குருவியின் தலையில் பனங்காய்
ஓவ்வொருவருக்கும் ஒரு காலமும் இருக்கிறது; ஒரு கடமையும் இருக்கிறது; அந்தந்தக் காலத்தில் அந்தந்தக் கடமையைச் செய்து வர வேண்டும்; இதுவே சரியான ஒழுங்குமுறையாகும். இந்த ஒழுங்குமுறை மீறப்படுமானால் அதுவே சமூகச் சீரழிவாக மாறிவிடும்.
அரும்பு, மொட்டு, மலர், காய், கனி என்ற வளர்ச்சிப் பருவம்தான் தாவரங்களின் இயற்கை நியதி; இதில் மாறுபாடுகள் ஏற்படுமானால் அது அரும்பிலேயே அழுகி, மொட்டிலேயே கருகி, பூவிலேயே சருகாகி, பிஞ்சிலேயே வெம்பிப் போய்விடும் அல்லவா! இந்த இயற்கை நியதி எல்லா உயிர்களுக்கும் பொருந்தும். மனிதர்களுக்கு மட்டும் பொருந்தாமல் போகுமா? மனித குலம் குழந்தைகள், சிறுவர்கள், மனிதர்கள், முதியவர்கள் என வளர்ச்சி பெறுகிறது. இந்தப் படிநிலையில் ஒவ்வொருவருக்கும் ஒரு கடமை இருக்கிறது. இது மாறுபடுமானால், சமுதாயம் சீரழிவுக்கு உள்ளாகும். இளமைப் பருவம் கல்விக்கானது. "இளமையில் கல்' என்றும், "இளமையில் கல்வி சிலையில் எழுத்து' என்றும் கூறப்படுவது அதனால்தான். படிக்க வேண்டிய வயதில் படிக்க வேண்டும்; பணியாற்ற வேண்டிய வயதில் பணியாற்ற வேண்டும், இதற்கு ஏறுமாறாகப் படிக்க வேண்டிய வயதில் படிக்க முடியாமல் குழந்தைத் தொழிலாளர்களாக மாறுவது சமுதாய சீர்கேட்டின் அடையாளமாகும். இதனை எதிர்த்துதான் ஜூன் மாதம் 12-ஆம் நாள் உலகம் முழுவதும் "குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தின'மாகக் கொண்டாடப்பட்டது. நமது நாட்டிலும் விழிப்புணர்வு பேரணிகளும், கருத்தரங்கங்களும், கையெழுத்து இயக்கங்களும் நடத்தப்பட்டன. ""குழந்தைகள் மூலம் பெறப்படும் வருமானம், வீட்டுக்கு அவமானம்" என்பதைப் பெற்றோர்கள் உணர வேண்டும். குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு நாளில் அனைத்துப் பெற்றோர்களும் குழந்தைகளின் உரிமைகளை மதிப்பதோடு 14 வயதுக்குள்பட்ட குழந்தைகளை வேலைக்கு அனுப்ப மாட்டோம் என உறுதி பூண்டு, நாம் அனைவரும் ஒன்றிணைந்து குழந்தை நேய மாநிலமாக தமிழகத்தை உருவாக்கிட நம் கடமையை ஆற்றிடுவோம்" என்று தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதா தமது செய்தியில் கூறியுள்ளார். குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றுவதில் தமிழகம் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது என்றும், குழந்தைகள் சுதந்திரமாகக் கல்வி கற்றிடவும், பெற்றோர்களின் சுமைகளைக் குறைத்திடவும், கட்டணமில்லாக் கல்வி, சத்தான சத்துணவு, விலையில்லா மடிக்கணினி, சீருடைகள், பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், மிதிவண்டிகள், காலணிகள், புத்தகப்பை, கணித உபகரணப் பெட்டி, வண்ணப் பென்சில்கள், புவியியல் வரைபடப் புத்தகம், ஆன் லைன் மூலம் வேலைவாய்ப்புப் பதிவு வசதி, கல்வி பயிலுதலில் இடைநிற்றலைக் குறைக்க ஊக்கத்தொகைகள் ஆகிய எண்ணற்ற திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார். இவ்வாறு குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்பதற்காக அவர்களுக்கு முறையான கல்வி புகட்ட அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் அவை போதிய பயன்களைத் தரவில்லை என்பதை மனித உரிமைக் கல்வி நிறுவனங்கள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றன. இதற்கு அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றனர். குடும்ப வறுமையின் காரணமாகப் பெற்றோர்களே தங்கள் பிள்ளைகளை வேலைக்கு அனுப்புகின்றனர் என்பது கொடுமையானது இல்லையா? இந்தக் கொடுமைக்குக் காரணமான அடித்தட்டு மக்களை முன்னேற்றுவதற்கு வழி என்ன? ஆண்டுக்கு ஒருமுறை பேரணியும், விழிப்புணர்வுப் பிரசாரமும் செய்து விட்டால் போதுமா? குழந்தைகளின் உழைப்பு என்பது ஒரு மிகப்பெரிய மனித உரிமை மீறலாகும். இதனால் குழந்தைகளின் கல்வி மறுக்கப்படுவதோடு, அவர்களின் குழந்தைப் பருவத்தையும், அவர்களின் நலவாழ்வையும் இது பறித்துக் கொள்கிறது. வறுமையின் காரணமாக அவர்களைச் சுரண்டும் நோக்கத்துடனேயே அவர்கள் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். நமது நாட்டில் சட்டங்களுக்குக் குறைச்சல் இல்லை. "சட்டங்கள் போடுவது செயல்படுவதற்கு அல்ல' என்ற குறிப்போடு செயல்பட்டால் எப்படி? இதனை ஒவ்வொரு குடிமகனும் சிந்தித்து வருந்துவதைத் தவிர வழியில்லை. காவல்துறை இருக்கிறது. நீதிமன்றங்களும் இருக்கின்றன. நல்ல வழக்கறிஞர்களும், சிறந்த நீதிபதிகளும் இருக்கின்றனர். இருந்தும் என்ன பயன்? சட்டம் வெறும் சட்டமாகவே இருக்கிறது. செயல்படாத சட்டங்களால் யாருக்கு என்ன பயன்? பசிக்கு உதவாத உணவு இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? குழந்தைகளின் இலவசக் கட்டாயக் கல்விச் சட்டம் - 2009 இருக்கிறது. குழந்தைத் தொழில் (தடுப்பு மற்றும் முறைப்படுத்துதல்) சட்டமும் இருக்கிறது. இருந்தும் என்ன? குழந்தைத் தொழிலாளர்கள் எப்போதும்போல எங்கும் தென்படுகிறார்கள். இதுபற்றி அரசாங்கமும் கவலைப்படவில்லை. அரசு வெளியிட்ட சட்டமும், அதை நடைமுறைப்படுத்த வேண்டிய காவல்துறையும் கவலைப்படவில்லை. இதைக் கண்டு சமுதாயம் ரத்தக் கண்ணீர் வடிக்கிறது. தமிழ்நாடெங்கும் பள்ளிக்குச் செல்லாமல் தெருக்களில் திரிந்து கொண்டிருக்கும் பிள்ளைகளைப் பார்க்கலாம். தேநீர்க் கடைகள், உணவு விடுதிகள், கட்டுமானப் பணிகள், தொழிற்சாலைகள், கூலி வேலை, எடுபிடி வேலை என எங்கும் குழந்தைத் தொழிலாளர்கள் இருப்பதைக் கண்டும் காணாததுபோல அரசு அதிகாரிகள் நடந்து கொள்கின்றனர். குழந்தைத் தொழில் (தடுப்பு மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம், 1986 - குழந்தைகள் தொழில் செய்வதை முற்றிலும் ஒழிக்கத் தவறிவிட்டது. இந்தச் சட்டத்தின்கீழ் ஆய்வுகள் நடத்தப்பட்டன. வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தண்டனைகளும் பெயரளவுக்குச் சிலருக்கு வழங்கப்பட்டன. இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்றே மனித உரிமை அமைப்புகள் போராடிக் கொண்டிருக்கின்றன. 18 வயதுக்கு உள்பட்ட அனைவரும் ஆபத்தான அல்லது ஆபத்து இல்லாத என்ற எந்தப் பாகுபாடும் இல்லாமல் அனைத்துவிதமான தொழில்களிலும் பணிபுரிவதைத் தடை செய்யும் வகையில், குழந்தைத் தொழில் ஒழிப்புச் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும். சர்வதேச தொழிலாளர் அமைப்பு விதிமுறையைப் போன்று, இந்தியக் குழந்தைத் தொழிலாளர் சட்டத்தை உருவாக்கிட மத்திய தொழிலாளர் துறை அமைச்சகம் புதிய பரிந்துரைகளை அளித்துள்ளது. இப்போது இருக்கும் குழந்தைத் தொழிலாளர் (தடுப்பு மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம், 1986 தீங்கு விளைவிக்காத தொழில்துறைகளில் 14 வயது