ஒருங்கிணைந்த தேர்தல் அத்வானியின் யோசனை
நாடாளுமன்றத்துக்கும் அனைத்து சட்ட மன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அத்வானி விடுத்துள்ள கோரிக்கை பெரும்பாலான மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கிறதோ இல்லையோ மத்திய அரசு கட்டாயம் பரிசீலிக்க வேண்டியது என்பதில் சந்தேகமில்லை. ஏற்கனவே இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்குடனும், மக்களவையின் முன்னவராக இருந்த பிரணாப் முகர்ஜியுடனும் விவாதித்து இருப்பதாக அத்வானி தன் பிளாகில் எழுதியிருக்கிறார். ஜனாதிபதியாக வந்துள்ள பிரணாப் குறைந்தபட்சம் இந்த ஒரு தேர்தல் சீர்திருத்தத்தை மட்டுமாவது நிறைவேற்ற முயற்சி செய்ய வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளார். ஏதாவது ஒரு மாநிலத்தில் தேர்தல் நடந்த வண்ணம் இருப்பதால் மத்திய அரசின் கொள்கைகளும் திட்டங்களும் அந்தந்த மாநிலத்தின் சூழ்நிலைக்கு ஏற்றவாறு பாதிக்கப்படுகின்றன என்பதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.இதற்கு எத்தனையோ உதாரணங்களை சொல்ல முடியும். காவிரி, முல்லை பெரியாறு, இலங்கை போன்ற மாநிலங்களுக்கு இடையிலான அல்லது அண்டை நாட்டுடனான பிரச்னை தீவிரமாகும் நேரத்தில் தேர்தல் வந்தால் என்ன நடக்கும் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். மத்திய, மாநில அரசுகளுக்கு மட்டுமல்ல தேசிய கட்சிகளுக்கும் திண்டாட்டமான சூழ்நிலை உருவாகிறது.2009 தேர்தலை தொடர்ந்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உருவான பிறகு இதுவரை 12 மாநிலங்களில் தேர்தல் நடந்துள்ளது. இந்த ஆண்டு இன்னும் 2 மாநிலங்கள், அடுத்த ஆண்டில் 10 மாநிலங்கள் தேர்தலை சந்திக்க இருக்கின்றன. அடுத்த நாடாளுமன்ற தேர்தல் நடக்கவுள்ள 2014ம் ஆண்டிலும் 7 மாநில சட்டமன்றங்கள் தேர்தலை எதிர்கொள்ளும். முதல் நான்கு பொது தேர்தல்களும் நாட்டுக்கும் மாநிலத்துக்கும் சேர்ந்துதான் நடந்தன. வங்கதேச போர் மூலம் கிடைத்த புகழை வாக்குகளாக மாற்ற ஓராண்டு முன்னதாக தேர்தல் நடத்த விரும்பி, 1971ல் நாடாளுமன்றத்தை இந்திரா காந்தி கலைத்ததுதான் முதல் மாற்றம். மாநில அமைச்சரவைகள் டிஸ்மிஸ், மத்திய அரசின் ஸ்திரமின்மை ஆகிய காரணங்களால் அதன் பிறகு ஒருங்கிணைந்த தேர்தலே சாத்தியப்படவில்லை. இந்த இரண்டு பிரச்னைகளுக்கும் தீர்வு காணும்போதுதான் அத்வானியின் யோசனைக்கு செயல்வடிவம் கொடுக்க முடியும்.
நன்றி:Dinakaran
No comments:
Post a Comment