ஒபாமாவின் நோக்கம்
பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் முடங்கி கிடப்பதால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது என்று அநேகமாக எல்லா தரப்பினரும் கூறிவருகின்றனர். என்ன மாதிரியான சீர்திருத்தம் என்பதில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கருத்து இ ருக்கலாமே தவிர, சீர்திருத்தம் தொடர வேண்டும் என்பதில் ஒருமித்த எண்ணம் தெரிகிறது. அமெரிக்க அதிபர் ஒபாமா அதைத்தான் பிரதிபலித்திருக்கிறார். இன்னுமொரு சீர்திருத்த அலை வீசினால்தான் இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை தக்க வைக்க முடியும் என்று அவர் நம்புகிறார். சில்லரை வர்த்தகம், இன்சூரன்ஸ் போன்ற துறைகளில் வெளிநாட்டினர் முதலீடு செய்ய முடியாமல் இந்திய அரசின் கொள்கைகள் தடுக்கின்றன என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார். எங்கள் நாட்டு பிரச்னையில் எப்படி தலையிடலாம் என்று சில கட்சிகள் குதிக்கின்றன. அமெரிக்காவே பொருளாதார தேக்க நிலையில் தடுமாறும்போது இந்தியாவுக்கு உபதேசம் செய்ய ஒபாமா முன்வந்திருப்பது வேடிக்கைதான் என்று சில தலைவர்கள் கிண்டலடிக்கின்றனர். இந்திய அரசின் கண்டிப்பான சட்டங்களால் பாதிக்கப்பட்டுள்ள வோடபோன் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் செய்துவரும் தவறான பிரசாரத்தில் ஒபாமா மயங்கிவிட்டார் என மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி கூறுகிறார். விமர்சனங்கள் எதிலும் தவறில்லை. மற்ற நாடுகளை தனது வழிக்கு கொண்டுவர விரும்பும் வல்லரசு நாடுகள் சாம பேத தான தண்டம் என அனைத்து வழிமுறைகளையும் கையாள தயங்குவதில்லை. அமைச்சர் மாற் றம், ஆட்சி கவிழ்ப்பு போன்றவை உட்பட. ரேட்டிங் ஏஜன்சிகள் மூலமாக இந்தியாவின் முதலீட்டு சூழலை மட்டமாக மதிப்பிடுவதில் தொடங்கி, பிரதமரே சரியில்லை என சர்வதேச பத்திரிகையில் அட்டைப்பட கட்டுரை வெளியிடுவது வரையுள்ள பல உத்திகளில் அவை அனுபவம் மிகுந்தவை. அதே சமயம், ஒரு கடை திறப்பதற்குக்கூட தடை தாண்டும் போட்டியில் பங்கேற்க வேண்டிய அளவுக்கு இந்திய குடிமக்களுக்கே சவாலாக இருக்கிறது முதலீட்டு சூழல் என்பதும் மறுக்க முடி யாத உண்மை. அந்நிய முதலீடுகளால் ஏற்படக்கூடிய நன்மை தீமைகள் குறித்த விரிவான, வெளிப்படையான விவாதம் எதற்கும் அரசு ஏற்பாடு செய்யவில்லை. ஒபாமாக்களின் அழுத்தங்களுக்கும் மம்தாக்களின் மிரட்டல்களுக்கும் நடுவே மத்திய அரசு செயலிழந்து நிற்பதை பார்க்க பரிதாபமாக இருக்கிறது.
நன்றி: Dinakaran
No comments:
Post a Comment