தொழிலாளர்களின் சுதேசி கலாசாரம்
ஹரியானாவின் மானேசர் நகரில் உள்ள மாருதி கார் தொழிற்சாலை லாக் அவுட் அறிவித்துள்ளது. இரண்டு நாள் முன்பு நடந்த தொழிலாளர் கலவரத்தில் உயர் அதிகாரி தீவைத்து கொல்லப்பட்டதன் விளைவு இந்த கதவடைப்பு. சஞ்சய் காந்தியின் கனவை நனவாக்க மத்திய அரசு தொடங்கிய நிறுவனம் மாருதி. ஜப்பானின் சுசூகி கம்பெனியுடன் இணைந்து தயாரித்த மாருதி 800 கார் இந்தியாவில் கார் புரட்சிக்கு சுழி போட்டது. பிறகு மத்திய அரசு ஒதுங்கிக் கொண்டு சுசூகியிடம் ஒப்படைத்துவிட்டது. நாட்டில் விற்பனையாகும் கார்களில் பாதிக்கு மேல் மாருதி தயாரிப்புகள். 30 ஆண்டுகள் முடிந்ததை விழாவாக கொண்டாடும் வேளையில் விபரீதம் நடந்துள்ளது. கண்டித்த சூப்பர்வைசரை தாக்கிய ஊழியர் சஸ்பெண்ட்; அதை எதிர்த்து ஊழியர்கள் வெறியாட்டம்; 90 அதிகாரிகள் ஆஸ்பத்திரியில். மானேசர் ஆலையில் 3,000 பேர் வேலை செய்கின்றனர். கூர்கானில் இன்னொரு ஆலை. இரண்டிலுமாக ஆண்டுக்கு 14,00,000 கார் உற்பத்தி. இவை ஹரியானா எல்லைக்குள் வந்தாலும் டெல்லியில் இருந்து ரொம்ப பக்கம். சென்ற ஆண்டும் மானேசர் ஆலையில் பிரச்னை. மாருதி ஆலைகளுக்கு பொதுவான தொழிற்சங்கம் இருந்தது. அதை ஏற்காமல் எங்கள் சங்கத்தை அங்கீகரி என தொழிலாளர்கள் கொடி தூக்கினர். ஆலை நிர்வாகமும் ஹரியானா அரசும் இழுத்தடித்ததால் வேலை நிறுத்தம். தொடர்ந்து வன்முறை. கதவடைப்பு, பெரும் நஷ்டத்துக்கு பிறகு சங்கம் அங்கீகரிக்கப்பட்டது. அந்த சங்கம்தான் இன்று வன்முறையை அவிழ்த்து விட்டிருக்கிறது. சென்ற ஆண்டு பிரச்னை செய்த இரண்டு தொழிற்சங்க புள்ளிகளை தலா 40 லட்சம் செலவில் நிர்வாகம் வெளியேற்றி வெளியூருக்கு அனுப்பி வைத்தது. இனி பிரச்னை வராது என நம்பிக் கொண்டிருந்தது. ஜப்பானில் உள்ள தாய் நிறுவனமான சுசூகி மோட்டார் கார்ப்பரேஷன் சம்பாதிக்கும் லாபத்தில் பாதி இங்கிருந்துதான் கிடைக்கிறது. ஆக, இந்தியாவை சுலபத்தில் சுசூகி கைகழுவ முடியாது. ஆகவேதான் போராட்டத்துக்கு பிறகும் மானேசரில் மூன்றாவது ஆலை தொடங்க முதலீடு செய்ய முடிவெடுத்தது. ஆனாலும் உஷாராக குஜராத்தில் அடுத்த ஆலையை நிறுவ தீர்மானித்தது. அது சம்பந்தமாக பேச முதல்வர் நரேந்திர மோடி இந்த வாரம் ஜப்பான் செல்கிறார். மம்தாவால் சிங்கூரில் டாடா கார் தொழிற்சாலை தொடங்க முடியாமல் பிரச்னை ஏற்பட்டபோது ரத்தன் டாடாவும் மோடியை நாடி சென்றது