ரயில் விபத்து யார் பொறுப்பு?
நெல்லூர் விபத்தோடு நின்றுவிடாது; தொடர்ந்து இப்படித்தான் ரயில் விபத்து நடக்கும் என்று கூறியிருக்கிறார் தினேஷ் திரிவேதி. ஆரூடமா சாபமா தெரியவில்லை. மம்தாவின் திரிணாமுல் கட்சி எம்.பி. ரயில்வே அமைச்சராக இருந்து பட்ஜெட் தாக்கல் செய்தவர். டிக்கட் கட்டணத்தை இரண்டு ரூபாய் மூன்று ரூபாய் உயர்த்தியவர். கட்டண உயர்வுக்கு கட்சிகளோ தொழிற்சங்கங்களோ எதிர்ப்பு தெரிவிக்காத ஒரே சந்தர்ப்பம் அதுதான். அதனால் என்ன, அவருடைய கட்சி தலைவர் மம்தாவுக்கு பொறுக்கவில்லை. என்னை கலந்து பேசாமல், என்னை கேட்காமல் கட்டணத்தை உயர்த்த உங்களுக்கு எவ்வளவு தைரியம் என்று திரிவேதியை ஒரு பிடி பிடித்தார். அவரை நீக்கிவிட்டு முகுல் ராயை ரயில்வே அமைச்சராக்க பிரதமரை வெற்றிகரமாக நிர்ப்பந்தித்தார். உயர்வை ரத்து செய்து மம்தாவின் ஆசியை பெற்றார் புது அமைச்சர். அதிலிருந்து மூன்று மாதங்களுக்குள் நடக்கும் மூன்றாவது பெரிய விபத்து இது. மே 22ல் சரக்கு ரயில் மீது ஹம்பி எக்ஸ்பிரஸ் மோதி 25 பலி. அதே மாதம் 31ல் டூன் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு பலி 5, படுகாயம் 50. மோதும் அளவுக்கு 2 ரயில்கள் நெருங்கினால் இரண்டையும் நிறுத்திவிடக்கூடிய கருவி ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தீ பிடித்தால் அல்லது புகை வந்தால் அபாய மணி அடிக்கும் கருவியும் இருக்கிறது. இவற்றை எல்லா ரயில்களிலும் பொருத்துமாறு அணு விஞ்ஞானி அனில் ககோட்கர் தலைமையில் அமைக்கப்பட்ட ரயில் பாதுகாப்பு ஆலோசனை குழு பரிந்துரைத்தது. அந்த பரிந்துரையை நிறைவேற்ற கட்டண உயர்வு அவசியமாகிறது என பட்ஜெட்டில் திரிவேதி விளக்கி இருந்தார். 'பயணிகளின் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க தேவையான ஏற்பாடுகளை செய்யவும் கருவிகளை வாங்கி பொருத்தவும் நிறைய பணம் தேவைப்படுகிறது. கட்டணத்தை ஓரளவு உயர்த்துவதன் மூலம் அதை செய்துவிடலாம்' என்றார் அவர். அதைத்தான் மம்தா தடுத்தார். உலகத்தில் பெரிய ரயில்வே என்று சொன்னால் போதாது. அதை நம்பி பயணிக்கலாம் என்பதுதான் பெருமை. நவீனப்படுத்தினால் மட்டுமே அது சாத்தியம் என்பது திரிவேதிக்கும் நமக்கும் தெரிகிறது. மம்தாவின் மிரட்டலுக்கு மத்திய அரசு அடிபணியும் வரையில் மக்கள் உயிர் பயம் இல்லாமல் ரயிலில் பயணம் செய்ய முடியாது.
நன்றி: Dinakaran
No comments:
Post a Comment