"குழந்தை ஸ்ருதி" உறைந்த புன்னகை
குழந்தையை தனியாக பள்ளிக்கு அனுப்பி வைக்கும் தைரியம் பெற்றோருக்கு கிடையாது. வாகனங்களின் போக்குவரத்தை நினைக்கும்போதெல்லாம் அடிவயிறு கலங்கும். எல்.கே.ஜி., யு.கே.ஜி முடிக்கும்வரை யாராவது ஒருவர் பள்ளிக்கு கொண்டுபோய் விடுவது, மற்றவர் அழைத்து வருவது என்பது எழுதப்படாத ஏற்பாடாக இருக்கிறது. இரண்டு வருட அனுபவத்துக்கு பிறகு தைரியத்தை வளர்த்துக் கொண்டு , வேறு வழியில்லை, வேலைக்கு போகவேண்டும் , ஏதோ ஒரு வாகனத்தில் மற்ற குழந்தைகளுடன் அனுப்புகின்றனர். அந்த வாகனத்தின் ஓட்டுனருக்காக கடவுளை வேண்டாத தாய் இருக்க மாட்டாள். ஆட்டோ டிரைவர் சேதுமாதவனின் மனைவியும் தினமும் அப்படி வேண்டிக் கொள்வார். 6 வயது மகள் ஸ்ருதி பத்திரமாக வீடு வந்து சேர வேண்டுதல். செவ்வாய் மாலையில் வழக்கமான பேருந்து வராமல் வேறொன்று வந்ததையும் அதிலிருந்து மற்ற குழந்தைகள் எல்லாம் இறங்கியதையும் பார்த்த நொடியே ஸ்ருதியின் அம்மாவுக்கு வியர்த்திருக்கிறது. பேருந்தில் இருந்த துவாரத்தின் வழியாக கீழே விழுந்த ஸ்ருதி மீது டயர் ஏறி உருக்குலைத்த கொடுமையை முழுவதும் கேட்பதற்குள் மூர்ச்சையாகி விழுந்தார் அந்த தாய். திறந்த விழிகளும் உறைந்த புன்னகையுமாக எடுத்துவரப்பட்ட மகளின் பூமுகத்தை பார்க்க துணிவில்லை.நீதிபதிகளே அதிர்ந்துபோய் சம்பவத்தை வழக்காக ஏற்று அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பியிருப்பது தமிழகத்தை உலுக்கியுள்ள கொடுமையின் பிரதிபலிப்பு. கல்வி வியாபாரிகளின் பேராசைக்கு எல்லையே இல்லையா என்ற கேள்வி மக்களின் குமுறலாக வெளிப்படுகிறது. கட்டணம், நன்கொடை என பல பெயர்களில் கொள்ளையடிக்கும் கூட்டம் குழந்தைகளின் உயிருக்காவது மதிப்பளித்து தரமான வாகனங்களை இயக்கக்கூடாதா என்ற ஏக்கம் முற்றிலும் நியாயமானது. பெற்றோரின் குறைந்தபட்ச எதிர்பார்ப்பு குழந்தைகளின் உயிர் பாதுகாப்பு. சம்பந்தப்பட்ட பேருந்து பள்ளிக்கு சொந்தமானது அல்ல; குழந்தைகளை அழைத்து வரவும் திரும்ப கொண்டு விடவும் குத்தகை எடுத்த தனிநபருக்கு சொந்தமானது என நிர்வாகம் கூறும் பதிலானது, வெந்த புண்ணில் வெந்நீர் ஊற்றுவதற்கு ஈடானது. வாகன கட்டணம் வசூலிப்பது பள்ளி நிர்வாகம். வாகனங்கள் மஞ்சள் வர்ணம் பூசப்பட்டு, பள்ளியின் பெயரை கொட்டை எழுத்தில் பொறித்துக் கொண்டு வலம் வருகின்றன. இவை தவிரவும் வேன்கள், கார்கள் என தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினந்தோறும் லட்சக்கணக்கான குழந்தைகளை சுமந்து செல்கின்றன. இந்த வாகனங்கள் செல்லும் அதிவேகத்தையும், ஓட்டுனர்களின் போக்குவரத்து விதி மீறல்களையும் எல்லா ஊர்களிலும் பார்க்க முடிகிறது. 'வேனை விட்டு இறங்கிய குழந்தை அதே வேனின் சக்கரம் ஏறி நசுங்கி பலி' என்ற தலைப்பு பலமுறை பத்திரிகைகளில் வந்துள்ளது. பிரதான செய்தியாக ஊடகங்களில் இடம் பிடிப்பதால் அரசு அவசரமாக நடவடிக்கை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. சில அதிரடி சோதனைகள், சில பறிமுதல்கள், சில சுற்றறிக்கைகள். அவ்வளவுதான். அப்புறம் அவரவர் வேலைகளில் மூழ்கி விடுகிறோம். அடுத்த சம்பவம் நடக்கும் வரையில் நிம்மதியாக தூங்குகிறோம். தூக்கம் ஜீவராசிகளுக்கு அவசியம். ஆனால் சட்டம் ஒருபோதும் கண் அசரக்கூடாது. சட்டத்தை மதிக்கத் தவறினால் தண்டனை நிச்சயம்; விதியை மீறி நடந்தால் சிறைவாசம் உறுதி என்ற நிலைமை என்று உருவாகிறதோ அன்றுதான் ஸ்ருதி போன்ற பிஞ்சுகளின் அகால மரணத்துக்கு முற்றுப்புள்ளி விழும்.
அத்தகைய சூழலை உருவாக்கும் தகுதியும் ஆற்றலும் இன்று நீதிமன்றத்திடம் மட்டுமே எஞ்சியிருக்கிறது. ஊழலில் நெளியும் புழுக்களால் அதிகார வர்க்கம் மீது அவநம்பிக்கை படிந்து வெகுகாலம் ஆயிற்று. கற்பனைப் படைப்பான 'இந்தியன்' தாத்தாவுக்கு கிடைத்த கைதட்டல் அதன் எதிரொலிதான். பல்வேறு வழக்குகளில் நாட்டுக்கே முன்மாதிரியான தீர்ப்புகளை வழங்கி பெருமை பெற்ற சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் காட்டும் அக்கறை பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கவசமாக அமையட்டும்.
அத்தகைய சூழலை உருவாக்கும் தகுதியும் ஆற்றலும் இன்று நீதிமன்றத்திடம் மட்டுமே எஞ்சியிருக்கிறது. ஊழலில் நெளியும் புழுக்களால் அதிகார வர்க்கம் மீது அவநம்பிக்கை படிந்து வெகுகாலம் ஆயிற்று. கற்பனைப் படைப்பான 'இந்தியன்' தாத்தாவுக்கு கிடைத்த கைதட்டல் அதன் எதிரொலிதான். பல்வேறு வழக்குகளில் நாட்டுக்கே முன்மாதிரியான தீர்ப்புகளை வழங்கி பெருமை பெற்ற சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் காட்டும் அக்கறை பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கவசமாக அமையட்டும்.
நன்றி: Dinakaran
No comments:
Post a Comment