Sunday, 24 June 2012

மாய நிஜத்தில் மணக்கும் திரைப்படங்கள்

மாய நிஜத்தில் மணக்கும் திரைப்படங்கள்

செறி எயிற்று அரிவை கூந்தலின் நறியவும் உளவோ நீ அறியும் பூவே" என்று சொன்னால் பல்லை நற நற என்று கடிப்பீர்கள். உங்களுக்கு மட்டுமா, இன்றைய தமிழ் வாத்தியார் பையன்களுக்குக் கூட பொருள் புரியாது. ஆனால், அந்நாளில் மன்னருக்குப் புரிந்தது.

 தனது அரசமாதேவியின் கூந்தல் மணம் இயற்கையானதா அல்லது வாசனாதித் திரவியங்கள் பூசிக் கொள்வதால் வந்ததா? தமிழக வளர்ச்சிக்கு மிகத் தேவையான சந்தேகம். அரசர் என்பதால் இறையனாரே ராணிக்கு சாதகமாகத்தான் தீர்ப்பு வழங்கினார்.

 பெண் கூந்தலுக்கு இயற்கையிலேயே நறுமணம் உண்டு என்று அர்த்தமாம். எதிர்த்துக் கேட்டால் எரித்துக் கொல்லத்தான் செய்வார்கள். இந்தத் திருவிளையாடலைத்தான் அரசியல்வாதிகளும் பய பக்தியுடன் கையாள்கிறார்கள். அறிவியல் ரீதியில் உரோமத்திற்குச் சிறந்த மணம் கிடையாது. உண்மையில் சிக்கும் செள்ளும் ஆண், பெண் பேதம் பார்க்காது. இருக்கும் இடத்திற்கு ஏற்ப முடி மணம் மாறும். அவ்வளவுதான்.

 போகட்டும், சுவிட்சர்லாந்துப் பெண் விஞ்ஞானிக்கு ஒரு யோசனை. தம் நாட்டு வங்கியில் இந்திய ஆண் பணம், பெண் பணம் எவ்வளவு என்பது பற்றி அல்ல. ஆணுக்கும் பெண்ணுக்கும் உடல் வாசனை மாறுபடுகிறதா என்பதை ஆராய்ந்தார். ஜெனிவா நகரில் ஃபெர்மெனிச் என்கிற கம்பெனி ஆய்வாளர் கிறிஸ்டியன் ஸ்டர்க்கென்மான்.

 24 ஆடவர்களையும், 25 பெண்களையும் தமது ஆய்வுக் கூடத்திற்கு வரவழைத்தார். நிறுத்திவைத்த "பைக்' வாகனத்தை ஒவ்வொருவராகத் தனித்தனியே 15 நிமிட நேரம் ஓட்டச் செய்தார். அவரவர் வியர்க்க விறுவிறுக்க வந்தவர்களின் அக்குளில் வியர்வை மாதிரிகள் எடுத்துப் பரிசோதித்தார். ஆராய்ச்சியைப் பாருங்கள். தோலில் "அப்பாக்ரின்' சுரப்பிகள் அருளும் நீர்மங்கள். தாய்ப்பாலில் கொழுப்பு சேர்ப்பதும், பாலுறுப்புகளில் வழுவழுப்பு கூட்டுவதும், காதுக்குள் குரும்பி மெழுகு திரட்டுவதும், மேல் தோலில் வியர்வை சுரப்பதும் எல்லாம் அப்பாக்ரின் சுரப்பியின் ஆசீர்வாதம்.

 எப்படியோ, ஆண்களின் அக்குளில் பாலாடைக் கட்டி மணமும் பெண்மணிகளின் உடம்பில் இருந்து வெங்காய வாசனையும் அடித்ததாம். காரணம், பெண்களிடம் ஒரு மில்லி லிட்டர் வியர்வையில் 5 மில்லிகிராம் கந்தகக் கூட்டுப்பொருள் அடக்கம். ஆண்களிடமோ கந்தக அம்சம் பத்தில் ஒருபங்குதான். ஆண் வியர்வையில் பெருமளவு கொழுப்பு அமிலங்கள்.

 உடம்பில் சில நுண்ணுயிரிகள் புரதத்தினைச் சிதைத்து அமிலங்களாக மாற்றுகின்றன. உடல் நாற்றத்தின் அடிப்படை புரொப்பியானிக், ஐசோவாலெரிக் அமிலங்கள். தர்ப்பூசணி தொப்பைகள், கார மசாலா தின்னிகள், நீரிழிவு நோயாளிகள் எனச் சிலரிடம் இந்தத் துர்நாற்றம் "கப்' அடிக்கும். குடிகாரர் அருகில் அழுகல் பழத்தின் வினாகிரி அமில வீச்சம்.

