Saturday, 30 June 2012

தமிழ் மொழிவரலாறு அறிவோம்



ஒரு நாட்டைப் பற்றியோ, மொழியைப் பற்றியோ அல்லது ஒரு அரசாட்சியைப் பற்றியோ முழுமையாக அறிய வரலாறுகள் உதவுகின்றன. அவ்வரலாறு, உண்மை வரலாறு அமைவதற்குச் சான்றுகள், அதாவது தக்கதோர் உண்மை ஆதாரங்கள் கண்டிப்பாக இருந்தாக வேண்டும். அப்படி உண்மையான, பொருத்தமான ஆதாரங்களின் அடிப்படையில் எழுதப்படும் வரலாற்றை (True Written History) உண்மை வரலாறு லப்படுத்தும் ஆதாரங்களையும் பயன்படுத்தி எழுதப்படாதவற்றை (False Histroy) பொய் வரலாறு அல்லது (False strory) பொய்க் கதைகள் என்றே கூறவேண்டும்.

இப்பகுதியில் நாம் தெரிய வேண்டிய உண்மைகள் இரண்டே!. ஒன்று தமிழ் மொழிவரலாறு. இரண்டு தமிழின் வரலாறு. இவ்விரு வரலாறுகளைக் கண்டிப்பாக ஒவ்வொரு தமிழனும் அறியவேண்டும், தெரிய வேண்டும். தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காகவே இவ்வுண்மை வரலாற்றைப் படைக்கிறேன்.

நம் தாய் மொழியாகிய தமிழைப் பற்றிய தமிழரினத்தைப் பற்றியும் தெரிய பல உண்மை வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.
1, பழங்குகைகளில் காணப்படும் கல்வெட்டுக்கள்
2. நடுகற்களில் காணப்படும் வட்டெழுத்துக்கள்
3. செப்பேடுகளில் காணப்படும் வட்டெழுத்துக்கள்
4. இலக்கியச் சான்றுகள்
5. வெளிநாட்டவர் வருகைக் குறிப்புகள்
6. பழைய நாணயங்கள்
7. அரசு சாசனங்கள்
8. அரசர்களின் ஆவணங்கள்
9. கலைகள் – (இயல், இசை, நாடகம்)
10. கோயில் ஒழுங்குகள், கட்டிடக்கலைகள் மற்றும் சிற்பங்கள்.

இது போன்ற சான்றுகள் பல பல உள்ளன. தமிழைத் தெரிய தமிழ்மொழியின் சிறப்பையும் தொன்மையையும், உண்மை வரலாற்றையும் எடுத்துரைக்கும் ஆதாரங்கள் மிதமிஞ்சி கிடக்கிறது.
தமிழ்மொழி மிக மிகத்தொன்மை வாய்ந்த மொழி. இத்தமிழ் மொழிக்குரிய எழுத்து வடிவங்கள் எந்தக் காலத்தில் தோன்றியது என்பது ஒரு கேள்விக்குறியாவே உள்ளது. இக்காலத்தில்தான் தோன்றியது என்று திட்டவட்டமாகக் கூற முடியாத நிலையில்தான் நம் தமிழறிஞர்கள் உள்ளனர். தற்போது நமக்குக் கிடைத்துள்ள ஆதாரங்களைக் கொண்டு தமிழின் உண்மை வரலாற்றை ஆய்வோம். தொன்மை காலத்தில் அதாவது பழங்காலத்தில், நாம் இன்று கையாளும் தமிழ் எழுத்தல்லாத, வேறு நான்கு வகையான தமிழ் வரி வடிவங்களில் தமிழ்மொழியை எழுதப் பயன்படுத்தி உள்ளனர் என்பதைத் தெளிவாக உணர முடிகிறது.
அவைகள்:
1, தென்பிராமி அல்லது தமிழ்ப் பிராமி
2. வட்டெழுத்துக்கள்
3. கோலெழுதுக்கள் மற்றும்
4. மலையாண்மை,

என்பவைகளாம், இவற்றுள் தென்பிராமி அல்லது தமிழ்ப் பிராமி எழுத்து முறைதான் மிக மிகத் தொன்மையானது. அசோகமன்னர் தன் கல்வெட்டுக்களில் பயன்படுத்திய எழுத்து பாலி மற்றும் பிராமியே என்பது இங்கு குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

