Sunday, 26 August 2012

எத்தனை பெரிய சாதனையாளனாக இருந்தாலும்...


நீல் ஆம்ஸ்டிராங் அடுத்து உலக புகழ் பெற்ற இன்னொரு பெயர் லான்ஸ் ஆம்ஸ்டிராங். உலகின் கடுமையான சைக்கிள் பந்தயத்தில் ஏழு முறை வென்ற ஒரே மனிதன். டூர் டி பிரான்ஸ் 3 வாரத்தில் 3200 கிலோமீட்டர் ஓட்டும் பந்தயம்.கேன்சர் நோயால் சில மாதங்களில் இறந்துவிடுவார் என டாக்டர்கள் கூறிய பிறகு அந்த நோயுடன் போராடி ஜெயித்து மீண்டும் சைக்கிள் ஓட்டி வெற்றிக்கொடி நாட்டியதை அதிசயமாக பார்த்தது உலகம். கிரிக்கெட் வீரர் யுவராஜ் அவரால் ஊக்கம் பெற்றவர். கேன்சர் நோயாளிகளுக்கு உதவ அறக்கட்டளை நிறுவி 50 கோடி டாலர் திரட்டியுள்ளார். இந்த நிலையில்தான் அவர் ஊக்க மருந்து பயன்படுத்தி போட்டிகளில் பங்கேற்றதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருப்பதாக அமெரிக்க ஊக்க மருந்து தடுப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அது நடத்திய விசாரணையில் பங்கேற்று தனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்று லான்ஸ் கூறிவிட்டதால் ஒரு தரப்பான முடிவை அந்த அமைப்பு அறிவித்துள்ளது. அதன்படி லான்ஸ் இதுவரை வென்ற அனைத்து பதக்கங்களும் அவரிடம் இருந்து பறிக்கப்படும்; இனி அவர் ஆயுளுக்கும் சைக்கிள் பந்தயங்களில் பங்கேற்கக்கூடாது. விசாரணைக்கு வர மறுப்பது குற்றத்தை ஒப்புக் கொள்வதற்கு சமம் என அமெரிக்க அமைப்பு கூறுகிறது.
இத்தனை ஆண்டுகளில் 500 முறைக்கு மேல் பரிசோதனை செய்ததில் தடை செய்யப்பட்ட எந்த மருந்தையும் நான் பயன்படுத்தவில்லை என்று ரிசல்ட் வந்த பிறகும் எப்படியாவது என் பதக்கங்களை பறிக்கும் முயற்சியை 17 ஆண்டுகளாக தொடர்கிறார்கள் சிலர் என்று குமுறுகிறார் லான்ஸ்.செய்யாத குற்றத்துக்காக தொடர்ந்து அடிவாங்கும் அப்பாவி ஒரு கட்டத்தில் தாங்கமுடியாமல் 'ஆமாம், நான் குற்றவாளிதான்' என்று ஒப்புக் கொள்ளும் மன நிலைக்கு வருவதை நினைவுபடுத்துகிறது. அதையே லான்ஸ் வேறு மாதிரி சொல்கிறார்: 'போதும்டா சாமி என்று சொல்லி மொத்தத்தையும் விட்டு விலகும் கட்டம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் வரும். எனக்கு இப்போது வந்திருக்கிறது'. எத்தனை பெரிய சாதனையாளனாக இருந்தாலும் அதிகார கட்டமைப்புடன் மோதி ஜெயிக்க முடியாது என்பதற்கு இங்கேயும் பல உதாரணங்களை பார்த்திருக்கிறோம்.




நன்றி: Dinakaran 

இந்த நாட்டின் சாபக்கேடு


சாலையில் நிகழும் ஒவ்வொரு மரணமும் மனதை உலுக்குகிறது. தினம் தோறும் நடக்கிறது. விதம் விதமான விபத்துகள். காஞ்சிபுரம் அருகே பிற்பகலில் விபத்தில் ஒன்பது பேர் உடல் சிதறி இறந்திருக்கிறார்கள். அந்த கொடூரத்தை வர்ணிக்க கோரம் என்ற வார்த்தை போதாது. பலியானவர்கள் செய்த பாவம் என்ன? தேசிய நெடுஞ்சாலையில் உப்பு லாரியை நிறுத்தியிருக்கிறான் ஒரு மடையன். வயிறு நிறைய சாப்பிட்ட மயக்கத்தில் கண்ணசந்து அதில் பஸ்ஸை மோதியிருக்கிறான் இன்னொருவன். உடல் சிதைந்து கதறிக் கொண்டிருந்தவர்களை பார்த்து 108க்கு பொதுமக்கள் போன் போட்டால் ஆம்புலன்ஸ் வரவில்லை. நெடுஞ்சாலை ரோந்துக்காக நியமித்த காவல்துறை வாகனத்தையும் காணவில்லை. மாவட்ட அரசு மருத்துவமனைக்கு போனால் அவசர சிகிச்சைக்கு அங்கே வசதிகள் போதவில்லை. நாடு முழுவதும் இதுதான் நிலைமை. மனித உயிருக்கு எந்த மதிப்பும் கிடையாது. அதனால்தான் சாலை மரணத்தில் இந்தியாவுக்கு முதல் இடம். 6 நிமிடத்துக்கு ஒரு உயிர் பலியாகிறது. ஆண்டுக்கு 15 லட்சம் விபத்துகள். 1.4 லட்சம் மரணங்கள். பதிவு செய்யப்படாத கிராம விபத்துகள், டிஸ்சார்ஜ் ஆனபின் நேரும் மரணங்கள் தனி. உயிர் பலியால் ஆண்டுக்கு 8 லட்சம் கோடி ரூபாய் இழப்பு. காயம் அடையும் 13 லட்சம் பேருக்கு ஏற்படும் இழப்பு வேறு கணக்கு. மொத்த ஊழல்களையும் ஒன்றாக கூட்டினாலும் நெருங்க முடியாது. ஒரு லட்சம் நிவாரணம் கொடுப்பதோடு அரசு கைகழுவுகிறது. சிகிச்சை செலவு, வருமான இழப்பு எல்லாம் குடும்பத்தின் தலையில்.

உலக வாகனங்களில் 1 சதவீதம்தான் இந்தியாவில் ஓடுகிறது. ஆனால் விபத்து மரணங்களில் 11 சதவீதம் இங்கே நடக்கிறது. ஏனென்றால் எந்த சட்டமும் இங்கே அமலில் இல்லை. லைசென்ஸ் வாங்குவது முதல் விபத்து வழக்கில் விடுதலையாவது வரையில் கடைந்தெடுத்த ஊழல். குடிகாரன் கொன்றால் தூக்கு. குடிபோதையில் டிரைவர் 50 பேரை கொன்றால் வெறும் அபராதம். அந்த தைரியத்தில்தான் மணல் கொள்ளையர்கள் தாசில்தார் மீது லாரி ஏற்றி கொல்கிறார்கள். குற்றம் செய்தவர்கள் எப்படியாவது தப்பித்து விடுகிறார்கள். சட்டத்தையும் விதிகளையும்  மதித்து நடப்பவர்கள்தான் சாலைகளில் உயிரை விடுகிறார்கள் என்பது இந்த நாட்டின் சாபக்கேடு.




நன்றி: Dinakaran 

நாடாளுமன்றத்தை முடக்குவது ஆபத்தான விளையாட்டு

நாடாளுமன்றத்தை நடத்த விடமாட்டோம் என்ற பாரதிய ஜனதா கட்சியின் அறிவிப்பில் பளிச்சென்று வெளிப்படுவது ஆணவம். 'பிரதமர் பதவியில் இருந்து மன்மோகன் விலக வேண்டும்; நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தல் நடத்த வேண்டும்; இதற்கு அரசு சம்மதித்தால் சபை நடக்கவிடுவோம்' என்று முரண்டு பிடிக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள தோழமைக் கட்சிகளே விரும்பாத கோரிக்கையை காங்கிரஸ் எப்படி ஏற்றுக் கொள்ளும் என்பதை பா.ஜ தலைவர்கள் விளக்க வேண்டும். 'நிலக்கரி எடுக்கும் உரிமத்தை ஏலம் விடாமல் கம்பெனிகளுக்கு ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததால் அரசுக்கு வந்திருக்க வேண்டிய பல்லாயிரம் கோடி தனியாருக்கு போயிருக்கிறது' என்று கணக்காயர் அறிக்கை கூறுகிறது. நிலக்கரி உரிமம் வழங்குவது அப்போது பிரதமரின் கட்டுப்பாட்டில் இருந்ததால், முறைகேடுக்கு அவரே பொறுப்பேற்க வேண்டும் என்பது பா.ஜ வாதம். 'ஏலம் வேண்டாம் என்று  மேற்கு வங்கம், ஒடிசா,  ஜார்கண்ட், சட்டீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் எதிர்த்ததால் ஒதுக்கீடு செய்தோம். அதில் ஒளிவுமறைவு இல்லை' என்கிறது அரசு. முழுமையாக விவாதிக்கவும் புகார்களுக்கு பதில் அளிக்கவும் தயார் என்கிறார் பிரதமர். விவாதத்தில் பங்கேற்று பிரச்னையை அக்கு வேறு ஆணி வேறாக அலசி தனது குற்றச்சாட்டுகளை நாட்டு மக்கள் முன்பு நிரூபிக்க பா.ஜனதாவுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. பேச்சாற்றல் மிகுந்த அதன் தலைவர்கள் வாதத்தை நேரடி ஒளிபரப்பில் மக்கள் கேட்கட்டும். விரிவான விவாதத்துக்கு வாக்குறுதி அளித்த அரசு கடைசி நேரத்தில் ஜகா வாங்கினால் அதையும் மக்கள் பார்க்கட்டும். பிரதமர் பதிலளித்தால் கேட்கட்டும். பிறகு அவர்களே தீர்ப்பு வழங்கட்டும். எதுவுமே வேண்டாம், கீழே இறங்கு என்று கோஷமிட்டால் எடியூரப்பா முகமும் பெல்லாரி சுரங்கமும்தான் மக்களின் நினைவுக்கு வரும். ஏலத்தை எதிர்த்தவை எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் என்பதும்கூட. நிலக்கரி தவிரவும் இந்த நாட்டில் எத்தனையோ பிரச்னைகள் இருக்கின்றன. இயற்ற வேண்டிய, திருத்த வேண்டிய சட்டங்கள் காத்திருக்கின்றன. அதையெல்லாம் மறந்துவிட்டு நாடாளுமன்றத்தை முடக்குவது மக்களின் உரிமைகளை நசுக்குவதற்கு சமம். அந்த ஆபத்தான விளையாட்டு ஒரு தேசிய கட்சிக்கு தேவையற்றது.



நன்றி: Dinakaran

தமிழக மீனவர் உரிமை

தமிழக மீனவர்கள் மீண்டும் தாக்கப்பட்டுள்ளனர். 20 ஆண்டுகளில் நமது மீனவர்கள் 181 தாக்குதல்களை சந்தித்துள்ளதாக ஒரு கணக்கு இருக்கிறது. ஏறத்தாழ நூறு பேர் இறந்திருக்கிறார்கள். இவ்வளவுக்கு பிறகும் மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை என்பது புதிராக இருக்கிறது. சின்னஞ்சிறு நாட்டின் கடற்படைக்கு அத்தனை துணிச்சல் உண்டாக காரணம் இருந்தாக வேண்டும். எல்லை தாண்டி வருவதால்தான் விரட்டுகிறோம் என அவர்கள் சொல்வது முழு உண்மையாக தோன்றவில்லை. இந்தியா 1974ல் கச்சத்தீவை இலங்கைக்கு தானமாக கொடுத்த பிறகுதான் இந்த எல்லை பிரச்னையே முளைக்கிறது. எனினும் அந்த தீவை உள்ளடக்கிய பாக்  நீரிணையில் , ஜலசந்திக்கு என்ன அழகான  தமிழ் வார்த்தை , தமிழக மீனவர்களுக்கு உரிமை இருப்பதாக இருதரப்பு ஒப்பந்தத்தில் சொல்லப்பட்டுள்ளது. மீன் பிடிக்கவும், தீவில் வலைகளை உலர்த்தவும், திருவிழாவுக்கு செல்லவும் உரிமை பதிவு செய்யப்பட்டுள்ளது. திடீரென 1983ல் இலங்கையில் இன கலவரம் வெடித்தபோது அந்த சண்டையில் நமது மீனவர்கள் உயிருக்கு ஆபத்து நேரக்கூடாது என்பதால் அங்கே போகாதீர்கள் என மத்திய அரசு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டது.நீரிணைக்கு தெற்கிலுள்ள மன்னார் வளைகுடா, வடக்கிலுள்ள வங்காள விரிகுடா பகுதிகளுக்காக இரு நாடுகளும் செய்துகொண்ட 1976ம் ஆண்டு ஒப்பந்தத்தில்தான் மீனவர்கள் அவரவர் நாட்டின் கடல் எல்லையை தாண்டக்கூடாது என கூறப்பட்டுள்ளது. இந்த நிபந்தனை அந்த இரு பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும். இப்போது விடுதலை புலிகளால் பிரச்னை இல்லை என்பதால் நீரிணை பகுதியில் தமிழக மீனவர்களுக்குள்ள உரிமையை மறுக்க இலங்கை அரசுக்கு இனி எந்த முகாந்திரமும் கிடையாது. அதன் கடற்படை அதிகாரிகளுக்கு இந்த உண்மை புலப்படவில்லை போலிருக்கிறது. இதை தவிரவும் சில பிரச்னைகள் இருக்கின்றன. தமிழக மீனவர்கள் பயன்படுத்தும் படகுகள், வலைகள் குறித்து இலங்கை மீனவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இரு தரப்பும் பேசியதில் தீர்வு எட்டவில்லை. ஆகவே, மத்திய மாநில அரசுகள் அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து மீனவர்களையே முன்னிறுத்தி இலங்கையுடன் பேசி புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.



நன்றி: Dinakaranl

சொந்த நாட்டில் அகதிகள்


சொந்த நாட்டில் அகதிகள் என்ற முத்திரை மோசமானது மட்டுமல்ல, முரண்பாடானதும்கூட. அசாம் மக்களுக்கு அந்த நிலைமை உண்டானது துரதிர்ஷ்டம். வட கிழக்கு மாநிலங்களை சேர்ந்த மக்கள் எல்லோரும் அவரவர் வசிக்கும் மாநிலத்தை விட்டு விட்டு சொந்த மண்ணுக்கு திரும்புகிறார்கள் என்ற தகவல் தவறானது. மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து போன்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் அப்படி கிளம்பவில்லை. அவர்களுக்கு மிரட்டல் இல்லை. இவர்கள் அனைவருக்கும் பொதுவான சாயல் இருக்கிறது. மங்கோலிய இனத்துக்குரிய தோற்றம். புனே நகரில் இந்த தோற்றத்துடன் இருந்தவர்களை மடக்கிய கும்பல் அவர்கள் அசாமியர்கள் அல்ல என தெரிந்ததும் தாக்காமல் விட்டிருக்கிறது. மும்பையில் சென்ற ஆண்டு மராத்திய தீவிரவாதி களின் தாக்குதலை எதிர்கொண்ட எல்லோருமே பீகாரை சேர்ந்த தொழிலாளர்கள். உத்தர பிரதேசத்து ஆட்களை யாரும் தொடவில்லை. அது பம்பாயாக இருந்த காலத்தில் மதராசிகளுக்கு எதிராக நடந்த தாக்குதலில் தமிழர்கள் மட்டும்தான் அடிவாங்கினார்கள்.வெறியாட்டத்திலும் தேர்ந்த ஒரு திட்டமிடுதல் இருப்பதற்கு இப்படி பல உதாரணங்களை சொல்லலாம். காவிரி, முல்லை பெரியாறு விவகாரங்களின் உபயத்தில் தமிழன் அதற்கு ரொம்பவே பழகிவிட்டான். காஷ்மீரில் இருந்து துரத்தப்பட்ட இந்துக்கள் அந்த வேர்களை தொலைத்து தலைமுறைகள் கடந்துவிட்டன. முன்னுதாரணங்களுக்கு பஞ்சமில்லை என்றாலும் இப்போது நடப்பது இன்னும் புதிராகவே தோன்றுகிறது.சொந்த ஊரில் பிழைக்க வழியில்லை என்பதால்தான் இந்த அசாமிகள் கன்னியாகுமரி வரை விலகி வந்து வேலை செய்தார்கள். அத்தனை பேரும் திரும்பி சென்றால் அங்கே தங்குவதற்கு கூட இடம் போதாது. இங்கிருந்து அனுப்பி  கொண்டிருந்த சொற்ப பணத்தில் செலவுகளை சமாளித்து  கொண்டிருந்த பெற்றோரும் உற்றாரும் இனி என்ன செய்வார்கள்?
முதலமைச்சர்கள், டிஜிபிக்கள் ரயில் நிலையத்துக்கு வந்து தாஜா செய்ததையும் பொருட்படுத்தாமல் ஆயிரம் கிலோமீட்டருக்கு மேல் நின்றுகொண்டே பயணிக்க துணிந்தார்கள் என்றால் பாதுகாப்பு விஷயத்தில் அரசாங்கம் மீதும் காவல்துறை மீதும் அவர்களுக்கு நம்பிக்கை போய்விட்டது என்றுதானே அர்த்தம்? 


நன்றி: Dinakaran 

விக்கிலீக்சை இறுக்கும் அரசியல் சதுரங்கம்

விக்கிலீக்சை இறுக்கும் அரசியல் சதுரங்கம்

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் விவகாரம் தொடர்கதையாக நீள்கிறது. அரசாங்க ரகசியங்களை அவர் அம்பலப்படுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதனால் பல நாடுகளுக்கு இடையிலான உறவில் பிரச்னை உருவானது. அசாஞ்ச் கைதான பிறகு அந்த புகைச்சல் அடங்கிவிட்டது. அதற்கு பதிலாக வேறு வகையில் சர்வதேச உறவுகள் சிக்கலை சந்திக்கின்றன. விக்கிலீக்ஸ் வெளிப்படுத்திய ரகசிய ஆவனங்களில் பெரும் பகுதி அமெரிக்க அரசுக்கு சொந்தமானவை. எனவே அமெரிக்கா அவரை பிடித்து தண்டிக்க மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளது. ஸ்வீடன் நாட்டு பெண்ணிடம் முறைகேடாக நடந்து கொண்டதாக வந்த புகாரின் பேரில் அசாஞ்சை கைது செய்ய ஐரோப்பிய வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. லண்டன் கோர்ட்டில் அவர் போட்ட அப்பீல் மனு தள்ளுபடி ஆனது. அதை தொடர்ந்து அங்குள்ள ஈக்வடார் நாட்டு தூதரகத்தில் ஜூன் மாதம் அசாஞ்ச் தஞ்சம் புகுந்தார். ஈக்வடார் அரசு அவருக்கு அடைக்கலம் அளிப்பதாக அறிவித்தது. பிரிட்டன் அதை ஏற்கவில்லை. தூதரகங்கள் எல்லாம் அவற்றை அமைத்திருக்கும் நாடுகளுக்கு சொந்தமே தவிர, அமைந்திருக்கும் நாட்டுக்கு அவற்றின் மீது எந்த அதிகாரமும் கிடையாது என்பது சர்வதேச மரபு. பிரிட்டன் அதை மதிக்காமல் தூதரகத்துக்குள் போலீசை அனுப்பி அசாஞ்சை பிடிக்க விரும்புவதால் ஈக்வடாருக்கு கோபம். இது புதிய காலனியாதிக்கம் எனக்கூறி ஏனைய தென் அமெரிக்க நாடுகளை அணி திரட்டுகிறது. அசாஞ்ச் பத்திரமாக ஈக்வடார் நாட்டுக்கு செல்வாரா அல்லது மீண்டும் கைதாவாரா என்பது விரைவில் தெரிந்துவிடும். மீடியாவை சந்திக்க விரும்புவதாக அசாஞ்ச் தகவல் அனுப்பியுள்ளார்.

