காந்தியோடு போகட்டும்
ரூபாய் நோட்டுகளில் எந்த எந்த தலைவர்களின் படங்களை அச்சிடலாம் என்று பொதுமக்களிடம் கருத்து கேட்கிறது ரிசர்வ் பாங்க். ஆதியில் அசோகர் தூண் மட்டுமே நோட்டுகளில் இடம் பெற்றது. இப்போது மகாத்மா காந்தி இந்திய கரன்சியை அலங்கரிக்கிறார். முதலில் அவரும் 500 ரூபாய் நோட்டில் மட்டும்தான் சிரித்துக் கொண்டிருந்தார். ஊழல் பேர்வழிகள், மோசடிக்காரர்கள், கருப்புப்பண ஆசாமிகள் கையில் அந்த நோட்டு தாராளமாக புழங்கியதன் விளைவாக காந்தி பெயரும் கெடும் ஆபத்து உருவானது. அதனால் 1997ல் இருந்து எல்லா நோட்டுகளிலும் காந்தி அமர்ந்தார். இந்தியா முழுமையும் & சிலர் நீங்கலாக & ஏற்றுக் கொள்கிற சர்ச்சையில்லாத தலைவர் என்பதால் அந்த விஷயத்தில் இதுவரை பிரச்னை இல்லை. கள்ளநோட்டு அடிப்பவர்களும் காந்திஜிக்கு உரிய இடம் அளித்ததால் நன்றாகவே போய்க் கொண்டிருந்தது. ஒரு துறையோ தொழிலோ சுமுகமாக போய்க் கொண்டிருந்தால் யாராவது ஒருத்தருக்கு தூக்கம் கெட்டுவிடும் என்பது இந்தியாவின் தனித்தன்மைகளில் ஒன்று. ரிசர்வ் பாங்கில் அங்ஙனம் யாருக்கானதோ அறியோம். 'தனியாக இருக்கிறேன், போரடிக்கிறது' என்று தேசப்பிதா கனவில் வந்து கோரிக்கை வைத்தாரா என்பதும். சத்ரபதி சிவாஜி, டாக்டர் அம்பேத்கர், நேரு, இந்திரா உருவங்களை அரசு சிபாரிசு செய்திருக்கிறதாம். இதற்காகவே காத்திருந்ததா அல்லது அரசு சமிக்ஞைக்கு பிறகுதான் வங்கிக்கு ஆசை பிறந்ததா என்பதற்கு விடை உங்கள் கையில். வேடிக்கை தெரியுமா, முதலில் காந்தி பெயரை சொன்னது யார், அங்கீகரித்தது யார், அச்சிட உத்தரவிட்டது யார் என்பதை அறிவதற்கே வங்கியில் ஆவணங்கள் ஏதுமில்லை. தேசிய தலைவர்களை கட்சி, மாநிலம், மதம், ஜாதி, மொழி, இனம் இன்னபிற சிறுவட்டங்களுக்குள் சுருக்கி சொந்தம் கொண்டாடும் மனநிலை மக்களிடம் உருவாகி நீண்டகாலம் ஆகிவிட்டது. அதன் விளைவாக எழுந்த மோதல்களையும் கலவரங்களையும் பார்த்தோம். மாவட்டங்களுக்கும் போக்குவரத்து கழகங்களுக்கும் சூட்டிய தலைவர்களின் பெயரை நீக்க வேண்டிய நிர்ப்பந்தம் மறந்திருக்காது. 'இந்த தலைவரை எனக்கு பிடிக்காது, எங்கள் தலைவர் படம் போட்ட நோட்டு கொடு' என்று சிலர் முரண்டு பிடிக்கலாம். விரும்பாத தலைவரின் படத்தில் அவதூறாக கிறுக்கலாம். மீசை தாடி வரைந்து கேலி பண்ணலாம். கோபத்தில் கிழித்து குப்பை தொட்டியில் போட்டு கொளுத்தலாம். திருச்சியில் நடந்திருக்கிறதுதானே. எந்த தலைவருக்கு நோட்டில் இடம் கொடுப்பது என்பது எப்போதும் ஆளும் கட்சியின் உரிமையாயிருக்கும். ஆட்சி மாறியதும், மேற்படி தலைவர் படம் போட்ட நோட்டுகள் செல்லாதென அறிவித்து புதிய தலைவர்களை அறிமுகம் செய்ய புதிய அரசு முன்வரலாம். கோஷ்டிகளோ வெளிநாடுகளோ பலான தலைவர் படம் போட்ட கள்ள நோட்டுகளை சகட்டுமேனிக்கு அச்சிட்டு புழக்கத்தில் விட்டு குழப்பத்தை உண்டாக்கலாம். இந்த விவகாரத்தில் எப்படியெல்லாம் நாட்டில் பிரச்னைகளை ஏற்படுத்தலாம் என்பதற்கு வானமே எல்லை.
நன்றி: Dinakaran
No comments:
Post a Comment