Saturday, 23 June 2012

தேர்தலே அரசியலாகவும், தேர்தலே ஜனநாயகமாகவும்

தேர்தலே அரசியலாகவும், தேர்தலே ஜனநாயகமாகவும்

இந்திய ஊடகங்களில் அதுவும் குறிப்பாக, தொலைக்காட்சிகளில் ஆக்கிரமிப்பு செய்யக்கூடிய இரண்டு பிரச்னைகள் தேர்தல்கள் மற்றும் தேர்தல்களில் வெற்றி தோல்விகளைத் தீர்மானிக்கும் காரணிகள். இந்த இரண்டும் நம் ஊடகங்களைக் குறிப்பாக, தொலைக்காட்சியை ஆக்கிரமித்துக் கொள்கின்றன.

இந்த இரண்டு பிரச்னைகளைப் பற்றி விவாதம் செய்ய நமக்கு நிறையக் கருத்தாளர்கள் தொலைக்காட்சி நிலைய அரங்குகளுக்குப் படையெடுக்கக் காத்திருக்கிறார்கள். எனவே, தொடர்ந்த விவாதம் ஓய்வின்றி நடைபெற்று வருகிறது.

கருத்தாளர்கள் பேசும்போது இந்திய சமூகத்தின் வேறுபாடுகளையும், வித்தியாசங்களையும், ஏற்றத்தாழ்வுகளையும் வைத்துக்கொண்டு உலக அறிஞர்கள் வியக்கும்வண்ணம் விவாதங்களைச் செய்கின்றார்கள். யார் வெற்றி பெறுவார்? எந்தக் கட்சிக்குக் கூடுதல் ஓட்டுகள் கிடைக்கும்? ஏன் ஊழலால் தோற்ற கட்சி மீண்டும் வெற்றி பெற்றது? தேர்தலில் பங்கு பெற்ற கட்சிகள் வாக்குகளை இழந்தது எப்படி? வாக்குகளை அதிகரித்துக்கொண்டது எப்படி போன்ற பல விவாதங்களை முன் வைப்பார்கள் நம் கருத்தாளர்கள்.

ஒருவிதத்தில் பார்த்தால் மக்களாட்சிக்கு இப்படிப்பட்ட ஆழமான விவாதங்கள் தேவைதான். ஆனால், அதே வேகத்தில் மக்கள் மேம்பாடு, சமூகத்தை ஜனநாயகப்படுத்துதல் இவற்றில் உள்ள சிக்கல்கள் பற்றி அறிவார்ந்த விவாதங்கள் நம் ஊடகங்களைக் குறிப்பாக எல்லாத் தொலைக்காட்சிகளையும் ஆக்கிரமிப்பது கிடையாது. எனவே, ஊடகங்களை ஆட்டிப்படைப்பது நம் தேர்தல்கள்தான். இதற்கான காரணங்கள் என்னென்ன என்பதைப் பற்றி ஒரு தெளிவான பார்வையை நாம் கொண்டிருக்க வேண்டும்.

இந்தியாவில் ஆண்டுதோறும் தேர்தல்கள் நடந்தவண்ணம் இருக்கின்றன. ஒவ்வோராண்டும் ஒரு சில மாநிலங்களில் தேர்தல் நடக்கின்றபோது, நம்முடைய ஊடகங்கள், இந்த ஆண்டு நடைபெறும் தேர்தல்கள் இந்திய அரசியலில் ஒரு திருப்புமுனையை மற்றும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று வாதம் செய்வது உண்டு. அதேபோல் இந்த ஆண்டு இந்த ஐந்து மாநிலத் தேர்தல் களம் மிகப்பெரிய மாற்றங்களைத் தேசிய அரசியலிலும் மாநில அரசியலிலும் செய்யப் போகின்றன என்ற வாதத்தை வலுவாக வைத்து ஊடகங்களில் கருத்துகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

அதுவும் குறிப்பாக, உத்தரப் பிரதேசத் தேர்தல் என்பது இந்திய அரசியலைத் திருப்பிப் போடும் சக்தி கொண்டது என்று விவாதித்தனர். இந்த ஆண்டுக்கான தேர்தல்களின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஆட்சிகள் அமைக்கப்பட்டுவிட்டன. அடுத்து குடியரசுத் தலைவர் தேர்தல், அதைத்தொடர்ந்து குடியரசுத்துணைத் தலைவர் தேர்தல் என இந்த ஆண்டிலேயே அடுத்தடுத்து தேர்தல்கள் வரக் காத்திருக்கின்றன.