 தூதரகத்தின் சில பகுதிகளில் லண்டன் போலீஸ் கால் வைக்க அனுமதி தேவையில்லை என்பதால் அசாஞ்ச் உஷாராக பால்கனியில் நின்று பேட்டி அளிக்கக்கூடும். ஜனநாயகத்தையும் கருத்து சுதந்திரத்தையும் மதிப்பதாக கூறும் மேலைநாடுகள் அசாஞ்ச் விஷயத்தில் வேறு மாதிரி நடக்கின்றன. அதே சமயம், இப்போது அவரை ஆதரிக்கும் லத்தீன்  அமெரிக்க நாடுகள் அப்படியொன்றும் மனித உரிமைகளை மதிப்பவை அல்ல. ஒரு தனி மனிதரை முன்னிட்டு நான்கு கண்டங்களில் நடைபெறும் அரசியல் சதுரங்கத்தில் எத்தனை ஆட்டக்காரர்கள் என்பதை தெரிந்துகொள்ளவே இன்னும் காத்திருக்க வேண்டும் போலிருக்கிறது.


நன்றி : Dinakaran

Thursday, 23 August 2012

இயற்கை ஞானி திரு.நம்மாழ்வார் நேர்காணல்.


இயற்கை ஞானி திரு.நம்மாழ்வார் நேர்காணல். 
நன்றி : சிறகு 

நாம் நேர்காணல் செய்யவிருப்பவர் தமிழ்நாட்டின் முதன்மை இயற்கை அறிவியலாளர்களில் முன்னணியில் இருப்பவர். ஆம் திரு.நம்மாழ்வார் அவர்கள். இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை இளங்கலைப் படிப்பை கற்றவர். கோவில்பட்டி மண்டல மழைப் பயிர் ஆய்வகத்தில் 1960ஆம் ஆண்டு ஆய்வு உதவியாளராக பணியாற்றினார். பசுமைப் புரட்சி,  நிலச்சீர்திருத்தம், தொழில்மயமாக்கம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக ஆக்கபூர்வமான செயற்பாடுகளில் ஆர்வத்துடன் பணியாற்றி வருகிறார். தமிழ்நாட்டில் இயற்கை வழி வேளாண்மை முறைகளை ஊக்குவித்து வருபவர். "தமிழின வாழ்வியல் பல்கலைக்கழகம்' 'வானகம்" போன்ற அமைப்புகளைத் தொடங்கி, தமிழ்நாட்டின் கிராமப்புறங்கள் எல்லாவற்றுக்கும் கால்நடையாக சென்று அங்கு கருத்தரங்கங்களும், பயிற்சி வகுப்புகளும் நடத்தி வருபவர். இனி திரு. நம்மாழ்வார் அவர்களின் நேர்காணல்:-

சிறகு: தங்களது தமிழின வாழ்வியல் பல்கலைக் கழகம், வானகம் போன்ற அமைப்புகளின் தேவை, அவசியம் என்ன?

திரு.நம்மாழ்வார்: இயற்கை வேளாண்மை என்பது வாயால் சொல்லி மற்றவர்கள் புரிந்து கொள்வது கிடையாது. ஆங்காங்கே மாதிரிகளை உருவாக்க வேண்டும். அந்த மாதிரிகளை உருவாக்கும்போதே பயிற்சிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். யார் இந்தக் கல்வியுடன் இணைந்து போய்க் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் செல்லும் இடமெல்லாம் இந்தத் தகவலை கொண்டு செல்ல வேண்டும்.  அதனால் ' அறிவினை விரிவு செய், அகண்டமாக்கு மானுட சமுத்திரம் நானென்று கூவு' என்று பாரதிதாசன் சொன்னார். அந்த அறிவை விரிவு செய்வதற்காக இவற்றை உருவாக்குகிறோம். இயற்கை வலியது. மிகப் பெரியது. தன் மேல் இழைக்கப்பட்ட கொடுமைகளை அது தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ளும். ஆனால் புதிப்பிக்க முடியாத கட்டத்திற்கு போய்க் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் டன் நஞ்சை இந்திய மண்ணில் தூவி வருகிறார்கள். எனவே இதிலிருந்தெல்லாம் மக்களை மீட்டெடுக்க வேண்டும். இயற்கையை மீட்டெடுக்க வேண்டும் என்றால் மாதிரி நிலங்கள், புலங்கள் வேண்டும். அவைகளுக்காகத்தான் இவற்றை உருவாக்கினோம். நிலம், புலம் மட்டும் இல்லை மாதிரி சமூகமும் வேண்டும். இரண்டையும் இணைத்துத்தான் வானகம் என்று பெயர் வைத்திருக்கிறோம். தமிழின வாழ்வியல் பல்கலைக் கழகத்தை உருவாக்கினோம். இது இடையில் நிர்வாகிகள் குழப்பங்களால் நின்று போய்விட்டது. அதன் இறுதி வடிவமாகத்தான் வானகத்தைப் பார்க்கிறேன்.

சிறகு: இயற்கை வேளாண்மைக்கு வர விவசாயிகளுக்கு சில மனத் தடைகள் உள்ளன. குறிப்பாக நாம் மட்டும் இயற்கை வேளாண்மைக்கு மாறிவிட்டால் பூச்சிகளிடம் இருந்து பயிர்களைக் காப்பாற்ற முடியுமா? இரசாயன பூச்சி கொல்லிகள் உபயோகிக்கும் மற்றவர்கள் பயிர்களில் இருந்து நமது பயிருக்குப் பரவி விடாதா என்பது போன்ற குழப்பங்கள் உள்ளன. உங்களிடம் வரும் விவசாயிகள் எவ்வாறு நம்பிக்கை பெறுகிறார்கள்?

திரு.நம்மாழ்வார்: எப்போது வானகத்திற்கு வருகிறார்களோ அப்போதே நம்பிக்கை வந்துவிடும். ஏனென்றால் கண்ணுக்கு முன் பார்க்கிறார்கள். அதற்குள் எந்த இரசாயனமும் தெளிக்கவில்லை. ஆடு, மாடு தின்னாத செடி கொடிகளை துண்டு துண்டாக நசுக்கி மாட்டு மூத்திரத்தில் ஊற வைக்க வேண்டும். பத்து நாள் ஆனால் பிறகு பூச்சு விரட்டு தயார். தெளித்து விட்டோம் என்றால் சின்ன சின்ன பூச்சிகள் நம் செடியில் வந்து முட்டை போடும். சின்ன சின்ன தகவல்கள்கூட நம் விவசாயிகளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பூச்சிக்கு நான்கு பருவம் உண்டு. முட்டை, புழு, கூட்டுப் புழு, பூச்சி. தாய் பூச்சி மென்மையான இலைகளில் உட்கார்ந்து முட்டை போடுகிறது. ஏனென்றால் முட்டையில் இருந்து வரும் புழு மென்மையான இலைகளைத்தான் தின்ன முடியும். ஆகவே இலை மீது பூச்சு விரட்டியை தெளித்து விட்டால் வாசனைக்கு வேறுவிதமான பூச்சிகள் வந்து உட்காரும். இது முதல். இரண்டாவது, ஒரு செடியில் பத்து பூச்சி இருக்கின்றன என்றால் அந்தப் பூச்சிகளை தின்ன இருபது பூச்சிகள் இருக்கின்றன. நாம் விஷம் தெளிக்கும் நேரத்தில் இந்த இருபது பூச்சிகள்தான் முதலில் சாகும். மறுபடியும் அந்தப் பூச்சிகள் வரும்போது அதைத் தின்பதற்கு வேறு பூச்சிகள் இல்லை. இருநூறு வகை பறவைகள் பூச்சிகள் தின்னும். நீங்கள் எப்போது நஞ்சு தெளித்தீர்களோ பறவைகள் தோட்டத்துக்கு வருவது நின்று விடுகின்றது. இந்த உண்மைகளை எடுத்துச் சொல்ல யாரும் இல்லை. அதற்காகத்தான் வானகத்தை தொடங்கினோம். ஆனால் வானகத்திற்கு வராமல் எங்கேயோ இருந்துகொண்டு பொய்யையே கட்டி அழுது கொண்டிருக்கிறார்கள்.

சிறகு: பல ஆண்டுகளாக இயற்கை வேளாண்மை குறித்து பேசி வருகிறீர்கள். உங்கள் பணிக்கு வரவேற்பு எப்படி உள்ளது? வருத்தம் அளிப்பதாக இருக்கிறதா? மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கிறதா?

திரு.நம்மாழ்வார்: ஆரம்பக் கட்டத்தில் இந்தக் கிழவன் ஏதோ புலம்புகிறான் என்று சொன்னார்கள். அதற்குப் பிறகு அடுத்த கட்டம் வந்தது. ஆங்காங்கே விவசாயிகள் செய்ய ஆரம்பித்தார்கள். ஜப்பானில், ஆஸ்திரேலியாவில் செய்கிறார்கள் என்று சொல்ல வேண்டியதில்லை. கரூரில், வையம்பட்டியில், கடவூர் ஆகிய ஊர்களில் விவசாயிகள் பூச்சி விரட்டியை வாங்கிக் கொண்டு போய் தெளித்து வருகிறார்கள். இன்றைக்கு அறிவு பெற்ற சமுதாயம் தகவல் தொழில் நுட்பத்தில் வேலைக்குப் போனவர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள் எல்லோரும் வருகிறார்கள். ஏனென்றால் உணவில் நிறைய நஞ்சு கலப்பதால் எங்கு பார்த்தாலும் நோயாளிகள் இருக்கிறார்கள். பிறக்கும் குழைந்தைக்கும் புற்று நோய் இருக்கிறது. இந்த அநீதி தொடரக்கூடாது என்பதற்காக நிறைய பேர் உள்ளே வந்து கொண்டிருக்கிறார்கள். கற்றுக் கொண்டு போய் இருக்கிறார்கள். இது மகிழ்ச்சிக்குரியது.

சிறகு: மாணவர்களிடம் பேசுகிறீர்கள். அவர்களிடம் எத்தகைய வரவேற்பு உள்ளது? அடுத்த தலைமுறையினர் இதில் ஆர்வம் காட்டுவார்கள், பெரிய மாற்றம் உருவாகும் என்ற நம்பிக்கை இருக்கிறதா?

திரு.நம்மாழ்வார்: ஆரம்பத்தில் மாணவர்களை தவிர்த்து வந்தேன். என்னுடைய இலக்கு விவசாயிகள்தான் என்பதால் தவிர்த்தேன். பின்னர் பார்த்தேன், விவசாயிகளுக்கு ஒரு பயம் இருக்கிறது. இப்போது வந்துகொண்டிருக்கும் விளைச்சலும் வராமல் போய்விடுமோ என்று. அதனால் மாணவர்கள் மத்தியில் இதை விதைத்து விட்டால் அவர்கள் வாழ்க்கையில் வெவ்வேறு துறைக்குப் போனாலும் தன்னுடைய பங்கை ஆற்றுவார்கள். இளமையில் கல் என்று சொன்னார்கள். இளமையில் விதைக்கப்படும் விதை அது நீண்ட காலத்திற்கு வேலை செய்யும். அதனால்தான் மாணவர்கள் மத்தியில் எங்கு பேச அழைத்தாலும் போகிறேன். வரவேற்பு நன்றாக இருக்கிறது. அவர்களின் எதிர்காலம் இதில் பாதுகாக்கப்படுகிறது.

சிறகு: நூறு நாள் வேலைத் திட்டத்தில் – ஆந்திராவில் ஒரு மாவட்ட நிர்வாக அதிகாரி தன்னுடைய தனிப்பட்ட அக்கறையின் காரணமாக விவசாயிகள் தங்கள் நிலத்தில் மழை நீரை தேக்கி வைக்க குட்டைகள் வெட்டிக் கொள்ளலாம் என்று அனுமதித்ததாக நீங்கள் ஒரு முறை கூறினீர்கள். சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக நிலத்தைப் பறிக்கும் அரசு, மக்களுக்கு நிலத்தோடு இருக்கும் உறவை அறுத்தெறிகிறது. உங்கள் பார்வையில் நூறு நாள் வேலைத் திட்டம் எப்படி?

திரு.நம்மாழ்வார்: நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலை எதுவும் நடக்கவில்லை. இதை நான் சொல்வதில்லை. நாடாளுமன்றத்தில் 543 பேர் இருக்கிறார்கள். அவர்களும் உட்கார்ந்து உட்கார்ந்துதான் எந்திறிக்கிறார்கள். அவர்கள் மாதம் லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார்கள். இவர்கள் மட்டும் உட்கார்ந்து எழுந்தால் என்ன தவறு? ஒரு நாளைக்கு நூறு ரூபாய்தானே கொடுக்கப் போகிறார்கள்? முப்பது நாளுக்கு மூன்றாயிரம்தானே. இதை வைத்து வருடத்திற்கும் சாப்பிட வேண்டும். இந்தத் திட்டத்தால் நல்லது நடக்கவில்லை. எங்கு தவறு நடக்கிறது என்றால் அரசியல் தளத்தில் இருக்கிறது. பெரிய வணிக அமைப்புகள் அரசுக்கு யோசனை வழங்குகிறது. என்னவென்றால், அமெரிக்காவில் ஒன்னரை விழுக்காடு மக்கள்தான் கிராமத்தில் வாழ்கிறார்கள். இங்கு அறுபது விழுக்காடு மக்கள் இருக்கிறார்கள். அமெரிக்கா போல் முன்னேற வேண்டுமானால் இங்கு அறுபது விழுக்காடு மக்கள் இருக்கக் கூடாது. முப்பது விழுக்காடு மக்களை குறைக்க வேண்டும் என்று சேம்பர் ஆப் காமர்ஸ் அரசுக்கு பரிந்துரை செய்து விட்டார்கள். அதை அடிப்படையாக வைத்துதான் அரசு திட்டம் போட்டு –உழவு சார்ந்தவர்களை உழவு உற்பத்திக்கே போகாதபடி பிய்த்து வெளியில் எடுக்கிறார்கள். இதனால் வேளாண் தொழில் தெரிந்த ஆட்கள் கிராமத்தில் இருக்க மாட்டார்கள். இப்போது அதுதான் நடக்கிறது. விவசாயி என்ன செய்கிறான்- நிலத்தை விற்று பணத்தை வங்கியில் போட்டு விட்டு  எடுத்து சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். இளைஞர்களை படிப்பு என்று சொல்லி வெளியில் இழுத்து விட்டார்கள். வேலை என்று கூறி திருப்பூருக்கோ சென்னைக்கோ இழுத்துவிட்டார்கள். பல பகுதிகளை பட்டணமாக்கி கிராமங்களை விழுங்கி கிராமத்தில் இருக்கும் மனிதன், மண், தண்ணீர் எல்லாவற்றையும் நாசம் செய்து விட்டார்கள். கிராமங்களை பட்டணங்களின் சாக்கடை ஆக்கிவிட்டார்கள். அதன் ஒரு பகுதியாகத்தான் நூறு நாள் வேலைத் திட்டத்தை நான் பார்க்கிறேன். அந்தத் திட்டத்தை மகாத்மா காந்தி பெயரில் வைத்திருப்பது பெரிய கேலிக் கூத்து. மகாத்மா காந்தி, 'பெருவித தொழில் உற்பத்தி தேவை இல்லை. பெருவாரியான மக்களால் உற்பத்தி நடக்க வேண்டும்' என்று சொன்னார். அவர் பெயரிலேயே தொழில் தெரியாமல் மக்களை மாற்றும் போக்கு பெரிய நகைப்பிற்குரியது.

சிறகு: இயற்கை வேளாண்மைக்கு ஆதரவாக ஒரு கொள்கை முடிவை அரசை எடுக்க வைக்க ஏதேனும் திட்டம் உள்ளதா? இதற்கு என்னவிதமான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்?

திரு.நம்மாழ்வார்: இதற்குப் போராட்டமே தேவை இல்லை. தமிழ்நாட்டைப் பொருத்து சொல்கிறேன். ஆயிரம் பேருக்கு பயிற்சி கொடுக்க வேண்டும். 1000 நம்மாழ்வார்களை உருவாக்க வேண்டும். நூறு இடங்களில் பயிற்சி மையங்களை உருவாக்க வேண்டும். அந்தந்த வட்டாரத்தில் அமைக்க வேண்டும். பெண்கள் வெகுதூரம் போவதில்லை. அவர்களுக்கு அருகிலேயே சென்று கற்றுக் கொண்டு திரும்பும் வகையில் பயிற்சி மையங்கள் உருவாக்க வேண்டும். இதை உருவாக்கினால் பொய்யை அவர்கள் புரிந்து கொள்வார்கள். 'பொய்யைத் தொழுது அடிமை செய்வார்க்கே செல்வமெல்லாம் உண்டு' என்று பாரதி சொன்னான். அதுதான் இங்கு நடைபெறுகிறது. எனவே பொய்யைத் தொழுவதை விட்டு விட்டு உண்மையை தேடி வாருங்கள் என்று சொன்னால் மக்கள் மாறுவார்கள். மக்கள் மாறினால் அரசாங்கம் மாறியே தீர வேண்டும். மக்களை மாற்றாமல் அரசை மாற்ற நினைத்து செய்யும் செயல்கள் ஒன்றும் பயன்படாது.

சிறகு: வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் பலர் விவசாயத்தில் ஈடுபட விரும்புகிறார்கள். அவ்வாறு விரும்பும் இன்றைய தலைமுறையினருக்கு உங்கள் ஆலோசனை என்ன?

