Friday, 29 June 2012

மேம்பால அதிர்ச்சி

மேம்பால அதிர்ச்சி
சென்ட்ரல் ஸ்டேஷன், எல்.ஐ.சி பில்டிங் மாதிரி அண்ணா மேம்பாலம் சென்னையின் பிரசித்தி பெற்ற ஒரு அடையாளம். கட்டி 40 ஆண்டுகள் ஆகியும் பெரிய விபத்து எதுவும் நடந்ததில்லை. பிறகு கட்டிய பல மேம்பாலங்களை விடவும் பலமாக இருப்பதாக நிபுணர்கள் சோதனை செய்து சான்றளித்துள்ளனர். பாலம் கட்டியவர்களுக்கும் முறையாக பராமரித்து வருபவர்களுக்கும் பெருமையில் பங்குண்டு. விபத்தே நடக்காத மேம்பாலம் என்ற பெயரை தகர்த்த பெருமைக்குரியவர் 17எம் பஸ் டிரைவர் பிரசாத். 14 அடி உயரமுள்ள பாலத்தின் நடுப்பகுதியை கடந்தபின் இடதுபுறமாக பிரியும் வளைவில் இறங்கும்போது சுவரை இடித்து கீழே பாய்ந்திருக்கிறது பஸ். திரும்பும்போது வேகத்தை குறைக்காவிட்டால் எதிர் திசையில் இழுத்துச் செல்லும் என்பது வாகனம் ஓட்டும் எல்லோருக்கும் தெரிந்த பாலபாடம். பயணிகளுக்கு தங்கள் திறமையை காட்டுவதாக நினைத்துக் கொண்டு ஆக்சிலேட்டரில் இருந்து காலை எடுக்காமலே ஸ்டியரிங்கை முழுவதுமாக சுற்றும் டிரைவர்களை சென்னை பயணிகள் தினந்தோறும் பார்க்கிறார்கள். பிரசாத் அந்த கோஷ்டிதானா அல்லது செல்போனில் பேசிக் கொண்டே வண்டியோட்டும் ரகமா என்பது விசாரணையில்தான் தெரியும். அவர் பின்னால் அமர்ந்திருந்த 39 பயணிகளின் அதிர்ஷ்டம், தாமதமில்லாமல் மீட்க பொதுமக்கள் விரைந்து வந்துள்ளனர். எட்டடி உயரத்தில் இருந்து விழுந்தாலும் சுவர் சரிவாக இருந்ததால் தாக்கம் அதிகமில்லை. இருந்தும் பஸ் அப்பளமாக நொறுங்கியுள்ளது. மோதலின் தாக்கத்தை உள்வாங்கிக் கொண்டு பயணிகளுக்கு பாதிப்பை குறைக்கும் வகையில் வாகனங்கள் இப்போது வடிவமைக்கப்படுகின்றன.

இந்த பஸ் அப்படிப்பட்டதா அல்லது கட்டுமான செலவை குறைக்க மாற்று பொருட்கள் கையாளப்பட்டதா என்பதை அதிகாரிகள்  விளக்கவில்லை.  அமைச்சர் மகன் வேகத்தடையில் விபத்தில் பலியானதை தொடர்ந்து சென்னையில் வேகத்தடைகள் எல்லாம் சோதிக்கப்படுகின்றன. இந்த விபத்தை அடுத்து மேம்பாலங்களும் பேருந்துகளும் சோதனைக்கு உள்ளாகலாம். அசம்பாவிதம் நிகழ்ந்த பிறகுதான் ஒவ்வொருவரும் தன் கடமையை ஒழுங்காக செய்வார்கள் என்பது ஆரோக்கியமான நிலை அல்ல. உடல் தோற்றம் அழகாக இருப்பதைவிட உள்ளிருக்கும் உறுப்புகளின் இயக்கம் ஒழுங்காக இருக்க வேண்டியது முக்கியம்.




நன்றி: Dinakaran

No comments:

Post a Comment