Saturday, 23 June 2012

சுத்தமானால் சரி

சுத்தமானால் சரி

அழுக்கான நகரம் என்ற பெயரில் இருந்து சென்னையை மீட்க மறுபடியும் ஒரு முயற்சியை தொடங்கியிருக்கிறது மாநகராட்சி. தெருவில் குப்பை கொட்டுவதற்கு விதிக்கப்படும் அபராதத்தை ஐந்து மடங்கு உயர்த்துகிறது. சிங்கார சென்னை என்று சொல்லும்போது நன்றாக இருந்தாலும் அது உண்மை இல்லை. இந்தியாவின் ஏனைய பெரு நகரங்கள் எதனோடு ஒப்பிட்டாலும் சென்னையின் சிங்காரம் கடைசிதான். எல்லா ஊர்களில் இருந்தும் மாநிலங்களில் இருந்தும் வந்தேறும் மக்கள் அதிகம் என்பதால், 'இது நமது நகரம்' என்ற அக்கறையோ பற்றுதலோ பெரும்பாலானவர்களிடம் இல்லை. 


அதற்காக இதையே சாக்கிட்டு மாநகராட்சி தனது பொறுப்பை தட்டிக் கழிப்பதும் சரியல்ல. பொது இடத்தில் குப்பை கொட்டினால் ஸீ 100 அபராதம் என்று  2008ம் ஆண்டே மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றியது. அடுத்த இரண்டு வாரங்களில் 2,500 பேர் அபராதம் செலுத்த நேர்ந்தது. அதோடு வேகம் குறைந்தது. சென்ற ஆண்டு முழுவதிலுமாக 2,100 பேர்தான் சிக்கியுள்ளனர்.

குப்பை கொட்டுவோர்  குறைந்துவிட்டார்கள் போலும் என்று வெளியூர்வாசிகள் நினைக்கலாம். 'நிச்சயமாக இல்லை' என அன்றாடம் ஊரை சுற்ற  வேண்டிய வேலைகளில் இருப்பவர்கள் அடித்துச் சொல்வார்கள். சாலையில் எச்சில் துப்புவது, சிறுநீர் கழிப்பது ஆகிய பிரச்னைகளுக்கான தீர்வும் இப்படித்தான் செயலிழந்து நிற்கிறது. கடந்த ஆண்டு இந்த வகையில் மாநகராட்சிக்கு கிடைத்த வருமானம் எவ்வளவு தெரியுமா? 250 ரூபாய். பத்து பேர்தான் துப்பியிருக்கிறார்கள்.

மும்பை மாநகராட்சி தேவலாம். கடந்த ஆறு மாதங்களில் இரண்டரை கோடி ஈட்டியுள்ளது. அதை தாண்டிவிட வேண்டும் என நமது அதிகாரிகளுக்கு ஆசை. சிங்கப்பூர், லண்டன் மாதிரி இங்கேயும் தூய்மை விதியை அமல்படுத்துவோம் என்கிறார்கள். அந்த நகரங்களில் எச்சில், சிறுநீருக்கு அபராதம் இந்திய ரூபாய் மதிப்பில் 9,000 முதல் 13,000 வரை. சட்டங்களுக்கும் விதிகளுக்கும் இந்தியாவில் பற்றாக்குறை இருந்ததில்லை. செயல்படுத்துவதில்தான் மெத்தனமும் ஊழலும் மேலிடுகிறது. பிளேக் பரவி உயிர்கள் பலியான பிறகுதான் நாட்டிலேயே சுத்தமான நகராக சூரத் மாற்றப்பட்டது. அப்படி எதுவும் நடப்பதற்குள் சென்னையை சுத்தமான நகராக மாற்ற  எடுக்கப்படும் எந்த நடவடிக்கையையும் மக்கள் முழுமனதோடு ஆதரிப்பார்கள்.




நன்றி: Dinakaran

No comments:

Post a Comment