Saturday, 16 June 2012

மீண்டும் பர்மா

ஒரு காலத்தில் பர்மா. இப்போது மியான்மர். ஆனாலும் இன்னும் பல நாடுகளுக்கு பர்மாதான். இந்தியாவுக்கும் பர்மாவுக்கும் பல நூறு ஆண்டுகள் தொடர்பு உள்ளது. பிரதமர் மன்மோகன் சிங்கின் தற்போதைய பர்மா பயணம் மீண்டும் அந்த உறவை பலப்படுத்த கைகொடுக்கும். தேக்கு மரங்களுக்கு பெயர் போன நாடு பர்மா. பர்மாவுக்கு அடுத்தபடியாக அந்நாட்டு தேக்கு மரங்கள் இந்தியாவில்தான், 

அதிலும் குறிப்பாக தமிழகத்தில்தான் இருக்கும். அந்த அளவுக்கு இங்கு பர்மா தேக்கு பிரபலம். அரச பரம்பரை முடிவுக்கு வந்து பிரிட்டனின் கைக்கு பர்மா போனது. அது 1886ம் ஆண்டு. பிரிட்டிஷ் படைகளோடு படை வீரர்களாகவும் வர்த்தகர்களாகவும் கட்டுமான தொழிலாளர்களாகவும் பல லட்சம் பேர் இந்தியாவில் இருந்து பர்மா போனார்கள். இப்போது வேலைக்காக வளைகுடா நாடுகளுக்கு செல்வது போல் அந்தக் காலத்தில் பர்மா பயணம் செய்தவர்கள் அதிகம். தலைநகர் ரங்கூனில் பிழைக்க வந்த இந்தியர்களை அதிகம் பார்க்கலாம்.

இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் படைகளுக்கும் பிரிட்டன் படைகளுக்கும் நடுவில் சிக்கி அதிகம் சீரழிந்த நாடு பர்மாதான். கட்டிடங்கள் இடிந்து, பிழைப்பு போய் பலர் இந்தியாவுக்கே திரும்பினார்கள். அப்படி வந்தவர்களை காலனிகள் ஏற்படுத்தி குடியமர்த்தியது மத்திய அரசு. அதனால்தான் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் பர்மா காலனிகள் பிரபலம்.

அதன்பிறகு ராணுவ ஆட்சி உருவானதால் தொடர்பு முறிந்தது. மீண்டும் தேர்தல் நடந்து ஜனநாயகம் மலர ஆரம்பித்த பிறகு, இந்தியா பர்மாவுடன் உறவை வளர்க்க முயற்சிகள் மேற்கொண்டது. அதன் ஒரு கட்டம்தான் மன்மோகனின் பர்மா பயணம். ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு சென்ற முதல் இந்திய பிரதமர் அவர்தான். அதற்கு காரணம் இருக்கிறது.

பர்மாவின் வற்றாத இயற்கை எரிவளம், ஏராள வர்த்தக வாய்ப்பு, இரு நாடுகளுக்கும் இடையே ஏறக்குறைய 1600 கி.மீ. தூரத்துக்கு எல்லை என பர்மாவுடன் நெருங்க ஏராளமான காரணங்கள். உறவை பலப்படுத்த பர்மாவுக்கு பல ஆயிரம் கோடி நிதியுதவியை இந்தியா அறிவித்திருக்கிறது. அதோடு தரை வழிப் போக்குவரத்துக்கும் பச்சைக் கொடி காட்டியுள்ளது. அண்டை நாடுகளுடன் இந்த நெருக்கம் அவசியம். இது காலத்தின் கட்டாயம்.

நன்றி: தினகரன்

No comments:

Post a Comment