Sunday, 17 June 2012

வாழ்க்கை / பூட்டி வைக்கப்பட்ட புயல் - 1

கடமை தந்த பரிசு

தன் நாட்டு மக்களுக்கு ஜனநாயக உரிமை வேண்டும் எனக் கோரியதற்காக 15 ஆண்டுகள் வீட்டுச் சிறையில் பூட்டி வைக்கப்பட்டவர் ஆன் சாங் சூச்சி. நெல்சன் மண்டேலாவைப் போல நீண்ட காலம் சிறை வாசமிருந்த ஒரே பெண். இன்று அவர் போராட்டம் வென்று விட்டது. யார் இந்த ஆன் சாங் சூச்சி?

இதை எழுதியது யார்?"

மிரட்டலான கேள்வியோடு தன் முன் தூக்கி வீசப்பட்ட பத்திரிகையைப் பார்த்தார் ஆன் சாங். 'மயிலின் குரல்'. அந்தப் பத்திரிகையின் ஒவ்வொரு வரியும் அவருக்குப் பரிச்சயமானதுதான். ஏனெனில் அவர்தான் அதன் ஆசிரியர்.

ரங்கூன் பல்கலைக்கழக மாணவர்களின் பத்திரிகை அது. ஆன் சாங் அப்போது அந்தப் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தார். அதன் மாணவர் சங்கத்தின் முக்கியப் பொறுப்பில் இருந்தார்.

"சொல்! யார் இதை எழுதியது ?" நிர்வாகத்தின் குரலில் மிரட்டல் கூடியது.

ஆன் சாங் அந்தக் கட்டுரையைக் கையில் எடுக்காமல் கண்ணால் மட்டும் பார்த்தார். பல்கலைக்கழகத்தில் ஊழல் புரிந்துகொண்டிருந்த ஒரு நிர்வாகியைச் சாடி எழுதப்பட்ட கட்டுரை அது.

"ம்!" மிரட்டல் தொடர்ந்தது. ஆனால் ஆன் சாங்கின் மௌனம் நீடித்தது.

"சொல்! உனக்குத் தெரியாமல் இருக்காது. நீதானே அந்தப் பத்திரிகையின் ஆசிரியர்!"

"என் பணியைப் பற்றித் தெரிந்த உங்களுக்கு என் கடமையைப் பற்றியும் தெரிந்திருக்க வேண்டுமே!" ஆன் சாங் சுருக்கமாகப் பதிலளித்தார். ஆனால் குரல் தெளிவாக இருந்தது.

"அது என்ன கடமை?"

"பத்திரிகையில் எழுதியவர்களையும் அவர்களது உரிமைகளையும் பாதுகாப்பது ஒரு பத்திரிகையாசிரியரின் கடமை!"

"தவறு செய்தவர்களைப் பாதுகாப்பதா உன் கடமை? அடம் பிடிக்காதே! இதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்று தெரியுமா?"

ஆன் சாங் மௌனத்திற்குத் திரும்பினார்.

"சரி! நீ சொல்ல மாட்டாய்! நீ பாதுகாக்க நினைப்பவருக்கு  அளிக்கவிருக்கும் தண்டனையை உனக்கே அளிக்கிறோம். நீ பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கப்படுகிறாய்!" என்று கூர்மையாகச் சொன்ன நிர்வாகம் தொடர்ந்து, " இது உன் கடமைக்குப் பரிசு!" என்று குரலை உயர்த்திச் சிரித்தது.

ஆன் சாங் அறையை விட்டு வெளியே செல்லும் முன் அவர் முதுகுப் பின்னாலிருந்து, "நீ மாணவனாக இருக்கும் வரைதான் மாணவர் பத்திரிகைக்கு ஆசிரியராக இருக்க முடியும். இப்போது நீ மாணவன் இல்லை. யாரோ வீதியில் போகிற மனிதன்! ஹா... ஹா!" என சிரிப்புத் தொடர்ந்தது.

வீதியில் போகிற மனிதனின் போராட்டம் வீதியிலிருந்தே துவங்கியது. ஆன் சாங்கிற்கு ஆதரவாக ரங்கூன் பல்கலைக்கழக மாணவர்கள் தெருவில் இறங்கிப் போராட்டம் நடத்தினார்கள். பின் போராட்டம் மாண்டலே நகருக்கும் அங்கிருந்து நாடு முழுவதும் பரவியது. ஒன்றன் பின் ஒன்றாகக் கல்வி நிலையங்கள் அடைக்கப்பட்டன. இறுதியில் வேறு வழியில்லாமல் ஆன் சாங்கை மீண்டும் பல்கலைக்கழகத்தில் சேர்த்துக் கொண்டது நிர்வாகம்.

இந்த ஆன் சாங்தான் இன்று உலகத்தை பர்மாவின் பக்கம் திரும்பிப் பார்க்கச் செய்திருக்கும் ஆன் சாங் சூச்சியின் அப்பா. அவரை பர்மாவின் தேசத் தந்தை என வரலாற்று நூல்கள் வர்ணிக்கின்றன. காந்தியை அரை நிர்வாணப் பக்கிரி என்று எழுதிய சர்ச்சிலின் பேனா இவரை 'துரோகி!' என்று குறிப்பிடுகிறது. அதில் ஆச்சரியமில்லை. அவர் பர்மாவின் சுதந்திரத்திற்காகப் போராடியவர்.