திரு.நம்மாழ்வார்: அமெரிக்கா போன நிறைய பேர் திரும்பி விட்டார்கள். அங்கு வாழ்க்கை இல்லை. நாங்கள் வாழவேண்டும் என்று நினைக்கிறோம். வெறும் சம்பாத்தியம் மட்டுமே வாழ்க்கை இல்லை. எங்கள் கையில் கொஞ்சம் பணம் இருக்கிறது. நிலம் கொஞ்சம் மலிவாகக் கிடைக்குமா என்று கேட்கிறார்கள். இதில் நாம் ஆய்வு நடத்த வேண்டும். இப்போது தீவிரமான சிந்தனை ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் அறுபது சதம் மக்கள் கிராமங்களில் வாழ்கிறார்கள். அதனால் கிராமத்தை வாழத் தகுந்ததாக மாற்ற வேண்டும். இப்போது பருவ மழை இல்லை, ஆனால் வெள்ளம் வருகிறது. வெள்ளம் வரும்போது கடலில் எப்படி அதை வடிப்பது என்று சிந்திக்கிறார்களே தவிர தண்ணீரை தேக்குவதைப் பற்றி யோசிக்கவில்லை. அரசர்கள் தன் பிறந்த நாளுக்கு ஏரி வெட்டினார்கள், வென்ற நாளுக்கு ஏரி வெட்டினார்கள். இராமநாதபுரத்தில் நாரை பறக்காத நாற்பத்தி மூன்று கண்மாய் ஏரி இருக்கிறது. அதை ராஜசிம்மன் என்ற மன்னன் வெட்டி இருக்கிறான். அது இப்போது வண்டல் படிந்து மேடாக தண்ணீர் இல்லாத இடமாக இருக்கிறது. பொதுப்பணித் துறை அதை ஆழப்படுத்தும் வேலையை செய்யவில்லை. மாடுகள் இன்று கசாப்பு கடைகளுக்கு போகிறது. மாடுகளை படுக்க வைத்து எழுப்பினால் அங்கு எந்த பயிரும் விளையும். கிராமத்தை அறிவுமிக்கதாகவும் வளம் மிக்கதாகவும் மாற்ற வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும் பண்ணை சேவை மையம் இருக்கவேண்டும். அதில் விவசாயிகள் பயன்படுத்தும் கருவிகள் இருக்க வேண்டும். கிராமப் பள்ளிகளை வசதி இல்லாமல் ஆக்கிவிட்டு பட்டணத்திற்கு அனுப்புகிறார்கள். உன் கிராமம் உருப்படாது என்று சொல்லாமல் சொல்கிறார்கள். பெற்றோர் ஆசிரியர் சங்கத்தை வலுவாக்கி பள்ளியைச் சுற்றி மரங்கள் வளர்த்து பள்ளிக்குத் தேவையான உணவை உற்பத்தி செய்யும் வேலையில் இறங்க வேண்டும். ஒவ்வொரு வீட்டை சுற்றியும் பத்து வகை மரங்கள் இருக்க வேண்டும். வீட்டுக்கு முன் ஒரு வேப்பமரம் இருக்கவேண்டும், பக்கத்தில் ஒரு முருங்கை மரம் இருக்க வேண்டும், ஒரு பப்பாளி மரம் இருக்க வேண்டும், குளிக்கும் தண்ணீர் போகும் இடத்தில் வாழை மரம் இருக்க வேண்டும், பாத்திரங்கள் கழுவும் இடத்தில் தென்னை மரம் இருக்க வேண்டும், ஒரு எலுமிச்சை மரம் இருக்க வேண்டும்., அதன் நிழலில் ஒரு கறுவேப்பிலை செடி இருக்க வேண்டும், ஒரு நெல்லிச் செடி இருக்க வேண்டும். வேலியில் நான்கு இடத்தில் சீதா மரம் இருக்க வேண்டும். இடம் இருந்தால் ஒரு பலா மரம் இருக்க வேண்டும். ஒரு மா மரம் வைக்க வேண்டும். இப்படி இருந்தால் ஒருவர்கூட பசியுடன் தூங்க மாட்டார்கள். அரசு சலுகை வழங்குவது மக்களுக்கு சென்று சேர்வதில்லை. ஒவ்வொரு ஊரிலும் ஒரு தகவல் மையம் இருக்க வேண்டும். அரசு அதிகாரிகள் அங்கு போய் உங்களுக்கு என்னென்ன வேண்டும் என்று சொல்ல வேண்டும். ஒரு குளம் கட்டிவிட்டு சுற்றி யாரும் காலை வைத்து இறங்காமல் பார்த்துக் கொண்டால் குடி நீர் பஞ்சத்தை ஒழித்து விடலாம். ஏரிக்கரைகளில் மரங்களை நடவேண்டும். அது ஆடு மாடுகளுக்கு தீவனம் ஆகும். அதில் குதிரை சவாரி செய்யலாம், குளத்தில் மீன் வளர்க்கலாம், படகு விடலாம். பட்டணத்தில் இருப்பவன் கிராமத்துக்கு வருவான். அப்படி கிராமங்களை உருவாக்குவது பற்றி நண்பர்களிடம் சொல்லி இருக்கிறேன். நண்பர்களிடம் ஒப்புதலும் வந்துவிட்டது. இதற்கு ஆயிரம் தொண்டர்கள் தேவை. எந்த இடத்தில் வேலை துவங்கினாலும் மண்வெட்டி கூடையுடன் வரத் தயாராக இருக்கவேண்டும். இதுபோன்ற ஆட்களை தேடி வருகிறேன். இதில் வெளிநாட்டு நண்பர்களும் வந்து இணைவார்கள் என்று நம்புகிறேன்.

சிறகு: விதைகளே பேராயுதம் என்கிறீர்கள். நாம் இழந்த பாரம்பரிய நெல் விதைகளை மீட்டெடுக்க முடியுமா?

திரு.நம்மாழ்வார்: வெள்ளைக்காரன் நம் நாட்டை விட்டுப் போகும்போது இந்தியாவில் இருந்த நெல் ரகங்கள் முப்பது ஆயிரம். எல்லா ஆவணங்களும் இதை பதிவு செய்திருக்கிறது. கேரளத்தினர் இருநூறு வகை பாரம்பரிய நெல் விதைகளை கண்டுபிடித்து எடுத்து விட்டார்கள். தமிழ்நாட்டில் அறுபத்து மூன்று நெல் விதைகளை கண்டு பிடித்திருக்கிறார்கள். இன்னும் கண்டுபிடித்து சேர்த்தால் நூறு ஆகும். நூறு என்பதே பெரிய வெற்றிதான். பாரம்பரிய நெல்லின் சிறப்பு என்னவென்றால் பூச்சி, நோய் தாக்குவதில்லை, ரசாயன உரம் வேண்டியதில்லை. வங்கியில் கடன் வாங்க வேண்டியதில்லை, கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்யவேண்டியதில்லை என்று நிறைய சாதகங்கள் உள்ளன. எனவேதான் விதையை பேராயுதமாக பயன்படுத்த வேண்டும் என்றோம். காய்கறி விதைகளில் போதிய அளவு நாம் வேலைகள் செய்யவில்லை. நண்பர்களிடம்- அடுத்த தை மாதத்திற்குள் எங்கு பார்த்தாலும் உழவர்களின் காய்கறி விதைகள் இருக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறேன். நடக்கும் என்று நம்புகிறேன்.

சிறகு: வானகத்தில் சேர்ந்து பணியாற்ற விரும்புபவர்கள் தங்களை இணைத்துக் கொள்வது எப்படி?

திரு.நம்மாழ்வார்: வானகம் ஒரு அறக்கட்டளை. வானகத்தைத் தாண்டி ஒரு வளையம் உருவாகிக் கொண்டிருக்கிறது. ஆலோசனை வளையம் போல் வரும். இதில் எல்லோரும் இணையலாம்.

சிறகு: உங்கள் முயற்சிக்கு வாழத்துக்கள் ஐயா. உலகெங்கும் உள்ள தமிழர்கள் இதைக் கேட்டு பயனடைவார்கள் என்று நம்புகிறோம்.

திரு.நம்மாழ்வார்: ஒரு தகவல் சொல்ல வேண்டும். எனக்கு ஒரு நினைவு இருக்கிறது. இந்த பூமியில் எந்த மூலைமுடுக்கில் இருந்தாலும் ஆயிரம் ரூபாய் கொடுத்தால் அவர்கள் பெயரைப் போட்டு ஒரு மரம் வளர்க்க வேண்டும். இதனால் அவர்கள் வானகத்தில் என்னுடைய பங்கு இருக்கிறது என்று நினைக்கலாம். மனதாலோ உடலாலோ நோய் பட்டால் இங்கு வரலாம் தங்கலாம். இதுபோன்ற ஒரு சாந்தி வனத்தை உருவாக்கும் எண்ணம் என்னுள் இருக்கிறது.



நன்றி : சிறகு சிறப்பு நிருபர்

Wednesday, 22 August 2012

”இயற்கை வேளாண் ஞானி நம்மாழ்வார் ” அவர்களின் சொந்தக் குரலில் இயற்கை வழி வேளாண்மை சார்ந்த குறுந்தகடுகள்


image

"இயற்கை வேளாண் ஞானி நம்மாழ்வார் " அவர்களின் சொந்தக் குரலில் இயற்கை வழி வேளாண்மை சார்ந்த அனைத்து குறுந்தகடுகளும் தற்போது நமது "வானகத்தில்" கிடைக்கும்.

( குறிப்பு : இந்த குறுந்தகடு நன்கொடை மூலம் கிடைக்கும் தொகையானது சமுதாயத்தின் எதிர்கால நலன் கருதி வானகத்தின் இயற்கை வழி வேளாண் ஆராய்ச்சிப் பணிகளுக்கும், நூலகம் அமைக்கவும் செலவிடப்படும். )
தபால் அல்லது கூரியர் கட்டணம் சேர்த்து அனுப்ப வேண்டுகிறோம்.

குறுந்தகடு தொடர்புக்கு :
M. செந்தில் கணேசன் Cell : 9488055546
வானகம், சுருமான்பட்டி, கடவூர், கரூர் மாவட்டம் - 621311.


பகுதி - 1
ஏன் வேண்டும் இயற்கை வேளாண்மை ? 1. இதில் ஏன் வேண்டும் இயற்கை வேளாண்மை ? மற்றும்
2. உழவில்லாத வேளாண்மை (மசானபு ஃபுகோகா அவர்களின் ஒற்றை வைக்கோல் புரட்சி மற்றும் வாழ்கையில் கற்றுணர்ந்த பாடங்களை ) குறும்படம் மூலம் "நம்மாழ்வார் " அவர்களின் சொந்தக் குரலில் விளக்கும் குறுந்தகடு.
சிடியின் நன்கொடை : ரூ. 100/-

பகுதி - 2
1. இன்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பூச்சிக்கொல்லியான " எண்டோசல்பான் " பயன்பாட்டால் சீரழிக்கப்பட்ட வளமான கேரளாவின் காசர்கோட்டில் நிகழ்ந்த கொடுர பாதிப்பை குறும்படம் மூலமும்,
2. விதையிலே நஞ்சைக் கலந்து கடும் எதிர்ப்பை சந்தித்துக் கொண்டிருக்கும் " மரபணு மாற்ற பயிர்களின் " பாதிப்புகள் மற்றும் சூழ்ச்சிகளை "நம்மாழ்வார் " அவர்களின் சொந்தக் குரலில் விளக்கும் குறுந்தகடு.
சிடியின் நன்கொடை : ரூ. 50/-

பகுதி - 3 1.உலக அளவில் ஏற்பட்டுள்ள நோய் மற்றும் சத்துக்குறைபாட்டிற்கான தீர்வுகளான சிறுதானியங்களின் பயன்பாடுகளை விளக்கும் குறும்படம் மற்றும்
2. நிரந்த வேளாண்மையின் தந்தை பில்முல்சன் அவர்களின் வட்டப்பாத்தி முறைபற்றி செய்முறை மூலம் விளக்கும் குறுந்தகடு.
சிடியின் நன்கொடை : ரூ. 100/-

பகுதி - 4
1." நம்மாழ்வார் "அவர்களின் சுவரில்லாத பள்ளிக்கூடமான "வானகத்தின்" மூலம் கற்று உருவான முன்மாதிரி பண்ணைகள்.
சிடியின் நன்கொடை : ரூ. 100/-

பகுதி - 5
தொகுதி - 1 மற்றும் தொகுதி - 2 இயற்கை வாழ்வியல் என்றால் என்ன?
1.இயற்கை மற்றும் இயற்கை வழி விவசாயம் பற்றியும், " நம்மாழ்வார் "அவர்களின் வாழ்கை அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் குறுந்தகடு
இரண்டு சிடியின் நன்கொடை : ரூ. 200/-

பகுதி - 6
இயற்கை இடுபொருட்கள் தயாரிப்பது எப்படி?
1. இயற்கை வழி விவசாயம் செய்யத் தேவையான இயற்கை உரங்களான (அமிர்தகரைசல், மீன் அமிலம், பழக்கரைசல்) மற்றும் பூச்சி விரட்டிகள், தயாரிப்பது மற்றும் உபயோகிப்பது பற்றிய செய்முறைகளை விளக்கும் குறுந்தகடு
இரண்டு சிடியின் நன்கொடை : ரூ. 100/-




நன்றி:வானகம்

Saturday, 18 August 2012

உடல் உறுப்பு தானம் செய்வீர்

உடல் உறுப்பு தானம் செய்வீர்

உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு இந்தியாவில் இன்னும் சொல்லிக் கொள்ளும்படியாக வளரவில்லை. எத்தனை கோடி மக்கள் இருந்தும் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வரும் கொடையாளர்கள் இல்லாததால் தினமும் நூற்றுக்கணக்கானோர் இறந்து கொண்டிருக்கிறார்கள். சமீபத்திய உதாரணம் மத்திய அமைச்சர் விலாஸ் ராவ் தேஷ்முக். உயிருடன் இருக்கும் போது சில உறுப்புகளையும் இறந்த பிறகு சில உறுப்புகளையும் தானம் செய்யலாம். இது தவிர மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து உறுப்பு மாற்று சிகிக்சையில் பொருத்தப்படும் பெரும்பாலான உறுப்புகளை பெறலாம். ஆனால், மூளைச்சாவு அடைந்தவர்களை இறந்தவர்களாக இந்தியர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. இதயம் நின்று போனால்தான் அவர்களைப் பொறுத்தவரை மரணம். இந்த தவறான எண்ணம் காரணமாக உறுப்பு தானம் செய்வதற்கான வாய்ப்புகள் இருந்தும் அதை பெற முடியாமல் போய் விடுகிறது. மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து இதயத்தில் தொடங்கி சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல், தோல், கணையம் என 37 வகையான உறுப்புகளை பெற முடியும்.உயிருடன்  இருப்பவர்களிடம் இருந்து ஒரு சிறுநீரகம், கல்லீரலில் ஒரு பகுதி என்று குறிப்பிட்ட சில பாகங்களை பெற்று பலரை உயிர் பிழைக்க வைக்க முடியும். இறந்தவர்களிடம் இருந்து கண்களை தானமாக பெற முடியும். இறந்த பின்பு உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு தானமாக தரலாம். இதற்கெல்லாம் தேவைப்படுவது விழிப்புணர்வு. உறுப்பு தானத்தில் உலகிலேயே அமெரிக்காதான் முதல் இடத்தில் இருக்கிறது. 10 லட்சம் பேருக்கு 22 பேர் உறுப்பு தானம் செய்கிறார்கள். ஆனால், அங்கு உறுப்பு தானத்துக்காக காத்திருபோர் எண்ணிக்கை மிகவும் அதிகம்.

இந்தியாவில் உறுப்பு தானம் செய்வோர் மிகவும் குறைவு. 10 லட்சம் பேருக்கு வெறும் 0.05 பேர்தான். இவர்களும் பெரும்பாலும் உறுப்பு தானம் தேவைப்படுபவர்களின் உறவினர்களாகத்தான் இருப்பார்கள். யாரோ ஒருவருக்கு தனது உறுப்புகளை தானம் செய்யும் எண்ணம் இன்னும் இங்கு வரவில்லை. அப்படி மாற்றம் வந்து விட்டால் உறுப்பு தானம் கிடைக்காமல் இறப்பவர்கள் இருக்க மாட்டார்கள். மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் உறுப்பு தானம் செய்பவர்கள் அதிகம். அந்த வகையில் நாம் முன்னோடி என பெருமைபட்டுக் கொள்ளலாம்.




நன்றி: Dinakaran

வதந்திகளைத் தடுத்து நிறுத்துங்கள்

வதந்திகளைத் தடுத்து நிறுத்துங்கள்

அது சுதந்திர போராட்ட காலம். பல பகுதிகளில் கலவரம். பிரிட்டிஷ் மேல்மட்ட தலைவர்கள் லண்டனில் கூடினர். இந்தியாவுக்கு விடுதலை கொடுத்து விடலாமா என்று ஆலோசனை. கூடவே கூடாது; இந்தியர்கள் இன்னும் சுய ஆட்சிக்கு தயாராகவில்லை என சிலர் ஆட்சேபித்தனர். கையில் ஒரு கரித்துண்டு கிடைத்தால் போதும்; இந்தியாவை மீண்டும் பல தேசங்களாக ஆக்கிவிடலாம் என்று ஒரு தளபதி சொன்னாராம். மதம், ஜாதி, மொழி என பல வகையிலும் மனதால் பிரிந்து கிடக்கும் மக்களில் யாரேனும் ஒருவரை பற்றி ஒரு சுவரில் அவதூறு எழுதினால் உடனே கலவரம் வெடிக்கும் என்ற அர்த்தத்தில் அவர் அவ்வாறு கூறியிருக்கிறார். இந்த நூற்றாண்டிலும் அந்த கருத்து உண்மையாக வாழ்கிறது. செல்போனில் குறுந்தகவல் யார் அனுப்பியது? எதற்காக அனுப்பினார்? உண்மையாக இருக்குமா? வெறும் மிரட்டலா? எந்த கேள்விக்கும் பதில் தேடும் மனநிலையில் இங்கே எவரும் இல்லை. அசாமில் போடோ பழங்குடி மக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே மோதல். வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் எங்கள் நிலங்களையும் பிழைப்பையும் பறிக்கிறார்கள் என்பது போடோக்களின் புகார். அவர்களைவிட உரிமைகளில் குறைந்தவர்கள் அல்ல நாங்கள் என்பது முஸ்லிம்களின் நிலைப்பாடு. பக்கத்து நாடான பர்மாவில் சிறுபான்மை முஸ்லிம்கள் மீது பெரும்பான்மை இனத்தவரான பவுத்தர்கள் நடத்திய தாக்குதல் இணையதளங்கள் மூலம் பரவிய விதம் இங்குள்ள முஸ்லிம்கள் மத்தியில் கொந்தளிப்பை உண்டாக்கி இருந்ததால், அசாம் சம்பவங்கள் அதை மேலும் விசிறிவிட உதவியது.

சீன பூகம்பம், தாய்லாந்து ஆர்ப்பாட்டம் என பல ஆண்டுகளுக்கு முந்தைய சம்பவங்களை அப்படியே பர்மாவில் நடந்ததாக இணையத்தில் யாரோ சித்தரித்துள்ளனர் என்பது நிறைய பேருக்கு தெரியாததால் பதற்றம் நீடித்தது. அதை பயன்படுத்தி விஷமிகள் அசாமியர்களை குறிவைத்து மிரட்டல் எஸ்.எம்.எஸ் அனுப்பி வருகின்றனர். ஒட்டுமொத்த வடமாநில மக்களும் இதனால் மிரண்டு போயிருக்கிறார்கள். பிரதமர் சொன்னதுபோல இதில் அந்நிய சதியும் இருக்கக்கூடும். வதந்திகளை உடனே தடுக்க தவறினால் ஒவ்வொரு மாநிலங்களுக்கு இடையிலும் பிரச்னைகள் விசுவரூபம் எடுக்கும். நிச்சயமாக அது இந்தியாவுக்கு நல்லதல்ல.




நன்றி: Dinakaran

Friday, 17 August 2012

மொழியையும் காக்கும் கூகுள்

மொழியையும் காக்கும் கூகுள்!

மறைந்து வரும் மொழிகளைக் காக்க புதியதோர் இணையதளத்தைத் தொடங்கியுள்ளது கூகுள்

ன்றைய நிலையில் உலகம் முழுவதும் சுமார் ஏழாயிரத்திற்கும் அதிகமான மொழிகள் பேசப்படுகின்றன. அவற்றில் 3,054 மொழிகள் பயன்பாடு குறைந்து மெல்ல மெல்ல மறைந்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். மொழிதான் ஒரு சமூகத்தின் அடையாளம்.

