Tuesday, 19 June 2012

இப்போது தெரியாது|

இப்போது தெரியாது|

வாழ்க்கையில் சில சந்தர்ப்பங்கள் அதிர்ஷ்டமா கண்டமா என்று அப்போது  தெரியாது. நாம் எடுக்கிற முடிவை தொடர்ந்து ஏற்படும் விளைவுகள்தான் அதை உணர்த்தும். சீனா விஷயத்தில் இந்தியாவுக்கு அப்படியொரு சந்தர்ப்பம் இப்போது வாய்த்திருக்கிறது. கம்யூனிஸ்ட் நாடான சீனாவின் ராணுவ பலம் சர்வதேச செல்வாக்கு அதிகரிப்பது உலக சமன்பாடுகளுக்கு நல்லதல்ல என அமெரிக்கா நம்புகிறது. ஆனால் சீனாவை கட்டுக்குள் வைக்க வேண்டுமானால் சக்தி வாய்ந்த தனது கடற்படையின் 60 சதவீத பிரிவுகளை இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் நிலைநிறுத்தினால் மட்டும் போதாது என்பதை அது உணர்ந்துள்ளது. இந்தியாவின் ஆதரவு அவசியம் என்று நம்புகிறது. அதை பெறுவதற்காக பல வகையில் முயன்று வருகிறது. இதை பார்த்து சீனாவுக்கு கவலை. அமெரிக்கா உருவாக்கும் கூட்டணியில் இந்தியா இடம் பெறாமல் தடுக்க விரும்புகிறது. 'என்ன இருந்தாலும் இந்தியா சுயமாக சிந்தித்து சுதந்திரமாக முடிவு எடுக்கக்கூடிய பலமான நாடு. யாரையும் சார்ந்திருப்பது இந்தியர்களுக்கு பிடிக்காது' என்று புதிய பாடலை ஒலிக்க விடுகிறது. 'வல்லரசு ஆகணுமாம். ஆசைக்கும் அளவு வேண்டாமா..' என்று நம்மை ஏளனம் செய்துவந்த சீன பத்திரிகைகள், 'இந்தியாவும் சீனாவும் கைகோர்த்தால் உலகமே காலடியில்' என்று சிந்து பாடுகின்றன.      அண்டை நாடுகளை வசப்படுத்தி இந்தியாவை சுற்றிலும் 'முத்து மாலை' கோர்க்கும் திட்டத்தை உருவாக்கிய சீனா, இன்று தனக்கு எதிராக அதே வியூகம் வகுக்கப்படுவதால் கலங்குகிறது. அதை முறியடிக்க இந்தியா மீது திடீர் பாசம் காட்டுகிறது. ஒரு வேளை இந்த உத்தி பலிக்காவிட்டால் 'முத்து மாலை' திட்டத்தை முடுக்கி விடுவதோடு இந்தியாவில் பெருமளவில் குழப்பம் உண்டாக்கலாம். மாவோயிஸ்ட் அமைப்புகளுக்கு அளிப்பது போல  வடகிழக்கு மாநிலங்களின் பிரிவினை இயக்கங்களுக்கும், காஷ்மீர் பஞ்சாப் தமிழகம் ஆந்திர மாநிலங்களில் மத்திய அரசு மீது வெறுப்புடன் இயங்கும் அமைப்புகளுக்கும் சீனா உதவக்கூடும். இந்தியாவுக்கு எதிராக சீனாவும், தலிபானுக்கு எதிராக அமெரிக்காவும் தனக்கு கொம்பு சீவிவிட்டபோது இருவரிடமும் பேரம் பேசி வாரி குவித்தது பாகிஸ்தான். அதுபோல ஆக்கிரமிப்பு காஷ்மீர், அருணாசல் பிரதேஷ், எல்லைக்கோடு போன்ற பிரச்னைகளுக்கு சீனாவுடன் தீர்வு காண இந்த சந்தர்ப்பத்தை இந்தியா பயன்படுத்துமா என்ற கேள்வி எழுகிறது. 1962ல் ஊடுருவிய சீனாவிடம் இனியும் ஏமாறக்கூடாது என்ற எச்சரிக்கையும் அவசியம். '21ம் நூற்றாண்டின் முக்கியமான உறவு சீனா & இந்தியா நட்புதான்' என்று சீன துணை பிரதமர் லீ கிஜியாங் நேற்று சொன்னாராம். எங்கோ கேட்ட மாதிரி இருக்கிறதா? நமது நாடாளுமன்றத்தில் அதிபர் ஒபாமா பேசும்போது சொன்னாரே, '21ம் நூற்றாண்டின் தலைவிதியை எழுதப்போவது அமெரிக்கா & இந்தியா நட்புதான்' என்று. எவர் சொன்னது பலித்தது என்று தெரிந்து கொள்ள 88 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.




நன்றி: Dinakaran

No comments:

Post a Comment