Thursday, 14 June 2012

ஏன் இந்த வீழ்ச்சி?

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வேகமாக வீழ்ந்து கொண்டிருக்கிறது. ஏன்? விளைவுகள் என்னவாக இருக்கும்?
கடந்த ஓராண்டாக மெல்ல சரிந்து கொண்டிருந்த அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில நாட்களில் மிக வேகமாக வீழ்ந்து கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட்டிலிருந்து இன்றுவரை  ரூபாயின் மதிப்பு 22% சரிந்திருக்கிறது. இப்போது இன்னும் சரிந்து 60 ரூபாயைக் கூடத் தொடும் என ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த நிலை ஏன் ஏற்பட்டது? எப்படி ஏற்பட்டது?

பிரச்சினையை எளிதாகப் புரிந்துகொள்ள வேண்டுமானால் நாட்டின் அந்நியச் செலாவணி பரிமாற்றச் சந்தையின் நடவடிக்கைகள் பற்றி சற்றுத் தெரிந்துகொள்ள வேண்டும். ‘அமெரிக்க டாலர்’ என்பதை வெங்காயம், தக்காளி (அல்லது ஒரு விற்பனைக்குள்ள பொருள்) என்று வைத்துக் கொள்ளுங்கள். எந்தப் பொருளின் கையிருப்பும் அதிகமாகயிருக்கும் நிலையில்  மார்க்கெட்டில் அதன் விலை குறைவாக இருக்கும். தக்காளியோ, வெங்காயமோ அதிகமாக விளையும்போது அவை கிலோ மூன்று, நான்கு ரூபாய்க்குக் கூடக் கிடைப்பதில்லையா? அதே போல ஒரு பொருளின் கையிருப்பு அதிகமில்லாத காலங்களில் அதன் விலை அதிகமாகவதையும்  பார்த்திருக்கிறோமே? இப்போது டாலர் விஷயத்தில் அதுதான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நமது டாலர் தேவைகள் அதிகரித்துக்கொண்டே போகிறது. ஆனால் அதை சந்திக்கத் தேவையான ‘டாலர்கள்’ நமது மார்க்கெட்டில் குறைந்துகொண்டே வருகிறது. விளைவு, அதன் விலை உயர்ந்துகொண்டே போகிறது.

திடீரென்று இது எப்படி நிகழ்ந்தது?

இது ஒரேயடியாக எதிர்பார்க்காத ஆச்சரியம் இல்லை. அமெரிக்காவின் மிகப் பெரிய பத்திரிகையான ‘வால்ஸ்டீரிட் ஜர்னல்’, லண்டனிலிருந்து வெளிவரும் ‘பினாந்தியல் டைம்ஸ்’ போன்ற பத்திரிகைகள் கடந்த மாதமே இந்தியாவில் இப்படி நிகழக் கூடிய வாய்ப்பை பற்றி எழுதியிருக்கின்றன.

இன்று நமக்குப் போதுமான டாலர்கள் கிடைக்காமல் போனதற்கு இரண்டு காரணங்கள் முக்கியமானவை:

1. ஐரோப்பிய யூனியனில் உறுப்பினராக உள்ள ஒரு முக்கியமான நாடு கிரீஸ். சில ஆண்டுகளாகவே அது பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. அது இப்போது கிட்டத்தட்ட திவாலாகும் நிலைக்கு வந்துவிட்டது. அது திவாலாகாமல் காப்பாற்றும் கடமை ஐரோப்பிய யூனியனுக்கு உண்டு. ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகள் பலவும் ஒருங்கிணைந்து யூரோ என்ற கரன்சியைத் தங்களது செலாவணியாக வைத்திருக்கின்றன. கிரீஸில் ஏற்பட்டுள்ள நிலைமை காரணமாக அந்த கரன்சியின் மதிப்பிற்கு அழுத்தம் ஏற்பட்டிருக்கிறது. உன் ஒருவனால் நாங்கள் அத்தனை பேரும் ஏன் அவஸ்தைப்பட வேண்டும், நீ ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகி விடு எனச் சில நாடுகள் அதை வற்புறுத்த ஆரம்பித்திருக்கின்றன. அதே நேரம் கிரீஸ் ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறினால் யூரோவும் பாதிப்பிற்குள்ளாகும்.