இந்நிலையில் மொழிகள் மறைவதைத் தடுக்கும் புதிய முயற்சியில் இறங்கியுள்ளது கூகுள்.  இதற்காகவே தனியே ஒரு இணைய தளத்தைத் கூகுள் துவக்கியுள்ளது.

இந்தத் தளம் அழிந்துவரும் ஒரு குறிப்பிட்ட மொழி தொடர்பான வீடியோ, ஆடியோ, எழுத்துருக்கள் இவற்றைச் சேகரிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதற்காக அறிஞர்கள் மற்றும் மொழியியல் வல்லுநர்கள் அடங்கிய குழு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு அழிந்துவரும் மொழிகளை அடையாளம் கண்டு அவற்றைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்.

இந்தத் தளத்தில் பொதுமக்களும் பங்கு கொண்டு தங்கள் கருத்துக்களை, தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும் விதமாக வகை செய்யப்பட்டுள்ளது.

"இந்த மொழிகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், 100 ஆண்டுகளில் அழிந்தே போய் விடும்"  என்று கவலை தெரிவிக்கிறார்கள் இந்த முயற்சிக்கான ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பொறுப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ள க்ளாரா ரிவேரா ரோடரிகஸ் மற்றும் ஜேசன் ரிஸ்மென்.

ஏற்கெனவே சில மொழிகளைச் சேர்ந்த மனிதர்களைக் கொண்டு சில மொழிகளின் முக்கியமான சில வார்த்தைகளான 'சாப்பிட்டியா, தூங்குனியா, என்ன செய்யற?' போன்ற அடிப்படைத் தகவல்களைக் குறிப்பிட்ட வழக்கு மொழிகளில் பதிவு செய்து இணையப்படுத்தியிருக்கிறார்கள்.

18ம் நூற்றாண்டில் பேசப்பட்டு அழிந்த சில மொழிகளை தொழில்நுட்ப உதவியோடு வீடியோவாகவும், ஆடியோவாகவும் மாற்றி இந்த இணையதளத்தில் பதிவேற்றி இருக்கிறார்கள்.

குறிப்பிட்ட மொழியைப் பற்றிய தகவல், அதாவது எந்தப் பகுதியை சேர்ந்த மக்கள் அந்த மொழியைப் பேசுகிறார்கள், அது எந்த மொழியிலிருந்து பிறந்தது போன்ற மொழி பற்றிய அடிப்படைத் தகவல்களும், சில உதாரணக் காட்சிப் படங்களும், மொழி தொடர்புடைய சில கோப்புகளும் இடம்பெறும் வகையில் இந்தத் தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மக்களும் இந்தத் தளத்தில் தங்கள் பங்களிப்பை அளிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு: www.endangeredlanguages.com

நன்றி:
பி. வைத்தீஸ்வரன் (புதிய தலைமுறை பத்திரிகையாளர்)

Thursday, 16 August 2012

என்ன நடக்கிறது அசாமில்?

என்ன நடக்கிறது அசாமில்?


ஒரே இரவில் 
400 கிராமங்களிலிருந்து இரண்டு லட்சம் மக்கள் மிரண்டு ஓடி, பக்கத்து மாவட்டங்களில் ஒளிந்து அடைக்கலம் புகுந்தார்கள்.

இருபது கிராமங்கள் முழுமையாக எரிக்கப்பட்டன.

கலவரத்தில் 48 பேர் உயிரிழந்தார்கள்.

இதையடுத்து அசாம் மாநிலத்தின் எல்லாப் பகுதியிலும் ரயில்களும் பஸ்களும்  ஓடாமல் போக்குவரத்து ஸ்தம்பித்தது. ஊர் திரும்ப முடியாமல் மாட்டிக் கொண்டவர்கள் 25 ஆயிரம் பேருக்குமேல்.


ஊரடங்கு சட்டத்தின்கீழ் பல நகரங்கள்

போர்க்களத்திற்குப் போவதுபோல ராணுவம்  நகரங்களில் வந்திறங்கியது.


சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இதுவரை இத்தனை பெரிய அளவில் ஓர் இனக்கலவரம் நிகழ்ந்ததில்லை. வடகிழக்கு இந்திய மலைப்பகுதிகளில் ஏதோ ஒரு நாள் சிறு நடை நடந்தவர்கள் கூட அவற்றின் சலசலக்கும் நதிகள், மேலே வந்து விழும் சிறு தூறல், மெல்லக் கவியும் மஞ்சு, கம்பீரமான அந்த மலைகள் இவற்றில் தன்னை இழக்காமல் இருக்க முடியாது. அறைக்குள்ளேயே முடங்கிக் கிடப்பவர்கள் கூட அந்தப் பகுதியின் வரலாற்றை வாசிக்க நேர்ந்தால் மனதில் ஓர் எழுச்சி பிறக்கும். அந்தப் பகுதியின் முக்கிய மாநிலமான அசாமில் இன்று இனப்பிரச்சினை கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது.


என்ன பிரச்சினை?

ஜூலை 20ம் தேதி கோக்ரஜாஹர் என்ற ஊரிலுள்ள பி.கே. சாலை என்ற நெடுஞ்சாலையில் போரோலாந்து விடுதலைப்புலிகள் என்ற அமைப்பைச் சார்ந்த நான்கு பேரை, இஸ்லாமிய மாணவர் அமைப்பைச் சார்ந்தவர்கள் சுட்டுக் கொன்று விட்டனர். போரோலாந்து விடுதலைப்புலிகளுடன் பழிக்குப் பழி தீர்த்துக் கொள்வதற்காக இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்ததாகச் சொல்லப்படுகிறது.


யார் இந்த விடுதலைப்புலிகள்?

அதைப் புரிந்துகொள்ள அசாமை சற்று ஆழ்ந்து ஊடுருவிப் பார்க்க வேண்டும்.


இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் 350 இனக்குழுக்களைச் சேர்ந்த மூன்றரைக் கோடி மக்கள் வாழ்கிறார்கள். இந்தப் பகுதியோ, மியான்மர், சீனா, பூடான், வங்கதேசம் என்ற நான்கு நாடுகளுக்கு நடுவே அமைந்திருக்கிறது. இந்தப் பகுதியின் எல்லைகளில் 98 சதவிகிதம் இந்த அண்டை நாடுகளை ஒட்டி அமைந்திருக்கிறது. 2 சதவிகிதம்தான் இந்தியப் பகுதிகளோடு இருக்கிறது. இந்த எல்லா நாடுகளும் நிலத்தால் பிணைக்கப்பட்டவை. அசாம் மக்கள் அவ்வப்போது சொல்வதுபோல அவர்களுக்கு, 'இந்தியாவிற்குப் போவதைவிட வங்கதேசத்திற்குப் போவது எளிது'.


350 இனக்குழுக்கள் என்கிற விஷயம் மானுடவியல் ஆராச்சியாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடிய செய்தியாக இருக்கலாம். ஆனால், நிர்வாகத்தை நடத்துபவர்களுக்கு அது பெரும் தலைவலி. ஏதேனும் ஒரு குழுவை திருப்தி செய்ய மேற்கொள்ளப்படும் நடவடிக்கை மற்ற ஐந்து குழுக்களின் கோபத்தை சம்பாதித்துவிடும்.


அசாமில் உள்ள இந்த இனக்குழுக்களில் முக்கியமானது போரோ (ஆங்கிலத்தில் Bodo என எழுதப்படும் இந்தக் குழுவின் சரியான உச்சரிப்பு இதுதான்). இனக்குழுவினர் என்றால் ஏதோ தோலாடையும், இறகுத் தொப்பியும் அணிந்த காட்டுவாசிகள் என நினைத்து விடக் கூடாது. இவர்கள் சமவெளியில் வாழ்கிற பழங்குடி மக்கள். தங்களுக்கென தனி மொழி, கலாசாரம்,வழிபாட்டு முறைகள் கொண்ட இனக் குழுவினர் இவர்கள். வங்க மொழி, பர்மீய மொழி இவற்றின் வரிவடிவங்களைப் பயன்படுத்தி எழுதி வந்த இவர்கள், அண்மைக்காலமாக தேவநாகரி வரிவடிவங்களைப் பயன்படுத்தத் துவங்கியிருக்கிறார்கள். நெல், தேயிலை இவற்றைப் பயிரிடும் முறைகள், பன்றி, கோழி வளர்ப்பு, பட்டுப்பூச்சி வளர்ப்பு இவற்றை அசாமில் அறிமுகப்படுத்தியவர்களும் இவர்கள்தான்.


அசாம் மக்கள் தொகையில் ஐந்து சதவிகிதம் அளவிற்கு உள்ள இந்தக் குழுவினர் பிரம்மபுத்ராவின் வடகரையில், பூட்டான் மலைச்சாரலில் அமைந்துள்ள பகுதிகளில் கணிசமாக வசிக்கிறார்கள். தாங்கள் வசிக்கும் பகுதியை போரோலாந்து என்று அழைக்கிறார்கள். கோக்ரஜாஹர் என்ற நகரம்தான் இந்த போரோலாந்தின் தலைநகர்.


இந்தப் பகுதி மாணவர்களுக்கு உயர்கல்வி என்பது எட்டாக் கனியாக இருந்தது. உயர்கல்வி நிலையங்கள், வெகு தொலைவிலுள்ள குவாஹாத்தி, ஷில்லாங், திப்ரூகர் போன்ற இடங்களில் அமைந்திருந்தன. அவ்வளவு தொலைவு சென்று படித்தாலும் அவர்களுக்கு வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாக இருந்தது. எஸ்.டி. பிரிவின்கீழ் அவர்களுக்கு இட ஒதுக்கீடு இருந்தது என்றாலும் பல பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதியில் அந்த இட ஒதுக்கீட்டினால் அவர்களுக்குப் பலன் கிடைக்கவில்லை. அசாம் மொழி பேசும் மக்களே வேலைகளை ஆக்ரமித்துக் கொள்வதாக இவர்கள் நினைத்தார்கள். அதனால், மாணவர்கள் கொதிப்போடு இருந்தார்கள்.


அவர்களுக்கு முந்திய தலைமுறையினர், 1960களில் தங்களது மேய்ச்சல் நிலங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தங்களை, 'உதயச்சல்' என்ற யூனியன் பிரதேசமாகப் பிரிக்கக் கோரி அரசியல் கட்சி அமைத்துப் போராடினர். ஆனால், மத்திய அரசு காதில் போட்டுக் கொள்ளவில்லை. அதே சமயம், இதேபோன்ற கோரிக்கைகளுக்காகப் போராடிய வேறு ஒரு பழங்குடி மக்களுக்காக அசாமிலிருந்து பிரித்து மேகாலயா என்ற மாநிலத்தை உருவாக்கியது.


ஆத்திரமடைந்த போரோ மக்கள், 1987ம் ஆண்டு, 'அசாமை இரு சமபாதிகளாகப் பிரி' என்ற முழக்கத்துடன் வன்முறைப் போராட்டத்தில் இறங்கினர். உபேந்திரநாத் பிரம்மா என்பவரின் தலைமையில் மாணவர்கள் போராட்டத்தை முன்னின்று நடத்தினார்கள். போரோ விடுதலைப்புலிகள் என்ற அமைப்பின் நெடிய போராட்டத்திற்குப் பிறகு 1993ம் ஆண்டு போரோ மக்கள் வாழும் பகுதிகளின் நிர்வாகத்தை, அசாம் மாநிலத்திற்குள்ளேயே தன்னாட்சி உரிமைகள் கொண்ட போரோ டெரிட்டோரியல் கவுன்சில் (BTC) வசம் ஒப்படைத்தது மத்திய அரசு.


இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஆறாவது பட்டியலின்கீழ் அமைக்கப்பட்டுள்ள இந்த கவுன்சில் சட்டமன்ற, நிர்வாக, நீதித்துறை அதிகாரங்கள் கொண்டது. மாநில அரசின் சட்டங்களோ, மத்திய அரசின் சட்டங்களோ, இந்த கவுன்சிலின் அனுமதி இல்லாமல் இந்தப் பகுதியில் செல்லாது. மலைவாழ் மக்களுக்காக உருவாக்கப்பட்ட இந்தப் பிரிவின்கீழ் முதன் முதலில் இடம் பெற்ற சமவெளிப் பழங்குடியினர் போரோக்கள்தான்.


முரண்பாடுகளால் மோதல்

முரண்-1


நாளடைவில் அகதிகளாக இங்கு வந்து குடியேறிய இஸ்லாமியர்களின் ஜனத்தொகை மெல்ல மெல்லக் கூட ஆரம்பித்து இன்று மாநில ஜனத்தொகையில் அவர்கள் 50 சதவிகிதத்துக்கும் மேல். இவர்களில் பலர் சட்ட விரோதமாகக் குடிபெயர்ந்தவர்கள். போரோ மக்கள் அதிகம் வாழும் பகுதியிலும் இவர்களது எண்ணிக்கை போரோ மக்களின் எண்ணிக்கையைவிட அதிகமாகிவிட்டது.


இப்போது அந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்களில் மூன்றிலொரு பகுதியினர்தான் போரோ மக்கள். மற்றவர்கள் 65 சதவிகிதத்திற்கும் மேல். ஆனால் ஆட்சி அதிகாரம், போரோ மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பிடிசியிடம் இருக்கிறது. இதனால் போரோ இனத்தைச் சேராத மக்களிடம் ஒருவித அச்சமும் சங்கடமும் நிலவுகிறது. அதனால், அவர்கள் தாங்கள் பெரும்பான்மையாக வசிக்கும் கிராமங்களை பிடிசியின் நிர்வாகத்திலிருந்து விடுவிக்க வேண்டும் எனக் கோருகிறார்கள். அதே சமயம் போரோக்கள் தங்களது அதிகாரம் பறி போய்விடுமோ எனப் பதட்டமடைகிறார்கள் .


முரண்-2

இந்தப் பகுதியிலுள்ள நிலங்கள் போரோ இனத்தவருக்கு என  ஒதுக்கப்பட்டுள்ளன. என்றாலும் மற்றவர்கள் நிலம் வாங்கத் தடையில்லை. சிறுபான்மை சமூகத்தினர் மெல்ல மெல்ல போரோக்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலங்களை வாங்க ஆரம்பித்து சில கிராமங்களை முற்றிலுமாக தங்கள் வசப்படுத்திக் கொண்டுவிட்டார்கள். எந்தக் காரணத்திற்காக பிடிசி உருவாக்கப்பட்டதோ அந்த மூல நோக்கத்தையே இது அர்த்தமற்றதாக்கிவிட்டது என போரோக்கள் குமுறுகிறார்கள்.


நிலம் வாங்குவது தடை செய்யப்படாததால், அண்டை மாவட்டத்திலிருந்து இந்த மாவட்டத்திற்குக் குடியேறும் மக்களின் எண்ணிக்கை கடந்த ஐந்தாண்டுகளில் அதிகரித்திருக்கிறது. இதைத் தடுக்க அண்டை மாவட்டத்தின் எல்லை மூடி, சீல் வைக்கப்பட வேண்டும் என போரோக்கள் கோருகிறார்கள்.


இந்த மாவட்டங்களில்தான் இப்போது வன்முறை தலைவிரித்தாடுகிறது என்பது கவனிக்கத்தக்கது.


அந்தியர் தூண்டுதலா?

இஸ்லாமியர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக பங்களாதேசத்திலிருந்து ஊடுருவியிருக்கும் பயங்கரவாதிகள் உதவுகிறார்கள் என்று போரோக்கள் சொல்லி வருகிறார்கள். ஆனால், அரசு அதை மறுத்து வருகிறது.


இந்தப் பகுதியில் இத்தனை கடுமையான இனக் கலவரம் மூண்டிருப்பது எங்கோ வெகு தொலைவில் இருக்கும் உங்களுக்கும் எனக்கும் வேண்டுமானால் பேரதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால், இது பதற்றம் நிறைந்த ஒரு சென்சிட்டிவான பகுதி, அதுவும் அண்டைநாடுகளால் சூழப்பட்டுள்ள பகுதி என்பது அரசுக்கு மிக நன்றாகவே தெரியும். அப்படியும் அது அலட்சியமாக இருந்து விட்டது. காரணம்? வாக்கு வங்கி அரசியல். யார் மீதாவது கடுமையான நடவடிக்கை எடுத்தால் அந்த வகுப்பினரின் வாக்குகளை ஒட்டுமொத்தமாக இழந்து விடுவோமோ என்ற அச்சம் சார்ந்த அரசியல் நோக்கு. இப்படியே போனால்-


அரசியல்வாதிகள் வாக்குகளைக் காப்பாற்றிக்கொள்ள நாம் தேசத்தையே இழந்து விடும் நாள் அதிக தொலைவில் இல்லை.





நன்றி: ரமணன், புதிய தலைமுறை 

Wednesday, 15 August 2012

ராம்தேவ் நாடகம் முடிந்தது

ராம்தேவ் நாடகம் முடிந்தது

தலைநகரில் இன்னொரு நாடகம் நடந்து முடிந்துள்ளது. ராம்தேவ் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்திருக்கிறது. சாகும்வரை உண்ணாவிரதம் என அறிவித்து மகாத்மாவை அவமதிக்க மாட்டேன் என ராம்தேவ் சொன்னார். அரசியல் நோக்கமெல்லாம் தனக்கு கிடையாது என்றும் சொன்னார். வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்க வேண்டும் என்ற ஒரே கோரிக்கையுடன் போராட்டம் தொடங்கினார். ஆனாலும் அன்னாவுக்கு நேர்ந்த கதிதான் இவருக்கும். முதல்நாள் வந்த கூட்டத்தில் பாதிகூட மறுநாள் வரவில்லை. மூன்றாம் நாள் இன்னும் மோசம். மக்களுக்கு சலித்து விட்டது என்பதை அப்போதும் புரிந்துகொள்ளவில்லை. காங்கிரஸ் புரிந்துகொண்டது. அதனால் பழைய தப்பை இம்முறை செய்யவில்லை. எந்த அமைச்சரும் எட்டிப் பார்க்கவில்லை. சோகமாக எதிர்க்கட்சி தலைவர்களுக்கு தூது அனுப்பி கெஞ்சியிருக்கிறார் பாபா. முலாயம் சிங்கும் மாயாவதியும் போனால் போகிறது என்று 'பாபாவின் கோரிக்கையை ஆதரிக்கிறோம்' என அறிக்கை விடுத்தனர். ஆனால்  பாரதிய ஜனதா 'மத்திய அரசுக்கு தர்மசங்கடம் ஏற்படுத்த வாய்க்கின்ற எந்த சந்தர்ப்பத்தையும் விடக்கூடாது' என்று முடிவெடுத்து ராம்தேவ் வலையில் விழுந்தது. அதன் தலைவர் கட்கரி மேடையேறி பாபாவுக்கு ஓ போட்டார்.