அடுத்த ஆண்டு பத்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. 2014-ஆம் ஆண்டில் ஏழு மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து அதே ஆண்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற்றாக வேண்டும். இந்தத் தேர்தல் முன்கூட்டியே வந்தாலும் வரலாம் என்று ஆரூடமும் சொல்லப்படுகிறது.

2015-ஆம் ஆண்டு மூன்று மாநிலங்களுக்குத் தேர்தலும் 2016-இல் ஐந்து மாநிலங்களுக்குத் தேர்தலும் நடைபெற்றாக வேண்டும். இப்படி ஆண்டுதோறும் கிராமங்களில் கோயில் திருவிழாக்கள்போல் நம் நாட்டில் தேர்தல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. இத்துடன் உள்ளாட்சித் தேர்தல்கள் வேறு சேர்ந்து கொள்கின்றன. அத்துடன் இடைத்தேர்தல்களும் நடந்து கொண்டுள்ளன. ஆகையால், ஆண்டுதோறும் தேர்தல்கள்தான் அரசியலில் பிரதானப்படுத்தப்படுகின்றன. அடிப்படையில் நம் மக்களாட்சியில், பிரதிநிதித்துவ அமைப்பில் பல சிக்கல்கள் உள்ளன.

உத்தரப்பிரதேசத்தில் இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்ற சமாஜ்வாதிக் கட்சி பெற்ற வாக்குகள் என்பது 29.5 மட்டும்தான். பெறுகின்ற வாக்குகளுக்கும், வெற்றி பெறுகின்ற தொகுதிகளுக்கும் தொடர்பு கிடையாது.

1967-இல் தமிழகத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வாங்கிய வாக்குகள், தி.மு.க.வைவிட அதிகம். ஆனால், வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்த கட்சி தி.மு.க. நாம் இந்த அடிப்படையைச் சீர்செய்யவில்லை என்றால் இந்தியாவில் ஆளும் கட்சிகள் அனைத்தும் ஓட்டு வாங்குவதில் சிறுபான்மை ஆதரவு பெற்ற கட்சிகளாகிவிடும் அவலம் தொடரக்கூடும். அப்படிப்பட்ட சூழ்நிலை, பெருவாரியான மக்களின் கருத்தையும், உணர்வையும் பிரதிபலிக்காத அரசு அமைவதைத்தான் ஊக்குவிக்கும்.

நம் கருத்தாளர்களின் விவாதங்கள் இதுபோன்ற அடிப்படைப் பிரச்னைகளுக்குச் செல்ல மறுக்கின்றன என்பதுதான் எதார்த்தமான உண்மை.

ஆண்டுதோறும் இப்படித் தேர்தல்கள் நடக்கிறபோது இப்படிப்பட்ட வாதங்கள் வருவது உண்மைதான். இருந்தபோதிலும் இந்தத் தேர்தலை வைத்து, தேர்தலில் கிடைக்கும் வெற்றி தோல்விகளை வைத்து விவாதம் செய்து மக்கள் மத்தியில் தேர்தல்தான் மக்களாட்சி என்ற பிரமையை நம்முடைய ஊடகங்கள் செய்துவிட்டன. இது ஒரு கருத்து மோசடி என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு நாட்டில் தேர்தல் நடக்கும்போது மட்டும்தான் தேர்தல் அரசியல், தேர்தல் முடிந்தவுடன், மேம்பாடுதான் அரசியலாக இருக்க வேண்டும்.

ஆனால், நம் நாட்டில் தேர்தலே அரசியலாகவும், தேர்தலே ஜனநாயகமாகவும் மாறிவிட்டது என்பதுதான் வேதனை. தேர்தல் என்பது மக்களாட்சியின் ஓர் அம்சம் என்பதை யாரும் மறுக்க இயலாது. அதுமட்டுமல்ல, அதுதான் மக்களாட்சியின் நுழைவாயில் என்பதிலும் எந்தச் சந்தேகமும் இல்லை. ஒருமுறை கனடா நாட்டு மாணவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது இந்தியாவைப் பற்றி ஒரு கேள்வி எழுப்பினார்கள்.

