Sunday, 17 June 2012

புத்தகச் சுமை இனி இல்லை!

முப்பருவத் தேர்வு முறைக்கான புத்தகங்கள் பள்ளிகளுக்கு விநியோகிக்கப் பட்டுவிட்டன. பள்ளிகள் திறந்ததும் 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு புத்தகச் சுமை குறைகிறது.

ந்தக் கல்வியாண்டு முதல், ஒன்றாம் வகுப்பிலிருந்து 8-ஆம் வகுப்பு வரை முப்பருவத் தேர்வு முறை நடைமுறைக்கு வருகிறது. இந்த முறையின்மூலம் மாணவர்கள், முதுகு ஒடிய புத்தகங்களைச் சுமப்பது முடிவுக்கு வந்திருக்கிறது.

காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு என முப்பருவங்களுக்கும் என, தனித் தனி புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. காலாண்டுத் தேர்வு முடிந்ததும், அந்தப் பருவப் புத்தகங்களை எடுத்துச் செல்லத் தேவையில்லை. அரையாண்டுப் பருவத்துக்கு, அதற்கென உள்ள புத்தகத்தை எடுத்துச் சென்றால் போதும். முழு ஆண்டுப் பருவத்துக்கு, அதற்குரிய புத்தகத்தை எடுத்துச் சென்றால் போதும்.

1 முதல் 6-ஆம் வகுப்பு வரைக்கும் பருவத்துக்கு ஒரு புத்தகம் வீதம் மூன்று புத்தகங்களும், 7 மற்றும் 8-வது வகுப்புகளுக்கு பருவத்துக்கு இரண்டு புத்தகங்கள் வீதம் ஆறு புத்தகங்களும் இருக்கும். தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என்று எல்லாப் பாடங்களும் ஒரே புத்தகத்தில் அடங்கிவிடும்.

"காலாண்டுத் தேர்வு வரை ஒரு பருவம், அரையாண்டுத் தேர்வு வரை இரண்டாவது பருவம். முழு ஆண்டுத் தேர்வு வரை மூன்றாவது பருவம் என முப்பருவங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று முதல் 6-வது வகுப்பைப் பொருத்தவரை, தமிழ், ஆங்கிலம், கணிதம் என்று எல்லாப் பாடங்களும் ஒரே புத்தகத்தில் அடங்கிவிடும். பள்ளிக்குப் போகும்போது ஒரே ஒரு புத்தகத்தை மட்டும் எடுத்துக்கொண்டு போனால் போதும். அதனால், மாணவர்கள் அதிகப்படியான புத்தகங்களைச் சுமக்கத் தேவையில்லை. அத்துடன், தேர்வு முறையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மனப்பாடம் செய்து தேர்வு எழுதும் முறைக்கு பதிலாக மாணவர்களின் ஒட்டுமொத்தத் திறனையும் மதிப்பிடக்கூடிய வகையில் சி.சி.இ. (Continuous and comprehensive Evaluation) எனப்படும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை இந்தக் கல்வியாண்டு முதல் அறிமுகமாகிறது. எல்லாப் பாடங்களையும் திரும்பத் திரும்பப் படிக்கத் தேவையில்லை. அந்தந்தப் பருவத்துக்குரிய பாடங்களைப் படித்து தேர்வு எழுதினால் போதும். மதிப்பெண் முறைக்குப் பதிலாக கிரேடு முறை அறிமுகமாகிறது" என்கிறார் மாநில ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் தேவராஜன்.

முப்பருவ முறைப்படி தயாராகியுள்ள புத்தகங்கள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு விட்டன. சி.சி.இ. முறைப்படி மாணவர்களின் திறன்களை மதிப்பிடும் முறை பற்றிய பயிற்சியும் பெரும்பாலான ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்டுவிட்டது.

புதிய புத்தகங்கள் எப்படி இருக்கின்றன?

"குழந்தைகள் எடுத்துச் செல்வதற்கு ஏற்ப எளிமையாக உள்ளன. காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டுத் தேர்வுகளுக்கென தனித் தனி புத்தகங்களாக இருப்பதால் புத்தகச் சுமை குறையும். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான புத்தகங்கள் வண்ணமயமாகவும், குழந்தைகளைக் கவரும் வகையிலும் உள்ளன.சென்ற ஆண்டில் இடம் பெற்றிருந்த பல பாடங்கள் இந்த ஆண்டு விடுபட்டுள்ளன. அதற்குப் பதிலாக, செயல்பாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. கண்டுபிடித்து எழுதுதல், பகுத்தறிந்து எழுதுதல் போன்ற மூளைக்கு வேலை தரும் விஷயங்கள் நிறைய உள்ளன. நேரடியாக பாடங்களாக இல்லாமல், பாடங்களின் அடிப்படையில் கேள்விகள் இடம்பெற்றுள்ளன" என்கிறார் தி.நகரிலுள்ள பால மந்திர் தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியை ருக்மணி.