ஆதரவு ஆக்சிஜன் இல்லாமல் நாடி அடங்கிக் கொண்டிருந்த பாபா படுஉற்சாகமாகி பார்லிமென்டை முற்றுகையிட கிளம்பினார். இதென்ன பல்டி என்று போலீஸ் தடுத்து கைது செய்து பஸ்ஸில் ஏற்றியதும் ஜன்னலில் பாதி உடலை நீட்டி டீவி கேமராக்களுக்கு பேட்டி கொடுத்தார். பழக்கப்பட்ட வேலை. டெல்லிவாசிகள் பாவம். போக்குவரத்து சீர்குலைந்து கஷ்டப்பட்டார்கள். ராம்தேவ் சாதாரண சாமியார் அல்லர். பதஞ்சலி யோகபீடம் என்ற பெயரில் பிரமாண்டமான நிறுவனம் வைத்திருக்கிறார். ஆயுர்வேதத்தின் பெயரால் பொருட்கள் உற்பத்தி செய்து உலகம் முழுவதும் விற்று கோடிகளில் சம்பாதிக்கிறார். அறக்கட்டளைகள் நிறுவி அந்த வருமானத்துக்கு வரிவிலக்கும் பெற்றுள்ளார். யோகாசன ஆசிரியர் அதை மட்டும் கற்றுக் கொடுத்தால் மரியாதை மிஞ்சும். அவரவர் தேர்ந்தெடுத்த தொழிலை செய்வதோடு நிற்காமல் மற்ற துறைகளில் மூக்கை நுழைத்து  குட்டையை குழப்பினால் அதற்குரிய விலையை கொடுத்தாக வேண்டும். ராம்தேவுக்கும் அந்த நேரம் வந்துவிட்டது.




நன்றி: Dinakaran 

Tuesday, 14 August 2012

ஒருங்கிணைந்த தேர்தல் அத்வானியின் யோசனை

ஒருங்கிணைந்த தேர்தல் அத்வானியின் யோசனை

நாடாளுமன்றத்துக்கும் அனைத்து சட்ட மன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அத்வானி விடுத்துள்ள கோரிக்கை  பெரும்பாலான மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கிறதோ இல்லையோ மத்திய அரசு கட்டாயம் பரிசீலிக்க வேண்டியது என்பதில் சந்தேகமில்லை. ஏற்கனவே இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்குடனும், மக்களவையின் முன்னவராக இருந்த பிரணாப் முகர்ஜியுடனும் விவாதித்து இருப்பதாக அத்வானி தன் பிளாகில் எழுதியிருக்கிறார். ஜனாதிபதியாக வந்துள்ள பிரணாப் குறைந்தபட்சம் இந்த ஒரு தேர்தல் சீர்திருத்தத்தை மட்டுமாவது நிறைவேற்ற முயற்சி செய்ய வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளார். ஏதாவது ஒரு மாநிலத்தில் தேர்தல் நடந்த வண்ணம் இருப்பதால் மத்திய அரசின் கொள்கைகளும் திட்டங்களும் அந்தந்த மாநிலத்தின் சூழ்நிலைக்கு ஏற்றவாறு பாதிக்கப்படுகின்றன என்பதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.இதற்கு எத்தனையோ உதாரணங்களை சொல்ல முடியும். காவிரி, முல்லை பெரியாறு, இலங்கை போன்ற மாநிலங்களுக்கு இடையிலான அல்லது அண்டை நாட்டுடனான பிரச்னை தீவிரமாகும் நேரத்தில் தேர்தல் வந்தால் என்ன நடக்கும் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். மத்திய, மாநில அரசுகளுக்கு மட்டுமல்ல தேசிய கட்சிகளுக்கும் திண்டாட்டமான சூழ்நிலை உருவாகிறது.2009 தேர்தலை தொடர்ந்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உருவான பிறகு இதுவரை 12 மாநிலங்களில் தேர்தல் நடந்துள்ளது. இந்த ஆண்டு இன்னும் 2 மாநிலங்கள், அடுத்த ஆண்டில் 10 மாநிலங்கள் தேர்தலை சந்திக்க இருக்கின்றன. அடுத்த நாடாளுமன்ற தேர்தல் நடக்கவுள்ள 2014ம் ஆண்டிலும் 7 மாநில சட்டமன்றங்கள்  தேர்தலை எதிர்கொள்ளும். முதல் நான்கு பொது தேர்தல்களும் நாட்டுக்கும் மாநிலத்துக்கும் சேர்ந்துதான் நடந்தன. வங்கதேச போர் மூலம் கிடைத்த புகழை வாக்குகளாக மாற்ற ஓராண்டு முன்னதாக தேர்தல் நடத்த விரும்பி, 1971ல் நாடாளுமன்றத்தை இந்திரா காந்தி கலைத்ததுதான் முதல் மாற்றம். மாநில அமைச்சரவைகள் டிஸ்மிஸ், மத்திய அரசின் ஸ்திரமின்மை ஆகிய காரணங்களால் அதன் பிறகு ஒருங்கிணைந்த தேர்தலே  சாத்தியப்படவில்லை. இந்த இரண்டு பிரச்னைகளுக்கும் தீர்வு காணும்போதுதான் அத்வானியின் யோசனைக்கு  செயல்வடிவம் கொடுக்க முடியும்.





நன்றி:Dinakaran

ஒரு நொடி தயக்கத்தால் மாற்றி எழுதப்பட்ட வரலாறு

ஒரு நொடி தயக்கத்தால் மாற்றி எழுதப்பட்ட வரலாறு

தெரியாத விசையங்களை படிங்கள் உங்களுக்கு தெரிந்த விசையங்களை மற்றவர்களுக்கு தெரிய படுத்துங்கள்.சரி அதற்க்கு நாம் சரியான ஒரு எடுத்துகாட்டை பார்போம் .

நிலவில் முதன்முதலில் கால் வைத்தவர் யார்? இந்தக்கேள்விக்கு யாராயிருந்தாலும் உடனே பதில் சொல்லிவிடுவீர்கள், நீல்ஆம்ஸ்ட்ராங் என்று.


நிலவில் முதன்முதலில் கால் வைத்திருக்க வேண்டியவர் யார் தெரியுமா? பல பேருக்கு தெரியாது என்பதால் நானே சொல்லிவிடுகிறேன் அவர், எட்வின் சி ஆல்ட்ரின். அவர்தான் நிலவுக்கு சென்ற அப்பல்லோ விண்கலத்தின் பைலட். அதாவது விமானி.

ஆல்ட்ரின் அமெரிக்காவின் விமானப் படையில் பணிபுரிந்தவர். மேலும் விண் நடை அனுபவம் உள்ளவர். அதனால் அவர் பைலட்டாக நியமிக்கப்பட்டார்.

நீல் ஆம்ஸ்ட்ராங்க் அமெரிக்காவின் கப்பல் படையில் வேலைபார்த்தவர். மிகுந்த தைரியசாலி என்பதால்தான் இந்த பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் கோ-பைலட் அதாவது இணை விமானி.

இவர்கள் சென்ற அப்பல்லோ விண்கலம் நிலவை அடைந்ததும் நாசாவிலிருந்து பைலட் பர்ஸ்ட் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், ஆல்ட்ரினுக்கோ மனதில் சின்ன தயக்கம். இடது காலை எடுத்து வைப்பதா? வலது காலை எடுத்து வைப்பதா? என்றல்ல. 'நிலவில் முதன் முதலில் கால் எடுத்து வைக்கிறோம். புவியீர்ப்பு விசையற்ற இடத்தில் இருக்கிறோம். கால் வைக்கும் இடம் எப்படி இருக்கும் என்று தெரியாது. புதை மணலாக இருந்து உள்ளே இழுத்துவிட்டால், எரி மணலாக இருந்து காலை சுட்டுவிட்டால்' தயக்கத்தில் மணிக்கணக்காக தாமதிக்கவில்லை. சில நொடிகள்தான் தாமதித்திருப்பார்.அதற்குள் நாசாவில் இருந்து இரண்டாவது கட்டளை பிறப்பிக்கப்பட்டது. கோ பைலட் நெக்ஸ்ட். நீல் ஆம்ஸ்ட்ராங் கட்டளை வந்த அடுத்த நொடி காலடி எடுத்துவைத்தார்.

உலக வரலாறு, ஒரு நொடி தயக்கத்தில் மாற்றி எழுதப்பட்டது. திறமையும் தகுதியும் இருந்தும்கூட தயக்கத்தின் காரணமாக தாமதித்ததால் இன்று ஆல்ட்ரினை யாருக்கும் தெரியவில்லை.

முதலாவது வருபவரைத்தான் இந்த உலகம் நினைவில் வைத்திருக்கும் என்பது மட்டுமல்ல. தயக்கம், பயம் இவை எந்த அளவுக்கு நம் வெற்றியை பாதிக்கும் என்பதற்கு இதுவே உதாரணம்.
இனி நிலவை பார்க்கும்போதெல்லாம் இந்தச் சம்பவத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு நிமிடத் தயக்கம் நம்முடைய மிகப் பெரிய வெற்றிகளைத் தடுத்துவிடுகிறது. நாம் எல்லோருமே மிகப்பெரும் சாதனைகளை படைக்கிற வல்லமை உடையவர்கள்தான். நம்முடைய தயக்கம், பயம், கூச்சம் இவைதான் நம் முதல் எதிரி.
உங்களுடைய எதிரி நீங்களே ஆகிவிடதிர்கள் !!!!!!!!!!

பஸ் ஆல்ட்ரின் வாழ்க்கைக் குறிப்பு!!!!!!!!!
பஸ் ஆல்ட்ரின் (Buzz Aldrin (இயற்பெயர் எட்வின் யூஜின் ஆல்ட்ரின், Edwin Eugene Aldrin, Jr., பிறப்பு: ஜனவரி 20, 1930) என்பவர் அமெரிக்க விண்வெளி வீரரும் விமானியும் ஆவார். இவர் முதன் முதலாக மனிதரை சந்திரனில் ஏற்றிச் சென்ற அப்பல்லோ 11 விண்கலத்தில் நீல் ஆம்ஸ்ட்ரோங் உடன் பயணம் செய்து சந்திரனில் இறங்கிய இரண்டாவது மனிதர் என்ற பெருமையைப் பெற்றார்.

விஞ்ஞானப் பட்டதாரியான ஆல்ட்றின் 1951 இல் அமெரிக்க வான்படையில் இணைந்தார். கொரியப் போரில் போர் விமானியாகப் பங்கு பற்றினார். பின்னர் மசாசுசெட்ஸ் தொழிநுட்பக் கல்லூரியில் வானியலில் முனைவர் பட்டம் பெற்றார். மீண்டும் அமெரிக்க வான்படையில் இணைந்து பணியாற்றினார்.
அக்டோபர் 1963 இல் நாசாவினால் விண்வெளிப் பயிற்சியில் இணைந்தார்.ஜெமினி 12 விண்கலத்தில் செல்வதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.ஜூலை 16, 1969 இல் அப்பல்லோ 11 விண்கலத்தில் நீல் ஆம்ஸ்ட்ரோங் உடன்சந்திரனை நோக்கிய பயணத்தை ஆரம்பித்தார். சரியாக 02:56 UTC ஜூலை 21(இரவு 10:56 EDT, ஜூலை 20), 1969இல், ஆம்ஸ்ட்ரோங் சந்திரனில் கால் பதித்தார். ஆல்ட்ரின் அவரைப் பின்தொடர்ந்தார்.பஸ்" (Buzz) என்ற பெயரிலேயே அவர் பிறப்பில் இருந்து அழைக்கப்பட்டு வந்தார். 1988இல் இவர் தனது பெயரை "பஸ் ஆல்ட்ரின்" என அதிகாரபூர்வமாக மாற்றிக் கொண்டார்


நன்றி: இன்று ஒரு தகவல் (முகநூல்)

Monday, 13 August 2012

தமிழ்ப் பாடநூலில் தமிழுக்குத் தட்டுப்பாடா?

தமிழ்ப் பாடநூலில் தமிழுக்குத் தட்டுப்பாடா?

நீதித்துறையும் கல்வித்துறையும் மிகமிக விழிப்புணர்வோடு செயல்பட வேண்டிய துறைகளாகும். எந்த நிலையிலும் குற்றம் செய்யாதவனுக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கிவிடக் கூடாது. அதேபோல, கல்வித்துறையின் தவறான முடிவுகளும் பிழையானவைகளும் கவனிப்பற்ற செயல்பாடுகளும் பள்ளி வளாகத்திற்குள்ளும் வகுப்பறைச் சுவர்களுக்குள்ளும் சென்றுவிடக் கூடாது.

 இதனால் சமூகமும் எதிர்காலத் தலைமுறையும் பாதிக்கப்படும். தமிழ்நாட்டுப் பள்ளிக் கல்வித்துறை, பிரச்னைகள் எதுவுமில்லாமல் "அப்பாடா' என்று உட்கார்ந்து மூச்சுவிட்டுப் பல நாள்களாகிவிட்டன. பள்ளிக் கட்டண வழக்கு, ஆசிரியர் கொலை, மாணவர் தற்கொலை, பள்ளிப் பேருந்துப் பிரச்னை என்று மூச்சுமுட்டுகிறவரை பிரச்னைகள் மலையாகக் குவிந்துவிட்டன.

 இவையனைத்தும் அவ்வப்போது நிகழும் சமூக நிகழ்வுகள் என்றாலும், இவற்றைக் கட்டுப்படுத்துவதும் நெறிப்படுத்துவதும் பொதுமக்களுக்கு விளக்கம் தர வேண்டியதும் கல்வித்துறையின் கடமை என்பதை யாரும் மறுக்க முடியாது.

 கல்வித்துறை, வல்லுநர்களைக்கொண்டு நன்கு திட்டமிட்டுச் செயல்படுத்தும் நடைமுறைகளுள் பாடநூல் தயாரிப்பு என்பது மிகவும் முக்கியமானதாகும். பத்துப்பேர் தயாரிக்கும் ஒரு பாடநூல், பல கோடி மாணவர்கள் கல்வி பயில அடிப்படைக் கருவியாக அமைகிறது. அதனால் அதன் வடிவமைப்பு, உள்ளடக்கம் ஆகியவற்றில் கல்வித்துறை மிகுந்த அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும்.

 தமிழகத்துப் பள்ளிகளில் பயன்படுத்தப்படும் சமச்சீர்க்கல்விப் பாடநூல்களைப் பார்த்தால் நேர்த்தி தெரியவில்லை; நெருடலைத்தான் உணரமுடிகிறது. கிட்டத்தட்ட எல்லாப் பாடநூல்களிலும் பக்கத்துக்குப் பக்கம் இடம்பெற்றுள்ள எழுத்துப்பிழை, கருத்துப் பிழைகளைச் சுட்டிக்காட்டிக் களைத்துப் போய்விட்டது. இன்னும் பாடநூல்களில் உள்ள பிழைகள் முற்றிலுமாகக் களையப்படவில்லை.

 ஒன்று முதல் பத்துவரை இப்போதுள்ள பாடநூல்களுள் தமிழ்ப்பாட நூல்களில்தாம் ஏராளமான பிழைகள் காணப்படுகின்றன. புதிய அரசு பொறுப்பேற்றதும் தமிழ்ப்பாட நூல்களில் இருபத்தேழு பகுதிகள் நீக்கப்பட வேண்டியவை என அறிவித்தது. அதேசமயம் பாடநூல்களில் உள்ள கருத்துப் பிழை, இலக்கணப் பிழை ஆகியவற்றைப் பலரும் சுட்டிக்காட்டினர்.

 அதன்பின்னர், மாவட்டந்தோறும் ஆசிரியர்கள் கூடி, நூல்களைப் படித்து ஆய்வு செய்து, பிழைகளைத் தொகுத்தனர். அவ்வாறு தொகுத்தவகையில், தமிழ்ப்பாட நூல்களில் மட்டும் நூற்றுஎழுபத்தேழு பிழைதிருத்தம், சேர்க்கை, நீக்கங்களை மேற்கொள்ளுமாறு கல்வித்துறை பள்ளிகளுக்கு உத்தரவிட்டது.

 அதைத் தொடர்ந்து திருத்திய பதிப்புகள் வெளிவருவதற்கு முன்பே, ஒன்று முதல் எட்டாம் வகுப்புவரை முப்பருவத் திட்ட அடிப்படையில் ஒவ்வொரு வகுப்புக்கும் மும்மூன்று இயல்களை மட்டும் நூலாக்கிக் கல்வித்துறை மாணவர்களுக்கு வழங்கியுள்ளது.

 பாடநூல்கள் தயாரிக்கத் தொடங்கிய நிலையிலேயே, ஒரு வகுப்பின் பாடநூலாசிரியர் குழுவுக்கும் பிற குழுவுக்குமிடையே பாடவைப்பு நிலை, பாட வளர்ச்சி தொடர்பான பொதுச்சிந்தனை இல்லாமற் போய்விட்டது. இதன் காரணமாக வகுப்புகளுக்கிடையே பாடப்பகுதிகள் திரும்பத் திரும்ப இடம்பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. பாடப்பொருளில் எவ்வித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.

 படைப்பாளர்கள் மீத்திறன் உடையவர்கள், அறிஞர்கள், சமூகநலம் நாடுவோர் என்பதில் ஐயமில்லை. ஆனால், பாட நூல் குழுவினர் ஒருவருடைய படைப்பையே மீண்டும் மீண்டும் இடம்பெறச் செய்து, புதியவர்களையும் புதிய செய்திகளையும் மாணவர்கள் அறிய வாய்ப்பில்லாமல் செய்துவிட்டதை அனைவராலும் உணரமுடிகிறது. தமிழ்மொழி வற்றாத களஞ்சியமாக இருக்க, பாடநூல்களின் கருத்தமைவு செயற்கைப் பற்றாக்குறையை - பொய்யான இலக்கியத் தட்டுப்பாட்டினை - வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது.

 பத்து வகுப்புகளிலும் செய்யுட்பகுதியில் பாரதியார், பாரதிதாசன், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, நாமக்கல் கவிஞர் ராமலிங்கனார் ஆகியோரின் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. ஐந்தாம் வகுப்புப் பாடநூலில் பாரதியாரின் இரண்டு பாடல்கள் இரண்டு இடங்களில் இடம் பெற்றுள்ளன. அதே பாடநூலில் கவிமணியின் இரண்டு பாடல்கள் இரண்டு இடங்களில் இடம்பெற்றுள்ளன. ஒரே பாடப்புத்தகத்தில் இரு கவிஞர்களின் நான்கு பாடல்கள் இடம்பெறச் செய்ய வேண்டியதன் தேவையென்னவென்று தெரியவில்லை.

 திருக்குறளில் இன்பத்துப்பால் தவிர, நூற்றெட்டு அதிகாரங்கள் எஞ்சியிருக்க, ஒழுக்கமுடைமை, வாய்மை, சான்றாண்மை, காலமறிதல், கேள்வி ஆகிய ஐந்து அதிகாரக் குறட்பாக்கள்மட்டும் நான்கு, ஐந்து, ஏழு, ஒன்பது, பத்தாம் வகுப்புகளில் சுற்றிச் சுற்றி வலம் வந்துகொண்டேயுள்ளன. பிற அதிகாரங்களை அறிமுகம்செய்ய குழுவினர் ஏன் தயங்குகின்றனர் என்பது புரியாத புதிராக உள்ளது.

