ஐரோப்பிய கூட்டமைப்பின் பொருளாதார சிக்கலை சமாளிப்பதற்காக இந்தியா ஆயிரம் கோடி டாலர் , ரூ.55,000 கோடி , வழங்கும் என்று மன்மோகன் சிங் அறிவித்திருப்பதை கேள்விப்பட்டு சராசரி இந்தியர்கள் அதிர்ந்து போயிருக்கிறார்கள். நம்மைவிட சீனர்கள் துக்கத்தில் இருக்கிறார்கள். ஏனெனில் அந்த நாடு 4,300 கோடி டாலர் தருவதாக அறிவித்துள்ளது. இங்காவது அரசையும் பிரதமரையும் கண்டிக்க சுதந்திரம் இருக்கிறது. சீனாவில் அது இல்லாததால் மவுனமான சோகம். வேகமாக வளரும் நாடு என முத்திரை குத்தப்பட்ட பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்ரிக்கா ஆகியவை பிரிக்ஸ் என்ற பெயரில் ஒரு கூட்டணி அமைத்து முன்னேறிய நாடுகளோடு சர்வதேச பிரச்னைகளில் மல்லுக்கு நிற்கின்றன. செலவு செய்யாமல் செல்வாக்கை வளர்த்துக் கொள்ள முடியாது. அதனால், மேற்கத்திய நாடுகளை பின்பற்றி பணக்கார ஐரோப்பிய நாடுகளுக்கு உதவ சர்வதேச நிதியத்துக்கு ( ஐ.எம்.எஃப்) இவை நிதியளிக்க முன்வந்துள்ளன. மன்மோகன் கையெழுத்து போட்டு கொடுத்த செக்கை ஐஎம்எஃப் உடனே காசாக்க போவதாக நினைத்து பலருக்கு கவலை. அது அப்படி இல்லை. தீ பிடித்தால் அணைப்பதற்கு அரசு அலுவலகங்களில் வாளிகளில் மணல் போட்டு தொங்க விட்டிருப்பார்களே, அந்த மாதிரி இது ஒரு வாக்குறுதி, அவ்வளவுதான். கடுமையான சிக்கன நடவடிக்கைகளால் நிலைமை சீராகிவிட்டால் நம்மிடம் பணத்தை கேட்க மாட்டார்கள். 45,600 கோடி டாலர் தேவையாம். அதில் இது எம்மாத்திரம். பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்புவரை ஐ.எம்.எஃப் கடனுக்காக கைகட்டி காத்திருந்த நாடுகளில் இந்தியாவும் உண்டு. இனி, அந்த நிதியம் எந்த நாட்டுக்கு எவ்வளவு கொடுக்கலாம் என தீர்மானிப்பதில் பிரிக்ஸ் நாடுகளின் கணிசமான தலையீட்டை காணலாம். இன்றைய தேதியில் உலக ஜனத்தொகையில் 43 சதவீதம் பிரிக்ஸ் நாடுகளில் வாழ்கிறது.
உலக பொருளாதாரத்தில் 18 சதம் இவற்றின் பங்களிப்பு. இவை வைத்துள்ள அன்னிய செலாவணி இருப்பு 4 லட்சம் கோடி டாலர். தனக்கு போக மீதிதான் தர்மத்துக்கு என்பது இங்கே பொருந்தாது. போதும் என்ற எண்ணம் யாருக்கும் வராது என்பதால் அல்ல. நமது சரக்குகளையும் சேவைகளையும் பெரிதும் இறக்குமதி செய்யும் ஐரோப்பாவுக்கு உதவுவது புத்திசாலித்தனமான முதலீடு என்பதை உணர வேண்டும்.
நன்றி: Dinakaran
No comments:
Post a Comment