் செட்டிலாவதை விடுத்து துப்பாக்கி ஏந்த புறப்பட்டார் என்றால் துணிச்சலுக்கு அப்பாற்பட்ட உத்வேகம் இருந்திருக்க வேண்டும். ஆயுதங்களுக்கு எதிராக அகிம்சையால் சாதிக்க முடியாது என்ற எண்ணம் டாக்டர் லட்சுமியை கேப்டன் லட்சுமியாக மாற்றியிருக்கிறது. இந்திய விடுதலை போராட்ட வரலாற்றில் கணிசமாக இருட்டடிப்பு செய்யப்பட்ட அத்தியாயங்கள் ஐ.என்.ஏ சம்பந்தப்பட்டவை. அதனால் இந்த தைரியலட்சுமியின் சாகசங்கள் வெளிச்சத்துக்கு வராமல் போயின. நாட்டு விடுதலைக்கு சில மாதங்கள் முன்பு லாகூரில் காதலனை மணந்து கான்பூரில் லட்சுமி குடியேறியபோது பிரிவினை கலவரம் வெடித்து அகதிகள் பேரலை தொடங்கிற்று. இந்துக்களும் முஸ்லிம்களும் தனித்தனியாக உரிமை கொண்டாடிய பொது சேவகியாக லட்சுமி உருவெடுத்தார். 37 ஆண்டுகளுக்கு பிறகு இந்திரா கொலையை தொடர்ந்து சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் லட்சுமியின் விசுவரூபத்தை கண்டது கான்பூர். அவரது கிளினிக் அமைந்துள்ள பகுதியில் கலவரக்காரர்களை எதிர்கொண்டு சீக்கியர்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் சிறு சேதமும் நேராமல் பாதுகாத்தார். ஆணாதிக்க சமுதாயத்தில் பெண்கள் அனுபவிக்கும் கொடுமைகளுக்கு சட்டத்தின் மூலம் பரிகாரம் காண்பது அசாத்தியம் என்ற நிலையை மாற்றியதில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்துக்கு பெரும் பங்குண்டு என்றால் அந்த அமைப்பை உருவாக்கியதில் லட்சுமியின் பங்களிப்பு மெச்சத்தக்கது. ஜனாதிபதி தேர்தலில் கலாமை எதிர்த்து லட்சுமியை இடதுசாரிகள் நிறுத்தியபோது அவர் அற்புதம் நடக்கும் என்றெல்லாம் ஏங்கவில்லை.
'அறிவாளிகள் கையில் ஆட்சி இருந்தும் ஏழ்மையும் அநீதியும் அதிகரித்துக் கொண்டே போகிறது என்றால் நமது அரசியல் கட்டமைப்பில் குறைபாடு இருப்பதாகத்தானே அர்த்தம்?' என்ற கேள்வியை மக்களின் மனதில் விதைக்க அந்த சந்தர்ப்பத்தை அவர் பயன்படுத்திக் கொண்டார். விடை காண மக்கள் முனையும் வேளையில் லட்சுமி 97 வயதில் விடை பெற்று சென்றுவிட்டார்.
'அறிவாளிகள் கையில் ஆட்சி இருந்தும் ஏழ்மையும் அநீதியும் அதிகரித்துக் கொண்டே போகிறது என்றால் நமது அரசியல் கட்டமைப்பில் குறைபாடு இருப்பதாகத்தானே அர்த்தம்?' என்ற கேள்வியை மக்களின் மனதில் விதைக்க அந்த சந்தர்ப்பத்தை அவர் பயன்படுத்திக் கொண்டார். விடை காண மக்கள் முனையும் வேளையில் லட்சுமி 97 வயதில் விடை பெற்று சென்றுவிட்டார்.
நன்றி: Dinakaran
No comments:
Post a Comment