 சமயக் குரவர்கள் நால்வர், ஆழ்வார்கள் பன்னிருவர், சிவப்பிரகாசர், உமறுப்புலவர், குணங்குடி மஸ்தான், காசிம் புலவர், செய்குத்தம்பி பாவலர், எச்.ஏ.கிருட்டினப் பிள்ளை எனப் பாவலர்களும் அற, சமய நூல்களும் பலவாக இருக்க, குமரகுருபரர் ஒருவரின் பாடல் மட்டும் ஐந்து, ஏழு, எட்டு என மூன்று வகுப்புகளில் அடுத்தடுத்து இடம் பெற்றுள்ளது. வள்ளலாரைப் பற்றிய பாடப்பகுதியும் அவரது பாடல்களும் ஆறு, எட்டு, பத்து ஆகிய மூன்று வகுப்புகளிலும் இடம் பெற்றள்ளது. இந்நிலை ஏன் ஏற்பட்டது என்பதை யாராலும் உணர முடியவில்லை.

 நாட்டு வளம், மழை வளம், வேளாண்மை, வீரம், இயற்கை ஆகியவை பற்றிய நாட்டுப்புறப் பாடல்கள் கணக்கின்றி இருக்க, தாலாட்டுப் பாடல் ஒன்றே நான்கு, ஏழு ஆகிய இரண்டு வகுப்புகளில் இடம் பெற்றுள்ளது.

 கதைபொதி பாடல்கள் என்னும் தொடர்நிலைச் செய்யுட்பகுதி வகுப்பின் நிலைக்கேற்ப பாடநூல்களில் இடம்பெறுவது வழக்கம். செய்யுட்களைப் படித்து, அவற்றின் தொடர்பொருளை அறிந்து, இலக்கியத்தைச் சுவைக்க வழிகோலுவது தொடர்நிலைச் செய்யுட்பகுதி. அத்தகைய இனிய பகுதியை ஐந்தாம் வகுப்பில் அறிமுகம் செய்துவிட்டுத் தொடர்ந்தாற்போல ஆறு, ஏழு வகுப்புகளில் இல்லாமற் செய்திருப்பது எத்தகைய அணுகுமுறை என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

 செய்யுட்பகுதி இவ்வாறிருக்க, உரைநடைப் பகுதியிலும் இம்மாதிரியான குறைபாடுகள் காணப்படுகின்றன. ஆறாம் வகுப்பில் உள்ள "நாடும் நகரமும்' என்னும் பாடமும் ஏழாம் வகுப்பில் உள்ள "ஊரும் பேரும்' என்னும் பாடமும் ஒரே மாதிரியான பாடக் கருத்துடையவை. இவ்விரண்டும் ஊர்ப்பெயர்கள் எவ்வாறு ஏற்பட்டன என்பதை விளக்குகின்றன. இவை அடுத்தடுத்து இரு வகுப்புகளில் இடம்பெற்றுள்ளதை என்னவென்று கூறுவது? அதேபோன்று கோவூர்கிழார் பற்றிய பாடம் ஐந்து, ஏழு என இரண்டு வகுப்புகளில் பாடமாக அமைந்துள்ளது.

 செம்மொழியின் தகுதிப்பாடுகள் பற்றிய விளக்கம் ஏழாம் வகுப்பிலும் பத்தாம் வகுப்பிலும் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. தெனாலிராமன் கதை ஆறாம் வகுப்பில் மட்டுமே இரண்டு இடங்களில் அமைந்துள்ளது. இராம்கி என்பவரது சிறுகதை ஏழாம் வகுப்பில் இரண்டு இடங்களில் பாடமாக உள்ளது. தமிழில் வேறு எதுவுமே இல்லை என்பதுபோல பாட வைப்பு நிலை அமைந்துள்ளது.

 மதுரையைச் சிறப்பிக்கும் உரைநடைப்பகுதி ஐந்து, ஏழு என இரண்டு வகுப்புகளிலும் இடம் பெற்றுள்ளது. அதேபோன்று அகராதிக் கலை, கலைக்களஞ்சியம் என்னும் ஒருதன்மைத்தாய் அமைந்த பாடப்பகுதி நான்கு, ஐந்து, எட்டு என மூன்று வகுப்புகளிலும் உள்ளன. நாடகக்லை, நாடகக் கலைஞர்கள் பற்றிய பாடப்பகுதி ஏழு, எட்டு வகுப்புகளில் இடம்பெற்றள்ளதைக் காணலாம். மேலும் பீர்பால் கதைகளும் இலட்சுமி எழுதிய கதைகளும் இரண்டிரண்டு வகுப்புகளில் இடம்பெற்றுள்ளன.

 பாடநூல்களை மேலும் ஆழமாகப் பார்த்தால், குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போல, ஒரு சில செய்திகளையே பாடநூல்குழுவினர் திரும்பத்திரும்ப பாடமாக அமைத்துள்ளது தெளிவாகத் தெரியும். நன்னூல் ஆசிரியர் பவணந்தி முனிவர், ""கூறியது கூறல்'' என்பது நூலில் இடம்பெறக் கூடாத குற்றமெனக் கூறுகிறார். அந்த இலக்கண விதிமுறைகளைச் சிறிதும் கருத்தில் கொள்ளாது மனம்போன போக்கில் பாடநூல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 தமிழறிஞர்களின் நூல்களிலிருந்து அவர்களது கட்டுரைகளைப் பாடமாக எடுத்தாள்வது பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகங்களில் இன்றும் நடைமுறையில் உள்ளது. சமச்சீர்க்கல்வி பாடநூல்களில் தமிழறிஞர்களின் கட்டுரைகள் எதுவும் பாடமாக இல்லை. அத்தகைய கட்டுரைகளால் மாணவர்கள் மறைமலையடிகள், திரு.வி.க. மு.வ. போன்றவர்களின் தமிழ்நடையையும் கருத்துகளையும் அறிந்து கொள்ள முடியும். மொழிப் பயிற்சியில் கொடுத்திருப்பது யானைப்பசிக்குப் போடப்பட்ட சோளப்பொரிபோல உள்ளது.

 நான்காம் வகுப்பில் இடம்பெற்றுள்ள "சங்கப்பாடல் வர்ணனை' வகுப்பின் தரத்திற்கு ஏற்புடையதன்று. அதேசமயம் ஒன்பது, பத்தாம் வகுப்புகளில் இடம்பெற்றுள்ள, ஆசிரியர் குழுவினர் எழுதிய கட்டுரைகள் கருத்துச்செறிவின்றி வறட்சியாகத் தோன்றுகின்றன.

 அதியமானைப் பற்றி ஒளவையார் பாடிய புறப்பாடலில் காணப்படும் உவமை, பாடநூல்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதைக் காட்டுவதாக உள்ளது.

 நாளொன்றுக்கு எட்டுத்தேர்களைச் செய்யும் ஒரு தச்சன், ஒரு திங்கள் அரிதின் முயன்று, ஒரு தேருக்குரிய ஒரு சக்கரத்தை மட்டும் செய்வானாகில், அச்சக்கரம் எத்தகைய வனப்பும் உறுதியும் உடையதாக இருக்குமோ, அதுபோல பாடநூல்கள் சிறப்புடையதாக அமைய வேண்டும்.

 பலகோடி மாணவர்கள் பயன்படுத்தும் பாட நூலின் உள்ளடக்கம் பிழையற்றதாய், கருத்துவளமுடையதாய், வளர்ச்சிநிலையில் அமைந்ததாய், தமிழின் அனைத்துவகை இலக்கியங்களையும் அறிந்து கொள்ள இடந்தருவதாய் அமைவது அவசியம். என்ன வளம் இல்லை தமிழில், ஏன் இந்தச் செயற்கைத் தட்டுப்பாடு? பாடநூல்களில் பள்ளங்கள் உண்டாக யார் காரணம்? இது அனைவரும் சிந்திக்க வேண்டிய ஒன்று.


நன்றி
கட்டுரையாளர்: தமிழ்ப்பெரியசாமி, தினமணி

திருக்குறள் பதித்த பட்டுச் சேலை

திருக்குறள் பதித்த பட்டுச் சேலை

பெங்களூரில் ஆர்எம்கேவி நிறுவனத்தினர் திருக்குறள், ரவிவர்மன் ஓவியங்கள் பதித்த 9 ரக சேலைகளை வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தினர்.

இதைத்தொடர்ந்து அந்த நிறுவனத்தின் தலைவர் சிவக்குமார் செய்தியாளர்களிடம் கூறியது:

அனைவரைப் போல சேலைகளை தயாரிப்பது எங்கள் தொழில் என்றாலும், அதில் ஏதாவது ஒரு செய்தியை மக்களிடம் சேர்க்க வேண்டும் என்ற ஆர்வமிருந்தது. அதன்படி சேலைக் கரையில் 18 திருக்குறளை பதித்து, முந்தானையில் வள்ளுவர் கோட்டத்தைப் பதித்து சேலை நெய்துள்ளோம். இதை 6 மாதம் 30 வடிவமைப்பாளர்கள், நெசவாளர்கள் கடுமையாக உழைத்து உருவாக்கினார்கள்.

அதேபோல், ராஜா ரவிவர்மன் வரைந்த நளன் - தமயந்தி கதை கூறும் ஓவியங்களுடன் மற்றொரு சேலை உருவாக்கியுள்ளோம். இதை 4 நெசவாளர்கள், 3 மாதங்கள் உழைத்து உருவாக்கினார்கள்.

மஞ்சள், ரோஜா, மாதுளை உள்ளிட்டவைகளிலிருந்து எடுத்த இயற்கை வண்ணங்களை கொண்டு உருவாக்கிய 50 ஆயிரம் நிறங்கள் கொண்ட சேலையையும் அறிமுகப்படுத்தியுள்ளோம்.

மற்றவர்களை போல் வர்த்தகத்தை மட்டுமே குறியாக எங்கள் நிறுவனம் கொள்வதில்லை.

இனி வரும் சந்ததியினருக்கு நமது முன்னோர்கள் விட்டுச் சென்ற அரும் படைப்புகளை அறிமுகம் செய்ய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் என்றார் அவர்.




நன்றி: Dinamani.com

பதக்கத்தை அவனே எடுத்துக் கொள்ளட்டும்

பதக்கத்தை அவனே எடுத்துக் கொள்ளட்டும்

இந்திய ஹாக்கி இப்படியொரு பரிதாப நிலைக்கு வந்து சேரும் என்று எதிரிகள்கூட நினைத்திருக்க மாட்டார்கள். ஒரு காலத்தில் நாம் கொடி கட்டி பறந்த விளையாட்டு. 1928ல் தொடங்கி 8 ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கத்தை கைப்பற்றி கொண்டுவந்தனர் இந்திய ஹாக்கி வீரர்கள். அந்த பொற்காலம் முடிந்து ரொம்ப காலம் ஆகிறது என்றாலும், லண்டன் ஒலிம்பிக்சில் கட்டக் கடைசியான 12 வது இடத்துக்கு வரும் என்று எவருமே எதிர்பார்க்கவில்லை. ஹாக்கியை நேசிக்கும் ரசிகர்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றம். குறிப்பாக தமிழகத்தில் நிறைய பேரின் இதயம் நொறுங்கியிருக்கும். தமிழ்நாட்டுக்கும் ஹாக்கிக்கும் நெருங்கிய உறவு உண்டு. தமிழக வீரர்கள் பலர் சர்வதேச அரங்கில் நட்சத்திரங்களாக வலம் வந்தனர். ஒரு முறைகூட ஜெயிக்காமல் படுதோல்வியை தழுவுவது கேவலம்தான். ஆனால் தோல்வியை யாரும் விரும்பி அடைவதில்லை. எனவே ஹாக்கி வீரர்கள் , ஆட்டக்காரர்கள்தான் சரி , மீது யாரும் பாய்ந்து குதற தேவையில்லை. அப்படி பார்த்தால் இங்கிருந்து சென்ற மொத்த  குழுவும்தான் சொதப்பியிருக்கிறது. 1 வெள்ளி, 3 வெண்கலத்துடன் 54வது இடத்தில் கிடக்கிறது. பாவப்பட்ட ஆப்ரிக்க நாடுகள், மயிலாப்பூரைவிட மக்கள்தொகை குறைந்த நாடுகள் எல்லாம் தங்கம் அள்ளும்போது இந்தியர்கள் மட்டும் நம்மிடம் இல்லாத  சவரனா என்று கைவீசி திரும்பி வருவதை எத்தனை பேர் அவமானமாக நினைக்கிறோம்? வெண்கலம் வென்றதையே பெரிய சாதனையாக கொண்டாடி விழா எடுக்கிறோம். சாய்னாவுக்கு எப்படி பதக்கம் கிடைத்தது? அவருடன் மோதிய சீன பெண் முழங்கால் காயத்தின் வலி தாங்காமல் ஒதுங்கியதால் கிடைத்தது. அப்போது ஜெயித்துக் கொண்டிருந்தது அந்த பெண்தான். சாய்னாவின் தந்தை சரியாகத்தான் சொன்னார்: கடவுளாக பார்த்து என் மகளுக்கு பதக்கம் கொடுத்திருக்கிறார். ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மணிப்பூர் பாக்சிங் மேரியால் எதிராளியின் தாடை மீது நச்சென்று ஒரு குத்துகூட பதிக்க இயலவில்லை. டென்னிஸ், நீச்சல், சைக்கிள்,  மல்யுத்தம், துப்பாக்கி சுடுதல் என்று இப்படி ஒவ்வொரு விளையாட்டாக என்ன நடந்தது என ஆராய்ந்தால் பெருமூச்சே மிஞ்சும். வெற்றிக்கு யாரும் காரணம் கேட்கப் போவதில்லை. தோல்விக்கு தேடித் தேடி காரணம் சொல்வார்கள். எல்லாவற்றிலும் கொஞ்சம் உண்மை இருக்கும். ஆனால் அடிப்படையான சில உண்மைகளை அநேகர் விவாதிப்பது இல்லை.விளையாட்டு மீது இந்தியர்களுக்கு இயல்பாகவே மோகம் கிடையாது. ஆட்டங்களை ரசிப்போமே தவிர களத்தில் இறங்கி சாதிக்க வேண்டும் என்ற  உத்வேகம் வருவதில்லை.

படிப்பு ஒன்றுதான் வாழ்க்கையில் முன்னேற வழி என்று நம்புகிறோம். விளையாடினால் படிப்பு பாதிக்கும் என்று குழந்தைகளின் ஆர்வத்தை முளையிலேயே முடக்குகிறோம். எல்லாம் தாண்டி மைதானத்தில் கால்வைத்தால் அலட்டிக் கொள்ளாமல் ஜாக்கிரதையாக ஆடுவோமே தவிர ஒரு கை பார்த்து விடுவோம் என்று எல்லைகளை தாண்ட முனைவதில்லை. பிளேயிங் சேஃப் என்பார்களே, அது. எதிராளி ஆக்ரோஷத்தை பார்க்கும்போது நமக்கு ரத்தம் சூடாவதில்லை. 'இவ்வளவு மல்லுக் கட்டுகிறானே.. இதென்ன வாழ்வா சாவா போராட்டமா..  பதக்கத்தை அவனே எடுத்துக் கொள்ளட்டும்' என்று பெருந்தன்மையாக அனுமதிக்கிறோம்.  நம்பர் 1 இடத்தை எப்படியும்  பிடித்துவிட வேண்டும் என்று துடிப்பவர்கள் லட்சத்தில் ஒருவர்தான். மற்றவர்கள் 'எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது' என்பதை நம்புகிறார்கள். அடுத்த ஒலிம்பிக் வராமலா போய்விடும்.




நன்றி: Dinakaran 

"வாழையடி வாழை" தமிழ்நாடு மலைவாழை விவசாயிகள் சங்கம் செய்த சாதனை

"வாழையடி வாழை" தமிழ்நாடு மலைவாழை விவசாயிகள் சங்கம் செய்த சாதனை 

எந்த பிரச்னை வந்தாலும் அதை தீர்க்கத்தான் அரசாங்கம் இருக்கிறதே என சொல்லிக் கொண்டிருந்தால் எதுவும் நடக்காது. நாமே களத்தில் இறங்கினால்தான் தீர்வு கிடைக்கும். அப்படித்தான் திண்டுக்கல்லை சேர்ந்த விவசாயிகள் சங்கம் களத்தில் இறங்கியது. அழியும் நிலைக்குப் போய்விட்ட வாழப்பழ வகைகளை மீண்டும் விளைவித்து சாதனை படைத்துள்ளது.திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவார கிராமங்கள் விருப்பாட்சி, சிறுமலை. இங்கு விளையும் சுவையான வாழைப்பழ வகைகள்  சிறுமலை மற்றும் விருப்பாட்சி. மிகவும் சுவையான இவற்றை மலை வாழைப்பழங்கள் என்பார்கள். பழனி மலை முருகன் கோயில் பஞ்சாமிர்தம் தயாரிக்க இந்த பழங்களைத்தான் பயன்படுத்துவார்கள். வேறு எங்கும் இவை விளையாது. இதனாலேயே சர்வதேச அளவில் புவிசார் குறியீடு சான்றிதழையும் பெற்றுள்ளது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த வாழை மரங்களை கடந்த 1970களில் ஒரு வகை வைரஸ் தாக்கியது. பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் குலை தள்ளாமலேயே நோய்வாய்ப்பட்டு சரிந்தன. அடுத்தடுத்த ஆண்டுகளிலும் வைரஸ் தாக்குதலால் பயிரிடப்படும் பரப்பளவு குறைந்து கொண்டே வந்தது. இந்த நிலையில்தான் தமிழ்நாடு மலைவாழை விவசாயிகள் சங்கம் உருவானது. 350 உறுப்பினர்களைக் கொண்ட இந்த சங்கம் மலைவாழை பழங்களை மீண்டும் பெரிய அளவில் பயிரிட முயற்சிகளை மேற்கொண்டது. விவசாயிகளின் ஆர்வத்தை பார்த்த தேசிய வாழை ஆராய்ச்சி மையமும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகமும் சுவையான மலைவாழை பழங்களை மீண்டும் பயிரிடவும் வாழை இனத்தை அழியாமல் காக்கவும் உதவின. இடைவிடாத முயற்சிக்கு பலன் கிடைத்தது.இப்போது 3,000 ஏக்கரில் மீண்டும் சிறுமலை, விருப்பாட்சி வாழை பழங்கள் விளைவிக்கப்படுகின்றன. மேலும் 10 ஆயிரம் ஏக்கருக்கு விரிவுபடுத்த விவசாயிகள் சங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதைப் பாராட்டித்தான் மத்திய அரசு ரூ.10 லட்சம் பரிசு வழங்கி கவுரவித்துள்ளது. மக்கள்தான் அரசாங்கம். அரசாங்கம் செய்யும் என எதிர்பார்க்காமல், நமக்கு வேண்டியதை நாமே செய்து கொள்ள வேண்டும். சென்னையின் சில பகுதிகளில் திருடர் பயத்தில் இருந்து விடுபட சாலைகளில் கேட், சந்திப்புகளில் சிசிடிவி, இரவு ரோந்து போன்றவற்றை மக்களே பார்த்துக் கொள்கிறார்கள். இதுதான் உண்மையான மக்களாட்சி.





