திறன் மேம்பாட்டுக்கு வங்கிக்கடன்
வங்கிகள் வழங்கும் கல்விக் கடன் வசதி, இதுவரை ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் மட்டுமே வளைய வருகிறது. கலை, வணிகம், அறிவியல் பட்டப்படிப்புகள், பொறியியல், மருத்துவம், வேளாண், கால்நடை மருத்துவம், சட்டம், பல் மருத்துவம், கணினி, நிர்வாக இயல், பட்டைய கணக்காளர் உள்ளிட்ட தொழில் முறை கல்வி ஆகியவற்றுக்கு மட்டுமே வங்கிக் கடன் வழங்கப்படுகிறது. இதுதவிர, தேசிய அளவில் முன்னணியில் உள்ள ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற மேல் நிலை கல்வி நிலையங்கள் மற்றும் வெளிநாட்டுக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் படிப்பதற்கு வங்கிக் கடன் கிடைக்கிறது. அதாவது, வேலை வாய்ப்புகளுக்கு உத்தரவாதம் உள்ள படிப்புகளுக்கு வங்கிகள் கல்விக் கடன் வழங்குகின்றன. எளிய குடும்பத்து இளைஞர்களுக்குப் பட்டப்படிப்பு இன்னமும் எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவல்களின்படி, பள்ளிப்படிப்பை முடித்துக்கொண்டு, கல்லூரிகளில் நுழையும் மாணவர்களின் எண்ணிக்கை 12 அல்லது 13 சதவிகிதத்துக்குள்தான் உள்ளது. இந்நிலையில், "பாலிடெக்னிக்' போன்ற குறுகிய கால தொழிற்பயிற்சிப் படிப்புகளுக்கு வங்கிகள் ஏன் கல்விக் கடனை விரிவுபடுத்தக் கூடாது என்கிற கேள்வி கடந்த காலங்களில் அவ்வப்போது எழுப்பப்பட்டது. அதை வங்கிகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. அதேநேரம், இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாடு, குஜராத், தில்லி, மகாராஷ்டிரம் உள்ளிட்ட பல மாநிலங்களில், ஐ.டி.ஐ. போன்ற குறுகிய கால தொழில் பயிற்சி பெற்ற இளைஞர்களின் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. சிறு மற்றும் குறுந்தொழில்களில் பணிபுரிவதற்கு, பாலிடெக்னிக் ஐ.டி.ஐ. போன்ற அமைப்புகளில் பயிற்சிபெற்ற "ஸ்கில்டு' தொழிலாளர்கள் கிடைப்பதில்லை என்ற புகார் வந்துகொண்டு இருக்கிறது. இதனால் சிறு, குறுந்தொழில்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, தமிழ்நாட்டில், பல்லாயிரக்கணக்கான நிறுவனங்கள் மோட்டார் வாகனங்களுக்குத் தேவையான உதிரி பாகங்களைத் தயாரித்து வழங்குகின்றன. இந்நிறுவனங்களுக்கு நிறைய "ஆர்டர்கள்' கிடைக்கின்றன. ஆனால், பயிற்சி பெற்ற இளைஞர்கள் வேலைக்கு வருவது குறைந்துவிட்டதால், குறிப்பிட்ட நேரத்தில் உதிரி பாகங்களைத் தயாரித்து வழங்க முடியாமல் பல நிறுவனங்கள் தவிக்கின்றன. இதுபோன்ற நிலை நாடு முழுவதிலும் பல்வேறு தொழில் துறைகளில் நிலவுகிறது. இந்த நிலையைச் சரிசெய்ய வேண்டுமானால், பொறியியல் கல்லூரிகள் அதிகரிப்பதுபோல், நாடெங்கிலும் பாலிடெக்னிக் நிலையங்களையும், ஐ.டி.ஐ. பயிற்சிக் கூடங்களையும் அதிக அளவில் நிறுவிட வேண்டும். இந்தப் பயிற்சிக் கூடங்களில் பொருத்தமான மாணவர்களை ஈர்ப்பதற்கு ஏதுவாக, அவர்களுக்கு ஊக்குவிப்புகள் வழங்கப்பட வேண்டும். படித்த வேலை இல்லாத இளைஞர்களை வேலைக்குத் தகுந்தவர்களாக மாற்றுவதற்கு உரிய பயிற்சி தேவை. இந்தத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, தேசிய திறன் மேம்பாட்டு ஆணையம் என்கிற அமைப்பை மத்திய அரசு அண்மையில் அமைத்துள்ளது. இத் திட்டம் செயல்படத் தொடங்கிவிட்டது. இதன் மூலம், அடுத்த 10 ஆண்டுகளில் 15 கோடி இளைஞர்கள் பல்வேறு தொழில்துறைகளில் பயிற்சி பெற்றிடுவார்கள். இதனால் வேலைவாய்ப்புகளும் அதே அளவில் அதிகரிக்கும். வளரும் நாடுகளில், இதுபோன்ற