பொய்மையும் வாய்மை இடத்து
பொய் சொல்லாமல் வாழ முடியுமா? தெரியவில்லை. பொய்மையும் வாய்மை இடத்து என்று வள்ளுவர் சொல்கிறார். அதை பலர் பின்பற்றுகின்றனர். யாருக்கும் பாதகம் இல்லாத பொய் சொல்லலாமாம். மரண வாசலில் நிற்கும் நோயாளிக்கு டாக்டர் தைரியம் சொல்வது; தூக்கு தண்டனையை எதிர்நோக்கும் கொலையாளிக்கு வக்கீல் நம்பிக்கை ஊட்டுவது மாதிரி. உண்மையில் இது மோசடி. இந்த புடவை எனக்கு அழகாக இருக்கிறதா என்று கேட்கும் மனைவிக்கு பதில் சொல்வது மாதிரி கிடையாது. மனதை புண்படுத்த வேண்டாமே என்ற நல்ல நோக்கம் இல்லை. பிழைப்புக்காக. வீடு அலுவலகம் கல்லூரி கட்சி பார் ஃபேஸ்புக்கில் நாம் பொய் சொல்லாத நாள் எட்டாவது கிழமை. சாதா பொய்யா பச்சை பொய்யா என்பது வேறு விஷயம். சுவாசிப்பது சாப்பிடுவது போல பொய் பேசுவது இயல்பாகி போனதுதான் சோகம்.
இந்த நிலை மாறக்கூடும். உண்மையே பேசினால் உடலும் மனமும் ஆரோக்யமாக இருக்கும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். அமெரிக்காவில் உள்ள நாட்டர்டாம் யுனிவர்சிடி விஞ்ஞானிகள் இதற்கான ஆய்வை 10 வாரம் நடத்தினர். 110 பேரை இரண்டு குழுவாக பிரித்தனர். எந்த கேள்விக்கும் உண்மையான பதில் சொல்லுமாறு ஒரு குழுவை கேட்டுக் கொண்டனர். அடுத்த குழு பொய் சொல்ல தடை இல்லை. உண்மையான பதில் சொன்னவர்களிடம் மூன்றாவது வாரத்தில் இருந்தே பெரிய மாற்றம். 'மனதில் இறுக்கம் இல்லை, மகிழ்ச்சி ததும்புகிறது, உறவினர்கள் நண்பர்களுடன் நெருக்கம் அதிகரித்துள்ளது, தலைவலி கண் எரிச்சல் ஜலதோஷம் தொண்டை கரகரப்பு போன்ற தொல்லைகள் நின்றுவிட்டது, நன்றாக தூங்குகிறேன்' என்று கூறியிருக்கிறார்கள். மிகைப்படுத்துவது, நொண்டி சாக்கு சொல்வது எல்லாம்கூட நின்றுவிட்டதால் நான் ரொம்பவும் நேர்மையான ஆள் என்ற பெருமிதம் இவர்களுக்கு ஏற்பட்டு அதனால் சுற்றியிருப்போர் மத்தியில் கவுரவமும் அதிகரித்துள்ளது.
பொய் சொல்ல அனுமதிக்கப்பட்ட குழுவில் எவருக்கும் இந்த முன்னேற்றம் கிட்டவில்லை. உடல் நலத்துக்கும் நேர்மைக்கும் உள்ள தொடர்பு குறித்த முதலாவது ஆய்வு இது. மனநல மருத்துவர்களை பிரமிக்க வைத்திருக்கிறது. லயர் லயர் ஹீரோ ஜிம் கேரி மாதிரி ஒருநாள் மட்டுமாவது முயற்சி செய்து பார்க்கலாமா?
பொய் சொல்ல அனுமதிக்கப்பட்ட குழுவில் எவருக்கும் இந்த முன்னேற்றம் கிட்டவில்லை. உடல் நலத்துக்கும் நேர்மைக்கும் உள்ள தொடர்பு குறித்த முதலாவது ஆய்வு இது. மனநல மருத்துவர்களை பிரமிக்க வைத்திருக்கிறது. லயர் லயர் ஹீரோ ஜிம் கேரி மாதிரி ஒருநாள் மட்டுமாவது முயற்சி செய்து பார்க்கலாமா?
நன்றி: Dinakaran
No comments:
Post a Comment