 உடல் மண வேற்றுமைக்கு அவரவர் உணவுப் பழக்கமும், உடை அழுக்கும், குளியல் முறைகளும் காரணம். இங்கிலாந்து நாட்டில் அவர்கள் கார் ஓட்டு கைப்பிடியில் பாக்டீரியாக்கள் எண்ணிக்கை எக்கச் சக்கம் என்கிறது ஒரு புள்ளிவிவரம். இருக்காதா பின்னே? கழிவறையிலும், உணவறையிலும் அசுத்தத்தைக் காகிதத்தில் துடைத்துப்போடும் மேனாட்டவர்க்கு இந்தியர் உடல் நாற்றம் பிடிக்காது.

 ஆனால், எங்கும் மணல், கருங்கல், பளிங்குப் பாறை என்று இயற்கையை உடைத்து விற்கும் குளிர் அறைவாசிக்குப் பணவாடை மட்டுமே பிடிக்கும். அதற்காக இந்தியாவில் கொள்ளை அடித்துவிட்டு இந்தோனேசியாவில் நீந்திக் குளிக்கச்சென்று இருக்கிறார் ஒரு முக்கிய ஜார்க்கண்ட் புள்ளி. அவர் மீது 4,000 கோடி ஊழல் வீச்சம். வடக்கே தாடி, தலைப்பாகைப் பின்னணியில் நிலக்கரி நாற்றம். அது மட்டுமா, தலைமைக்குத் தெரியாமல் சம்பாதித்தவர்களை மோப்பம் பிடித்துப் புலனாய்வுகளும் கைது விசாரணைகளும் தொடர்கின்றன.

 எப்படியோ, தமிழகத்தின் கூவம் தலைநகரிலும் பாய்கின்றதே. தேர்வில் தோற்றவர் போலிச் சான்றிதழோடு அலுவலில் சேர்ந்து, மூன்று ஆண்டுகள் கழித்துப் பிடிபட்டால் ராஜ குற்றம். தேர்தலில் "தோற்றவர்' (?) ஆட்சிக் கூடத்தில் அரசு ஆவணங்களில் கையெழுத்து இட்ட ஆணைகள் என்ன அத்துமீறல்கள் ஆகாதா?

 ஏதாயினும் அரசியின் முடி நாற்றமும், முடி அரசியின் நாற்றமும் எல்லாம் சரிதான். புரட்சிக் கவிஞர் பாடியதுபோல, "உருவினையும், ஒலியினையும் ஒன்றாகச் சேர்த்தே ஒளிபெருகத் திரையினிலே படம் காட்டும் கலை'யில் மணமும் கூட்டும் ஆராய்ச்சி ஒருபுறம் ஈடேறி வருகின்றது.

 முப்பாட்டன் காலத்தில் ஊமைப் படங்கள். பாட்டன் கண்ட பேசும் படங்கள். இன்றைக்கு மணக்கும் படங்கள் ஆக இருப்பது அறிவியல் ஆச்சரியம்தான். அதாவது, திரையில் வரும் சமையல் காட்சிகளின் வாசனை நம் நுனி மூக்கைத் துளைக்க வேண்டும். இதுவே "மணக் காட்சி'.

 ஆரம்பத்தில் 1916-ஆம் ஆண்டு அமெரிக்கத் திரையரங்கில் இந்த உத்தி முதன்முறையாகத் தொடங்கப்பெற்றது. "ரோஜாத் தொட்டி விளையாட்டு' என்ற செய்திக் குறும்படக் காட்சிப் பரிசோதனை அது. மின்விசிறி முன்னால் பன்னீர் வாசனைப் பஞ்சு பொருத்தி அரங்கில் வாசனை பரவச் செய்தனர். பென்சில்வேனியாவின் வன நகரில் "குடும்ப அரங்கு' ஒன்றில் இந்த உத்தி பரீட்சார்த்தமாக அறிமுகம் ஆயிற்று.

 1929 ஆம் ஆண்டு நியூயார்க் அரங்கு ஒன்றில் "அகலவீதி இன்னிசை' என்கிற திரைப்படக் காட்சி. அரங்கின் மேற்கூரையில் இருந்து வாசனைத் திரவியத்தைத் தெளித்தனர் ஊழியர்கள். டெட்ராய்ட் நகரில் மிச்சிகன் திரையரங்கில் "கடற் பருந்து' போன்ற திரைப்படங்களில் இந்த உத்தி இடம்பெற்றதாம்.

 தொடர்ந்து, 1959 ஆம் ஆண்டு "பெரும் சுவருக்குப் பின்புறம்' என்ற திரைப்படக் காட்சியில் வேறு நுட்பம் புகுந்தது. அரங்கின் குளிரூட்ட அமைப்பு வழியாகவே மணப்பொருள்களைப் பரப்பினர். அந்த அமைப்பிற்கு "அரோமா ரமா' (தமிழில் "மணோ ரமா') என்றே பெயர்.

 ஆயினும் 1943 ஆம் ஆண்டு "நியூயார்க் டைம்ஸ் இத'ழில் இத்தகைய "வாசனைக் காட்சி' ("சென்டோ விஷன்') தொடர்பாக இன்னொரு புதுமைச் செய்தி. திரைப்படச் சுருள் விளிம்பில் ஒலித்தடத்திலேயே மணம் கிளப்பத் தேவையான "கேளா ஒலியலைகள்' பதிந்து விட்டால் போதும். மணக்காட்சி திரையில் வரும்போது அந்தக் காட்சியில் வெளிப்படும் மணத்தைப் பார்வையாளர்க்கு உணர்த்தலாமாம்.

