Saturday, 11 August 2012

பொக்கிஷம் காப்போம்

பொக்கிஷம் காப்போம்

நம்முடைய மதிப்பு நமக்கே தெரிவதில்லை. இந்தியாவில் அதுதான் பிரச்னை. யோகா, தியானம், இயற்கை மருத்துவம் இப்படி பல விஷயங்கள். இந்த வரிசையில் கலைப் பொருட்களும். இவை பொருட்களல்ல, பொக்கிஷங்கள். பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் கோயில்களில் சிலைகளை கொள்ளையடித்து வெளிநாடுகளுக்கு கடத்திச் சென்று விற்கும் வேலையில் பல கும்பல்கள் ஈடுபட்டுள்ளன. கோயில்களில் இருக்கும் வெண்கல, பஞ்சலோக கடவுள் சிலைகள் விலை மதிப்பற்றவை. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டவை. இதுபோன்ற பழங்கால பொருட்களுக்கு வெளிநாடுகளில் கோடி கோடியாய் கொட்டிக் கொடுக்கிறார்கள். ஏலத்தில் வரும் இவற்றை பழங்கால பொருட்களை சேகரித்து வைக்கும் கோடீஸ்வரர்கள் அதிக விலை கொடுத்து வாங்குகிறார்கள். இந்தியாவில் தமிழகத்தில்தான் தொன்மையான கோயில்கள் அதிகம். சிலைகளும் அதிகம். 50 ஆயிரத்துக்கும் அதிகமான சிலைகள், கலைப் பொருட்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை வெண்கல, பஞ்சலோக சாமி சிலைகள். அதிக விலை கிடைப்பதால் கோயில்களில் புகுந்து சிலைகளை திருடுவது அதிகரித்து விட்டது.

தமிழகத்தின் 18 கோயில்களில் திருடப்பட்ட சிலைகளை விற்பனை செய்த சுபாஷ் சந்திரா கபூர் என்பவரை ஜெர்மனியில் கைது செய்து தமிழகம் கொண்டு வந்துள்ளனர் போலீசார். இப்படி கடத்தல்காரர்களை கூட கொண்டு வந்துவிடலாம். ஆனால் திருட்டு பொருட்கள் என ஆதாரங்களுடன் ந¤ரூபித்தாலும் சாமி சிலைகளை மீண்டும் இந்தியா கொண்டு வருவதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. 1976ல் திருடப்பட்ட நடராஜரின் வெண்கல சிலை 82ல்  பிரிட்டிஷ் மியூசியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டது. அதை மீட்க வழக்கு போட்டு 91ல்தான் இந்தியா கொண்டு வர முடிந்தது. இதே கதிதான் சிவபுரம் நடராஜர் சிலைக்கும். 1956ல் திருடப்பட்ட அந்த சிலை 1983ல்தான் இந்தியா வந்தது. இந்தியாவின் பெருமையே அதன் பாரம்பரியம்தான். அதை பறை சாற்றுவது கோயில்களும் அரண்மனைகளும்தான். எனவே அவற்றில் உள்ள பழங்கால சிலைகளை காப்பது அவசியம். கோயில் பாதுகாப்பில் பொதுமக்களையும் பங்கேற்க வைத்தால் சிலை  திருட்டு குறையும். நம் பாரம்பரிய பொக்கிஷங்களையும் பாதுகாக்க முடியும்.




நன்றி: Dinakaran 

No comments:

Post a Comment