இதனால் உலக முதலீட்டாளர்கள் அமெரிக்க டாலரை நோக்கிச் செல்லத் துவங்கியிருக்கிறார்கள். அமெரிக்க டாலருக்கு டிமாண்ட் அதிகரித்திருக்கிறது. இதையடுத்து இந்தியா உட்பட பல நாடுகளின் கரன்சிகளும் சரிவைச் சந்திக்கத் துவங்கியுள்ளன. சுருக்கமாகச் சொன்னால் உலகமயமாதலின் ஒரு பக்க விளைவு இது. ஏதோ ஒரு நாட்டின் பொருளாதாரம், அங்குள்ள உள்ளூர்க் காரணங்களால் சரிந்தால் அது வேறு எங்கோ உள்ள நாட்டையும் பாதிக்கும்.

2. நமக்கு டாலர்கள் எங்கிருந்து கிடைக்கின்றன?  பெரும்பாலும் அவை நம்முடைய ஏற்றுமதி மூலமும், நமக்கு வரும் அந்நிய முதலீடுகள்  மூலமும்  கிடைக்கின்றன. 2000த்தின் ஆரம்ப வருடங்களில் அந்நிய முதலீடு நம் நாட்டில் வந்து கொட்டொ கொட்டு என்று கொட்டியது. ஆனால் அண்மைக் காலமாக அந்த முதலீடுகள் இந்தியாவிலிருந்து வெளியேறத் துவங்கியிருக்கின்றன. அதாவது முதலீடு செய்தவர்கள் அதைத் திரும்பப் பெறத் துவங்கி விட்டார்கள்  (Repartriation or FDI Debit). 2000த்திலிருந்து  2008 வரை இந்தியாவிலிருந்து வெளியேறிய அந்நிய முதலீடு சில லட்சம் டாலர்கள் என்ற அளவில் இருந்தது. 2009ல் அது  3.1 பில்லியன்  (ஒரு பில்லியன் = 100 கோடி)  டாலர்களாக  உயர்ந்தது. 2011ல் அது 10.7 பில்லியன் டாலர்களாக எகிறியது. இந்த ஆண்டின் இறுதியில் அது 20 பில்லியன் டாலர்களாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது டாலர்கள் இந்தியாவை விட்டு வேகமாக வெளியேறிக் கொண்டிருக்கின்றன.

ஏன் அந்நிய முதலீடுகள் அலறி அடித்துக்கொண்டு ஓடுகின்றன? வர்த்தகம் செய்வதற்கு ஆகும் அதிகமான செலவு ( வேறென்ன, லஞ்சம்தான்). மந்தமான வளர்ச்சி, அரசின் நிலையற்ற கொள்கைகள் என மூன்று காரணங்களை முதலீட்டாளர்கள் சொல்கிறார்கள்.

3. கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான செலவு கூடிக்கொண்டே போகிறது. எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு முறையும் தங்களது இறக்குமதிக்கு செலுத்தத் தேவையான டாலர்களை மார்க்கெட்டில் இந்திய ரூபாய்கள் கொடுத்து வாங்க வேண்டும். மார்க்கெட்டில் தேவையான அளவு டாலர் இல்லாததால் தட்டுப்பாடாக இருப்பதால் அதன் விலை கூடி இந்திய ரூபாயின் மதிப்பு சரிகிறது.

இந்த மதிப்பு வீழ்ச்சியினால் என்ன விளைவுகள் ஏற்படும்?

•  வீழ்ச்சியின் விளைவுகளின் முதல் அடிதான் கடந்த வாரம் உயர்ந்த  பெட்ரோல் விலை. நாம் பயன்படுத்தும் கச்சா எண்ணெயில் 80% இறக்குமதி செய்கிறோம். நாம் அதற்காகச் செலவிடும் அந்நியச் செலாவணியின் அளவு அதிகமாகும். டாலருக்கு எதிரான மதிப்பு ஒரு ரூபாய் குறைந்தால்கூட எண்ணெய் நிறுவனங்களின் ஓர் ஆண்டு இழப்பு 8,000 கோடி ரூபாய்கள். இதை சரிக்கட்ட அரசு தரும் மானியம் உயரும். அதனால் வரிச்சுமை கூடும்.