வரையிலான குழந்தைகளைப் பணிக்கு அனுப்ப அனுமதிக்கிறது. இந்த நிலையில் தொழிலாளர் துறை, அமைச்சரவைக்கு அனுப்பிய பரிந்துரையில் குறிப்பிட்ட தொழிற்சாலைகளில் குழந்தைத் தொழிலாளர்களை முற்றிலும் பயன்படுத்திடத் தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 14 வயது வரை இலவசம் மற்றும் கட்டாயக் கல்வி அளிப்பதற்கு உத்தரவாதம் அளிக்கிறது. நாடு முழுவதும் குழந்தைத் தொழிலாளரைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்காமல் இந்தக் கல்வி உரிமைச் சட்டத்தை எப்படி நடைமுறைப்படுத்த முடியும்? தடை விதிப்பது மட்டுமே சரியானதாக இருக்க முடியும் என்பதை அரசாங்கமும், அதிகாரிகளும் ஏற்க வேண்டும். குழந்தைத் தொழிலாளர் வயதை உயர்த்துவது தொடர்பாக, மாநில அரசுகளிடம் மத்திய அரசாங்கம் ஆலோசனை நடத்தி வருவதாகத் தெரிகிறது. கர்நாடகம் மற்றும் சில மாநிலங்கள் குழந்தைத் தொழிலாளர்களின் வயதை 16 ஆக உயர்த்த வேண்டும் எனப் பரிந்துரை செய்துள்ளது. சர்வதேச தொழிலாளர் அமைப்பும், குழந்தை உரிமை பாதுகாப்பு தேசிய ஆணையமும் 18 வயதுக்கு உள்பட்டவர்களை குழந்தைப் பருவ வயதாகவே வரையறை செய்திருக்கிறது. குழந்தைத் தொழிலாளர்களைப் பயன்படுத்துவதற்கான சட்டங்கள் சரியாகச் செயல்படுத்தாததால்தான் அனைத்துப் பணி இடங்களிலும் குழந்தைகளைக் கடுமையான பணிகளில் ஈடுபடுத்துவது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. தொழிலாளர் துறை அதிகாரிகளும், அரசுசாரா அமைப்பு பிரதிநிதிகளும் சோதனைகள் நடத்தும்போது குழந்தைத் தொழிலாளர்கள் அதிக அளவில் பிடிபடுகின்றபோது இதை மூடி மறைப்பதால் இந்தியச் சமுதாயத்துக்கே இழுக்கு இல்லையா? 2001-02 முதல் 2011-12-ஆம் ஆண்டு வரை தொழிலாளர் துறை நடத்திய 3 லட்சத்து 63 ஆயிரம் சோதனைகளில் 1 லட்சத்து 7 ஆயிரம் குழந்தைத் தொழிலாளர்கள் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. 18 ஆயிரத்து 915 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன என அரசுத்துறை அறிவித்துள்ளது. இந்திய மக்கள்தொகையில் முதன்மையாக இருப்பவர்கள் குழந்தைகளே! எந்தக் கொள்கையானாலும், திட்டமானாலும் அதில் குழந்தைகளைக் கவனத்தில் கொள்ளாமல் உருவாக்கப்படுமானால் அவை அரைகுறையாக இருக்குமே தவிர, முழுமையானதாக இருக்க முடியாது. குழந்தைகளுக்கான தேசிய கொள்கை 1974 முதல் நடைமுறையில் இருந்தாலும் அது குழந்தைகளின் உரிமைகளை அங்கீகரிக்கவில்லை. மாறாக, அரசின் கடமைகளை ஓரளவு அங்கீகரித்திருக்கிறது என்றே கூற வேண்டும். ""மனிதன் பிறந்த நிலையிலேயே விட்டுவிடப்பட்டால் அவன் மனிதனாக இருக்க மாட்டான். அவன் வாழும் சூழ்நிலை அவனது இயற்கைத் தன்மையைச் சூறையாடி விடும். பலபேர் நடந்து செல்லக்கூடிய பாதையில் செடியை வளரவிட்டால் அது அழிந்து போகும். கல்வியற்ற மனிதனும் அழிபட்டுப் போவான்…" என்றார் கல்வியியலைப் பற்றி ஆராய்ந்த அறிஞர் ரூசோ. படிக்க வேண்டிய வயதில் தொழில் செய்ய அனுப்பப்படும் குழந்தைகளின் நிலையும் அப்படித்தான். "குருவியின் தலையில் பனங்காயை வைக்கலாமா?' என்பது கிராமத்துப் பழமொழி. அப்படி சின்னஞ்சிறு குருவியின் தலையில் சுமக்க முடியாத பனங்காயை வைப்பது அநியாயம் என்பது அனைவருக்கும் தெரியும். அப்படியிருக்கும்போது குழந்தைத் தொழிலாளர்களை அனுமதிக்கலாமா?
நன்றி:Dinamani
No comments:
Post a Comment