நன்றி: Dinakaran 

Sunday, 12 August 2012

பொய்மையும் வாய்மை இடத்து

பொய்மையும் வாய்மை இடத்து 

பொய் சொல்லாமல் வாழ முடியுமா? தெரியவில்லை. பொய்மையும் வாய்மை இடத்து என்று வள்ளுவர் சொல்கிறார். அதை பலர் பின்பற்றுகின்றனர். யாருக்கும் பாதகம் இல்லாத பொய் சொல்லலாமாம். மரண வாசலில் நிற்கும் நோயாளிக்கு டாக்டர் தைரியம் சொல்வது; தூக்கு தண்டனையை எதிர்நோக்கும் கொலையாளிக்கு வக்கீல் நம்பிக்கை ஊட்டுவது மாதிரி. உண்மையில் இது மோசடி. இந்த புடவை எனக்கு அழகாக இருக்கிறதா என்று கேட்கும் மனைவிக்கு பதில் சொல்வது மாதிரி கிடையாது. மனதை புண்படுத்த வேண்டாமே என்ற நல்ல நோக்கம் இல்லை. பிழைப்புக்காக. வீடு அலுவலகம் கல்லூரி கட்சி பார் ஃபேஸ்புக்கில் நாம் பொய் சொல்லாத நாள் எட்டாவது கிழமை. சாதா பொய்யா பச்சை பொய்யா என்பது வேறு விஷயம். சுவாசிப்பது சாப்பிடுவது போல பொய் பேசுவது இயல்பாகி போனதுதான் சோகம். 

இந்த நிலை மாறக்கூடும்.  உண்மையே பேசினால் உடலும் மனமும் ஆரோக்யமாக இருக்கும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். அமெரிக்காவில் உள்ள நாட்டர்டாம் யுனிவர்சிடி விஞ்ஞானிகள் இதற்கான ஆய்வை 10 வாரம் நடத்தினர். 110 பேரை இரண்டு குழுவாக பிரித்தனர். எந்த கேள்விக்கும் உண்மையான பதில் சொல்லுமாறு ஒரு குழுவை கேட்டுக் கொண்டனர். அடுத்த குழு பொய் சொல்ல தடை இல்லை. உண்மையான பதில் சொன்னவர்களிடம் மூன்றாவது வாரத்தில் இருந்தே பெரிய மாற்றம். 'மனதில் இறுக்கம் இல்லை, மகிழ்ச்சி ததும்புகிறது, உறவினர்கள் நண்பர்களுடன் நெருக்கம் அதிகரித்துள்ளது, தலைவலி கண் எரிச்சல் ஜலதோஷம் தொண்டை கரகரப்பு போன்ற தொல்லைகள் நின்றுவிட்டது, நன்றாக தூங்குகிறேன்' என்று கூறியிருக்கிறார்கள். மிகைப்படுத்துவது, நொண்டி சாக்கு சொல்வது எல்லாம்கூட நின்றுவிட்டதால் நான் ரொம்பவும் நேர்மையான ஆள் என்ற பெருமிதம் இவர்களுக்கு ஏற்பட்டு அதனால் சுற்றியிருப்போர் மத்தியில் கவுரவமும் அதிகரித்துள்ளது.

பொய் சொல்ல அனுமதிக்கப்பட்ட குழுவில் எவருக்கும் இந்த முன்னேற்றம் கிட்டவில்லை. உடல் நலத்துக்கும் நேர்மைக்கும் உள்ள தொடர்பு குறித்த முதலாவது ஆய்வு இது. மனநல மருத்துவர்களை பிரமிக்க வைத்திருக்கிறது. லயர் லயர் ஹீரோ ஜிம் கேரி மாதிரி ஒருநாள் மட்டுமாவது முயற்சி செய்து பார்க்கலாமா?




நன்றி: Dinakaran

தீர்ப்புகள்: கடவுள்தான் கண் திறக்க வேண்டும்

தீர்ப்புகள்: கடவுள்தான் கண் திறக்க வேண்டும்

குடிபோதையில் 6 பேர் மீது கார் ஏற்றி கொலை செய்தவருக்கு 2 வருட சிறை போதும் என சுப்ரீம் கோர்ட் கூறியிருக்கிறது. சம்பவம் நடந்தது 1999ல். பலியானவர்களில் 3 பேர் போலீஸ்காரர்கள். ஓட்டியது தொழிலதிபரின் மகன் சஞ்சீவ் நந்தா. முன்னாள் கடற்படை தளபதியின் பேரன். கீழ் கோர்ட் 5 ஆண்டு தண்டனை கொடுத்தது. கவனக்குறைவால் மரணம் ஏற்படுத்திய குற்றம்தானே என்று ஹைகோர்ட் இரண்டாக குறைத்தது. தெரிந்தே ஏற்படுத்திய மரணம் கொலைக்கு சமம் என்று டெல்லி போலீஸ் அப்பீல் செய்தது. அதை ஏற்றுக் கொண்டு சுப்ரீம் கோர்ட் இவ்வாறு இரண்டாண்டு வழங்கியுள்ளது ஆச்சரியம். காரில் அடிபட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்தவர்களை காப்பாற்ற முயற்சி எடுக்காமல் அங்கிருந்து ஓட்டம் பிடித்தது மனிதாபிமானம் இல்லாத செயல் என நீதிபதி கண்டித்துள்ளார். அதற்காக 50 லட்சம் அபராதம் விதித்து, 2 ஆண்டுகள் நந்தா பொது சேவை செய்யவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். மோதி விட்டு நிற்காமல் செல்லும் வாகனங்களால் பாதிக்கப்படும் நபர்களுக்கு உதவ மத்திய அரசு இந்த நிதியை பயன்படுத்த கோர்ட் ஆலோசனை கூறியிருக்கிறது.

 கார், லாரி ஏற்றி கொலை செய்துவிட்டு விபத்து என நாடகமாடும் செய்திகளை நிறைய பார்த்திருக்கிறோம். பணம் இருப்பவர்கள் இதுபோன்ற வழக்குகளில் சுலபமாக தண்டனைக்கு தப்பிவிடுகிறார்கள்  என்ற கருத்தும் மக்களிடம் இருக்கிறது. அதனால்தான் விபத்து ஏற்படுத்திய டிரைவர் சிக்கினால் தர்ம அடி கொடுக்கிறார்கள். வாகனத்தை கொளுத்துகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில் ஆறு உயிர்கள் பலியாக காரணமான குற்றவாளி சுதந்திரமாக நடமாடுவது அவர்களுக்கு நெருடலாகவே இருக்கும். குடியும் கார்களும் தாறுமாறாக பெருகிவிட்டதால் பாதசாரிகள் அனுபவிக்கும் கஷ்டங்களை நீதிபதி சுட்டிக் காட்டியுள்ளார். நடைபாதைகள் நடப்பவர்களுக்காக அல்ல என்பதை எல்லா நகரங்களிலும் பார்க்க முடிகிறது. அது பல நூறு கோடிகள் கைமாறும் மிகப்பெரிய ஆக்கிரமிப்பு என்பது பலருக்கு தெரியாது. அதனால்தான் பாதசாரிகள் நடுரோட்டுக்கு வர நேர்கிறது. அவர்களின் உயிர் கேள்விக்குறி ஆகிறது. பாதுகாப்புக்கு உத்தரவிடும் அதிகாரம் கொண்ட நீதிமன்றம் வெறும் கவலையோடு ஒதுங்கிவிட்டால் கடவுள்தான் கண் திறக்க வேண்டும்.



நன்றி: Dinakaran 

மூன்று வேளை சாப்பிட வேண்டாம் - ஒரு விஞ்ஞானி கூறுகிறார்

மூன்று வேளை சாப்பிட வேண்டாம் - ஒரு விஞ்ஞானி கூறுகிறார்

உயிர் வாழ வேண்டுமானால் தினமும் மூன்று வேளை சாப்பிட வேண்டும் என்று நம்பிக் கொண்டிருக்கிறோம். 'அப்படி எந்த அவசியமும் கிடையாது; மூன்று வேளை சாப்பிட்டு பழகிவிட்டோம், அவ்வளவுதான்' என்று ஒரு விஞ்ஞானி கூறுகிறார். பிறகு எத்தனை வேளை சாப்பிட வேண்டுமாம்? எத்தனை முறை என்ற  கணக்கெல்லாம் இல்லை; எவ்வளவு குறைவாக சாப்பிடுகிறோமோ அவ்வளவுக்கு நல்லது என்கிறார். பிபிசி ஒளிபரப்பும் ஹொரைசன் என்ற  அறிவியல் நிகழ்ச்சியை தொகுத்தளிப்பவர் இந்த விஞ்ஞானி. பெயர் மைக்கல் மோஸ்லி. அவர் சொல்கிற காரணங்கள் மறுக்கக்கூடியதாக இல்லை. உடல் உறுப்புகள் செயல்பட சக்தி தேவை. அதை வழங்குவது நாம் சாப்பிடும் உணவு. அதில் மாச்சத்து, புரதம், கொழுப்பு ஆகியவை இருக்கின்றன. உணவு செரிக்கும்போது இந்த சத்துக்கள் உடலின் இயக்கத்துக்கு எரிசக்தியாக மாறுகிறது. அதிகமான சத்து கிடைக்கும்போது உடலில் பல பிரச்னைகள் உண்டாகிறது என்கிறார் டாக்டர் மோஸ்லி. கலோரி என்ற அளவால் இந்த சத்துகளை மதிப்பிடுகிறோம். ஒரு கிராம் புரதம் அல்லது  மாச்சத்து 4 கலோரி. கொழுப்பு 9 கலோரி. நிறைய சாப்பிடும்போது கலோரிகள் அதிகமாகும். உடலின் தேவைக்கு போக மீதியுள்ள கலோரிகள் கொழுப்பாக மாறி உடலில் தங்கி தீங்கு விளைவிக்கும். கலோரிகள் குறைந்த உணவு வகைகளை சாப்பிடும் அமெரிக்கர்களும் ஜப்பானியர்களும் மற்றவர்களைவிட அதிக காலம் உயிர் வாழ்வதன் ரகசியம் இதுதான் என்கிறார் அவர். உடல் உழைப்பு, உடல் பயிற்சி இல்லாதவர்களுக்கு தேவைக்கு மீறிய உணவால் வரக்கூடிய ஆபத்து அதிகம். பசி எடுப்பதாக நினைத்துக் கொண்டு மூன்று வேளையும் சாப்பிடுபவர்கள் அந்த பழக்கத்தில் இருந்து வெளியே வந்தால் நிச்சயமாக பலன் கிடைக்கும் என்று மோஸ்லி தெரிவிக்கிறார். முடியாதவர்கள் அவ்வப்போது விரதம் இருந்தால் நல்லது நடக்கும் என்பது அவருடைய யோசனை. உடல் பருமனை குறைக்க ஒரு வழியாக மூன்று வேளைக்கு பதில் ஆறு வேளையில் அதே உனவை சாப்பிடலாம் என டாக்டர்கள் பரிந்துரை செய்யும் வேளையில், கலோரிகளில் கவனம் செலுத்தினால் மூன்றுவேளைகூட தேவையில்லை என்ற கருத்து புதிய விவாதத்துக்கு வித்திட்டுள்ளது.




நன்றி: Dinakaran 

மின்சார உற்பத்தி வெளிச்சம் பிறக்குமா?

மின்சார உற்பத்தி வெளிச்சம் பிறக்குமா?

உலகமே இதுவரை கண்டிராத மிகப்பெரிய இருட்டடிப்பாம். 22 மாநிலங்களில் 67 கோடி மக்கள் இருட்டில் தள்ளப்பட்டதை உலக சாதனையாக சித்தரிக்கிறார்கள். ரயில்கள் நின்றன. மெட்ரோ ரயில் நிலையங்கள் பூட்டப்பட்டன. சிக்னல்கள் இயங்காமல் போக்குவரத்து ஸ்தம்பித்தது. ஆஸ்பத்திரிகளில் ஆபரேஷன்கள் ரத்து. கடைகள், கம்பெனிகள், தொழிற்சாலைகள் மூடப்பட்டன. குடிநீர் வினியோகம் நின்றது. அவமானமாக இருக்கிறது. அட்டகாசமான பொருளாதார வளர்ச்சி; வல்லரசாக உருவெடுக்கிறது இந்தியா என்று அசட்டுத்தனமாக ஒரு பொய்யை திரும்பத் திரும்ப சொல்லி நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம். மின்சாரம் இல்லாமல் எதுவுமே நடக்காது. வீடானாலும் நாடானாலும் அதுதான் உண்மை. ஆனாலும் ஏதேதோ சொல்லி மின்சார உற்பத்தி அதிகரிப்பதை தடுக்கிறது ஒரு கூட்டம். நாட்டின் இன்றைய உற்பத்தி திறன் 205 ஜிகாவாட். தேவை இதைவிட மிக அதிகம். இன்னும் ஐந்தாண்டுக்குள் மேலும் 76 ஜிகாவாட் அதிகரிக்க 40,000 கோடி டாலர் மதிப்பில் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. கடந்த பத்தாண்டுகளில் 85 ஜிகாவாட்தான் சேர்க்க முடிந்தது. அதை நினைத்தால் புதிய இலக்கை அடைய முடியுமா என்று தெரியவில்லை. தண்ணீரில் இருந்து தயாரிக்கும் மின்சாரம் 19 சதவீதமாக இருந்தது. படிப்படியாக குறைந்து வருகிறது. பருவமழை தவறினால் இதுதான் நடக்கும். மழைக்கு பதில் நிலத்தடி நீரை எடுக்க விவசாயிகளுக்கு அதிக மின்சாரம் தேவை. காற்று, வெயில் எல்லாம் முழுமையாக நம்ப முடியாது. நிலக்கரிதான் நிச்சயம். ஆனால் கோல் இந்தியா அரசு நிறுவனமாக இருந்தாலும் தனியார் போல் லாப நோக்கில் செயல்படுகிறது. இங்குள்ள சுரங்கங்களில் உற்பத்தி அதிகரிக்கவில்லை. இறக்குமதி செய்யவும் தயாராக இல்லை.

பொது மின் தொகுப்பில் இருந்து சில மாநிலங்கள் நிர்ணயித்த அளவுக்கு மேல் மின்சாரத்தை இழுக்கும்போது மொத்த வினியோகமும் பணால். அதுதான் இப்போது பார்ப்பது. உற்பத்தி ஆகிற மின்சாரத்தை எப்படி பயன்படுத்துகிறோம்? வினியோகத்தில் இழப்பு 20 சதவீதம். இலவச வினியோகம் 20 சதவீதம். திருட்டு 20 சதவீதம். ஏழை முதல் கோடீஸ்வரன் வரை வெட்கமில்லாமல் மின்சாரம் திருடும் நாடு இது. இவ்வளவு மோசமான சூழ்நிலையில் எந்த முன்னேற்றமும் இப்போதைக்கு சாத்தியமாக தோன்றவில்லை.




நன்றி: Dinakaran 

ரயில் விபத்து யார் பொறுப்பு?

ரயில் விபத்து யார் பொறுப்பு?

நெல்லூர் விபத்தோடு நின்றுவிடாது; தொடர்ந்து இப்படித்தான் ரயில் விபத்து நடக்கும் என்று கூறியிருக்கிறார் தினேஷ் திரிவேதி. ஆரூடமா சாபமா தெரியவில்லை. மம்தாவின் திரிணாமுல் கட்சி எம்.பி. ரயில்வே அமைச்சராக இருந்து பட்ஜெட் தாக்கல் செய்தவர். டிக்கட் கட்டணத்தை இரண்டு ரூபாய் மூன்று ரூபாய் உயர்த்தியவர். கட்டண உயர்வுக்கு கட்சிகளோ தொழிற்சங்கங்களோ எதிர்ப்பு தெரிவிக்காத ஒரே சந்தர்ப்பம் அதுதான். அதனால் என்ன, அவருடைய கட்சி தலைவர் மம்தாவுக்கு பொறுக்கவில்லை. என்னை கலந்து பேசாமல், என்னை கேட்காமல் கட்டணத்தை உயர்த்த உங்களுக்கு எவ்வளவு தைரியம் என்று திரிவேதியை ஒரு பிடி பிடித்தார். அவரை நீக்கிவிட்டு முகுல் ராயை ரயில்வே அமைச்சராக்க பிரதமரை வெற்றிகரமாக நிர்ப்பந்தித்தார். உயர்வை ரத்து செய்து மம்தாவின் ஆசியை பெற்றார் புது அமைச்சர். அதிலிருந்து மூன்று மாதங்களுக்குள் நடக்கும் மூன்றாவது பெரிய விபத்து இது. மே 22ல் சரக்கு ரயில் மீது ஹம்பி எக்ஸ்பிரஸ் மோதி 25 பலி. அதே மாதம் 31ல் டூன் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு பலி 5, படுகாயம் 50. மோதும் அளவுக்கு 2 ரயில்கள் நெருங்கினால் இரண்டையும் நிறுத்திவிடக்கூடிய கருவி ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தீ பிடித்தால் அல்லது புகை வந்தால் அபாய மணி அடிக்கும் கருவியும் இருக்கிறது. இவற்றை எல்லா ரயில்களிலும் பொருத்துமாறு அணு விஞ்ஞானி அனில் ககோட்கர் தலைமையில் அமைக்கப்பட்ட ரயில் பாதுகாப்பு ஆலோசனை குழு பரிந்துரைத்தது. அந்த பரிந்துரையை நிறைவேற்ற கட்டண உயர்வு அவசியமாகிறது என பட்ஜெட்டில் திரிவேதி விளக்கி இருந்தார். 'பயணிகளின் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க தேவையான ஏற்பாடுகளை செய்யவும் கருவிகளை வாங்கி பொருத்தவும் நிறைய பணம் தேவைப்படுகிறது. கட்டணத்தை ஓரளவு உயர்த்துவதன் மூலம் அதை செய்துவிடலாம்' என்றார் அவர். அதைத்தான் மம்தா தடுத்தார். உலகத்தில் பெரிய ரயில்வே என்று சொன்னால் போதாது. அதை நம்பி பயணிக்கலாம் என்பதுதான் பெருமை. நவீனப்படுத்தினால் மட்டுமே அது சாத்தியம் என்பது திரிவேதிக்கும் நமக்கும்  தெரிகிறது. மம்தாவின் மிரட்டலுக்கு மத்திய அரசு அடிபணியும் வரையில் மக்கள் உயிர் பயம் இல்லாமல் ரயிலில் பயணம் செய்ய முடியாது.



நன்றி: Dinakaran

ஒரிசாவில் தமிழ்

ஒரிசாவில் தமிழ் 



என் இயற்பெயர் சிவ.பாலசுப்பிரமணி. திருச்சி உறையூரில் பிறந்து, சென்னை, விழுப்புரம், புதுச்சேரியில் படித்து வளர்ந்தேன். 1989 ஆம் ஆண்டு, ஒடிஷா மாநிலத்தில், கேலக்ஸி சுரங்க நிறுவனத்தில், வெளிநாட்டுக் கருவிகளைப் பழுது பார்க்கும் பணியில் சேர்ந்தேன். 1991 ஆம் ஆண்டு, தலைநகர் புவனேஸ்வரில் தமிழ்ச் சங்கம் தொடங்கிய காலத்தில் இருந்து, 2003 வரை, பல்வேறு பொறுப்புகளிலும், செயலர் வரையிலும் பணி ஆற்றினேன்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் ‘ஒரிஸ்ஸா’ என அழைக்கப்பட்ட இன்றைய ‘ஒடிஷா’ மாநிலத்தின் வரலாற்றுப் பெயர்கள் ‘கலிங்கம்’, ஒட்டரம், தென் கோசலை தேசம். இதற்கும், தமிழகத்துக்கும் கிட்டத்தட்ட சமண மதம் தொடக்க காலத்தில் இருந்து தொடர்புகள் உள்ளன. 12 ஆம் நூற்றாண்டில் முறைப்படுத்தப்பட்ட ஒரிய மொழியில், தமிழின் பங்கு அளிப்பு கூடுதலாக உள்ளது. எனவே, கலிங்கத்தில் இருக்கின்ற தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகள் குறித்த கள ஆய்வுகளை மேற்கொண்டேன். அங்கே, பல இடங்களில் தமிழ்ப் பண்பாட்டு அடையாளங்கள் காணப்படுகின்றன.