•  குழந்தைகளை வெளிநாட்டிற்கு படிக்க அனுப்பும் பெற்றோர்களுக்கு தற்போது கூடுதல் சுமை ஏற்படலாம். டியூஷன் கட்டணம், சாப்பாடு, தங்குமிடம் போன்ற நடைமுறை செலவுகளுக்காக ரூபாயில் செலுத்தும் கட்டணம் வழக்கத்தைவிட கூடுதலாக இருக்கும். வெளிநாடுகளுக்குப் போய் படிக்கும் மாணவர்கள் வழக்கத்தைவிட கூடுதலாக 10லிருந்து 15 சதவிகிதம் பணம் செலவு செய்ய வேண்டியிருக்கும், ரூபாயின் மதிப்புக் குறைவால் வெளிநாட்டுக் கல்விக்கான கடன் தொகை அதிகமாக தேவைப்படும். இது கூடுதல் சுமையைத் தரும். இதனால் திருப்பிச் செலுத்தும் தொகையும் அதிகமாக இருக்கும்.

• இந்திய நிறுவனங்கள் இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு அதிகப் பணம் கொடுக்க நேரிடும். அதையடுத்து அவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் பொருட்களின் விலையும் உயரும். விலைகள் ஓரளவிற்கு மேல் உயர்ந்தால் விற்பனை வீழ்ச்சியடையும். விலைகளை உயர்த்த முடியாவிட்டால் லாபம் குறையும். இந்த லாபம்தான் கையில் நிற்கும் உபரிப் பணம். இதுதான் திரும்பவும் சந்தைக்கோ, முதலீட்டிற்கோ வருகிறது. உபரியாகப் பணம் இல்லாதபோது சந்தை மந்தமடையும். முதலீடு முடங்கும். அதனால் பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியடையும். ஒரு விஷச் சுழற்சி ஆரம்பமாகும்.

ரிசர்வ் வங்கி தலையிடாதா?
•    இத்தகைய பிரச்சினைகளை சமாளிப்பதில் இந்திய ரிசர்வ் வங்கிக்கு கில்லாடி என்று ஒரு பெயர் உண்டு. ரூபாய் வீழ்ச்சி அடையும் சமயங்களில் நிலைமையை சமாளிக்க மத்திய ரிசர்வ் வங்கி களத்தில் இறங்கும். இதற்கு ஓப்பன் மார்க்கெட் ஆபரேஷன் என்று பெயர். அந்தச் சமயத்திற்கு தேவையான டாலர்களை தன் இருப்பிலிருந்து வங்கிகளுக்கு  பெருமளவில் விற்று மார்க்கெட்டில் டாலரை ‘செலுத்தி’ மதிப்பின் வீழ்ச்சியைக் குறைக்கும். ஆனால் இம்முறை கடந்த 23ம் தேதி அதை முயற்சித்தும் டாலர் மதிப்பின் சரிவை சமாளிக்க முடியவில்லை.  இனி அரசு கொள்கை ரீதியாக சில முடிவுகளை எடுத்தால் மட்டுமே சமாளிக்க முடியும் என்ற நிலை உருவாகி விட்டது. மேலும் ரிசர்வ் வங்கி எடுக்கும் முடிவுகளினால் தற்காலிகப் பயன்கள் மட்டுமே கிடைக்கும். நீண்ட நாள் பயனளிக்கும் முடிவுகளை அரசுதான் எடுக்க முடியும்.

அரசு என்ன செய்ய வேண்டும்?

•  எண்ணெய் நிறுவனங்களின் செயல்பாட்டில் மிகப் பெரிய மாற்றம் கொண்டுவர வேண்டும். இவர்கள் மார்க்கெட்டில் டாலர்கள் வாங்கும் நிலையை தவிர்த்து அவர்களுக்கு ரிசர்வ் வங்கியே தனியாக ஒரு நிலையான விலையில் டாலர்கள் அளிக்கலாம்.

