Saturday, 23 June 2012

நல்ல மனம் வேண்டும்

நல்ல மனம் வேண்டும்
வறுமையும் படிப்பின்மையும் நிறைந்த வட மாநிலங்களைவிட எல்லா வகையிலும் முன்னணியில் நிற்கும் தென் மாநிலங்களில் தற்கொலை அதிகம் என்பது ஆச்சரியமான தகவல். படித்த இளைஞர்களால் வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ள முடியாதது கவலைக்குரியது. இப்படியே போனால் இளைஞர்களின் மரணத்துக்கு தற்கொலையே பிரதான காரணமாக மாறிவிடும் என்று பிரிட்டனின் மரியாதைக்குரிய  மருத்துவ பத்திரிகையான லான்செட் எச்சரிக்கிறது. இப்போது முதலிடத்தில் இருப்பது பிரசவத்தின்போது நிகழும் மரணங்கள். விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முன்னேற்றத்தின் விளைவாக பிரசவம் பாதுகாப்பானதாக மாறிவரும் வேளையில் தற்கொலை அந்த இடத்தை பிடிப்பது சாத்தியமே. நாட்டின் 40% தற்கொலை  தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் நிகழ்வதாக லான்செட்டில் வெளியான ஆய்வு கூறுகிறது. மக்கள்தொகையில் இந்த மாநிலங்களின் பங்கு 22 சதவீதம்தான். 2010ல் நமது மாநிலத்தில் 24,000 பேர் வாழ்க்கையை முடித்துக் கொண்டுள்ளனர். பெரும்பாலும் பூச்சி கொல்லி மருந்து கைகொடுத்திருக்கிறது. இந்த விவரம் முன்பு வெளியான நேரத்தில், விவசாயிகள்தான் அதிக எண்ணிக்கையில் தற்கொலை செய்வதாக தோன்றியது.  இந்த ஆய்வு அதற்கு மாறான சித்திரத்தை காட்டுகிறது. ஆளை கொல்லும் பூச்சி மருந்துகள் நகரங்களிலும் தாராளமாக கிடைப்பது புரிகிறது. யார் யார் என்ன காரணங்களுக்காக தற்கொலை செய்கிறார்கள் என்பது சிக்கலான பெரிய கணக்கு. முடிவு வினாடி நேரத்தில் எடுக்கப்பட்டாலும், அதற்கான உந்துதல் நீண்ட காலம் மனதில் ஊறிக் கொண்டிருக்கும் என்கிறார்கள் மன இயல் நிபுணர்கள். அறிகுறிகள் மூலம் அவர்களால் கண்டுபிடிக்க, சிகிச்சை மூலம் சரிப்படுத்தவும் இயலும். ஆனால் மன நோயாளி என்ற முத்திரை விழுமோ என்ற அச்சம் தடுக்கிறது. உடலுக்கு வருவது போல மனதுக்கும் (மூளைக்கு) நோய்கள் வரலாம் என்ற எதார்த்தத்தை ஏற்பதில்லை. சமூகத்தையும் குறை சொல்லாமல் இருக்க முடியாது. பிறரை கொல்வது பெரும் குற்றம், மகா பாவம் என்று சொல்கிற மக்கள் சுய கொலையை அப்படி பொருட்படுத்துவது இல்லை. 'ஏதோ போய்விட்டான். அவன் குடும்பம் பாவம். மற்றபடி யாருக்கும் கெடுதல் செய்யவில்லையே' என்ற சமாதானம். இதெல்லாம் மாறாமல் அரசாங்கம் தலையிட்டு பயனேதும் ஏற்படாது.





நன்றி: Dinakaran

No comments:

Post a Comment