Sunday, 17 June 2012

எளிமை என்பது ஏழ்மை அல்ல

ன்றுள்ள பல இளைஞர்களுக்கு இவரைத் தெரிந்திருக்காது. பெயரைக் கூடக் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். பெயரை அறிந்தவர்களில் கூட பலர் அவரது செயல்களைப் பற்றி அறிந்திருக்க மாட்டார்கள். அவர் பெயர் கக்கன். காமராஜர் அமைச்சரவையில் அவருக்கு அடுத்த நிலையில் உள்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர். 1957 முதல் 1967 வரை அவர் பொதுப்பணித்துறை (மின்துறை நீங்கலாக), அரிசன நல்வாழ்வு, பழங்குடியினர் நலத்துறை, விவசாயத் துறை ஆகியவற்றின் அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர். அதற்குமுன் ஐந்தாண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்.

அவர் அமைச்சராக இருந்தபோது அவரைச் சந்திக்கச் சென்ற எழுத்தாளர் ஒருவர், அவர் ஒரு பிளேடை இரண்டாக உடைத்து அதில் ஒரு பாதியை மட்டும் சவரத்திற்குப் பயன்படுத்திவிட்டு மீதியை பின்னர் பயன்படுத்துவதற்காகப் பத்திரப்படுத்தி வைத்தார். எழுத்தாளருக்கு ஆச்சரியம். மாநிலத்தின் மிக உயர்ந்த பதவியில், முதலமைச்சருக்கு அடுத்த நிலையில் இருப்பவர் ஏன் இத்தனை சிக்கனமாக இருக்கிறார்? அவரிடமே கேட்டார் எழுத்தாளர். அவர் சொன்னார்: 'சுதந்திரப் போராட்டத்தின்போது சில காலம் சிறையில் இருந்தேன். அப்போதிலிருந்து இப்படித்தான்' என்றார் கக்கன். 'அது சரி. அப்போது நீங்கள் கைதி. இப்போது அமைச்சர். இன்னமும் ஏன் இப்படி இருக்க வேண்டும்?' 'பழகிப் போச்சு' என்றார் கக்கன் சுருக்கமாக.

சிக்கனம் என்பது ஒரு பழக்கம். ஒரு மனநிலை. ஆடம்பரம் என்பது எப்படி ஒரு மனநிலையோ அது போல சிக்கனம் என்பதும் ஒரு மனநிலை.

பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சரிவையடுத்து இந்திய அரசு சில நடவடிக்கைகளை சுற்றறிக்கை மூலம் அறிவித்திருக்கிறது. கருத்தரங்குகள், கண்காட்சிகள் ஆகியவற்றை ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் நடத்தத் தடை, அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் தவிர்க்கப்பட வேண்டும்,  புதிதாக வாகனங்கள் வாங்குவதை ஒத்திப்போட வேண்டும், புதிய நியமனங்களை நிறுத்தி வைக்க வேண்டும். திட்டங்களின் மறுமதிப்பீட்டுக்கு அனுமதி கிடையாது எனப் பல சிக்கன நடவடிக்கைகளை பட்டியலிடுகிறது சுற்றறிக்கை.

இவையெல்லாம் வரவேற்கப்பட வேண்டியவை. நடைமுறைப்படுத்தப்பட வேண்டியவை. ஆனால் இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் சிக்கன நடவடிக்கைகள் பெரிய பலன் அளிக்குமா? அப்படிச் சொல்லிவிட முடியவில்லை. கடந்த ஆண்டின் நிதிப் பற்றாக்குறை 5.7%. இந்த நடவடிக்கைகள் மூலம் 5.1% ஆக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதாவது குறையப் போவது அரை சதவிகிதத்திற்கும் சற்று அதிகம்.

இந்த நாட்டின் உண்மையான தேவை, பகட்டுக்கு எதிரான மனோபாவம். அரசியல்வாதிகளில் துவங்கி, இல்லத்தரசிகள் வரை ஆடம்பரம், பகட்டு, டாம்பீகம் இவை ஒரு தொற்றுநோயைப் போலப் பரவிக் கிடக்கிறது. எளிமைக்கும் ஏழ்மைக்கும் உள்ள வேறுபாட்டை விளங்கிக்கொள்ள இயலாத ஒரு சமூகத்தில் வாழ்கிறோம். அந்த மனோபாவத்தை மாற்றாதவரை சிக்கனம் என்பது இன்னுமொரு ஒப்பனையாகவே இங்கு இருக்கும். 



நன்றி: புதிய தலைமுறை 

No comments:

Post a Comment