முதல் தமிழ் பிராமிக் கல்வெட்டுக்கள்

தமிழ் நாட்டில் முதன் முதலில், 1906 ஆம் ஆண்டில் ஒரு ஆங்கிலேயரால் கண்டுபிடிக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டைக்கு அருகிலுள்ள மருகால்தலை என்ற ஊருக்குப் பக்கத்திலுள்ள குன்றில் தமிழ் பிராமி வட்டெழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின் ஒன்றன் பின் ஒன்றாக ஏராளமான தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அக்கல்வெட்டுக்களில் தமிழ் மொழிச் செய்திகள் அடங்கியுள்ளன என்று 1924ஆம் ஆண்டில் சென்னையில் நடந்த அகில இந்திய மூன்றாவது ஓரியண்டல் மாநாட்டில் எடுத்துரைத்தவர் திரு.கே.வி. சுப்ரமணிய அய்யராவார்.

அடுத்து வந்த அறிஞர்களின் சேவைகள்

1) திரு. ஐராவதம் மகாதேவன் அவர்கள் தமிழ் பிராமிக் கல்வெட்டுக்கள் அனைத்தையும் நன்கு படித்து, எழுத்துக்களை வரிசைப்படுத்தி தெளிவான கருத்துக்களைக் கூறியுள்ளார்.
2) ஒரு காலத்தில் இந்தியாவின் எல்லாப்பகுதிகளிலும் பரவியிருந்த மொழி தமிழ்ப் பிராமி ஒன்றே என்கிறார்.
3) தமிழ்ப் பிராமி எழுத்து முறைக்கும் செமிட்டிக் எழுத்துமுறைக்கும் மிக நெருங்கிய தொடர்பும், எழுத்தொற்றுமையும் மிக அதிகமாக்க் காணப்படுவதால் செமிட்டிக் மொழியைக் கையாளும் பினீசியர்களுக்கும், தமிழ்ப் பிராமி முறையைக் கையாளும் தமிழர்களும் 4000 ஆண்டுகளுக்கும் முன்பே வர்த்தகத்தொடர்புகள் உண்டு என பல அறிஞர்கள் கருதுகின்றனர்.
4) சிந்துச் சமவெளியில் இரு பெருநகரங்களாகி மொகஞ்சதாரோ, அரப்பா போன்ற நகர நாகரிகங்களைப் படைத்தவர்கள் தமிழர்களே ! என்றும் சிந்துச் சமவெளியில்பயன்படுத்தப்பட்ட மொழியும் எழுத்தும்தமிழ் மொழியும் எழுத்தும் ஒன்றே என்று திரு. ரெ.வ. ஹீராஸ் என்னும் வரலாற்று மேதை கூறுகிறார்.
5) இதே கருத்தை சர்.ஜான்மார்ஸல் என்ற அறிஞரும் வலியுறுத்துகிறார்.
6) மொகஞ்சதாரோ, அரப்பா நாகரிக் ஆதிதமிழ் பழங்குடியினருக்குச்சொந்தமானது என்று, இரகசிய அறிஞர்களாகிய திரு. ஜ.எம்.போங்கார்டு லெவின் மற்றும் திரு. என்.வி. குரோ போன்றோர் கருதுகின்றனர்.
7) கி.மு. 3ம் நூற்றாண்டைச் சார்ந்த அசோகனின் ‘கிர்னார்’ கல்வெட்டில் அன்றைய தமிழகத்து அரசுகளையும் அரசியல் செய்திகளையும் அரசர்களின் பெயர்ப் பட்டியலையும் இன்றும் கூட காணலாம்.
நந்தி வர்ம பல்லவ மன்னனுடைய கல்வெட்டென்று தமிழ் மன்னர்களை கூறுகிறது.
9) தமிழக நாகரிகம் கிழக்கில் போளினோசியா, மேற்கில் மேற்காசியா, எகிப்து போன்ற நாடுகளில் எளிதில் பரவியது என்கிறார் Dr. R.R. தீட்சிதர்.
10) தமிழக நாகரிகம் கிழக்கில் போளினேசியா, மேற்கில் மேற்காசியா, எகிப்து போன்ற நாடுகளில் எளிதில் பரவியது என்கிறார் கால்டுவெல் தன் (Comparative grammer of Dravidian Languages) திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலில்….
11) தமிழ்ப் பிராமி எழுத்துமுறை கிறிஸ்து பிறப்பிற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் வழக்கத்திலிருந்தது என்கிறார் திரு ஐராவதும் மகாதேவன் அவர்கள். மேலும் அவர், தமிழ்ப் பிராமியைப் பற்றிக் கூறுகையில் அரிக்கமேட்டில் கிடைத்துள்ளள பானை ஓடுகளிலுள்ள தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் அதன் வளர்ச்சிக்குத் தக்க சான்றாகும். என்கிறார்.
12) கி.பி. 3ஆம் நூற்றாண்டில், தமிழ்ப் பிராமியிலிருந்து, வட்டெழுத்துகளும் தமிழ் எழுத்துக்களும் காலப்போக்கில் பிரிந்து தனித்தன்மை பெற்றதாக டாக்டர், நாகசாமி கூறுகிறார்.
13) ரோம் நாட்டுப் பொற்காசுகள், வெள்ளிக்காசுகளின் துணைகொண்டு, கிறிஸ்துபிறப்பிற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்மொழியும் தமிழனும், யவன நாடு, சீனதேசம், தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் நெருங்கிய தொடர்ப்பும், வாணிகத் தொடர்பும் வைத்திருந்தனர் என்பது தெளிவாகிறது.
14) சின்னமனூர் செப்பேடுகளும், வேள்விக்குடிச் சாசனமும் சங்க கால மன்னர்களின் பெயர்களை வரிசைப்படுத்திக் காட்டுவதுடன் சங்கங்களின் வரலாற்று மரபை உறுதி செய்கின்றன. அவ்வண்ணமே! தொல்காப்பியம், பட்டினப்பாலை, மருதைக்காஞ்சி, சிலப்பதிகாரம், மணிமேகலை, போன்ற இலக்கிய ஆதாரங்கள் தக்கதோர் புறச்சான்றுகளாக உள்ளன. மேலும் பல்லவர்கள், பாண்டியர்கள், சோழர்கள் காலத்துக் காசுகளும் தமிழ்மொழியைக் கையாண்ட தமிழர்களின் சிறப்பைப் பறைசாற்றிய வண்ணமுள்ளது.

