Saturday, 11 August 2012

ஜனாதிபதி பிரணாப்

ஜனாதிபதி பிரணாப்

ஜனாதிபதி மாளிகையில் மாற்றம் தொடங்கியிருக்கிறது. ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை ஏற்படுவதுதான்.  கலாம் பிரம்மச்சாரி. அரசியல் தெரியாதவர். மாளிகையின் சூழல் அதற்கேற்ப மாறியது. பிரதிபா  பெரும் குடும்பஸ்தர். வேட்பாளராக அறிவித்த வேளையில்தான் அவர் அரசியலில் இருந்தது தெரிந்தது. பிரணாப் பழம் தி.கொ.போ ரகம். 'கோல்கத்தாவை விட்டு டெல்லியில் குடியேறியபோது கொஞ்சம் சாமான்கள்தான் இருந்தது; இப்போது நிறைய மூட்டைகள் சேர்ந்துவிட்டது' என்று  பிரணாப் மனைவி சொன்னது அர்த்தமுள்ளது. நான்கு கைத்தடிகள் இல்லாமல் அரசியல் செய்ய முடியாது என்பது பொது விதி. டெல்லி அரசியலில்  பிழைத்திருக்க பெரிய வலையமைப்பு அவசியம். செய்தியாளர் முதல் தொழிலதிபர் வரை அதில் பல தரப்பினரும் நிரவியிருப்பார்கள். வலையர்களுக்கு நாம்தான் வழிகாட்டி என்று தலைவர் நினைத்துக் கொண்டிருப்பார். அவருக்கே தெரியாமல் அவரை வழிநடத்தும் அதிலொரு சிறு குழு. பிரணாப் விதிவிலக்காக இருக்க வழியில்லை. தினம் 18 மணி நேரம் 40 ஆண்டுகள் உழைத்தால் ஓய்வெடுக்கும் ஆசை வேர்விட்டு நிற்கும். அதற்கான அருமையான வாய்ப்பு என பிரணாப் கருதினால் உண்மையில் அவர் அதிர்ஷ்டசாலி. நேர் செய்ய வேண்டிய பழைய கணக்குகள் இருப்பதை வலையர்கள் நினைவுபடுத்த அனுமதித்தால் பரபரப்பான செய்திகள் பிறக்கும். மன்மோகன் சிங்கை ரிசர்வ் பாங்க் கவர்னர் வேலையில் நியமித்தவர் பிரணாப். சில ஆண்டுகளிலேயே மன்மோகன் சிங் அரசில் ஓர் அமைச்சராக வேலை செய்யும் நிலை வந்தபோது விதி மீது நம்பிக்கையுள்ள சராசரி இந்தியனின் பக்குவத்தோடு ஏற்றுக் கொண்டார்.

மொத்த நிர்வாகத்தையும் பல்வேறு 'அமைச்சர்கள் குழு'க்களிடம் ஒப்படைத்து, அவற்றுக்கெல்லாம் பிரணாபை தலைமை தாங்க ஏற்பாடு செய்த பிரதமரின் சாதுரியம் ஆறுதலாக இருந்திருக்கும். இப்போது பிரணாபை சந்திக்க பிரதமர் அனுமதி கேட்க வேண்டிய மூன்றாம் சுற்று வந்திருக்கிறது. இருவருக்கும் இடையே அதே மரியாதை பரிமாற்றம் தொடர்ந்தால் அரசுக்கும் நாட்டுக்கும் நல்லது. ஜனாதிபதி பதவி ரப்பர் ஸ்டாம்ப் அல்ல. ஈ ரேஞ்சுக்கு குடைச்சல் கொடுக்கக்கூடிய நாற்காலி. ஆனால் வாழ்க்கையின் கடைசி அத்தியாயத்தில் தடம் புரண்டு விட்டார் என  வரலாறு பதிவு செய்ய அறிவாளிகள் இடம் கொடுக்க மாட்டார்கள்.




நன்றி: Dinakaran

No comments:

Post a Comment