 1960 ஆம் ஆண்டுகளில் பிரபல ஹாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர் மைக்டாட் என்பவரின் புதல்வர் ஜூனியர் மைக் டாட் என்பவர் "மர்ம வாசனை' என்று ஓர் திரைப்படம் தயாரித்தார். அதில் வெள்ளித்திரையில் வரும் காட்சிக்கு ஏற்ப திரையரங்கில் மணம் பரவும்.

 எப்படி என்றுதானே? திரையரங்கின் ஒவ்வொரு இருக்கையிலும் ஏறத்தாழ 30 வகை வாசனைத் திரவியங்கள் சிறுகலன்களில் நிரப்பப்பட்டு இருக்கும். அவற்றின் மின் அடைப்புகள் ஒரு குறித்த அலைநீள ஒலியலைகளால் தூண்டப்பட்டுத் திறக்கும். அப்போது அந்தந்த வாசனைத் திரவியக் கலன்கள் விசேஷ மணம் பரப்பும்.

 இதே நுட்பம் இன்று பெருமளவு வளர்ந்து வருகிறது. 1990 ஆம் ஆண்டுகளில் அவெரி கில்பர்ட் என்னும் வாசனை விஞ்ஞானி "டிஜி சென்ட்ஸ்' என்கிற இலக்கவியல் வாசனைத் தொழில்நுட்பக் கம்பெனியில் இந்தத் தொழில்நுட்பத்தை மேம்படுத்தினார்.

 இதில் மரம், புல், தாவரங்கள் ஆகிய முக்கிய மூன்று வித வாசம் மட்டும் வெளிப்படும்படி ஒரு கருவி தேவை. மணக்காட்சிக்கு ஏற்ப அதனை இயக்குவிக்கலாம்தான்.

 இங்கிலாந்தில் "பான் லாப்ரிந்த்' என்ற திரைப்படம் வெளியானது. அதன் விசேஷம் என்னவென்றால், திரையில் தோன்றும் மீன் சந்தையின் கவிச்சை வாடை அரங்கினுள் உணரப்படும்.

 சமீபத்தில் "ஸ்மெல் இட்' என்ற பெயரில் ஒரு கருவி பிரான்சில் அறிமுகமாகி இருக்கிறது. "இதை முகர்' என்று பொருள். மலர்களின் நடுவில் நின்று ஆடினால் சுகந்தம் நம் இமைகளைத் தழுவ வேண்டும்.

 நம் கோடம்பாக்கத்தில் இந்த உத்திகள் நடைமுறைக்கு வர இன்னும் நூறாண்டுகள் ஆகும். இங்கேதான் நாயகர்கள் மணம் இல்லாத வறண்ட பாலைவனங்களில் அல்லவா குதியாட்டம் போடுகிறார்கள்.

 நடிகையரும் நடிகர்களும் மேலாடை சட்டைகளைத் தூக்கி முகத்திரை மறைத்து ஆடும்போது வியர்வை நாற்றம் அரங்கில் சகிக்க முடியாமல் போகுமே.

 ஆனால் ஜப்பானின் சோனி நிறுவனத்தினர்க்கு முற்றிலும் புதியதோர் சிந்தனை தோன்றியது.அதன்படி, மணப்பொருள் கலன்களே தேவையில்லை. காட்சி ஒலி அலைகளின் மேல் அதிர்வெண் கூடுதலான கேளா ஒலியலைகளையும் ஏற்றிப் பரவ விடலாம். அந்தப் புற ஒலியலைகள் காட்சியில் எந்தவொரு ஒலிக்கும் இடையூறாகவும் இராது. கேளா ஒலி ஆயிற்றே!

 பொதுவாக, ஒவ்வொரு வாசனையையும் மூளை ஒரு குறித்த பகுதியில் நிகழும் வேதியியல் மாற்றங்களால் உணர்கிறது. எந்தப் பகுதியினால் அந்த வாசனை உணரப்படுகிறதோ, மூளையில் அந்தந்த இடங்களைக் கண்ணுக்குத் தெரியாத கேளா ஒலியினால் தூண்டிவிட்டால் போதுமே. படம் காண்பவர்க்கு நிகழ் திரையில் தோன்றும் பொருளின் மணம் நிஜத்தில் உணரப்படும். இது புது வகை "மாய நிஜம்'.

 சமீபத்தில் "இணைய மணக்காட்சி' என்கிற அதிநவீனத் தொழில்நுட்பம் குறித்து தென்கொரிய நாடு சிந்தித்து வருகிறது.

 "வாசனை தூண்டும் தொலைப்படக் காட்சிக் கருவிகள்' எனும் அமைப்பு இத்துறையில் 2015 ஆம் ஆண்டிற்குள் தன் கனவை நனவாக்கிவிடும் என்று தெரிகிறது.

 




நன்றி: Dinamani

No comments:

Post a Comment