மூன்று வேளை சாப்பிட வேண்டாம் - ஒரு விஞ்ஞானி கூறுகிறார்
உயிர் வாழ வேண்டுமானால் தினமும் மூன்று வேளை சாப்பிட வேண்டும் என்று நம்பிக் கொண்டிருக்கிறோம். 'அப்படி எந்த அவசியமும் கிடையாது; மூன்று வேளை சாப்பிட்டு பழகிவிட்டோம், அவ்வளவுதான்' என்று ஒரு விஞ்ஞானி கூறுகிறார். பிறகு எத்தனை வேளை சாப்பிட வேண்டுமாம்? எத்தனை முறை என்ற கணக்கெல்லாம் இல்லை; எவ்வளவு குறைவாக சாப்பிடுகிறோமோ அவ்வளவுக்கு நல்லது என்கிறார். பிபிசி ஒளிபரப்பும் ஹொரைசன் என்ற அறிவியல் நிகழ்ச்சியை தொகுத்தளிப்பவர் இந்த விஞ்ஞானி. பெயர் மைக்கல் மோஸ்லி. அவர் சொல்கிற காரணங்கள் மறுக்கக்கூடியதாக இல்லை. உடல் உறுப்புகள் செயல்பட சக்தி தேவை. அதை வழங்குவது நாம் சாப்பிடும் உணவு. அதில் மாச்சத்து, புரதம், கொழுப்பு ஆகியவை இருக்கின்றன. உணவு செரிக்கும்போது இந்த சத்துக்கள் உடலின் இயக்கத்துக்கு எரிசக்தியாக மாறுகிறது. அதிகமான சத்து கிடைக்கும்போது உடலில் பல பிரச்னைகள் உண்டாகிறது என்கிறார் டாக்டர் மோஸ்லி. கலோரி என்ற அளவால் இந்த சத்துகளை மதிப்பிடுகிறோம். ஒரு கிராம் புரதம் அல்லது மாச்சத்து 4 கலோரி. கொழுப்பு 9 கலோரி. நிறைய சாப்பிடும்போது கலோரிகள் அதிகமாகும். உடலின் தேவைக்கு போக மீதியுள்ள கலோரிகள் கொழுப்பாக மாறி உடலில் தங்கி தீங்கு விளைவிக்கும். கலோரிகள் குறைந்த உணவு வகைகளை சாப்பிடும் அமெரிக்கர்களும் ஜப்பானியர்களும் மற்றவர்களைவிட அதிக காலம் உயிர் வாழ்வதன் ரகசியம் இதுதான் என்கிறார் அவர். உடல் உழைப்பு, உடல் பயிற்சி இல்லாதவர்களுக்கு தேவைக்கு மீறிய உணவால் வரக்கூடிய ஆபத்து அதிகம். பசி எடுப்பதாக நினைத்துக் கொண்டு மூன்று வேளையும் சாப்பிடுபவர்கள் அந்த பழக்கத்தில் இருந்து வெளியே வந்தால் நிச்சயமாக பலன் கிடைக்கும் என்று மோஸ்லி தெரிவிக்கிறார். முடியாதவர்கள் அவ்வப்போது விரதம் இருந்தால் நல்லது நடக்கும் என்பது அவருடைய யோசனை. உடல் பருமனை குறைக்க ஒரு வழியாக மூன்று வேளைக்கு பதில் ஆறு வேளையில் அதே உனவை சாப்பிடலாம் என டாக்டர்கள் பரிந்துரை செய்யும் வேளையில், கலோரிகளில் கவனம் செலுத்தினால் மூன்றுவேளைகூட தேவையில்லை என்ற கருத்து புதிய விவாதத்துக்கு வித்திட்டுள்ளது.
நன்றி: Dinakaran
No comments:
Post a Comment