இந்தியாவில் தேர்தல்கள் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்த அளவுக்கு மக்களாட்சியின் மற்ற அம்சங்கள் மற்றும் கூறுகள் ஏன் பிரபலமடையவில்லையே என்பதுதான் அவர்கள் எழுப்பிய கேள்வி. அத்துடன் இன்னொரு கேள்வியையும் கேட்டார்கள். மேற்கத்திய நாடுகள் ஏன் இந்தியாவை மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று புகழ்கின்றன என்பதுதான் அடுத்த கேள்வி.

மேற்கத்திய நாடுகள் இந்தியாவைப் புகழ்வதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று பொதுத்தேர்தல்களைத் தொடர்ந்து நடத்துவதற்காக. இரண்டு, ஆட்சியை வென்ற கட்சியிடம் தேர்தலில் தோற்றுப்போன கட்சி எந்தவித முரண்டும் பிடிக்காமல், ஜனநாயக ரீதியாக மக்கள் அளித்த தீர்ப்பை மதித்து ஏற்றுக்கொண்டு ஆட்சியை ஒப்படைப்பதற்காக. இவைகளையே சாதனைகளாகக் காண்பித்து, காண்பித்து அரசியல்வாதிகளும் நம் கருத்தாளர்களும் மக்களிடம் தேர்தல்தான் ஜனநாயகம் என நம்ப வைத்து விட்டனர்.

ஆனால், மக்களாட்சியின் மாண்புறு கூறுகளான மற்றவர்களைச் சமமாகப் பாவித்து நடத்தும் மனோபாவம், சகோதரத்துவம், நியாயம், நேர்மை, பொதுஒழுக்க நியதிகள், சட்டத்தின்படி ஆட்சி, மாற்றான் கருத்தை மதித்தல், கருத்துகளின் வலிமையின் அடிப்படையில் முடிவெடுத்தல் போன்ற எண்ணற்ற அம்சங்களை இன்று இந்தியா பின்பற்றுவதே கிடையாது.

இதன் அடிப்படையான காரணம் தேர்தல் என்பது நிறுவனம் சார்ந்தது. ஆகையால் அதை நடத்துவதில் மிகப் பெரிய சிக்கல்கள் இல்லை. ஆகையால், தொடர்ந்து நடத்திக்கொண்டே இருக்கிறோம்.

அதேநேரத்தில், பல தவறான அணுகுமுறைகள் பயன்படுத்தப்பட்டுத் தேர்தல் வெற்றி தோல்விகள் நிர்ணயிக்கப்படுகின்றன. உதாரணத்திற்கு, ஹரியாணாவில் நடந்த மேஹம் இடைத்தேர்தலும், திருமங்கலம் இடைத்தேர்தலும், அதை வழியொற்றி நடத்தப்படும் பல இடைத்தேர்தல்களும். தவறுகளின் மூலம் வெற்றி நிர்ணயிக்கப்பட்டு ஜனநாயக அமைப்புகளைக் கைப்பற்றி நடத்தப்படும் ஆட்சி மட்டும் எப்படி நியாயமாக நடக்கும் என்று எதிர்பார்ப்பது?

இன்னொரு கேள்வியும் எழுகிறது. இங்கே சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது என்பதைவிட ஆளும் கட்சி வைத்ததுதான் சட்டம் என்பதாகத்தான் ஆட்சி நடத்தப்படுகிறது என்பதும் உண்மைதானே?

அதாவது மக்களாட்சியில் உள்ள மற்ற அம்சங்கள் அனைத்தும் மக்களின் நடத்தை மற்றும் மனோபாவம் சார்ந்தது. மக்கள் விழிப்புணர்வு அடைந்து, மக்களாட்சி பற்றி அறிவுபெற்று தெளிவடையாதவரை இந்த மக்களாட்சி சூது செய்வோர் கையில்தான் அகப்பட்டு சிக்கிச் சீரழியும். ஆனால், மக்கள் விழிப்புணர்வடைய, விழிப்புணர்வடைய இந்தச் சூழல் மாறும் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. ஏனென்றால், இந்த மக்களாட்சியைவிடச் சிறந்த அமைப்பை உலகத்தில் இதுவரை நம்மால் உருவாக்க முடியவில்லை.

இதைத்தான் சர்ச்சில் மக்களாட்சியைப் பற்றிக் கூறும்போது, இது ஒரு மோசமான ஆட்சி முறைதான். ஆனால், இதைவிடச் சிறந்த ஒரு ஆட்சி முறையை இதுவரை மானுடம் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆகையால்தான் இதை நாம் கடைப்பிடிக்க வேண்டியுள்ளது என்றார். எனவே இந்த அமைப்பை வைத்துக் கொண்டுதான் நாம் முன்னேறிச் செல்ல வேண்டும். இதற்கு மேல் நமக்கு வழியில்லை.