ஆனால் காந்தியைப் போல் அகிம்சை வழியில் அல்ல. படை திரட்டி துப்பாக்கி ஏந்திப் போராடியவர். ஜப்பான் சென்று பயிற்சி எடுத்து, அவர்கள் ஆதரவுடன் பர்மீயர்களைத் திரட்டி ஒரு ராணுவத்தை அமைத்துக் களம் இறங்கியவர். பின்னால் அந்த ஜப்பானியர்களுக்கு எதிராகவே பிரிட்டீஷ்காரர்கள் துணையுடன் போராடியது நெடிய சரித்திரம்.

ஆன் சாங் அடிப்படையில் ஒரு கம்யூனிஸ்ட். பர்மாவில் கம்யூனிஸ்ட் கட்சியைத் துவக்கியவர்களில் ஒருவர். அதன் முதல் பொதுச் செயலாளரும் கூட.

ஒருமுறை இந்தியாவிற்கு வந்து காங்கிரஸ் கட்சியின் மாநாட்டிலும் கலந்து கொண்டிருக்கிறார். ஆனால் அப்போது அவரை மீண்டும் பர்மாவிற்குள் அனுமதிக்க மறுத்துவிட்டது அன்றைய பர்மீய அரசு. அவர் தனது போராட்டத்திற்கு உதவி கேட்க சீனாவிற்குப் போகலாம் என முடிவு செய்தார். அதை அறிந்த ஜப்பான் அவரைத் தன் நாட்டிற்கு அழைத்தது.

அப்போது ஜப்பானும் இங்கிலாந்தும் எதிர் எதிர் அணியில் இருந்தன. இரண்டாம் உலகப் போர் மேகங்கள் சூழ்ந்திருந்த நேரம். இங்கிலாந்து, அமெரிக்க, ரஷ்ய ஏகாதிபத்தியங்களை எதிர்த்து போர் நடத்திய ஜெர்மனியின் அணியில் இருந்தது ஜப்பான்.

ஜப்பான், ஆன் சாங்கை தன் நாட்டிற்கு அழைத்துச் சென்று ராணுவப் பயிற்சி அளித்தது. படை திரட்டப் பணமும், ஆயுதமும் அளித்தது. ஆன் சாங் தாய்நாடு திரும்பி ஒரு ராணுவத்தைக் கட்டமைத்தார். ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடினார். பர்மா, ஜப்பானின் ஆளுகைக்குக் கீழ் வந்தது. தன் ஆட்சியின் கீழ் வந்ததும் ஜப்பான், பர்மாவை சுதந்திர நாடாக அறிவித்தது.  பேருக்குத்தான் சுதந்திரம் இருந்தது. ஆன் சாங்கிற்கு அதில் முழு திருப்தி இல்லை. ஆங்கிலேயர்களோடு பேச ஆரம்பித்தார் ஆன் சாங்.

இரண்டாம் உலகப் போரில் ஜப்பானும் ஜெர்மனியும் தோல்வியைத் தழுவின. பர்மா மீண்டும் ஆங்கிலேயர் வசம் வந்தது. "டொமீனியன் அந்தஸ்து என்பதை (இங்கிலாந்து அரசருக்குக் கட்டுப்பட்ட சுயாட்சி) ஏற்கமாட்டோம். முழு சுதந்திரம் கொடுப்பதானால் ஒத்துழைக்கிறோம், இல்லையெனில் போராட்டம்" என்றார் ஆன் சாங்.

"ஓராண்டுக்குள் முழு சுதந்திரம் கொடுக்கிறோம், போய் உங்கள் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குங்கள்" என்றது ஆங்கிலேய அரசு. பர்மாவிற்கு முழு சுதந்திரம் என்ற ஒப்பந்தத்தில் 1947ம் ஆண்டு ஜனவரி 27 அன்று பிரிட்டன் பிரதமர் கிளமெண்ட் அட்லியும் ஆன் சாங்கும் கையெழுத்திட்டனர்.

படீரெனக் கதவை உடைத்துத் திறந்தது துணை ராணுவம்.

"நம்முடைய புதிய அரசு முற்றிலும் சுதந்திரமான சோஷலிச அரசாக..." - பர்மாவின் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கக் கூடியிருந்த குழுவின் முன் பேசிக் கொண்டிருந்த ஆன் சாங் கதவு திறக்கும் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தார். நொடி நேரம்தான். படபடவென்று சுட்டுத் தள்ளியது துணை ராணுவம். அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்தார் ஆன் சாங். அடுத்த நொடியே இறந்து போனார்.

முழு சுதந்திரம் என்ற ஒப்பந்தம் மட்டும் கையெழுத்தாகியிருந்த நிலையில், சுதந்திர அரசு அமைவதற்கு முன்பே, 1947ம் ஆண்டு ஜூலை மாதம் அவர் படுகொலை செய்யப்பட்டார்.

அவர் படுகொலை செய்யப்பட்டபோது அவரது மகள் ஆன் சாங் சூச்சிக்கு இரண்டு வயது.

-புயல் வீசும்


நன்றி: மாலன், புதிய தலைமுறை 

No comments:

Post a Comment