Saturday, 11 August 2012

அன்னா ஹசாரே குழு - திசைமாறிய பறவைகள்

அன்னா ஹசாரே குழு - திசைமாறிய பறவைகள்


அன்னா ஹசாரே குழுவினர் நடத்திய 9 நாள் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்துள்ளது. மத்திய அமைச்சர்கள் மீதும் பிரதமர் மீதும் கூறப்படும் ஊழல் புகார்களை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த போராட்டம் நடந்தது. மத்திய அரசு அசைந்து கொடுக்கவில்லை. சமரச பேச்சு நடத்தக்கூட முன்வரவில்லை. மக்களின் ஆதரவும் கடந்த ஆண்டு இருந்தது போல் இப்போது இல்லை. வேறு வழியில்லாமல் முடித்துக் கொண்டிருக்கிறார்கள். சென்ற வருடம் கூட்டம் திரண்டதற்கு காரணம் இருந்தது. ஊழலை ஒழிக்க வலிமையான லோக்பால் சட்டம் இயற்ற வேண்டும் என்பது அப்போது அன்னா வைத்த கோரிக்கை. அரசியலில், அதிகாரத்தில் இல்லாத சராசரி இந்தியர்கள் ஊழலால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே அன்னாவின் போராட்டத்துக்கு அமோக ஆதரவு கிடைத்தது. ஆனால் அதன் பின்னர் அன்னா குழுவினரின் பாதை மாறியது. அரசியல் களத்தில் இறங்கி காங்கிரசுக்கு எதிராக பிரசாரம் செய்தனர். அடுத்ததாக எதிர்க்கட்சிகளையும் கையாலாகாத அமைப்புகள் என கிண்டல் செய்தனர். இன்னும் ஒரு படி சென்று நாடாளுமன்றம் கிரிமினல்களின் கூடாரம் என வர்ணித்தனர். திறமையற்றவர் என முத்திரை குத்தும் எதிர்க்கட்சி தலைவர்கள்கூட கை சுத்தமானவர் என பாராட்டும் பிரதமர் மீது ஊழல் புகார்களை அடுக்கினர்.ஜனநாயக அமைப்புகள் மீதும் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மீதும் நம்பிக்கை இல்லாத அன்னா குழுவினரால் என்ன மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற கேள்வி அதுவரை அவரை ஆதரித்தவர்கள் மனதில் எழுந்தது. ஜந்தர் மந்தர் உண்ணாவிரத பந்தலில் காலியாக கிடந்த நாற்காலிகள் அதை பிரதிபலித்தன.வார இறுதி நாளில் கூட்டம் திரளும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துவிட்டது.

அன்னாவின் செல்வாக்கு ஒரே ஆண்டில் தகர்ந்தது எப்படி? அவரை சுற்றியிருப்பவர்கள் தகர்த்து விட்டார்கள். தீவிரவாத குழுக்களின் செய்தி தொடர்பாளர்களே நிதானமாக வார்த்தை பேசி வாதங்களை முன்வைக்கிற இந்த காலத்தில், எப்போதும் எல்லார் மீதும் வெறுப்பை உமிழும் துணை தலைவர்களை பார்த்தால் ஒதுங்கிப் போகத்தான் தோன்றும்.


 நாடாளுமன்றம் போக்கிரிகளின் புகலிடம். அரசியல்வாதிகள் அனைவரும் அயோக்கியர்கள். நாட்டில் எந்த அமைப்பும் ஊழலுக்கு அப்பாற்பட்டது அல்ல. கேஜ்ரிவால், கிரண் பேடி போன்றவர்கள் இப்படி தொடர்ந்து பேசியதில் கடுப்பாகி முதலில் எதிர்க்கட்சிகள் விலகின. அடுத்து, ஜனநாயகத்தின் அடித்தளம் அரசியல் என்பதை ஏற்றுக் கொண்டிருக்கும் நடுத்தர வர்க்கம் திகைத்து ஒதுங்கியது. அன்னாவை சுற்றியிருப்பவர்கள் அவரவர் தனி திட்டம் வைத்திருப்பதாக பேச்சு பரவியது. அதன் விளைவுதான் மக்கள் வராமல் மைதானம் காலியாக தெரிவது.


அரசியல் கட்சி தொடங்கி நாட்டில் முழு புரட்சி மூலம் மாற்றத்தை ஏற்படுத்துவோம் என பிரகடனம் செய்துள்ளனர். புறத்தோற்றம் காந்தியை நினைவுபடுத்தினாலும் அனைவரின் பேச்சிலும் ஆணவம் தெறித்தது.


நல்ல நோக்கத்துக்காக போராடும் தலைவன் வெற்றி பெற வேண்டுமானால் அவனை சுற்றியிருப்பவர்கள் வல்லவர்களாக மட்டுமின்றி நல்லவர்களாகவும் இருக்க வேண்டும். இல்லையேல் மக்களின் ஆதரவை தக்கவைக்க முடியாது. மக்களின் துணையின்றி எந்த தலைவனும் எதையும் சாதிக்க முடியாது.






நன்றி: Dinakaran 

No comments:

Post a Comment