அந்த நிலையில் நாம் யோசிக்கின்றபோது மக்களை மக்களாட்சிக்குத் தயார் செய்வதுதான் நம் தலையாயக் கடமை.

இன்று நமக்கு என்ன சிக்கல் என்றால், இந்த மக்களாட்சிக்கு மக்களைத் தயார் செய்யும் பணியில் மிக முக்கியமாகப் பணியாற்ற வேண்டிய அரசியல் கட்சிகளை ஜனநாயகப்படுத்துவது என்பதே மிகச் சிக்கலாக இருக்கிறது. இன்னும் நாம் நம் நாட்டில் அரசியல் கட்சிகளையே ஜனநாயகப்படுத்த முடியவில்லை. இந்தச் சூழலில் நாம் நம் சமூகத்தை ஜனநாயகப்படுத்துவது பற்றி இன்று விவாதிக்க வேண்டியுள்ளது. ஆனால், நம் ஊடகங்கள் இந்தத் தேர்தலுக்குள்ளேயே சிக்கிக் கொண்டுள்ளன. அதைத் தாண்டி வெளியேறி சமூகத்தை ஜனநாயகப்படுத்துவதைப் பற்றி விவாதிக்க முன்வரவில்லை. முன்வர முடியவில்லை.

நம்முடைய அரசியல் கட்சிகள் ஒரு சில தவிர்த்து இன்னும் மன்னராட்சி போலவே செயல்பட்டு, பிரபுத்துவ மனோபாவத்துடன் மக்கள் மத்தியில் செயல்பட்டு இன்று அவை செயல்படுவதையே மக்களாட்சி என்று மக்களை நம்ப வைத்துக் கொண்டிருக்கின்றன. எனவே, இந்தத் தேர்தலை வைத்து சூதாடுவதிலிருந்து வெளியேற வேண்டும். ஆகையால் அதை நாம் அடிப்படையில் சீர் செய்தாக வேண்டும்.

இந்தியத் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் தேர்தல் என்பது மிகப்பெரிய கெடுபிடிகளுக்குள் சமீபகாலமாக நடைபெறுகிறது. தேர்தலையே மிகப்பெரிய முறைகேடுகளின் மூலமாக நடத்தியதன் விளைவாகத்தான் இத்தகைய கெடுபிடிகளை நம் தேர்தல் ஆணையம் விதிக்க வேண்டியுள்ளது.

இந்தச் சூழலிலிருந்து விடுபட ஒன்று, இந்தியத் தேர்தல் ஆணையமும், மாநிலத் தேர்தல் ஆணையமும் ஒன்றிணைக்கப்படல் வேண்டும். ஒரே விதிமுறைகள்தான் தேர்தலுக்கு என்று கொண்டு வந்துவிட வேண்டும். கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் பதவியிலிருந்து குடியரசுத் தலைவர் பதவிவரை ஒரே மாதிரியான விதிகளைப் பின்பற்ற வேண்டும். மாநிலத் தேர்தல் ஆணையம் என்பது மத்திய தேர்தல் ஆணையத்தின் பகுதியாக இருக்க வேண்டும்.

அடுத்து ஒரே நேரத்தில் மக்களவைக்குத் தேர்தல் நடத்துவதுபோல் ஒரே நேரத்தில் நாடு முழுவதும் உள்ள சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடத்திட வேண்டும். அதேபோல் அனைத்து மாநிலங்களிலும் உள்ள உள்ளாட்சிகளுக்கும் தேர்தல் நடத்திட வேண்டும். கிராம சபை கூட்டத்துக்கு நான்கு தினங்கள் தேதி குறிப்பிடப்பட்டிருப்பதுபோல், அரசியல் சாசனச் சட்டத்திலேயே தேர்தலுக்கான தேதிகள் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

ஒரே ஆண்டில் குடியரசுத் தலைவர் பதவி, குடியரசுத் துணைத் தலைவர் பதவி, மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் அனைத்தும் முடித்துவிட வேண்டும். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மேம்பாடு மற்றும் முன்னேற்றம் இவைதான் பிரதானப்படுத்தப்பட வேண்டும்.




நன்றி: Dinamani

No comments:

Post a Comment