Saturday, 16 June 2012

வைரஸ் தாக்குதல்

எதிரி நாட்டு பலம், அணு ஆயுதம் தொடர்பான தகவல்களை உளவாளிகளை அனுப்பி திருடுவதுதான் வழக்கம். இப்போது அதிலும் லேட்டஸ்ட் டெக்னிக் வந்துவிட்டது. இருந்த இடத்தில் இருந்துகொண்டே, எல்லா தகவல்களையும் பெற முடியும். ஒரே ஒரு வைரசை அனுப்பினால் போதும். ஃபிளேம் தான் அந்த வைரஸ். அனுப்பிய நாடு இஸ்ரேல். இந்த வைரஸ் தகவல்களை திருடுவதோடு, கம்ப்யூட்டரின் இயக்கத்தையும் நிறுத்தி விடும். இதன் தாக்குதலில் சிக்கி திணறிப் போயிருக்கிறது ஈரான். ஈரானின் அணு ஆயுத தயாரிப்பு திட்டத்தை முடக்க ஆரம்பம் முதலே பல வழிகளிலும் சதி செய்து வருகிறது இஸ்ரேல். அமெரிக்கா மூலம் பொருளாதார தடை மிரட்டலில் தொடங்கி, அணு விஞ்ஞானிகளை குறிவைத்து கொலையும் செய்து வருகிறது. அமெரிக்காவின் சிஐஏ, ரஷ்யாவின் கேஜிபி உளவுப் படைகளுக்கு இணையானது இஸ்ரேலின் மொஸாத் உளவுப் படை. இதன் உளவாளிகள்தான் கார் குண்டுகள் மூலம் ஈரான் விஞ்ஞானிகளை காலி செய்து வருகின்றனர். இந்த சதி வேலையில் லேட்டஸ்ட்தான் ஃபிளேம் வைரஸ். ஏறக்குறைய ஏவுகணை போன்றது இந்த வைரஸ். சரியான இலக்கை கண்டுபிடித்து, தேவையான தகவல்கள், ஆடியோ பைல்கள் அனைத்தையும் உடனுக்குடன் வைரசை ஏவியவர்களுக்கு அனுப்பி விடும். அனைத்தையும் அனுப்பி விட்டு கம்ப்யூட்டரையும் செயலிழக்க செய்துவிடும். இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ்களில் அதி நவீனமானது இது. அதிகம் பாதிக்கப்பட்டது ஈரான்தான். அதோடு பாலஸ்தீனம், சூடான், சிரியா, லெபனான் நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வைரஸ் தாக்குதலை கண்டுபிடித்து சொன்னது ரஷ்ய நிறுவனம்.

ஃபிளேம் தாக்குதலை ஈரான் ஒப்புக் கொண்டுள்ளது. யுரேனியம் உற்பத்தி பிரிவில் உள்ள கம¢ப்யூட்டர்களும் அதிகாரிகள் கம்ப்யூட்டர்களும் வைரஸ் பாதிப்புக்கு உள்ளானதாக கூறியுள்ளது. ஏகப்பட்ட தகவல்கள் காணாமல் போனதாகவும் புலம்பியுள்ளது. கடந்த 2010ல் இதுபோல் ஸ்டக்ஸ்நெட் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. அப்போதும் இஸ்ரேல் மீது சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் அந்த வைரஸ் கம்ப்யூட்டரை மட்டுமே செயலிழக்க செய்யும். இதுபோல் தகவல்களை திருடாது. எதிரிகளை கண்காணிக்க  செயற்கைக் கோள் உளவு, ட்ரோன் தாக்குதல் என அதிநவீன தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. அந்த வரிசையில் இப்போது ஃபிளேம் வைரஸ் கலக்கி வருகிறது.
நன்றி: தினகரன்

No comments:

Post a Comment