கல்யாண மன்னர்கள்
ஊர் ஊராக சென்று 14 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண மன்னன் எந்த மனைவியையும் கொலை செய்யவில்லை. அந்த சாதனையை முறியடித்து 17 பேரை தாரமாக்கிக் கொண்ட கேரளா ஆசாமியும் கொடுமை எதுவும் செய்யவில்லை. சென்னை கல்லூரியில் உதவி பேராசிரியராக வேலைபார்த்த 32 வயது நடராஜன் அந்த விதியை மாற்றி எழுதியிருக்கிறார். நாமக்கல் பக்கம் சொந்த ஊரில் மனைவியை விட்டுவிட்டு வேலைக்காக சென்னையில் குடியேறிய இந்த ஆள் தனது மாணவியுடன் குடும்பம் நடத்தியுள்ளார். ஊரிலிருந்து மனைவி வந்தபோது சாயம் வெளுத்துவிட்டது. மனைவிக்கு குளிர்பானத்தில் மது கலந்து குடிக்க வைத்து 'வாக்கிங் போகலாம் வா' என்று கால்வாய் கரைக்கு அழைத்துச் சென்று 10 முறை கத்தியால் குத்தி கொலை செய்து, அங்கேயே குழி தோண்டி சடலத்தை புதைத்துவிட்டு, ஒன்றுமே நடக்காதது போல ஒரு மாதமாக கல்லூரிக்கு சென்று வந்திருக்கிறார். இன்னும் பல மாணவிகளும் ஆசிரியைகளும் அவரது வலையில் விழுந்துள்ளனர் என்பது உண்மையா செய்திக்கு சேர்த்த மசாலாவா என்பது விசாரணைக்கு பிறகுதான் தெரியும். திருமணம் ஆனவர் என்று தெரிந்தே ஆண்களுடன் மிக நெருக்கமாக பழகும் பெண்களை ஒவ்வொரு அலுவலகத்திலும் பார்க்க முடிகிறது. இது தனிமனித சுதந்திரம், உரிமை, பரஸ்பர சம்மதம் போன்ற வார்த்தைகளால் பாதுகாக்கப்படும் உறவாகி விட்டதால் மற்றவர்கள் தலையிட தயங்குகின்றனர். கள்ளக்காதல் யாருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தாத வார்த்தையாக புழங்குவதன் பின்னணி இதுதான். ஆனால் பாதிக்கப்படும் பெண்கள் 'மற்றவர்கள்' அல்ல. அத்துமீறும் கணவனை தட்டிக் கேட்க அவர்களுக்கு அனைத்து உரிமைகளும் இருக்கிறது. திருமணத்தை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்ற சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்தினால் பெண்கள் ஏமாற்றப்படுவது பெருமளவு குறையும். பெயர், பிறந்த தேதி, வசிப்பிட முகவரி போன்றவை அடிப்படை ஆவணங்களில் இடம் பெறுவதை போல திருமணம் தொடர்பான விவரங்களும் இடம் பெற செய்தால் மோசடிக்கு வாய்ப்பு குறையும். ஒரு சிம் கார்டு வாங்குவதற்கு எத்தனையோ ஆவணங்களை சமர்ப்பிக்க சொல்லும் அரசாங்கம், வாழ்க்கைத் துணையை வாய்ச்சொல் மூலமே அடையக்கூடிய வாய்ப்பை ஆண்களுக்கு வழங்குவது அநியாயமாக தோன்றுகிறது.
நன்றி: Dinakaran
No comments:
Post a Comment