மகாவீரர், புத்தர், அசோகர், கலிங்க மன்னன் காரவேலர் காலங்களிலிருந்து ஒவ்வொரு 250 ஆண்டுகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, 3000 ஆண்டுக்கால வரலாறை, தொடர்ச்சியாகப் படித்தேன். ‘பாண்டியர்கள் காலம், பல்லவர்கள் காலம், சோழர்கள்காலம், ஒட்டர்கள் காலம்’ என தனித்தனியாகஆய்வு செய்து இருக்கிறேன். அப்போது தான், எந்த அளவுக்கு, கலிங்கர்களுடைய வாழ்க்கையில், தமிழர்களுடைய பண்பாடு ஊடுருவி இருக்கின்றது என்பது புரிந்தது. இன்றைக்கு, 62 பழங்குடி மக்கள் வசிக்கின்ற ஒரிஸ்ஸாவில், 14 பிரிவினர் தமிழர்களே. மத்திய திராவிடத்தில் வசிக்கின்ற, பாணர், மலைய கந்தா, டோங்கிரி கந்தா, குயி, குவி, குடியா, கிஸான், மால்டோ, குடியா, பரோஜோ, பெங்கோ, ஓரான், கோலா, கடாபா உள்ளிட்ட பல பழங்குடி மக்கள் பேசுகின்ற மொழியில், 80 விழுக்காடு தமிழ்ச் சொற்கள் கலந்து உள்ளன. ‘கோண்டுவானா’ என்பது, ‘கந்தா’ என்கின்ற தமிழ்ப் பெயர் தான். அதே போல, ஒரிஸ்ஸா மாநிலத்தின் கடற்கரையோரத்து மீனவ மக்களான ‘நெளலியா’ என்பவர்கள் தமிழகத்தின் ‘நுளையர்’மற்றும் ‘கேவுட்டா, ‘கைபர்த்தா’ எனப்படுபவர்கள், தமிழில் ‘கயல் வணிகர்’ என்பதன் திரிபு தான் என்றும் சொல்லக் கூடிய அளவுக்கு, ஒரிஸ்ஸாவின் எல்லாத் துறைகளிலும் தமிழ் ஊடுருவி இருக்கின்றது.


நரேந்திரவர்மன் என்ற கங்க மன்னனுக்கும், இராஜசுந்தரி என்ற வீர இராஜேந்திரன் மகளுக்கும் பிறந்த அனந்தவர்ம சோழ கங்கன் என்ற மன்னன் பரம்பரையினர், ஒரிஸ்ஸாவில் சமார் 450 ஆண்டுகள், ‘சோட கங்கா’ என்ற பெயரில் ஆட்சி புரிந்து இருக்கின்றனர். அந்த மன்னன் தான், குலோத்துங்கனை எதிர்த்துச் சண்டை போடுகிறான்.அதைத்தான் ‘கலிங்கத்துப்பரணி’ விவரிக்கின்றது. அதே போல, கபிலேந்திரவர்மன் என்ற கஜபதி ஒட்டர மன்னர்கள், தமிழகத்தை, ஏழு ஆண்டுகள் ஆட்சி புரிந்து இருக்கின்றனர். போயர், ஒட்டன் செட்டி, கலிங்க செட்டி, ராஜூக்கள் என பல சமூகத்தினர் ஒரிஸ்ஸாவில் இருந்து வந்தவர்கள், இன்றும் தமிழகத்தில் வாழ்ந்து வருகிறார்கள். ஒரிஸ்ஸாவில் தமிழ் தொடர்பான 30 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன. அவற்றுள் இரண்டு கல்வெட்டுகளை நான் கண்டு பிடித்தேன். தமிழர்கள் எப்படி ஒரிஸ்ஸா வழியாக கங்கைக்குச் சென்று, கண்ணகிக்குச் சிலை அமைக்கக் கல் கொண்டு வந்தார்கள், சோழர்கள் கங்கை வரை எந்த வழியில் சென்று வந்தார்கள் என்பதை அறிய, அதே வழியில் பல தடவைகள் நான் நடந்தே சென்றேன். இன்றும் ஒரிஸ்ஸாவில் இருக்கின்ற அரச குடும்பத்தினரின் வாரிசுகள் அதற்கு உதவினர். தெற்கே ஆந்திர மாநில எல்லையான சக்கர கோட்டத்தில் இருந்து ஒரிஸ்ஸா மாநிலத்தின் வடக்கு எல்லை தண்டபுக்தி வரையிலும், 550 கிலோமீட்டர்கள் நடந்து சென்று பார்த்தேன். அந்த வழியில், ஒவ்வொரு 35 கிலோமீட்டரிலும், புளியந்தோப்புகள் உள்ளன. அதை தென்துளிக்குண்ட்டி என்று அவர்கள் அழைக்கின்றார்கள்.


சோழர்களின் மெய்கீர்த்தியில் சொல்லப் பட்டு இருக்கின்ற மதுர மண்டலம், மாசுனி தேசம், பஞ்சபள்ளி, கோசலை நாடு, ஓடர தேசம் உள்ளிட்ட அத்தனை இடங்களையும் பார்த்தேன். ‘சோன்பூர்’ என்ற இடத்தில், தெலுங்கு சோழர்கள் ஆட்சி புரிந்து உள்ளனர். முக்தி லிங்கம் என்ற இடத்தில், கீழை கங்கர் என்று அழைக்கப்படுகின்ற சோழ கங்கர்கள் ஆட்சி புரிந்து உள்ளனர். சோன்பூரில், ‘உறையூர் நாட்டு சோழ குல கமல’ என்று ஒரு செப்பு ஏடு கூட இருக்கின்றது. ஒருகாலத்தில் இந்தியா முழுமையும் தமிழ் பரவி இருந்தது என்று நாம் பொதுவாகச்சொல்லுகிறோம். ஒரிய மாநிலத்தின் வரலாறைப்படித்தாலே, பாதி அளவுக்கு அந்தக்கருத்தில் நமக்கு நம்பிக்கை வந்துவிடும். அதே போல, தமிழகத்திலும் ஒரியர்களுக்கான வரலாறு இருக்கின்றது. இலங்கை மன்னர்களுக்குச் சிம்ம சொப்பனமாக இருந்த கலிங்க மாகன் வாழ்ந்த கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ‘கலிங்கராஜபுரம்’, திருநெல்வேலி மாவட்டத்தில் ‘கலிங்கப்பட்டி’,குளித்தலைக்கு அருகில் ஒரு ‘கலிங்கப்பட்டி’, விழுப்புரத்துக்கு அருகில் ‘கலிங்க மலை’, கொல்லி மலையில், ‘மேல் கலிங்கம்’, ‘கீழ் கலிங்கம்’ போல பல ஊர்கள் இருக்கின்றன. அதே போல ஒட்டர்கள் தொடர்பு உடைய ஒட்டன் சத்திரம், ஒட்டப்பிடாரம், ஒட்டரபட்டி, ஒட்டரச்சேரி என 144 ஊர்கள் தமிழகத்தில் உள்ளன. குலோத்துங்கன் கலிங்கப் போர் நடத்துவதற்கு முன்பு வரையிலும், ‘கலிங்கச் சம்பா’ என்று அழைக்கப்பட்டு வந்த அரிசியைத்தான் பின்னர் ‘ஒட்டரச் சம்பா’ என்று மாற்றிக்கொண்டனர். அதே போல, ஒரிஸ்ஸாவில் பச்சரிக்குப் பெயர் ‘அருவாச் சாவல்’. தமிழர்களை ‘அருவர்கள்’ என்று அவர்கள் அழைத்ததால், தமிழர்கள் விளைவித்த பச்சரிசியைத் தான் அவர்கள் ‘அருவாச்சாவல்’ என இன்று வரையிலும் சொல்லிக் கொண்டு இருக்கின்றார்கள். ஒரே அரிசிக்கு இரண்டு பெயர். ஒரிஸ்ஸா மாநிலத்தில் வசிக்கின்ற ‘சுபுதி, முதலி, பாணிகிரகி’ போன்றவர்கள் தமிழ்நாட்டிலிருந்து ஒரிஸ்ஸாவுக்குச் சென்று குடியேறிவர்கள் தாம். தமிழகத்தில் இன்றைக்கு கிணறு வெட்டுதல் மற்றும் கட்டடத்தொழிலில் ஈடு பட்டு இருக்கின்ற ஒட்டர சமுதாயத்தினர், ஒரிஸ்ஸா மாநிலத்துப் பழங்குடிகளே. அவ்வாறு, 14 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர், நிறையப் பேர் ஒரிஸ்ஸாவில் இருந்து இங்கே வந்து குடியேறி இருக்கின்றார்கள். இன்றும், தமிழகத்தில் கட்டட வேலைக்கு, ஒரிஸ்ஸா மக்களை அழைத்து வருவது குறிப்பிடத் தக்கது.


கீழை நாட்டுக் கடல் பயணங்களில், நமக்கும், ஒரியர்களுக்கும் நெருங்கிய தொடர்புகள் இருந்து உள்ளன. தென்கிழக்கு ஆசியாவுக்கு, தமிழர்கள் மட்டும் தனியாகப் போகவில்லை. கலிங்கர்களோடு சேர்ந்து தான் போனார்கள். இன்றைக்கு ஒரிஸ்ஸாவில் இருக்கின்ற ஆறு துறைமுகங்களின் பெயர்களும் தமிழ் தான். பாலூர், கலிங்கப் பட்டணம், மாணிக்கப் பட்டணம், வணிகப்பட்டணம், தேவி பட்டணம், தாமரா ஆகியவை தமிழ்ப் பெயர்களே. ‘தாமிரலிபி’ என்பது இன்றைய பெங்கால் மாநிலத்தில் உள்ளது. ‘ரூப் நாராயணம்’ என்றும் சொல்லுவார்கள். அதன் முந்தைய பெயர், ‘தம்லோக்’. அதாவது, ‘தமிழ் லோக், தமிழ் மக்கள் என்று பொருள். இப்படி, ஒரிஸ்ஸா கடற்கரையில், நிறையத் தமிழ்ப் பெயர்கள் உள்ளன. ஒரிஸ்ஸாவில் உயரமாக கட்டப்பட்டு இருப்பவை மூன்று கோவில்கள். பூரி ஜெகநாதர் கோவில், புவனேஸ்வர் லிங்கராஜா கோவில், கொனார்க் சூரியனார் கோவில், மூன்றுமே 216 அடி உயரம் கொண்டவை. திராவிட - கலிங்கக்கலை அமைப்பில் கட்டப்பட்டவையே. அதற்குக் காரணம் சோழர்களோடு அவர்கள் கொண்டு இருந்த தொடர்புகளே. அதே போல இராமானுஜருக்கும், ஒரிஸ்ஸாவுக்கும் தொடர்புகள் உள்ளன. பல்லவர்களுக்கும், ஒரிஸ்ஸாவுக்கும் தொடர்புகள் உள்ளன. 8 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் இருந்து சென்றவர்கள் தாம், ‘அனந்தசயனம்’ என்ற 32 அடி நீள படுக்கை வசத்திலான சிலையை, இரண்டு இடங்களில், பிராமனி நதிக் கரையில் செதுக்கி உள்ளார்கள். இன்றைக்கும், ஒரிஸ்ஸாவில் உள்ள பல கோவில்களில் திராவிடக் கலை அதிகமாக உள்ளது. இது போல, தமிழகம், ஒரியத் தொடர்புகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.


கடல் ஆய்வாளர் பாலு அவர்களுடைய ஆய்வுப் பணிகளுக்காக நார்வே நாட்டில் வசிக்கும் மதிமுக இணையதள தோழர் இல.கோபால்சாமி வழங்கிய ரூ.20,000 உதவித்தொகையை பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் பாலுவிடம் வழங்கினார்.

நன்றி
தகவல் :- திரு. அருணகிரி,
தாயகம்,
மதிமுக.

வேண்டுமானால் கொஞ்சம் திருடிக் கொள்ளுங்கள் - அதிகாரிகளுக்கு அறிவுரை

"வேண்டுமானால் கொஞ்சம் திருடிக் கொள்ளுங்கள்" - அதிகாரிகளுக்கு அறிவுரை 

மனதில் நினைப்பதை அப்படியே சொன்னால் வம்பு என்பதை குழந்தைகள்கூட புரிந்து வைத்திருப்பதால் பெற்றோரின் கேள்விகளுக்கு நாசூக்காக பதிலளிக்கின்றனர். ஆனால் அரசியல்வாதியாக இருந்து கொண்டு எதார்த்தமாக பேசி சிக்கலில் மாட்டியிருக்கிறார் சிவபால யாதவ். இவர் சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங்கின் தம்பி. உ.பி முதல்வர் அகிலேஷின் சித்தப்பா. பொதுப்பணி துறை அமைச்சராக வேலை பார்க்கிறார். அதிகாரிகளுக்கு அறிவுரை கூறப்போய் சர்ச்சையில் சிக்கிக் கொண்டார். 'கடுமையாக உழைத்து கடமையை நிறைவேற்றுங்கள். அப்புறம் வேண்டுமானால் கொஞ்சம் திருடிக் கொள்ளுங்கள். கொள்ளைக்காரர்கள் மாதிரி செயல்படாதீர்கள்' என்று கேட்டுக் கொண்டார். இதற்காக எதிர்க்கட்சிகள் துள்ளி எழுந்து அவரை விளாசுகின்றன. சற்று யோசித்தால் சிவபாலர் சொன்னதில் தவறேதும் தெரியவில்லை. மாநிலம் எதுவானாலும் வருவாய், பொதுப்பணி, போக்குவரத்து துறைகள் பற்றி பொதுமக்கள் ஒரே அபிப்பிராயம்தான் வைத்திருக்கிறார்கள். கமிஷன், லஞ்சம் வாங்குவதில் இத்துறைகளுக்கிடையே போட்டி நிலவுவதாக  தெரிந்து வைத்துள்ளனர். எனவே அமைச்சர் மட்டும் இப்படி ஏடாகூட ஆலோசனை சொல்லா மல் இருந்தால் அதிகாரிகள் கையை சுத்தமாக வைத்திருப்பார்கள் என்று சந்தேகிக்க இடமில்லை. கணிசமாக பணம் புழங்கும் இடத்தில் இருப்பவர்கள் கொஞ்சம் கை வைக்கத்தான் செய்வார்கள் என்று பலர் நம்புகின்றனர். அறியாமல் செய்யும் தவறை மன்னிக்கலாம்; அறிந்து செய்யும் தப்புக்கு தண்டித்தே தீர வேண்டும் என்பவர்கள் சொற்பம். 'வெல்லப்பானையில் கைவிட்டவன் பின்புறத்திலா துடைப்பான்?' என்பது மறைந்த ஒரு பத்திரிகை நிறுவனர் அடிக்கடி சொல்லும் தத்துவம். இந்த அநியாய சகிப்புணர்வு உள்ள வரையில் எத்தனை அன்னா வந்தாலும் ஊழல் ஒழியாது. சிவபாலர் அதனால்தான் 'அடிக்கிறது அடிக்கிறீர்கள், வேலையை முடித்து விட்டாவது சுருட்டுங்களேன்' என்று நியாயமான கோபத்துடன் கேட்கிறார்.

சம்பளம்தான் வாங்குகிறார்களே, கட்டிங் தப்பில்லையா என்று அப்பாவிகள் கேட்கலாம். திருடனை பிடிக்கும் போலீஸ்காரருக்கு கமிஷனர் ஏன் விருது கொடுக்கிறார் என்று எவரும் இதுவரை கேட்டதில்லை. அதிகாரிகள் சுறுசுறுப்பாக வேலை செய்ய நல்ல வழி காட்டியிருக்கிறார் முதல்வரின் சித்தப்பா. இதற்கே விருது கொடுக்கலாம்.




நன்றி: Dinakaran

முற்பகல் செய்யின்... ஈழம் எதிர்த்த கலைஞர்

முற்பகல் செய்யின்... ஈழம் எதிர்த்த கலைஞர்


சென்னையில், தி.மு.க., தலைவர் கருணாநிதி ஏற்பாடு செய்திருந்த, "இலங்கைத் தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு' (டெசோ) இன்று நடக்குமா, நடக்காதா என்ற நிலையில், "ஈழம்' குறித்து பேசும் கருணாநிதி, தான் ஆட்சிப் பீடத்தில் இருந்தபோது, "ஈழம்' குறித்து பேசியவர்கள் மீது, அவர் தொடுத்த யுத்தங்கள் அதிகம்.

கடந்த, 1990 ஜூன் மாதம், கருணாநிதி முதல்வராக இருந்த போது, பழ.நெடுமாறன், "தமிழர் தன்னுரிமை பிரகடன மாநாடு' நடத்த திட்டமிட்டார். அந்த மாநாட்டில், "ஈழம்' என்ற தலைப்பில், கண்காட்சி அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், மாநாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. தவிர, மாநாடு தொடர்புடைய, சாலை.இளந்திரையன் உள்ளிட்ட பலர், தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.சென்னையில், 1996ம் ஆண்டு, கருணாநிதி முதல்வராக இருந்தபோது, பா.ம.க., நடத்திய மாநாட்டில், "ஈழம்' குறித்து பேசியதற்காக, சுப.வீரபாண்டியன், பெ.மணியரசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

தி.மு.க., கூட்டணியில் இருக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், சென்னையில், 2008 டிச., 27ம் தேதி, "ஈழ உலக அங்கீகார மாநாடு' நடத்தினார். அப்போது, "ஈழம்' என்ற வார்த்தையை போஸ்டர் ஒட்டியும், பெயின்ட் அடித்தும் போலீசார் மறைத்தனர். அப்போதும், தமிழக முதல்வராக கருணாநிதி தான் இருந்தார்."இலங்கை போரை நிறுத்த வேண்டும்' என, தீக்குளித்து இறந்த முத்துக்குமரனுக்கு, தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே சாணுரப்பட்டியில் ரத்தினவேலன், தன் சொந்த இடத்தில் சிலை வைக்க முயன்றார்.

அதற்கு அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் இயங்கிய அரசு, சிலை வைக்க தடை விதித்தது. கலெக்டர் சண்முகம் சிலை வைக்க அனுமதி தர மறுத்தார். ரத்தினவேலன், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி, "தனியார் இடத்தில் சிலை வைக்க தடை விதிக்க முடியாது. அது அவரது சொந்த விருப்பம்' என்று தெரிவித்தார்.இப்படி, "ஈழம்' குறித்து பேசியவர்கள், மாநாடு நடத்தியவர்கள் மீது, கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது, தாக்குதல் நடத்தியுள்ளார். "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்' என்பது போல, கருணாநிதி நடத்தும், "டெசோ' நாடகத்துக்கு போலீசார் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். 

நன்றி:
இலக்குவனார் திருவள்ளுவன்