மறைந்து வரும் மொழிகளைக் காக்க புதியதோர் இணையதளத்தைத் தொடங்கியுள்ளது கூகுள்
இன்றைய நிலையில் உலகம் முழுவதும் சுமார் ஏழாயிரத்திற்கும் அதிகமான மொழிகள் பேசப்படுகின்றன. அவற்றில் 3,054 மொழிகள் பயன்பாடு குறைந்து மெல்ல மெல்ல மறைந்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். மொழிதான் ஒரு சமூகத்தின் அடையாளம்.
இந்நிலையில் மொழிகள் மறைவதைத் தடுக்கும் புதிய முயற்சியில் இறங்கியுள்ளது கூகுள். இதற்காகவே தனியே ஒரு இணைய தளத்தைத் கூகுள் துவக்கியுள்ளது.
இந்தத் தளம் அழிந்துவரும் ஒரு குறிப்பிட்ட மொழி தொடர்பான வீடியோ, ஆடியோ, எழுத்துருக்கள் இவற்றைச் சேகரிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதற்காக அறிஞர்கள் மற்றும் மொழியியல் வல்லுநர்கள் அடங்கிய குழு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு அழிந்துவரும் மொழிகளை அடையாளம் கண்டு அவற்றைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்.
இந்தத் தளத்தில் பொதுமக்களும் பங்கு கொண்டு தங்கள் கருத்துக்களை, தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும் விதமாக வகை செய்யப்பட்டுள்ளது.
"இந்த மொழிகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், 100 ஆண்டுகளில் அழிந்தே போய் விடும்" என்று கவலை தெரிவிக்கிறார்கள் இந்த முயற்சிக்கான ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பொறுப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ள க்ளாரா ரிவேரா ரோடரிகஸ் மற்றும் ஜேசன் ரிஸ்மென்.
ஏற்கெனவே சில மொழிகளைச் சேர்ந்த மனிதர்களைக் கொண்டு சில மொழிகளின் முக்கியமான சில வார்த்தைகளான 'சாப்பிட்டியா, தூங்குனியா, என்ன செய்யற?' போன்ற அடிப்படைத் தகவல்களைக் குறிப்பிட்ட வழக்கு மொழிகளில் பதிவு செய்து இணையப்படுத்தியிருக்கிறார்கள்.
18ம் நூற்றாண்டில் பேசப்பட்டு அழிந்த சில மொழிகளை தொழில்நுட்ப உதவியோடு வீடியோவாகவும், ஆடியோவாகவும் மாற்றி இந்த இணையதளத்தில் பதிவேற்றி இருக்கிறார்கள்.
குறிப்பிட்ட மொழியைப் பற்றிய தகவல், அதாவது எந்தப் பகுதியை சேர்ந்த மக்கள் அந்த மொழியைப் பேசுகிறார்கள், அது எந்த மொழியிலிருந்து பிறந்தது போன்ற மொழி பற்றிய அடிப்படைத் தகவல்களும், சில உதாரணக் காட்சிப் படங்களும், மொழி தொடர்புடைய சில கோப்புகளும் இடம்பெறும் வகையில் இந்தத் தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மக்களும் இந்தத் தளத்தில் தங்கள் பங்களிப்பை அளிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு: www.endangeredlanguages.comநன்றி: பி. வைத்தீஸ்வரன் (புதிய தலைமுறை பத்திரிகையாளர்)
No comments:
Post a Comment