Friday, 10 August 2012

வேண்டாத ஆபரேஷன்

வேண்டாத ஆபரேஷன்

அரசு மருத்துவமனை என்றால் பலருக்கு அலர்ஜி. ஆனாலும் அரசு மருத்துவமனைகளில் கூட்டம் அலைமோதுகிறது. என்ன அர்த்தம்? தனியார் மருத்துவமனைக்கு செல்ல வசதி இல்லாதவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான சிகிச்சை ஆலோசனை மருந்துகள் இங்கே கிடைக்கிறது. அதையும் தாண்டி நுணுக்கமான பல அறுவை சிகிச்சைகள் அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க மத்திய திட்டக்குழு விரும்புகிறது. 'மக்களுக்கு மருத்துவ சேவை வழங்குவதை தனியார் வசம் ஒப்படைத்து விடு; அது சரியாக நடக்கிறதா என்று மேற்பார்வை செய், போதும்' என அரசுக்கு ஆலோசனை கூறியுள்ளது. அமெரிக்கா, மெக்சிகோ போன்ற சில நாடுகளில் இப்படித்தான் நடக்கிறது. எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம் என்பதை நோயாளி தேர்வு செய்யலாம். அந்த மருத்துவமனைக்கு அரசு பணம் கொடுக்கும். இன்சூரன்ஸ் திட்டம் வழியாக இது செயல்படுத்தப்படும். இந்த ஆலோசனையை அரசு ஏற்றால் ஏற்கனவே செல்வாக்குடன் சுழலும் தனியார் மருத்துவமனைகளின் ஆதிக்கம் ஆழமாக வேரூன்றும். மருந்து கம்பெனிகள், மருத்துவ கருவி தயாரிப்பாளர்கள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், டாக்டர்கள் வலைப்பின்னல் உருவாகும். அரசின் கொள்கை களை மாற்றும் அளவுக்கு அது பலம் பெறும். அமெரிக்காவில் அதுதான் நடந்தது. ஏழைகள் சிகிச்சை பெற வழியே இல்லை என்றானதால் அரசின் பங்களிப்பை மீண்டும் அதிகரிக்கும் முயற்சியில் அதிபர் ஒபாமா ஈடுபட்டுள்ளார்.

இன்சூரன்ஸ் திட்டம் தேவையற்றதும் செலவு மிகுந்ததுமான சோதனை, அறுவை சிகிச்சை செய்யுமாறு நோயாளிகளை தள்ளுவதை பார்க்கிறோம். புறநோயாளியாக சில நாட்கள் சிகிச்சை பெற்றால் இன்சூரன்ஸ் பணம் கிடையாது. நோயை  முற்றவிட்டு உள்நோயாளியாக மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றால் முழு செலவையும் திரும்ப பெறலாம். முறைகேடுகளுக்கு வழி திறக்கும் இந்த நடைமுறையில் நோயாளியை தவிர அனைவருக்கும் நல்ல பலன் கிடைக்கும். அனைத்து குழந்தைகளுக்கும் படிப்பறிவு வழங்கும் கடமையை கைகழுவி கல்வி வியாபாரத்துக்கு வித்திட்டது போல நல துறையிலும் தவறான முடிவு எடுக்காமல் மத்திய அரசை தடுக்கும் பொறுப்பு மாநில அரசுகளை சார்ந்தது.




நன்றி: Dinakaran

No comments:

Post a Comment