கிரேக்கம் தரும் பாடம்
அமைதி, செழிப்பு, ஒற்றுமை ஆகியவற்றுக்காகப் பாடுபடுவோம் என்று உறுதி கூறி கைகோத்த ஐரோப்பிய யூனியன் நாடுகள், இப்போது மக்களின் மன அமைதியைப் பறித்து, செழிப்பையும் தொலைத்துவிட்டது. ஒற்றுமை என்பது விரைவில் கேள்விக்குறியாகும் நிலையில் உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஐரோப்பிய யூனியன் நாடுகளில் ஒன்றான கிரேக்கத்தில் நாடாளுமன்றத்துக்கு முன்பு முதியவர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். மீள முடியாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அந்நாட்டில் வரவு செலவுத்திட்ட சீர்திருத்தங்களால் ஓய்வூதியத்தை இழந்து வாழ வழியில்லாமல் விரக்தி அடைந்து அவர் எடுத்த சோக முடிவு அது. இது ஓர் உதாரணம்தான். வேலையின்மை, முன்னெப்போதும் எதிர்கொண்டிராத பொருளாதார நெருக்கடி ஆகியவற்றால் ஐரோப்பிய நாடுகளில் தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலைநாடுகள் என்றாலே செல்வச் செழிப்பு மிக்கவை என்று நம்மவர்களுக்கு ஏற்படும் பிம்பம் மெதுவாக மறைந்து வருகிறது. கடும் நிதிநெருக்கடியில் சிக்கியுள்ள கிரேக்கத்துக்கு நிதியுதவி செய்யும் ஐரோப்பிய யூனியன், ஐரோப்பிய மத்திய வங்கி, சர்வதேச செலாவணி நிதியம் ஆகியவை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கடுமையான சிக்கன நடவடிக்கையால் அந்நாட்டில் சமூக நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது முற்றிலும் குறைந்து விட்டது. வேலையின்மை விகிதம் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு 21 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. ஓய்வூதியம் வழங்குவது 40 சதவிகிதம் அளவுக்குக் குறைந்துவிட்டது. இவ்வாறு எதிர்கால நம்பிக்கையைத் தொலைத்து, வாழ்க்கைத்தரம் அழிந்து மக்கள் நிற்பது கிரேக்கத்துடன் நின்றுவிடவில்லை. இத்தாலி, ஸ்பெயின், பெல்ஜியம், அயர்லாந்து, ஸ்லோவேனியா, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளும் பொருளாதார மந்த நிலையின் தொடர்விளைவுகளைச் சந்தித்து வருகின்றன. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள எடுக்கப்படும் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் மேலும் பல புதிய நெருக்கடியை உருவாக்கி மக்கள் மீது மேலும் துன்பங்களைத் திணித்துள்ளன. இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு முதலாளித்துவ பொருளாதார அமைப்பில் சாத்தியமல்ல என்பது தெளிவாகத் தெரியத் தொடங்கியுள்ளது. அதே நேரத்தில் அதற்கு மாற்று என்ன என்பதைச் சிந்திக்க முடியாத சூழ்நிலைதான் உள்ளது. ஏற்கெனவே ஐரோப்பிய நாடுகளில் கொன்று புதைக்கப்பட்டுவிட்ட சோஷலிசக் கொள்கைகளுக்கு அவர்களே நினைத்தாலும் மீண்டும் உயிர்கொடுக்க முடியாது. இத்தகைய இக்கட்டான சூழ்நிலைக்கு மத்தியில் கிரேக்கத்தில் தேர்தல் முடிந்துள்ளது. உலகமே பெரிதும் எதிர்பார்த்த இத்தேர்தலில் ஐரோப்பிய யூனியன் தரும் கடன் மீட்சிக்கான உடன்படிக்கையை ஆதரிக்கும் புதிய ஜனநாயகக் கட்சிக்கும், அதனை எதிர்க்கும் சைரிஸா