Saturday, 23 June 2012

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி
சர்வதேச சந்தை விலையைக் காரணம் காட்டி பெட்ரோல் விலையை உயர்த்தி வாகன ஓட்டிகளுக்கு மத்திய அரசு அவ்வப்போது அதிர்ச்சி அளித்து வருகிறது. ஆனால், சரிவிகித அளவுகளில் பெட்ரோலை வாகனங்களுக்கு ஊற்றாமல் பல்வேறு பெட்ரோல் விற்பனை நிலையங்களிலும் நாள்தோறும் மோசடி என்ற அதிர்ச்சி அளிக்கப்பட்டு வருகிறது.

வாடிக்கையாளர்களின் நம்பகத்தன்மையுடன் சில பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல், டீசல் அளவு குறையாமல் வாகனங்களில் ஊற்றப்படுவதையும் சொல்லியாக வேண்டும். அதேநேரத்தில் பல பெட்ரோல் விற்பனை நிலையங்களில் லிட்டருக்கு 50 மி.லி. குறைவது தற்போது வாடிக்கையாகியிருக்கிறது.

வாடிக்கையாளர்களைக் கவர செல்போன் சார்ஜர் வசதி, டயர்களுக்குக் காற்றுப் பரிசோதனை, குடிநீர், கழிப்பிட வசதிகள் அத்துடன் ஷாப்பிங் வசதிகளும் ஒரு சில பெட்ரோல் விற்பனை நிலையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த வசதிகளையெல்லாம் நம்பிச்செல்லும் வாடிக்கையாளர்களை ஏமாற்றுவது எந்த வகையில் நியாயம்?

அளவுகளில் வித்தியாசம் என்ற அதிர்ச்சி அளிக்கும் மோசடி ஒருபுறம் அரங்கேறி கொண்டிருக்கும் நிலையில், கலப்பட பெட்ரோல் விற்பனை குறித்த புகார்களையும் நுகர்வோர் அமைப்புகள் அடுக்கி வருகின்றன. விலையேற்றத்தால் விழிபிதுங்கிக் கொண்டிருக்கும் வாகன ஓட்டிகளுக்கு இத்தகைய மோசடிகளையும், ஏமாற்று வித்தைகளையும் தெரிந்துகொள்ள நேரமில்லாத அவசரம்.

டிஜிட்டல் முறையிலான அளவீட்டு இயந்திரங்களை நிர்மாணிக்கும் முன்னர் பல பெட்ரோல் நிலையங்களில் இயந்திரங்களில் குளறுபடிகளைச் செய்து அளவு குறையும்படி செய்வது வெளிச்சத்துக்கு வராமல் நடந்தது. இயந்திரங்களில் பழுதுகளைச் சரிபார்க்கும் ஊழியர்கள் மூலம் சில அட்ஜஸ்மென்டுகளை முன்கூட்டியே செய்துவிடுவதால் ஒரு லிட்டரில் 50 மி.லி. அளவுக்குக் குறைந்துவிடும். ஆனால், இயந்திரத்தில் ஒரு லிட்டர் என்று காட்டும்.

தற்போது டிஜிட்டல் முறையிலான அளவீடுகள் செய்யப்பட்டாலும் அத்தகைய மோசடிகள் தொடர்வதாக பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பணிபுரியும் சில ஊழியர்களே மனம்பொறுக்காமல் தெரிவிக்கிறார்கள்.

பல பெட்ரோல் விற்பனை நிலையங்களில் வாகன ஓட்டிகளின் அவசரத்தைச் சாதகமாக்கி, பெட்ரோலை ஊற்றும்போது லாவகமாக அளவைக் குறைத்துவிடும் ஊழியர்கள் பலரை காண முடியும். இதனால் ஒரு லிட்டருக்கு வாகனங்கள் செல்ல வேண்டிய குறிப்பிட்ட தொலைவுக்குச் செல்லாமல் குறைந்த தொலைவுக்கே செல்வதும், நடுவழியில் வாகனங்கள் நின்றுவிடுவதும் தொடர்கிறது. அதிக மைலேஜ் கிடைக்கவில்லை என்று வாகன ஓட்டிகள் புலம்புவதுடன் நின்றுவிடுகிறார்கள்.

இதற்காக ஒவ்வொரு முறையும் அளவு பாட்டில்களில் பெட்ரோலை வாங்கி அளவு பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அவ்வாறு பாட்டில்களில் கேட்டாலும் பல பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் தருவதில்லை. அவர்களது அளவீடுகளின் உண்மைத்தன்மை வெளிச்சத்துக்கு வந்துவிடும் என்ற அச்சம்தான் அதற்கு காரணம்.

நாளொன்றுக்கு ஒரு விற்பனை நிலையத்தில் 10 ஆயிரம் லிட்டர் டீசலும், ஆயிரம் லிட்டர் பெட்ரோலும் விற்பனை செய்யப்படுவதாக இருந்தால் லிட்டருக்கு 50 மில்லி வீதம் மோசடி செய்யப்படுவதாக நுகர்வோர் அமைப்புகள் அதிர்ச்சி அளிக்கும் புள்ளிவிவரங்களைத் தெரிவிக்கின்றன.

இவ்வாறு அதிர்ச்சிக்குமேல் அதிர்ச்சியாக நடந்து கொண்டிருந்தால் வாகன ஓட்டிகள் என்னதான் செய்வார்கள்?

பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பெட்ரோல், டீசல் இருப்பு குறித்து கணக்கிடும் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் அங்குள்ள இயந்திரங்களின் செயல்பாடுகளையும், அவற்றிலிருந்து ஊற்றப்படும் பெட்ரோல், டீசலின் அளவுகளையும் சரிபார்ப்பதில்லை.




நன்றி: Dinamani

No comments:

Post a Comment