பதக்கத்தை அவனே எடுத்துக் கொள்ளட்டும்
இந்திய ஹாக்கி இப்படியொரு பரிதாப நிலைக்கு வந்து சேரும் என்று எதிரிகள்கூட நினைத்திருக்க மாட்டார்கள். ஒரு காலத்தில் நாம் கொடி கட்டி பறந்த விளையாட்டு. 1928ல் தொடங்கி 8 ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கத்தை கைப்பற்றி கொண்டுவந்தனர் இந்திய ஹாக்கி வீரர்கள். அந்த பொற்காலம் முடிந்து ரொம்ப காலம் ஆகிறது என்றாலும், லண்டன் ஒலிம்பிக்சில் கட்டக் கடைசியான 12 வது இடத்துக்கு வரும் என்று எவருமே எதிர்பார்க்கவில்லை. ஹாக்கியை நேசிக்கும் ரசிகர்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றம். குறிப்பாக தமிழகத்தில் நிறைய பேரின் இதயம் நொறுங்கியிருக்கும். தமிழ்நாட்டுக்கும் ஹாக்கிக்கும் நெருங்கிய உறவு உண்டு. தமிழக வீரர்கள் பலர் சர்வதேச அரங்கில் நட்சத்திரங்களாக வலம் வந்தனர். ஒரு முறைகூட ஜெயிக்காமல் படுதோல்வியை தழுவுவது கேவலம்தான். ஆனால் தோல்வியை யாரும் விரும்பி அடைவதில்லை. எனவே ஹாக்கி வீரர்கள் , ஆட்டக்காரர்கள்தான் சரி , மீது யாரும் பாய்ந்து குதற தேவையில்லை. அப்படி பார்த்தால் இங்கிருந்து சென்ற மொத்த குழுவும்தான் சொதப்பியிருக்கிறது. 1 வெள்ளி, 3 வெண்கலத்துடன் 54வது இடத்தில் கிடக்கிறது. பாவப்பட்ட ஆப்ரிக்க நாடுகள், மயிலாப்பூரைவிட மக்கள்தொகை குறைந்த நாடுகள் எல்லாம் தங்கம் அள்ளும்போது இந்தியர்கள் மட்டும் நம்மிடம் இல்லாத சவரனா என்று கைவீசி திரும்பி வருவதை எத்தனை பேர் அவமானமாக நினைக்கிறோம்? வெண்கலம் வென்றதையே பெரிய சாதனையாக கொண்டாடி விழா எடுக்கிறோம். சாய்னாவுக்கு எப்படி பதக்கம் கிடைத்தது? அவருடன் மோதிய சீன பெண் முழங்கால் காயத்தின் வலி தாங்காமல் ஒதுங்கியதால் கிடைத்தது. அப்போது ஜெயித்துக் கொண்டிருந்தது அந்த பெண்தான். சாய்னாவின் தந்தை சரியாகத்தான் சொன்னார்: கடவுளாக பார்த்து என் மகளுக்கு பதக்கம் கொடுத்திருக்கிறார். ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மணிப்பூர் பாக்சிங் மேரியால் எதிராளியின் தாடை மீது நச்சென்று ஒரு குத்துகூட பதிக்க இயலவில்லை. டென்னிஸ், நீச்சல், சைக்கிள், மல்யுத்தம், துப்பாக்கி சுடுதல் என்று இப்படி ஒவ்வொரு விளையாட்டாக என்ன நடந்தது என ஆராய்ந்தால் பெருமூச்சே மிஞ்சும். வெற்றிக்கு யாரும் காரணம் கேட்கப் போவதில்லை. தோல்விக்கு தேடித் தேடி காரணம் சொல்வார்கள். எல்லாவற்றிலும் கொஞ்சம் உண்மை இருக்கும். ஆனால் அடிப்படையான சில உண்மைகளை அநேகர் விவாதிப்பது இல்லை.விளையாட்டு மீது இந்தியர்களுக்கு இயல்பாகவே மோகம் கிடையாது. ஆட்டங்களை ரசிப்போமே தவிர களத்தில் இறங்கி சாதிக்க வேண்டும் என்ற உத்வேகம் வருவதில்லை.
படிப்பு ஒன்றுதான் வாழ்க்கையில் முன்னேற வழி என்று நம்புகிறோம். விளையாடினால் படிப்பு பாதிக்கும் என்று குழந்தைகளின் ஆர்வத்தை முளையிலேயே முடக்குகிறோம். எல்லாம் தாண்டி மைதானத்தில் கால்வைத்தால் அலட்டிக் கொள்ளாமல் ஜாக்கிரதையாக ஆடுவோமே தவிர ஒரு கை பார்த்து விடுவோம் என்று எல்லைகளை தாண்ட முனைவதில்லை. பிளேயிங் சேஃப் என்பார்களே, அது. எதிராளி ஆக்ரோஷத்தை பார்க்கும்போது நமக்கு ரத்தம் சூடாவதில்லை. 'இவ்வளவு மல்லுக் கட்டுகிறானே.. இதென்ன வாழ்வா சாவா போராட்டமா.. பதக்கத்தை அவனே எடுத்துக் கொள்ளட்டும்' என்று பெருந்தன்மையாக அனுமதிக்கிறோம். நம்பர் 1 இடத்தை எப்படியும் பிடித்துவிட வேண்டும் என்று துடிப்பவர்கள் லட்சத்தில் ஒருவர்தான். மற்றவர்கள் 'எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது' என்பதை நம்புகிறார்கள். அடுத்த ஒலிம்பிக் வராமலா போய்விடும்.

நன்றி: Dinakaran
No comments:
Post a Comment