கட்சிக்கும் இடையேதான் முக்கியப் போட்டியிருந்தது. கடன் மீட்சி உடன்படிக்கையை எதிர்க்கும் சைரிஸா கட்சி வென்றால், ஐரோப்பிய யூனியனில் இருந்து கிரேக்கம் வெளியேறும். அதன் தொடர் விளைவாக ஐரோப்பிய யூனியனே கலகலத்துவிடும் சூழல் இருந்தது. ஆனால் கடும் போட்டிக்கு நடுவே சிறிய வித்தியாசத்தில் புதிய ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. தங்கள் கொள்கைகளுக்கு கிரேக்கத்தில் முதல் அடி கிடைத்துவிடுமோ என்ற அச்சத்தில் இருந்த முதலாளித்துவத்தின் முதலாளிகளான அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் ஆகியவை தேர்தல் முடிவை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளன. கிரேக்கம் தொடர்ந்து ஐரோப்பிய யூனியனில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அது விலகும் சூழ்நிலை ஏற்பட்டால், அந்த பாதிப்பு மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவும் என்ற அச்சம் இருந்தது. இதனால் சர்வதேச பொருளாதாரமும் நெருக்கடியில் சிக்கும் என்ற கவலையும் இருந்தது. கிரேக்கத்தின் இப்போதைய தேர்தல் முடிவால் சர்வதேச சமூகத்துக்கு ஏற்படயிருந்த பிரச்னைகள் தாற்காலிகமாக தள்ளிச்சென்றுள்ளனவே அன்றி நிரத்தரத் தீர்வு ஏற்படவில்லை. கிரேக்கத்தின் புதிய அத்தியாயம் தொடங்கிவிட்டதென தேர்தலில் வென்றுள்ள புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஆண்டனிஸ் சமராஸ் தெரிவித்துள்ளார். எனினும் ஆட்சியாளர் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்ற நிலைதான் கிரேக்கத்தில் தொடரவுள்ளது. முதலாளித்துவம் ஊட்டும் கடன் மீட்பு நடவடிக்கை எனும் கசப்பு மருந்து மேலும் பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் காத்திருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள இந்த மோசமான விளைவுகள், இந்தியாவுக்கும் ஒரு பாடம். கலப்புப் பொருளாதாரம் என்ற நிலையில் இருந்து முழுமையான முதலாளித்துவம் என்ற பாதையை நோக்கி இந்தியாவை வேகமாக இழுத்துச் செல்பவர்கள் இதை யோசிக்க வேண்டும். கொள்ளை லாபம் ஈட்டவும், மூலதனத்தைத் திரட்டவும், மக்களை அதீத நுகர்வு கலாசாரத்துக்குள் அழைத்துச் செல்லும் கொள்கையுடையது முதலாளித்துவ பொருளாதார அமைப்பு. மக்களிடையே வாங்கும் சக்தி குறைந்தபோது, எளிதாகக் கடன் வழங்கி மக்களை மேலும் கடனில் மூழ்கச் செய்தன முதலாளித்துவ அரசுகள். பொருளாதார மந்த நிலையால் கடனைத் திரும்பச் செலுத்த முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர். இப்போது நெருக்கடியைச் சமாளிக்க சிக்கன நடவடிக்கைகள் என்ற பெயரில் சமூக நலத்திட்டச் செலவுகளைக் குறைப்பது, ஊதியத்தை நிறுத்தி வைப்பது, ஓய்வூதியங்களைக் குறைப்பது என மக்களை நோக்கி சாட்டையைச் சுழற்றுகிறது ஐரோப்பிய அரசுகள். இந்தியா போன்ற நாடுகளிலும் வேகமாக அதிகரித்து வரும் விலை உயர்வு போன்றவை மூலம் பொருளாதார நெருக்கடியின் வலி மெதுவாக உறைக்கத் தொடங்கியுள்ளது. விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் இது.
நன்றி: Dinamani
No comments:
Post a Comment