Saturday, 23 June 2012

ஏழைகளை மேம்படுத்தாத பொருளாதாரம்!

ஏழைகளை மேம்படுத்தாத பொருளாதாரம்!

பொருளாதார வீழ்ச்சி குறித்து இந்திய அரசை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பொருளாதார அமைப்புகள் எச்சரித்துக் கொண்டிருக்கின்றன. மத்திய புள்ளியியல் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள தகவலின்படி, 2011-12-ஆம் ஆண்டுக்கான கடைசி காலாண்டின் வளர்ச்சி 5.3% ஆகும். இது, முந்தைய காலாண்டில் இருந்த 6.1 சதவிகிதத்தைக் காட்டிலும் மிகக் குறைவாகும். கடந்த ஆண்டின் இதே காலாண்டில் இருந்த 9.2 சதவிகிதத்தோடு ஒப்பிடுகிறபோது, இது மிக மிக மோசமான ஒன்றாகும். இந்த ஆண்டின் மொத்த வளர்ச்சியே 6.5% ஆகத்தான் இருக்குமென்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 8 ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவாகும். பொருளாதாரத்தின் முக்கிய 3 பிரிவுகளான விவசாயம், பொருளுற்பத்தி, சேவைத் துறைகள் சிறப்பாகச் செயல்படவில்லை என மத்திய புள்ளியியல் நிறுவனம் தெரிவிக்கிறது.

 நிகழாண்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 6.9% ஆக இருக்கும் என உலக வங்கி சற்று கூடுதலாகக் கூறியிருந்தாலும், 2012-13-ஆம் ஆண்டுக்கான வளர்ச்சி 7.2% ஆகத்தான் இருக்குமென அது கூறுகிறது. முன்னதாக, 8.5% ஆக இருக்குமென அதே உலக வங்கி கணித்திருந்தது. இன்னொரு விதத்தில் சொல்வதெனில், வரும் ஆண்டுகளில் பொருளாதார மந்த நிலை தொடரும் என அது சுட்டிக்காட்டுகிறது.

 அமெரிக்காவைச் சேர்ந்த கடன் மதிப்பீட்டு நிறுவனமான ஸ்டாண்டர்டு அண்ட் பூவர் (எஸ்&பி), இந்திய பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள மந்த நிலையையும் கொள்கை முடிவுகள் எடுப்பதில் உள்ள அரசியல் தடைகளையும் சுட்டிக்காட்டி, முதலீட்டுத் தர மதிப்பீடான "பிபிபி'யை இந்தியா இழக்கக்கூடும் என எச்சரித்துள்ளது. 2007-இல் முதலீட்டு தர மதிப்பீட்டிற்கு இந்தியா உயர்த்தப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவுக்கு "நிலைத்தன்மை' என்பதிலிருந்து "எதிர்மறை' என்ற தர மதிப்பீடு தரப்பட்டது. எஸ்&பி நிறுவனம் "ஏஏஏ' என்பதிலிருந்து "டி' வரை பல்வேறு தர மதிப்பீடுகளை வைத்திருக்கிறது. ஒரு நாடு "ஏஏஏ' தர மதிப்பீடு பெற்றிருந்தால், அந்த நாடு சிறப்பான பொருளாதார வல்லமை கொண்டிருக்கிறது என்று பொருள். பொருளாதார முட்டுக்கட்டை தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் செயல்பாடு குறித்தும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத பிரதமரான மன்மோகன் சிங் குறித்தும் எஸ்&பி நிறுவனம் விமர்சித்துள்ளது.

 எஸ்&பியின் கருத்துகளால் மத்திய அரசு உண்மையிலேயே துவண்டுபோனது. இது இயற்கைதான். அரசின் செய்தித் தொடர்பாளர்கள் அந்த அமைப்பின் தர மதிப்பீட்டு கணக்கீட்டு முறையை விமர்சித்தனர். அத்துடன் அதன் கணக்கீட்டு முறை வெளிப்படைத் தன்மையுடன் இல்லை என்றும் அவர்கள் குறை கூறினர். அந்த நிறுவனத்தின் மதிப்பீடு நமது பொருளாதாரத்தின் அசலான தன்மையை மாற்றிவிடப் போவதில்லை என்பது உண்மைதான். ஆனால், துரதிருஷ்டவசமாக உள்நாட்டுப் பொருளாதாரத்தை அன்னிய சக்திகள் பாதிக்கும் விதத்திலேயே நமது பொருளாதாரத்தை நாம் இதுவரை நடத்தி வந்திருக்கிறோம்.