உண்மை வரலாறு

தமிழனின் பிறப்பிடமும், தமிழ் மொழியின் பிறப்பிடமும் ஒன்றே. குமரிக்கண்டத்தில், கையாண்ட மொழி தமிழ் மொழியே, பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் படிப்படியாக வளர்ந்த தமிழும் தமிழனும் புகழின் உச்சகட்டமெட்டினர். பழம்பாண்டி நாட்டை உலகிற்கு சுட்டிக்காட்டி சிறப்புடன் வாழ்ந்த்னர். தமிழ் மொழி சீரும் சிறப்பும் பெற்றுத் தழைத்தோங்கியது.

புகழ்க்கொடி நாட்டியது

குமரிக் கண்டத்தைத் தன் தாயகமாகக்கொண்ட தமிழன் உலகின் பல பகுதிகளுக்கும் பரவலானான். தரை மார்க்கமாகவும், கடல் மார்க்கமாகவும் வாணிகத்தை மேற்கொண்டான். ஆங்காங்கே குடியிருப்புகளை உருவாக்கி உலகெங்கும் நிலைத்தான். நான்குமுறை ஏற்பட்ட கடல்கோள்களால் தமிழனின் புகழும் நாடும் மொழியும் அழிவுற்றன. தென்மதுரை, நாகநன்நாடு, கபாடபுரம், காவிரிப்பூம்பட்டினம் அனைத்துமே அழிந்து நாசமாகியது.


நன்றி: இளஞ் சித்திரன், உலக தமிழ் மக்கள் இயக்கம்

சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு


சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு


சீனாவில் எழுப்பப்பட்ட சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.

சீன நாட்டில் காண்டன் எனும் நகருக்கு 500 கல் வடக்கே உள்ள சூவன்சௌ என்னும் துறைமுக நகர் உள்ளது. பண்டைய காலத்திலும் இது சிறந்த துறைமுகமாக விளங்கிற்று. அந்தக் காலத்தில் தமிழ் வணிகர்கள் இந்நகருக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர்.

தமிழ்நாட்டிலிருந்து புறப்படும் வணிகக் கப்பல்கள் தாய்லாந்து சென்று அதன் மேற்குக் கரையோரமாக உள்ள சில துறைமுகங்களிலும் தங்கிப் பிறகு வியத்து நாம் சென்று அங்கிருந்து சீனநாட்டை அடைந்துள்ளனர்.

