Saturday, 11 August 2012

வெல்ல முடியாத மம்தா

வெல்ல முடியாத மம்தா

யாராலும் வெல்ல முடியாதவர் என்று சிலரை குறிப்பிடுவது உண்டு. பெரிய பாராட்டு போல் தோன்றும் இந்த அடைமொழிக்கு உண்மையான அர்த்தம் வேறு. தன்னை தானே தோற்கடித்துக் கொள்பவர் என்பதுதான் அது.  பந்தா காட்டும் பல தலைவர்களுக்கு இது பொருந்தினாலும், இன்றைய தேதியில் இந்த பட்டத்தை சுமக்கும் தகுதி மம்தாவுக்கு நிரம்ப இருக்கிறது. சக வங்காளியான பிரணாப் இந்தியாவின் முதல் குடிமகனாக விடமாட்டேன் என்று மல்லுக்கட்டியவர் மலையிலிருந்து கீழே இறங்கி வந்திருக்கிறார். திருணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பிரணாபுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்று அறிவித்துள்ளார். ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலும் மத்தியிலுள்ள அதன் அரசிலும் பங்கேற்றுக் கொண்டு அந்த கூட்டணியின் வேட்பாளரை ஆதரிக்க மறுப்பது தார்மிக அடிப்படையில் முதல் குற்றம். எதிர்த்து போட்டியிட ஆளும் ஆதரவும் தேடியது அடுத்த தப்பு. மேற்கு வங்க அரசின் இரண்டரை லட்சம் கோடி கடனையும் வட்டியையும் ரத்து செய்தால் பிரணாபை ஆதரிப்பேன் என்று  பிரதமருக்கு நிபந்தனை விதித்தது மூன்றாவது தவறு. சோனியா எதற்கும் மசியவில்லை என்றதும் துணை ஜனாதிபதிக்காவது தான் கைகாட்டும் ஆளை நிறுத்துமாறு நிர்பந்தித்தது நான்காவது அத்துமீறல்.

இதற்குமேல் இவர் உறவே தேவையில்லை என்ற மனநிலைக்கு காங்கிரஸ் வந்தபிறகுதான் மம்தாவுக்கு ஏதோ புரிய ஆரம்பித்தது போலும். மாநிலம் மாநிலமாக சென்று ஒவ்வொரு கட்சி தலைவரையும் சந்தித்து ஆதரவு கேட்ட பிரணாப் கடைசிவரை மம்தா வீட்டு கதவை தட்டவே இல்லை. அன்சாரியும் கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் இரண்டு வங்காளிகளை ஆதரிக்க மறுத்ததற்கு நாடாளுமன்ற தேர்தலில் மக்களுக்கு மம்தா பதில் சொல்லியாக வேண்டும் என்பதை சாணக்ய முகர்ஜி உணர்ந்திருந்தார். தேர்தலை புறக்கணிக்க தீர்மானித்திருந்த மம்தா, கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் வெளிப்பட்ட ஆவேசமான மொழி, இன உணர்வுகளை பார்த்து அதிர்ந்துதான் முடிவை மாற்றிக் கொண்டதாக தெரிகிறது. அதையும் 'கனத்த இதயத்துடன்' அறிவித்துள்ளார்.  விலகிய நண்பர்கள் வெவ்வேறு திசையில் வெகுதூரம் சென்றுவிட்டாலும் நட்புக்கு மீண்டும் ஒட்டு போடுவது சாத்தியமே எனில் அதில் பரஸ்பர நம்பிக்கை என்ற பசை வறண்டிருக்கும்.





நன்றி: Dinakaran

No comments:

Post a Comment