"மாணவர்களுக்கு ஈஸியான முறை இது. புத்தகச் சுவை இல்லாததாலும், ஒவ்வொரு பருவத்துக்கும் குறைந்த அளவே பாடங்கள் உள்ளதாலும், மாணவர்கள் விரும்பிப் படிப்பார்கள் என்பது நிச்சயம்" என்கிறார் மயிலாப்பூர் சாவித்திரியம்மாள் ஓரியண்டல் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை சித்ரா.

முப்பருவத் தேர்வு முறைப்படி, மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண்கள் வழங்கப்படும்?

"சி.சி.இ. எனப்படும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையில் இரண்டு பிரிவுகள் உள்ளன. ஃபார்மேட்டிவ் அசஸ்மெண்ட் எனப்படும் வளர் அறி மதிப்பீடு மற்றும் சம்மேட்டிவ் அசஸ்மெண்ட் எனப்படும் தொகுத்தறி மதிப்பீடு. ஃபார்மேட்டிவ் அசஸ்மெண்ட்டில், ஃபார்மேட்டிவ் 'ஏ', ஃபார்மேட்டிவ் 'பி' என இரு பிரிவுகள் உள்ளன. ஃபார்மேட்டிவ் 'ஏ' பிரிவில், பாடம் சம்பந்தமான செய்முறைப் பயிற்சிகள் இடம்பெறும். அதாவது ஒரு பாடத்தை நடத்துவதற்கு முதலில் அதைப் பற்றி நாடகங்கள், பாடல்கள், தனி நபர் நடிப்பின் மூலமாக மாணவர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தி, அவர்களையே செய்து காட்டும் வகையில் பயிற்சி இருக்கும். இந்த முறையில் மொத்தம் 20 மதிப்பெண்கள் அளிக்கப்படும். ஃபார்மேட்டிவ் 'பி' பிரிவில், ஒரு பாடம் நடத்திய பிறகு மாணவர்கள் அதை எந்த அளவுக்குப் புரிந்துகொண்டார்கள் என்பதை அறியும் வகையில் வாய்மொழியாகவும், எழுத்து மூலமாகவும் சிறு சிறு தேர்வுகள் நடத்துவோம். இதற்கு மொத்தம் 20 மதிப்பெண்கள். இப்படி, ஃபார்மேட்டிவ் 'ஏ' மற்றும் ஃபார்மேட்டிவ் 'பி' ஆகிய இரண்டு முறைகளையும் சேர்த்து மொத்தம் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும்" என்று விளக்குகிறார் ஆசிரியர் பயிற்றுநர் வளர்மதி.

மீதமுள்ள 60 மதிப்பெண்கள் சம்மேட்டிவ் அசஸ்மெண்ட் எனப்படும் தொகுத்தறி மதிப்பீட்டில் வழங்கப்படும். இதில் அந்தந்தப் பருவங்களில் அதாவது காலாண்டுத் தேர்வு, அரையாண்டுத் தேர்வு மற்றும் முழு ஆண்டுத் தேர்வில் மாணவர்கள் எழுதும் பதில்களின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும்.

வளர் அறி மதிப்பீடான 40 மதிப்பெண்களையும், தொகுத்தறி மதிப்பீடான 60 மதிப்பெண்களையும் சேர்த்து மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு, மாணவர்கள் எத்தனை மதிப்பெண்களை எடுத்துள்ளார்கள் என்று கணக்கிடப்படும்.

"காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டுத் தேர்வு முடிவில் மாணவர்கள் பெற்றுள்ள மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் கிரேடு வழங்கப்படும். ஏ, ஏ1, ஏ2, பி1, பி2, சி1, சி2, டி, ஈ1, ஈ2 என்ற அடிப்படையில் கிரேடுகள் கொடுக்கப்படும். மாணவர்கள் இடைநிற்றலைத் தடுக்க வேண்டும் என்பதே முப்பருவ முறையின் நோக்கம். அத்துடன், படிக்கும் பாடங்களைப் புரிந்து படிக்கும் வகையில் மாணவர்களைத் தயார்படுத்துவதே இதன் நோக்கம்" என்கிறார் வளர்மதி.

மொத்தத்தில் முப்பருவத் தேர்வு முறை, மாணவர்களின் புத்தகச் சுமைக்கு விடை கொடுக்கும் முறையாக இருப்பதுடன், அவர்களை ஆர்வத்துடன் படிக்கத் தூண்டும் முறையாகவும் இருக்கும் என்பது நிச்சயம்.

நன்றி: மீனா, புதிய தலைமுறை 

No comments:

Post a Comment