 குறிப்பாக, நெருக்கடி மிக்க காலகட்டமான 1990-91 ஆம் ஆண்டில் கடன் தர மதிப்பீட்டு நிறுவனங்களின் பங்கை மறப்பது மிகக் கடினம். அப்போது பணவீக்கம் 17%ஆக கொடிகட்டிப் பறந்தது. நிதி நிலை படுமோசமாக இருந்தது. அன்னியச் செலாவணிக் கையிருப்பு வற்றிப் போயிருந்தது. ஒரு சில வாரங்களுக்கு முக்கியமான இறக்குமதியை சமாளிக்கும் அளவுக்கே இருப்புகள் இருந்தன. இதனால், இந்தியாவுக்கு வழங்கியிருந்த தர மதிப்பீட்டை அந்த நிறுவனங்கள் மிக மோசமாகக் குறைத்தன. விளைவு, வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் தங்கள் வைப்புகளையும் முதலீடுகளையும் திரும்பப் பெறத் தொடங்கினர். வெளியிலிருந்து கடன் வாங்குவது கடினமாயிற்று. இதைத் தொடர்ந்து இந்திய ரிசர்வ் வங்கி தன் வசமிருந்த தங்கத்தை வெளிநாட்டு வங்கிகளில் அடமானம் வைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.

 ஆனால், அந்த அளவுக்கு இப்போதைய நிலை மோசமில்லை. மக்களின் பொருளாதார மேம்பாடு என்பது புறக்கணிக்கப்பட்டதாகவே உள்ளது. முக்கிய காரணிகளான வளர்ச்சி, பற்று மிகுதி ஆகியன மக்களின் வாழ்க்கையில் எந்த பாதிப்பையும் உருவாக்கவில்லை.

 பெரும்பாலான மக்களின் வாழ்நிலை அப்படியே உள்ளது. வளர்ச்சி அதிகமாக உள்ளது என்று கூறிய காலத்திலும் இந்த நிலைதான் தொடர்ந்தது.

 1990-ஆம் ஆண்டிலிருந்து வளர்ச்சி ஆரம்பமானது. ஆண்டுவாரியாக இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வருமாறு: 
1991-92 - 1.4%,
1992-93 - 5.4%, 
1993-94 - 5.7%, 
1994-95 - 6.4%, 
1995-96 - 7.3%, 
1996-97 - 8%, 
1997-98 - 4.3%, 
1998-99 - 6.7%, 
1999-2000 - 7.6%, 
2000-01 - 4.3%, 
2001-02 - 5.5%, 
2002-03 - 4%, 
2003-04 - 8.1%, 
2004-05 - 7%, 
2005-06 - 9.5%, 
2006-07 - 9.6%, 
2007-08 - 9.3%, 
2008-09 - 6.7%, 
2009-10 - 8.4%, 
2010-11 - 8.4%.

 வளர்ச்சி விகிதம் உயர்வாய் இருந்தபோதும், ஏழைகள் ஏழைகளாகவே இருந்தனர். உதாரணமாக, உணவு தானிய உற்பத்தியில் பெரும் வளர்ச்சியை எட்டிவிட்டதாகக் கூறிக் கொள்கிறோம். 2010-11-இல் 24.5 கோடி டன்கள் உணவு தானிய உற்பத்தி எட்டப்பட்டது. 1950-ஆம் ஆண்டோடு ஒப்பிடுகிறபோது இது 5 மடங்கு அதிகம். ஆனால், இந்த உற்பத்தியை மக்கள்தொகைப் பெருக்கத்துடன் ஒப்பிடும்போது, இது ஒரு வளர்ச்சியே அல்ல. பெரு வளர்ச்சிக்கு முந்தைய ஆண்டான 1991-இல் ஒரு தனி நபரின் தானிய நுகர்வு ஒரு நாளுக்கு 510.1 கிராம் ஆக இருந்தது. ஆனால், இது படிப்படியாகக் குறைந்து 2010-இல் ஒரு தனிநபரின் தானிய நுகர்வு 438.6 கிராம் என்றானது. அதாவது, நமது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி அதிக அளவாக இருப்பதாகக் கூறிக்கொண்ட காலங்களில் தனிநபர் தானிய நுகர்வு வீழ்ச்சியடைந்திருந்தது.