தமிழ் நாட்டிலிருந்து நேரடியாகச் சீனாவிற்குக் கடல் வழியாகச் செல்லவேண்டுமானால் வங்காள விரிகுடாவைக் கடந்து உள்ள மாலக்கா வழியாகத் தென்சீனக் கடலை அடையலாம். மலேசியத் தீபகற்பத்தைச் சுற்றி இவர்கள் செல்லவேண்டியிருக்கும். ஆனால் இந்தவழி சுற்றுவழியாகும். ஆயிரம் கல்களுக்கு அதிகமாகப் பயணத்தொலைவு நீளும். மேலும் பயணநேரத்திலும் பல மாதம் கூடிவிடும்.

சீனாவில் தமிழர்கள் காண்டன் நகரில் மட்டுமன்று. வேறு சில இடங்களிலும் வணிகக் குடியேற்றங்களை அமைத்திருந்தனர். பிற்காலச் சோழர் காலத்தில், புகழ்பெற்ற வணிகக் குழாமான திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் எனும் குழுவினர் சீனநாட்டின் பல்வேறு பகுதியிலும் வணிகம் செய்துள்ளனர் என்பதற்குப் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

சூவன்லிசௌ துறைமுக நகரில் சிவாலயம் ஒன்று உள்ளது. இந்த ஆலயத்தில் நிறுவப் பெற்றுள்ள சில விக்கிரகம் குப்லாய்கான என்னும் புகழ்ப் பெற்ற சீனச் சக்கரவர்த்தியின் ஆணையால் அமைக்கப் பட்டதாகும். இவருக்குச் சேகாசைகான் என்ற பெயரும் உண்டு. இவரின் உடல் நலத்திற்காக இந்த ஆலயம் எழுப்பப்பட்டது.

இந்தக் கோயில் திருக்கதாலீசுவரம் என வழங்கப்பட்டது. இந்த ஆலயத்தில் உள்ள சிவன் திருக்கதாலீசுவரன் உதயநாயனார் என அழைக்கப்பட்டார். சீனச் சக்கரவர்த்தியின் இந்த ஆணையை நிறைவேற்றியவரின் பெயர் தவச்சக்கரவர்த்திகள் சம்பந்தப் பெருமாள் என்பதாகும்.

சக யுகம் சித்திராபவுர்ணமி அன்று இந்த ஆலயம் நிறுவப்பட்டது. கி.பி 1260ம் ஆண்டு குப்லாய்கான் முடிசூடினான். இவன் உலகையே நடுங்க வைத்த மங்கோலியச் சக்கரவர்த்தியான செங்கிசுகானின் பேரனாவான. மங்கோலியச் சக்கரவர்த்திகள் ஆளுகையில் சீனாவும் இருந்தது.

இவன்தான் பெய்சிங் நகரைக்கட்டி அதைத் தனது பேரரசின் தலைநகராக்கினான். அவருடைய பேரரசு விரிந்து பரந்திருந்தது. வலிமை வாய்ந்த சக்கரவர்த்தியாக அவன் திகழ்ந்தான் புகழ்பெற்ற யுவான் அரசமரபை இவனே தொடங்கியவனாவான். தமிழ்நாட்டில் பிற்காலப் பாண்டியப் பேரரசு அரசோச்சிய காலத்தில் இவன் சீனப்பேரரசின் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தான். பாண்டிய அரச குலமும் குப்லாய்கானும் மிகுந்த நட்புறவுடன் திகழ்ந்தனர். அப்போதிருந்த பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியன் ஆவான். இருநாடுகளுக்கிடையேயும் தூதர்கள் பரிமாற்றம் செய்துகொள்ளப்பட்டது.

சீனாவில் எழுப்பப்பட்ட இந்த சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு இக்கோவிலில் உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கோவிலில் சோழர்காலச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட மிக அபூர்வமான தமிழ்க்கல்வெட்டு இதுவாகும்.


நன்றி:தமிழ் பேசக் கற்றுக் கொள்ளுங்கள் (முக நூல்)

சிறு துளிகள்


"படிப்பிற்கு தடையில்லை!'

"சிறு துளிகள்' அமைப்பின் மூலம், ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவும், அண்ணா பல்கலைக்கழக மாணவி சைதன்யா: பொதுவாக, கல்லூரியில், பிறந்த நாள், பாஸ் செய்தால், அரியர் வாங்கினால், என, அனைத்திற்கும் நண்பர்களுக்கு, "பார்ட்டி' வைப்பது சம்பிரதாயம்.