பயிற்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, சீனாவில் இது மிகப்பெரிய அளவில், மிகவும் முனைப்புடன் செயல்படுத்தப்படுகிறது. அந்த நாட்டில் சுமார் 500 வகை புதிய, புதிய தொழில் பயிற்சிக்கான பாடத்திட்டங்களை உருவாக்கிப் பயிற்சி அளிக்கிறார்கள். இதை அவர்கள் ஒரு சிறந்த தொழில் மேம்பாட்டு உத்தியாகக் கையாளுகிறார்கள். தொழில் மட்டுமல்லாமல், ஆங்கில மொழியிலும் சீனத் தொழிலாளர்களுக்குப் பயிற்சி அளிக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், இந்தி மொழி பயில்வதற்கும் சீனத் தொழிலாளர்களும் மாணவர்களும் ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்றால் நம்புவீர்களா? நம் நாட்டைப் பொருத்தவரை, சமீபத்திய கணக்கெடுப்பின்படி, ஆண்டுக்கு ஒரு கோடி முதல் ஒன்றரை கோடி பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் தேவைப்படுவார்கள். இதைக் கருத்தில்கொண்டு, கணிசமான எண்ணிக்கையில் பாலிடெக்னிக் நிலையங்கள் மற்றும் ஐ.டி.ஐ. போன்ற குறுகிய கால பயிற்சிக் கூடங்கள் அமைக்கப்பட உள்ளன. எளிய குடும்பத்து இளைஞர்களை இதுமாதிரியான குறுகிய கால தொழில் கல்வி மேற்கொள்ள ஊக்குவிப்பதற்கு, அவர்களுக்கு வங்கிக் கடன் கொடுப்பது அவசியம். இந்த யதார்த்த உண்மையை, "ஸ்கில் டெவலப்மெண்ட் கமிஷன்' (திறன் மேம்பாட்டு ஆணையம்) ஐ.பி.ஏ. என்கிற இந்திய வங்கிகள் அசோசியேஷனுக்கு வெகு நேர்த்தியாகத் தெளிவுபடுத்தி உள்ளது. இந்த ஆலோசனையை ஐ.பி.ஏ. ஏற்றுக்கொண்டுவிட்டது. இதன் விளைவாக, இந்திய வங்கிகள் முதல்முறையாக, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. போன்ற குறுகிய கால தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து படிக்கும் மாணவர்களுக்குக் கல்விக் கடன் வழங்க உள்ளது. இதன் பயனாக, மூன்று மாத தொழில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ. 20,000 கடன் தொகையும், 3 மாதம் முதல் 6 மாத கால தொழில் கல்விக்கு ரூ. 50,000, 6 மாதம் முதல் ஓராண்டு தொழில் கல்விக்கு ரூ. 75,000, ஓராண்டுக்கு அதிகமான தொழில் கல்விக்கு ரூ. 1 லட்சம் முதல் ஒன்றரை லட்சம் ரூபாய் வரையிலான கடன் வழங்கப்பட உள்ளது. உலகிலேயே, அதிக அளவில் கல்விக்கடன் வழங்கும் நாடு இந்தியாதான். அப்படியிருந்தும், இந்திய வங்கித் துறை செயல்படுத்தி வந்த கல்விக் கடன் திட்டத்தில், இருந்து வந்த ஒரு பெரும் குறைபாடு - குறுகிய கால தொழில் கல்விக்குக் கடன் வழங்கவில்லை என்கிற குறைபாடு - இப்போது நீங்கிவிட்டது. தொழில் கல்விக் கடன் திட்டத்தில், "கொலட்டரல் செக்யூரிடி' என்கிற சொத்துப் பிணை வைத்தல் போன்ற பிரச்னைகள் எழுவதற்கு வாய்ப்பில்லை. காரணம், ஏற்கெனவே நடைமுறைப்படுத்தப்படும் திட்டத்தில்கூட ரூ. 4 லட்சம் வரையிலான கல்விக் கடன்களுக்கு "மார்ஜின்' (கடன் வாங்குபவர் செலுத்த வேண்டிய முதலீடு) அல்லது செக்யூரிடி என்பதெல்லாம் கிடையாது. அதேநேரம், இதற்கான வட்டி விகிதம் சலுகையுடன் கூடியதாகவே இருக்கும் என்பது உறுதி. கடன் தொகையைத் திரும்பச் செலுத்துவதற்கும் போதிய கால அவகாசம் தரப்படும். படித்து முடித்து ஓராண்டு கழித்து அல்லது வேலை கிடைத்த ஆறு மாதங்களுக்குப் பிறகு அசலோடு வட்டியையும் சேர்த்து மாதாந்திரத் தவணையாகக் கட்டத் தொடங்க வேண்டும். இத்திட்டத்தின் நோக்கமே எளிய குடும்பத்து மாணவர்கள் பயன் அடைய வேண்டும் என்பதே. அதேநேரம் சிறு மற்றும் குறுந்தொழில்சாலைகளுக்குத் தேவையான பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் போதிய எண்ணிக்கையில் கிடைப்பார்கள். நாட்டின் மொத்த