 உணவு தானியம் கிடைப்பது மட்டுமின்றி மக்களின் வாங்கும் திறனும் குறைந்துள்ளது. பசி நிறைந்த ஒரு நாட்டின் கிட்டங்கிகளில் உணவு தானிய சேமிப்பு மட்டும் அதிக அளவில் இருந்தது.

 உயர் வளர்ச்சி விகிதம் வேலைவாய்ப்பை அதிகரிக்கவில்லை. இன்னமும் 50 சதவிகித வேலைவாய்ப்பைக் கொண்டிருக்கும் அமைப்புசாராப் பிரிவான விவசாயம் திருப்திகரமாக இல்லை. 1995-2000 ஆண்டுகளுக்கு இடையில் 2.65 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

 விவசாயத்தின் நிலை இன்றைக்கு எப்படி உள்ளது என்பதற்கு இதைக் காட்டிலும் வேறு சான்று தேவையில்லை. நெசவுத் தொழிலாளர்கள், கைவினைக் கலைஞர்கள் நிலையும் மோசமாகவே உள்ளது. நெசவுத் தொழிலாளர்களின் தற்கொலைச் செய்திகள் வந்துகொண்டேயிருக்கின்றன. விவசாயம், சிறு தொழில் பிரிவுகள் தொடர்ந்து மிக மோசமான நிலையிலேயே உள்ளன. வேலைவாய்ப்பைப் பெருக்காத இந்த வளர்ச்சி மக்களின் நலனை உறுதிப்படுத்தவில்லை. மாறாக செல்வமெல்லாம் ஒரு சில இடங்களில் மட்டுமே சேர்வதற்கு வழிவகுத்தது. ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி உயர்வால் மக்களின் வாழ்க்கைத் தரத்தில் மேம்பாடு ஏற்பட்டதற்கான ஆதாரம் எதுவுமில்லை.

 வேலைவாய்ப்புகள் தரமுள்ளவை என்றும் அதன் பணியாளர்கள் கூடுதல் சம்பளம் பெறுகிறார்கள் என்றும் பணிச்சூழல் சிறப்பாக உள்ளது என்றும் கருதப்படுகிற அமைப்புசார்ந்த துறைகளிலும் வேலைவாய்ப்பு குறைந்திருக்கிறது அல்லது தேக்கம் நிலவுகிறது.

 1991-இல் பொதுத் துறையில் 1.9 கோடி வேலைவாய்ப்புகளும் தனியார் துறையில் 76 லட்சம் வேலைவாய்ப்புகளும் இருந்தன. 2010-இல் பொதுத்துறையில் 1.78 கோடி வேலைவாய்ப்புகளும் தனியார் துறையில் 1.07 கோடி வேலைவாய்ப்புகளும் இருந்தன.

 விரிவடைந்துவரும் பொருளாதாரத்தில், அது விரிவடையும் அளவுக்கு வேலைவாய்ப்புகளும் பெருக வேண்டும். துரதிருஷ்டவசமாக அவ்வாறு பெருகவில்லை. 1991-இல் பொதுத்துறையில் 1.9 கோடியாக இருந்த வேலைவாய்ப்பு 2010-இல் 1.78 கோடியாகக் குறைந்தது. கிட்டத்தட்ட 12 லட்சம் வேலைவாய்ப்புகள் குறைந்துபோயின. 1991-ஆம் ஆண்டில் பொதுத் துறையையும் தனியார் துறையையும் சேர்த்து மொத்தமாக 2.67 கோடி வேலைவாய்ப்புகள் இருந்தன. 2010-ஆம் ஆண்டு இரு துறைகளிலும் மொத்தமாக 2.86 கோடி வேலைவாய்ப்புகள் இருந்தன. ஆக, 1991 முதல் 2010 வரையிலான 20 ஆண்டு காலகட்டத்தில் 19 லட்சம் வேலைவாய்ப்புகளே பெருகியுள்ளன. 121 கோடி மக்கள்தொகை கொண்ட ஒரு நாட்டுக்கு இது கடலில் கரைத்த பெருங்காயம் போன்றதாகும். வேலைவாய்ப்பில் அமைப்புசார்ந்த துறைகளின் பங்களிப்பு 7% மட்டுமே. இதன் பொருள், நமது பொருளாதார வளர்ச்சி மக்களின் வாழ்நிலையை மேம்படுத்தவில்லை என்பதுதான்.