அப்படி ஒரு நாள், என் பிறந்த நாள் பார்டிக்கும், சில ஆயிரங்களை செலவிட்டேன். அதில், பெரும்பாலான உணவு வகைகள், வீணாகியிருந்ததைப் பார்த்த போது, இதற்கு ஏதாவது உபயோகமாக செய்திருக்கலாமே என தோன்றியது. எங்கள் கல்லூரியில், காலில் செருப்பு கூட போடாமல் வந்த, ஏழை மாணவருக்கு, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், தன் முழு சம்பளத்தையும் கொடுத்து உதவினார். அந்த உதவும் மனப்பான்மை, எப்போதும், நம்மிடம் இருக்க வேண்டும் என, எங்கள் "டீன்' கூறிய வார்த்தைகள் எங்களை இன்னும் உத்வேகமாக்கியது.

தினமும் கேன்டீனிலும், அவ்வப்போது நடைபெறும் நண்பர்கள் பார்ட்டியிலும், செலவு செய்யும் தொகையில் ஒரு பங்கை, எங்கள் அமைப்பிற்காக கேட்டோம். இந்தத் தொகை நம்முடன் படிக்கும் மாணவர்களுக்கு பயன்படும் என கூறி, ஒவ்வொரு வகுப்பிலும் பணம் சேகரித்தோம். கல்லூரியில், எங்கள் அமைப்பின் பெயரில் வங்கிக் கணக்கை ஆரம்பித்து, அதன் நடவடிக்கைகளை முதல்வர், மூத்த பேராசிரியர்கள் கொண்ட குழு மூலம், கண்காணிப்பது என, முறைப்படுத்தினோம்.

பணம் கொடுத்தவர்களின் விவரங்களை, எங்கள் இணையதளத்தில் வெளியிட ஆரம்பித்தோம். இந்த வெளிப்படைத் தன்மை, எங்கள் மேல் நம்பிக்கையை ஏற்படுத்தியது. பத்து ரூபாயில் இருந்து, பல ஆயிரங்கள் வரை, மாணவர்கள் கொடுத்து உதவினர். "படிப்பிற்கும், மருத்துவச் செலவிற்கும், பிற அத்தியாவசிய செலவிற்கும் பணம் தேவையோ, அவர்கள் விண்ணப்பிக்கலாம்' என, கல்லூரியின் முக்கியமான இடங்களில், பெட்டிகளை வைத்தோம்.

தக்கச் சான்றுகளுடன் விண்ணப்பித்த பலருக்கும் உதவினோம். எங்கள் கல்லூரியில் இனி யாருக்கும், படிப்பிற்கு குறுக்கே பணம் ஒரு பிரச்னையாக இருக்கக் கூடாது. அதை, "சிறுதுளிகள்' பார்த்துக் கொள்ளும்.


நன்றி: தமிழால் இணைவோம் (முக நூல்)

ரஜத் குப்தாவின் வீழ்ச்சி!

ரஜத் குப்தாவின் வீழ்ச்சி! 
 
