Saturday, 11 August 2012

வேலைக்காக அல்ல வாழ்க்கை

வேலைக்காக அல்ல வாழ்க்கை

இனிமையான சக ஊழியர்களுடன் இணைந்து வேலை செய்யும் சூழலுக்காக ஊதியத்தில் சமரசம் செய்துகொள்ள 82 சதவீத இந்தியர்கள் தயார் என்று ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதைவிட அதிகமானவர்கள் இதே காரணத்துக்காக சம்பளத்தை குறைக்க முன்வரும் நாடு சீனா. பரஸ்பரம் நம்பிக்கையற்ற அண்டை நாடுகளாக இருந்தாலும் பல்வேறு வகைகளில் வரலாற்று ரீதியான கலாசார ஒற்றுமை நீடிக்கிறது. இது ஒன்று. உலக அளவில் வேலை நிலவரம் எப்படி என்று ஆய்வு செய்யும் ராண்ட்ஸ்டட் நிறுவனம் 32 நாடுகளில் சர்வே நடத்தியது. சம்பளத்தைவிட நல்லவர்களோடு சேர்ந்து வேலை செய்யும் சூழல்தான் பெரிது என்று நம்புபவர்களின் உலக சராசரி 60 சதவீதம்தான். இந்தியா, சீனாவில் இவ்வளவு அதிகம் இருப்பதற்கு காரணம் இவற்றிலுள்ள சூழல் அத்தனை ஆரோக்யமாக இல்லை என்பதுதான். கைநிறைய ஊதியமும் ஏராளமான சலுகைகளும் வழங்கும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஊழியர்கள் தொடர்ந்து வேலை செய்யாமல் விலகுவதற்கு இதுவே காரணமாக சொல்லப்பட்டது. அதை தொடர்ந்துதான்  ஊழியர்களுக்கிடையே நட்பும் நல்லெண்ணமும் உருவாக வேண்டும் என்பதற்காக புதிய வாய்ப்புகளை நிர்வாகங்கள் ஏற்படுத்திக் கொடுத்தன. கண்காணிப்பாளர் பொறுப்பில் நியமிக்கப்படுபவர்கள் விதிகளை இம்மி பிசகாமல் அமல்படுத்தும்  கண்கொத்தி பாம்புகளாக இல்லாமல் ஊழியர்களின் உணர்வுகளை புரிந்து செயல்படும் மனிதவள நிர்வாகிகளாக செயல்பட வேண்டும் என்ற விழிப்புணர்வு அப்படி வந்ததுதான். பொறாமை, வெறுப்பு, போட்டுக் கொடுப்பது, கவிழ்க்க நினைப்பது, கூட்டணி அமைப்பது என்று சதா கெட்ட எண்ணங்களுடன் நடமாடுபவர்கள் நான்கு பேர் இருந்தால் போதும், ஒரு சிறந்த அலுவலகத்தின் பணிச்சூழலை அடியோடு நாசமாக்கிவிடலாம். அதனால் உற்பத்தி அளவும் தரமும் சரிந்து நஷ்டத்தில் கொண்டுவிடும். கட்டுக் கோப்பான பெரிய நிறுவனங்களும் இதற்கு விதிவிலக்கு இல்லை.  இதையெல்லாம் பொருட்படுத்தாமல் கடமையே பெரிதென்று உழைக்கும் ஊழியர்களை பார்க்க முடியாது. ஏனெனில், வாழ்க்கைக்காக வேலையே தவிர வேலைக்காக அல்ல வாழ்க்கை என்ற சித்தாந்தம் ஏனைய நாடுகளை போலவே இந்தியாவிலும் வேரூன்றி இருப்பதை ஆய்வு பதிவு செய்துள்ளது.





நன்றி: Dinakaran

No comments:

Post a Comment