அரசியலில், ஆட்சி நிர்வாகத்தில், கல்வித் துறையில் என எல்லாமே தப்பாக நடந்தா லும், நீதித் துறை இருக்கிறது, கவலைப்பட தேவையில்லை என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். இப்போது சிபிஐ நீதிபதியால் நீதித்துறையே களங்கப்பட்டிருக்கிறது. ரூ10 கோடி லஞ்சம் பெற்றுக் கொண்டு மாஜி அமைச்சருக்கு ஜாமீன் வழங்கியதாக சிபிஐ ஆதாரத்துடன் குற்றம் சாட்டியுள்ளதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் நீதிபதி. கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி. இவருக்கு சொந்தமானது ஓபுலா சுரங்க நிறுவனம். இந்த நிறுவனத்தில் சட்ட விரோதமாக நடந்த சுரங்கப் பணிகள் தொடர்பாக விசாரித்த சிபிஐ, ஜனார்த்தன ரெட்டியை கைது செய்தது. சிறையில் அடைக்கப்பட்டார் அவர். ஜாமீனுக்கு விண்ணப்பித்தார் ரெட்டி. கடுமையான குற்றச்சாட்டுகள் இருப்பதால் ஜாமீன் வழங்கக் கூடாது என சிபிஐ அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பட்டாபி ராமாராவ் ஜாமீன் வழங்கினார். சிபிஐ அதிகாரிகளுக்கு அதிர்ச்சி. சிபிஐயின் சந்தேகப்பார்வை ராமாராவ் மீது திரும்பியது. அவரின் நடவடிக்கைகள், வங்கிக் கணக்குகளை கண்காணித்தனர்.
ஜாமீன் கொடுக்க ரூ 10 கோடி லஞ்சம் பேரம் பேசப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. முதலில் ரூ 3 கோடியும் ஜாமீன் கொடுத்த பிறகு ரூ 7 கோடியும் கொடுப்பதாக பேச்சு. ஓய்வுபெற்ற ஒரு நீதிபதி, ஒரு கிரிமினல், ரெட்டியின் உறவினரான தற்போதைய அமைச்சர் ஒருவர் என பலர் இடைத்தரகர்களாக வேலை பார்த்துள்ளனர். அமைச்சர் மட்டும் தனது பங்கை மறுத்திருக்கிறார். எவ்வளவு பணம் கைமாறியதோ தெரியவில்லை. நீதிபதியின் மகனுக்கு சொந்தமான வங்கிக் கணக்கில் இருந்த ரூ 1.60 கோடியை முடக்கியிருக்கிறது சிபிஐ. அனைத்து ஆதாரங்களுடன் சிபிஐ புகார் செய்ய, நீதிபதி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஒரே ஒரு ஜாமீன் கொடுக்க ரூ 10 கோடி லஞ்சமா என எல்லோருமே வாய் பிளந்து நிற்கிறார்கள். ஜாமீனுக்கே இவ்வளவு என்றால் ஜட்ஜ்மென்டுக்கு... என கணக்கு போடுகிறார்கள். ஆசிரியர்கள், நீதிபதிகள் என சிலர் மீது மக்கள் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். கடமை தவற மாட்டார்கள் என நினைக்கிறார்கள். அந்த நம்பிக்கை தகர்க்கப்படும்போது, சமூகத்தின் மீதே சலிப்பு ஏற்பட்டு விடுகிறது. அந்த நிலையை தவிர்க்க வேண்டிய தார்மீக கடமை அவர்களுக்கு இருக்கிறது.
நன்றி: Dinakaran
No comments:
Post a Comment