•   வெளிநாட்டிலிருந்து  தொழில் நிறுவனங்களுக்கு நீண்ட கால டாலர் கடன்களை வாங்க அரசே உதவலாம்.

•   அந்நிய முதலீட்டு வரி விதிப்பு / வரி தவிர்ப்புக் கொள்கைகளை தெளிவாக அறிவித்து முதலீடுகளைப் பெருக்கலாம்.

• வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் அந்நியச் செலாவணி சேமிப்பு இந்தியாவில் 100 பில்லியன் வரை இருந்தது. இது வட்டிவிகிதங்களின் குறைப்பினால் வெளியேறி 50 பில்லியனாகி விட்டது. இப்போது  கவர்ச்சிகரமான அதிரடி ஆஃபர்களை அறிவித்து என்.ஆர்.ஐ. டெபாசிட்டுகளை பெற நமது வங்கிகளை அனுமதிக்க வேண்டும்.

• உலகிலேயே அதிக அளவில் தங்கம் இறக்குமதி செய்யும் நாடு நம்முடையது. கடந்த ஆண்டு மட்டும் 1,000 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம் அதன் மீதான மிகக் குறைவான வரிவிகிதம். இதை உயர்த்தி அரசின் நிதி நிலைமையை சரிசெய்யலாம்.

இவைகளெல்லாம் முடியாத காரியங்கள் இல்லை. 90களின் துவக்கத்தில் நமது அந்நியச் செலாவணி இதைவிட மிக மோசமான நிலையிலிருந்தது. திட்டமிட்டு படிப்படியாகச் செயலாற்றி இந்தியப் பொருளாதாரத்தையே புதிதாக வடிவமைத்து உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த சாதனையை செய்த சிற்பிகளில் ஒருவர் இன்றைய பிரதமர் மன்மோகன் சிங். இப்போது இந்த அரசு செய்ய வேண்டியதெல்லாம் கூட்டணி தர்மம், கட்சி அரசியல் போன்ற விஷயங்களைத் தாண்டி நாட்டின் நலனுக்காக தொலைநோக்குடன்  சில துணிவான அதிரடிக் கொள்கை முடிவுகள்தான்.

இந்த அரசு செய்யுமா?

"எங்களுக்கும் லாபம் இல்லை". சக்திவேல், தலைவர் - இந்திய ஆடை ஏற்றுமதிக் கழகத் தலைவர்

"டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு குறைவதால் ஏற்றுமதியில் ஒவ்வொரு டாலருக்கும் அதிக இந்தியப் பணம் கிடைக்கும். இந்த வாய்ப்பினால் ஏற்றுமதியாளர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். ஆனால் ஏற்றுமதியாளர்கள் சந்திக்கும் பிரச்சினை வினோதமானது.

வெளிநாட்டில் இந்திய ஆடைகளை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி உங்களுக்குதான் அதிகப் பணம் கிடைக்கிறதே என்று ஏற்கெனவே செய்த ஏற்றுமதிக்கு விலையில் தள்ளுபடி கேட்கிறார்கள்.  ஒரு சில மாதங்களுக்கான லாபத்திற்காக நீண்ட நாள் வியாபாரத் தொடர்புகளை இழக்க முடியாத நிலையில் அவர்கள் கோரிக்கையை ஓரளவாவது ஏற்க வேண்டிய சூழ்நிலை எழுந்துகொண்டிருக்கிறது."

"ஒன்றும் குடி மூழ்கிவிடாது". கே.ஆர்.அதியமான், பொருளாதாரச் சிந்தனையாளர்

"டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ந்து கொண்டிருக்கிறது என்பதால் விலைவாசி உயரும், பொருளாதார மந்தம் ஏற்படும் என்பதெல்லாம் உண்மைதான். அடுத்த இரண்டு வருடங்களுக்கு இதன் பாதிப்பு நிச்சயம் இருக்கும். ஆனால் இதனால் எல்லாம் இந்தியாவின் குடி முழுகிவிடுமென்று யாராவது சொன்னால் அதை தயவுசெய்து நம்பாதீர்கள்.

