Tuesday, 19 June 2012

நீதி நிலைக்கட்டும்|

சாலையோர மரம் சரிந்து கார் மீது விழுந்ததில் பெற்றோரை இழந்த மகனுக்கு 30 லட்சம் இழப்பீடு வழங்குமாறு சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை மனிதாபிமானமுள்ள அனைவரும் பாராட்டுவார்கள். சம்பவம் 2005 தீபாவளியை ஒட்டி நடந்தது. புரசைவாக்கத்தில் புதுத்துணி வாங்கிக் கொண்டு வீட்டுக்கு திரும்பும் வழியில் விதி விளையாடியது. உயிர் தப்பிய மகன் அப்போது எட்டாம் வகுப்பு மாணவன். படிப்பை நிறுத்த நேர்ந்தது. 22 லட்சம் இழப்பீடு கேட்டு அடுத்த ஆண்டு வழக்கு தொடர்ந்தான். 'மரம் விழ  இயற்கையே காரணம். நாங்கள் ஏன் இழப்பீடு கொடுக்க வேண்டும்?' என்று மாநகராட்சி கேட்டது. இங்குதான் நமது அதிகாரிகளின் முகம் வெளிச்சத்துக்கு வருகிறது. வெள்ளையர் ஆட்சி செய்தபோது சட்டங்களை காட்டியே மக்களை ஏமாற்றியதற்கு நமது செல்வத்தை சுரண்டி அவனது சொந்த நாட்டுக்கு கொண்டு போக விரும்பியது காரணமாக இருந்தது. சுதந்திர இந்தியாவில் அதற்கான அவசியம் இல்லாத நிலையிலும் அதிகார வர்க்கத்தின் சிந்தனை ஆங்கிலேயரின் மன ஓட்டத்தில் இருந்து மாறுபடவில்லை. மக்களுக்கு சேவை செய்யவே ஊதியம் பெறுகிறோம் என்ற உண்மை மறந்துவிடுகிறது.

மக்கள் நலனுக்காகவே சட்டம் இயற்றப்படுகிறது என்பதும் புலப்படுவதில்லை. சட்டத்தையே கேடயமாக்கி கடமையில் இருந்து தவறுவதை ஒரு கலையாக கற்று தேர்ந்து நடைமுறை படுத்துகின்றனர். டெல்லி ரயிலில் பயணம் செய்தபோது மரணம் அடைந்த மனைவியின்  இறப்பு சான்றிதழுக்கு விண்ணப்பித்த பெருங்களத்தூர்வாசியை இரண்டாண்டுகளாக அலைக்கழித்த ஊராட்சி அதிகாரிகளின் அலட்சியம் இன்னொரு உதாரணம். எங்கே இறந்தாரோ அங்கு போய் வாங்கிக்கொள் என்று விரட்டியுள்ளனர். இரண்டு வழக்குகளிலும் உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள் நடந்துகொண்டதை கடுமையாக விமர்சித்துள்ள நீதிபதிகள், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர். பிரஜைகள் அணியும்  சட்டம் என்ற பாதுகாப்பு வளையத்தையே சுருக்குக் கயிறாக மாற்றி இறுக்கும் ஆணவமிக்க அதிகாரிகள் பரவலாக இருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து மக்களை காப்பாற்றும் மீட்பர்களின் கூடாரமாக உயர் நீதிமன்றம் உருவெடுத்திருப்பது உண்மையில் புதிய நம்பிக்கையை தோற்றுவிக்கிறது.


நன்றி: Dinakaran

No comments:

Post a Comment