தொழிற்சாலை உற்பத்தியில் 40 சதவிகிதம் சிறு மற்றும் குறுந்தொழில் சாலைகள் மூலம் தான் கிடைக்கிறது. அதேபோல், நாட்டின் ஏற்றுமதிப் பொருள்களில் 40 முதல் 45 சதவிகிதம் சிறு மற்றும் குறுந்தொழில்களால் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த துறையினருக்குத் தேவையான பயிற்சி பெற்ற தொழிலாளர்களை உருவாக்குவது எத்தனை அவசியம் என்பதை வலியுறுத்தத் தேவையில்லை. இதைச் சொல்லிடும் அதே மூச்சில், மற்றொரு விஷயத்தைக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். ஏற்கெனவே நடைமுறைப்படுத்தப்படும் கல்விக்கடன் விஷயத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே ஒரு புகார் இருந்து வருகிறது. ""நாங்கள் அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்து முடித்த பிறகும் வங்கி மேலாளர்கள் எங்களைத் தேவையில்லாமல் இழுத்தடிக்கின்றனர்" என்பதே அந்தப் புகார். பொதுவாக கடன் கொடுக்கும்போது, கொடுத்த கடனை திரும்பப் பெற வேண்டுமே என்கிற நியாயமான அச்சம் எந்த ஒரு வங்கி மேலாளருக்கும் இருப்பது இயல்பு. அதேநேரம், நாம் தாக்கல் செய்ய வேண்டிய ஆவணங்கள் எவை என்பதைச் சரியாகத் தெரிந்துகொள்ள வேண்டும். அவை: பிளஸ் டூ மதிப்பெண், பெற்றோர் ஆண்டு வருமானம் ரூபாய் நாலரை லட்சத்துக்குள் இருந்தால், அதற்கான சான்றிதழ் (அது தாசில்தாரருக்கு நிகரான ஓர் அரசு அதிகாரியின் கையொப்பத்துடன் கூடியதாக இருத்தல் வேண்டும்) கல்லூரியில் சேர்வதற்குரிய அட்மிஷன் கார்டு, மொத்த கல்விச் செலவுக்கான மதிப்பீடு ஆகியவைதான் தேவை. அத்துடன் விண்ணப்பப் படிவம் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டு, வங்கி மேலாளரிடம் தாக்கல் செய்யப்பட வேண்டும். தாக்கல் செய்திட்ட தேதியிலிருந்து 15 நாள்கள் முதல் ஒரு மாதத்துக்குள் சம்பந்தப்பட்ட மாணவருக்கு வங்கி பதில் அளித்திவிட வேண்டும். கிளை மேலாளர் அவ்விதம் பதில் தராவிடில் நேரில் ஒருமுறை நினைவூட்டலாம். அதற்குப் பிறகும் தாமதமானால், வங்கியின் மண்டல மேலாளரிடம் புகார் செய்யலாம். அதன் பிறகும் நியாயம் கிடைக்கவில்லை எனில், ரிசர்வ் வங்கியால் நியமிக்கப்பட்டுள்ள "ஆம்பட்ஸ்மேன்' என்கிற குறை தீர்க்கும் சிறப்பு அதிகாரி, இந்திய ரிசர்வ் வங்கி, ராஜாஜி சாலை, சென்னை -1 (அல்லது சம்பந்தப்பட்ட பெருநகர்) முகவரிக்கு புகார் மனு கொடுக்கலாம். அவரிடமிருந்து உரிய நேரத்துக்குள் நிவாரணம் கிடைத்துவிடும். அங்கீகாரம் இல்லாத கல்வி நிறுவனங்களில் கல்வி பயில்வதற்கு கல்விக்கடன் கிடைக்காது. கடன் பெறும் மாணவர்கள் நன்றாகப் படித்து, நல்ல வேலையில் சேர்ந்து, தங்கள் கடனைத் திரும்பச் செலுத்த வேண்டும் என்பதே வங்கிகளின் எதிர்பார்ப்பாகும். எனவே, கடன் பெறும் மாணவர்கள், கல்விக்கடனை நன்கு பயன்படுத்திக் கொண்டு, அந்தக் கடனை உரிய நேரத்தில் திரும்பச் செலுத்திட அக்கறை காட்ட வேண்டியது அவசியமாகும். வங்கிகளைப் பொருத்தவரை, ஆண்டுக்கு ஆண்டு, கல்விக்கடன்களின் எண்ணிக்கையும், கடன் தொகையும் கணிசமாக அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆக, பாரம்பரிய கல்விக் கடன் திட்டமானாலும் சரி, புத்தம் புதிய குறுகிய கால தொழில் கல்விக் கடன் திட்டமானாலும் சரி, அவை வெற்றி பெற்றிட வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பும் ஆகும். அதுதான் வீட்டுக்கும் நல்லது. நாட்டுக்கும் நல்லது என்பதை சம்பந்தப்பட்ட அனைவரும் உணருதல் வேண்டும்.
நன்றி: Dinamani
No comments:
Post a Comment