இதைவிட மோசமான சூழல்களை எழுபது, எண்பதுகளிலேயே சந்தித்திருக்கிறோம். தொண்ணூறுகளின் தொடக்கத்தில் நாடே திவாலாகிவிடும் சூழலில் இருந்து மீண்டு வந்திருக்கிறோம். அப்போதெல்லாம் அந்நியச் செலாவணி சுத்தமாக நம் கையிருப்பில் இல்லை. மாறாக இப்போது போதுமான அந்நியச் செலாவணி அரசின் கையிருப்பில் இருக்கிறது. புதிய பொருளாதார சீர்திருத்தங்கள் நமக்குத் தேவையான பாதுகாப்பை ஏற்படுத்தித் தந்திருக்கிறது. எனவே கப்பல் கவிழ்ந்துவிட்டதே என்று தலையில் கை வைத்து உட்கார்ந்துவிட வேண்டியதில்லை. இந்தப் பிரச்சினை தற்காலிகமானதுதான்."

"இந்தியர் மேல் விழும் அடி"  மகுடேஸ்வரன், நிதியியல் நிபுணர்

"இது ஏதோ கரன்சிகளுக்கிடையேயான கண்ணாமூச்சி ஆட்டம் என்று இருந்துவிட முடியாது. இந்திய ரூபாய் வீழ்ச்சியின் ஒவ்வொரு சரிவும் இந்தியரின்மேல் விழும் பலத்த அடி.

எண்ணெய், நிலக்கரி என ஆற்றல் மூலகங்களுக்கு நாம் இறக்குமதியையே நம்பியிருக்கிறோம். சர்வதேசங்களோடு வர்த்தக நேர்ச்செயல்களை அமெரிக்க டாலராகவே ஈடுசெய்கிறோம். இந்தக் கையடங்காத மூலப்பொருள் விலையால் அதலபாதாளத்தில் வீழ்ந்துவிட்ட இறக்குமதியாளர்கள் அந்தச் செலவை உள்நாட்டு உற்பத்திப் பண்டத்தில் ஏற்றி விலைவாசியை வானத்தில் இருத்துவார்கள்.

விலை உயர்வு மக்களை ஒன்றுமில்லாதவர்களாக்கும். பணவீக்க விகிதம் மீண்டும் இரட்டை இலக்கத்தைத் தொடும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்வதால் உண்மையாகவே பயனடைய வேண்டியவர்கள் ஏற்றுமதியாளர்கள். ஏற்றுமதியோ கடந்த பத்தாண்டுகளில் இல்லாத சுணக்கத்தில் இருக்கிறது. திருப்பூர் போன்ற ஊர்களில் ஆர்டர்கள் நிறைய இருக்கின்றன. இடுபொருள் விலை உயர்வு, ஆள் கூலி, மின் பற்றாக்குறை என்று அனைத்து இடையூறுகளையும் தாங்கி பண்டத்தை உற்பத்தி செய்யும் ஏற்றுமதியாளருக்கு உரிய விலை கிடைக்கவில்லை. நாம் ஏற்றுமதிக்காக நம்பியிருக்கும் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளின் பொருளாதார நிலை தெளிவாகவே இல்லை. ஆடை ஏற்றுமதியில் பங்களாதேஷ், சீனா போன்ற வலிய போட்டியாளர்களோடு நாம் விலையில் போட்டியிட முடியவில்லை.

ஈரான், ஐ.நா.வோடு ஒத்துப்போகும் சூழல் உருவாகியுள்ளதால் கச்சா எண்ணெய் விலை வீழ்ந்துகொண்டிருக்கிறது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் அந்த விலைச்சரிவை நாம் அனுபவிக்க முடியவில்லை. பொருளாதார மேதைகள் தலைமை வகிக்கும் அரசில் பொருளாதாரக் கட்டுமானங்கள் இப்பொழுதுபோல் எப்பொழுதும் அச்சுறுத்தலுக்கு இலக்காகவில்லை."

நன்றி: ரமணன், புதிய தலைமுறை

No comments:

Post a Comment