நினைவிருக்கலாம். ஹரியானாவின் நஷ்டம் குஜராத்தின் லாபம். எனினும், தொழிலாளர்கள் காட்டுமிராண்டிகள் போல் கையில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு அதிகாரிகளை வேட்டையாடும் காட்சிகள் பன்னாட்டு நிறுவன நிர்வாகிகள் மனக்கண்ணில் நீண்டகாலம் அழியாதிருக்கும். இந்தியாவுக்கு வரக்கூடிய முதலீடுகளில் அதன் தாக்கம் தெரியத்தான் போகிறது. ஜப்பான் தொழில் கலாசாரத்துக்கும் இந்திய தொழில் கலாசாரத்துக்கும் இடைவெளி இருப்பதால்தான் இப்படி சிக்கல்கள் வருகின்றன என்று சிலர் கூறுகின்றனர். தொழில்தான் என்றில்லை. பொதுவாக நமது கலாசாரம் மற்றவர்களைவிட மாறுபட்டது. நல்ல உதாரணம் நேரம் தவறாமை. பங்க்சுவாலிடி. சுட்டுப் போட்டாலும் இந்தியர்களுக்கு வராது என்பதை இங்கு தொழில் தொடங்க வரும் வெளிநாட்டவர் புரிந்து கொள்வதில்லை. தாமதமாக வரும்போது ஆப்சென்ட் போடுவது, சம்பள வெட்டு என்று சூப்பர்வைசர்கள் கெடுபிடி செய்வதை ஊழியர்கள் ஜீரணிப்பதில்லை. வேலையின் நடுவே அரட்டை அடித்தால் அல்லது உலா வந்தால் ஆஜானுபாகுவான செக்யூரிடி கார்டுகளை அனுப்பி சூப்பர்வைசர்கள் தடுப்பதும் பிடிக்கவில்லை. மானேசர் ஆலை 900 ஏக்கரில் பரந்து கிடக்கிறது. எந்த நேரமும் நூற்றுக்கணக்கான செக்யூரிடி கார்டுகளை பார்க்கலாம். டைரக்டர்கள் குழுவில் 12ல் 5 பேர் இந்தியர்களாக இருந்தும் சுதேசி கலாசாரத்துக்கு பாதுகாப்பு இல்லையே என்ற ஆதங்கம் தொழிற்சங்க தலைவர்களுக்கு உண்டு. மற்றபடி பெரிய பிரச்னைகள் இல்லை. ஊதிய உயர்வு சம்பந்தமான பிரச்னைகளும் கிடையாது. அந்த வகையில் தொழிற்சங்கம் முன்வைக்கும் கோரிக்கைகளை நிர்வாகம் உடனே ஏற்றுக் கொண்டால்கூட சங்க தலைவர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஆர்வம் காட்டுவதில்லையாம். பேச்சுவார்த்தை சீக்கிரமாக முடிந்துவிட்டால் தொழிலாளர்கள் சந்தேகிப்பார்கள் என்பதால் முடிந்தவரை இழுப்பார்களாம். மாதங்கள் அதிகமாகும்போது நிலுவைத்தொகையும் அரியர்ஸ் கணிசமாக கிடைக்கும் என்பது இன்னொரு காரணம். 1980களில் மும்பை பஞ்சாலைகளில் இப்படிப்பட்ட நிலைமைதான் காணப்பட்டது. கட்சிக் கட்டுப்பாடு இல்லாத சுயேச்சையான தொழிற்சங்க தலைவர்களின் சர்வாதிகாரம் மும்பையின் பிரமாண்டமான ஆலைகளை மட்டுமின்றி தொழிலாளர்களையும் குடும்பங்களையும் நிரந்தரமாக முடக்கியதுதான் இறுதி விளைவு.
நன்றி: Dinakaran
No comments:
Post a Comment