 2012 ஜூன் 1-ஆம் தேதிப்படி நமது அன்னியச் செலாவணி கையிருப்பு 285 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். இறங்குமுகத்தில் இருக்கும் இறக்குமதியை அடுத்த 7 மாதங்களுக்கு சமாளிப்பதற்கு இந்தக் கையிருப்பு போதுமானது. 2011 ஜூன் மாதம் நமது அன்னியச் செலாவணி கையிருப்பு 312 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. (ஒரு பில்லியன் என்பது 100 கோடி ஆகும்). அதாவது 27 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதிகமாக இருந்தது. இந்தக் கையிருப்புகளெல்லாம் ஏற்றுமதியால் ஈட்டப்பட்டவை அல்ல. ஏற்றுமதியைக் காட்டிலும் நமது இறக்குமதி அதிகம். இது மோசமான பற்று இருப்பு நிலைக்கு நம்மை இட்டுச் சென்றது.

 2010-11-ஆம் ஆண்டுக்கான வர்த்தகப் பற்றாக்குறை 130.60 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். நிகழாண்டுப் பற்றாக்குறை 45.9 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். இது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் 2.7 சதவிகிதத்துக்கு சமமாகும். சமீபத்திய மதிப்பீட்டின்படி 2011-12-ஆம் ஆண்டுக்கான நடப்புக் கணக்குப் பற்றாக்குறை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் 4 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

 அதிக இறக்குமதிக்கு குறைந்த ஏற்றுமதி திறனே தேவைப்படும். இது வெளிநாட்டுக் கரன்சிகளின் தேவையை அதிகரிக்கும். ஆனால், இந்திய ரூபாயின் மாற்று மதிப்பு இறங்குமுகமாகவே உள்ளது. 2011 ஜூன் மாதம் ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 45 ஆக இருந்தது. 2012 ஜூன் மாதம் ரூபாயின் மதிப்பு 56ஆக வீழ்ச்சியடைந்தது.

 அத்துடன் கடுமையான விலைவாசி உயர்வால் மக்கள் படாதபாடு படுகின்றனர். 2012 மே மாதம் பணவீக்க அளவு 7.55 சதவிகிதத்தைத் தொட்டது. இதன் பொருள் "திருவாளர் பொதுஜனத்தின்' மீதான சுமை பல்வேறு வழிகளில் அதிகரித்து வருகிறது என்பதாகும்.

 துரதிருஷ்டவசமாக பொருளாதாரத்தை நிலைநிறுத்த அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகள் எதுவும் மக்களுக்கு நிவாரணம் தரக்கூடியதாக இல்லை. மாறாக, அவை நிலைமையை மேலும் மோசமாக்கியது. உதாரணமாக, பணவீக்கம் பிரச்னையாக இருந்த அதே காலத்தில் பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தின.

 ஏழைகளும் நடுத்தர மக்களும் நிவாரணம் பெறுவதற்கான உத்திகளை அரசு வகுக்க வேண்டும். முன்னேற்றத்தின் பங்காளிகளாக மக்கள் இருக்கவேண்டும் என்ற கொள்கையை அரசு மேற்கொள்ளாதவரை இந்த நாடு மற்றும் மக்களின் பொருளாதாரப் பிரச்னையைத் தீர்க்க முடியாது. ஆனால், அத்தகைய நடவடிக்கை எடுப்பதற்கான ஆசையோ தொலைநோக்கோ அரசிடம் இருப்பதாகத் தெரியவில்லை.




நன்றி: Dinamani

No comments:

Post a Comment