Tuesday, 19 June 2012

எகிப்து மீண்டும் சிக்கல்

எகிப்து மீண்டும் பற்றிஎரிகிறது. இந்த முறை வேறு காரணத்துக்காக. 1981 முதல் 2011 வரை முப்பது ஆண்டுகள் அதிபராக இருந்த ஹோஸ்னி முபாரக்குக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை அதிகம் என்று ஆதரவாளர்களும் இதுபோதாது என எதிர்ப்பாளர்களும் இப்போது போராட்டத்தில் குதித்துள்ளனர். அது 2011ம் ஆண்டு ஜனவரி மாதம் 25ம் தேதி. அதிபர் முபாரக்கின் 30 ஆண்டு ஆட்சியில் வேலை இல்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு என ஏகப்பட்ட பிரச்னைகளால் நொந்துபோன மக்கள் கிளர்ந்து எழுந்த நாள் அது. தலைநகர் கெய்ரோவில் உள்ள பிரம்மாண்டமான தஹ்ரீர் சதுக்கத்தில் குவிந்தனர். அதிபர் முபாரக் பதவி விலக வேண்டும் என்ற ஒரே கோரிக்கைதான். அவர்களைக் கலைக்க அரசு மேற்கொண்ட முயற்சியில் 850 பேர் கொல்லப்பட்டனர். 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இருந்தாலும் மக்கள் போராட்டத்தை கைவிடவில்லை. 18 நாள் நடந்த போராட்டத்தின் இறுதியில் பிப்ரவரி 11ம் தேதி முபாரக் பதவி விலகிய செய்தியை துணை அதிபர் அறிவித்தார். இதைத் தொடர்ந்து படுகொலைக்கு காரணமான முபாரக் மீது வழக்கு தொடரப்பட்டது. 10 மாதங்களுக்கும் மேலாக நடந்த இந்த வழக்கில் முபாரக்குக்கும் அமைச்சராக இருந்த அட்லிக்கும் ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டது. மக்கள் புரட்சி மூலம் தண்டிக்கப்பட்ட முதல் அரபு தலைவர் இவர்தான். இந்த தீர்ப்பு விவரம் டிவியிலும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. புரட்சியை பாராட்டிய நீதிபதி, அதற்கு காரணமான மக்களையும் பாராட்ட தவறவில்லை. ஆனால் இந்த தீர்ப்புதான் மீண்டும் அங்கு பிரச்னை வெடிக்க காரணமாகியுள்ளது.

முபாரக்குக்கு இப்போது வயது 84. இப்போது அவருக்கு அளிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ஒரு தண்டனையே அல்ல. தூக்குத் தண்டனை வழங்கப்பட்டிருக்க வேண்டும் என எதிர்ப்பாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். படுகொலையில் தொடர்புடைய 6 போலீஸ் அதிகாரிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் போலீஸ் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். அவர்களுக்கு எதிராக எந்த தண்டனையும் கிடையாது என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது. படுகொலையால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக 60 ஆயிரம் பக்கம் ஆதாரங்களை கோர்ட்டில் சமர்ப்பித்த வக்கீலில் தொடங்கி எல்லோருக்குமே ஏமாற்றம் தந்துள்ளது இந்த தீர்ப்பு.  ஆனால் அதே நேரம் முபாரக் ஆதரவாளர்கள் இந்த தீர்ப்பை எதிர்த்து கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசுக்கு எதிராக போராட்டம் செய்தால் அடக்காமல் பார்த்துக் கொண்டா இருக்க முடியும் என கேட்கின்றனர் இவர்கள். எது எப்படியோ மக்கள் போராட ஆரம்பித்து விட்டால் எவ்வளவு பெரிய சர்வாதிகாரியும் தண்டனையில் இருந்து தப்ப முடியாது என்பதை வரலாறு மீண்டும் நிரூபித்துள்ளது.


நன்றி: Dinakaran

No comments:

Post a Comment