ரஜத் குப்தா என்னும் பெயர் இப்போது பல நாட்டு ஊடகங்களிலும் பேசப்படுகிறது. ஜூன் 15-ஆம் தேதி முதல் அமெரிக்க ஊடகங்களில் அவரைப் பற்றிய செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து விவாதிக்கப்படுகிறது. உலகின் முக்கியமான பொருளாதாரப் பத்திரிகைகளில் அவரைப் பற்றிய விவரங்கள் வந்து கொண்டிருக்கின்றன.  அவரைப் பற்றி மற்றவர்களைவிடவும் நாம் கொஞ்சம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில், அவர் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். தனது திறமையாலும் உழைப்பாலும் உலக அளவில் பல மிகப்பெரிய நிறுவனங்களிலும் அமைப்புகளிலும் முக்கிய பொறுப்புகளை வகித்தவர். நமது நாட்டின் முன்னேற்றத்தில் ஈடுபாடு கொண்டவர்.  அமெரிக்காவில் மிகவும் மதிப்புக்குரியவராக விளங்கி வந்தவரான அவர், அந்நாட்டு நீதிமன்றத்தால் உள் வணிகக் குற்றத்தில் சம்பந்தப்பட்டதற்காகக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு தண்டனைக்கு உரியவராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதன் மூலம் இதுவரை அமெரிக்காவில் நடந்த, படித்து பொறுப்பிலிருப்பவர்கள் ஈடுபடக்கூடிய வெள்ளைக் காலர் குற்றங்கள் ஒன்றில் முக்கியமானதாக அவரது வழக்கு கருதப்படுகிறது.  தற்போது 63 வயதாகும் ரஜத் குப்தா கொல்கத்தாவில் பிறந்தவர். அவரது அப்பா சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர். பத்திரிகையாளர். அம்மா பள்ளி ஆசிரியை. அவரது சிறு வயதிலேயே குடும்பம் தில்லிக்கு மாறியது. குப்தாவுக்கு பதினாறு வயது ஆகும்போது அப்பா காலமானார். இரண்டு ஆண்டு கழித்து அம்மாவும் இறந்துவிட்டார். தனது பதினெட்டு வயதில் அனாதையானார். கூடப்பிறந்தவர்கள் மூன்று பேர். பிறருடைய உதவியை நாடாமல் தாங்களே வாழ்க்கையை நடத்தத் துணிந்தனர்.  இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான நுழைவுத் தேர்வில் அகில இந்திய அளவில் பதினைந்தாவது இடத்தைப் பெற்றார். தில்லி ஐ.ஐ..டியில் சேர்ந்து பி.டெக் படித்தார். கிடைத்த வேலையை உதறி விட்டு அமெரிக்காவில் உள்ள பிரபலமான ஹார்வார்டு பல்கலைக் கழகத்தில் மேலாண்மைத் துறையில் எம்.பி.ஏ பட்டம் பெற்றார். பின்னர் 1973-ஆம் ஆண்டு அமெரிக்காவில் மெக்கென்சி அண்ட் கம்பெனி என்னும் உலகின் முன்னணி மேலாண்மை ஆலோசனை நிறுவனத்தில் பணியமர்ந்தார். பின்னர் 1994-ஆம் ஆண்டு அதே நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பான மேலாண்மை இயக்குநராகத் தேர்வு செய்யப்பட்டார்.  அந்தப் பொறுப்புக்கு, அமெரிக்காவில் பிறக்காத ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவது அதுவே முதல் முறையாகும். மேலும் அதன் மூலம் ஒரு பன்னாட்டு நிறுவனத்துக்கு முதன் முதலாகத் தலைமைப் பொறுப்பேற்ற இந்தியராக ஆனார்.  இருபது ஆண்டுகளுக்கு முன்னால் அமெரிக்கர்கள் ஆதிக்கம் செலுத்திய கன்சல்டிங் துறையில் உலக அளவில் ஒரு பெரிய நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பு என்பது மிகப் பெரிய விஷயமாகும்.  அப்பொறுப்புக்குத் தொடர்ந்து மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒன்பது ஆண்டுகள் இருந்துவிட்டு 2003-ஆம் ஆண்டு பணியை நிறைவு செய்தார். அந்நிறுவன விதிகளின்படி ஒருவர் அதிகபட்சமாக அவ்வளவு காலம்தான் பணியாற்ற முடியும். பின்னர் அந்நிறுவனத்திலேயே மூத்த பங்குதாரராகத் தொடர்ந்தார்.  2007 முதல் அந்நிறுவனம் அவரைப் பணியிலிருந்து மாண்புடன் விடுவிக்கப்பட்ட மூத்த பங்குதாரராகக் கெüரவப்படுத்தி அவருக்குச் சம்பளம் உள்பட அலுவலகத்தையும் கொடுத்து வைத்திருந்தது.  மெக்கென்சி நிறுவனத்தின் முழுநேரப் பணியில் இருந்து ஓய்வு பெற்றபின் உலகின் பெரிய நிறுவனங்கள் மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பல அமைப்புகளில் தலைவர், இயக்குநர், குழு உறுப்பினர் மற்றும் ஆலோசகர் என பல பொறுப்புகளை வகிக்கிறார். உலகின் முன்னணி மூலதன நிறுவனமான கோல்டுமேன் சாக்ஸ் மற்றும் நுகர்பொருள்கள் துறையில் முக்கியமான ப்ராக்டர் அண்ட் கேம்பிள் ஆகிய பன்னாட்டு நிறுவனங்களில் இயக்குநர் குழுவில் சேர்ந்தார். மேலும் பில்கேட்ஸ் குடும்பத்தினரால் ஆரம்பிக்கப்பட்டு உலகின் பல நாடுகளில் செயல்பட்டு வரும் பெரிய அமைப்பான கேட்ஸ் பவுண்டேஷன் அமைப்பில் பொறுப்பேற்றுள்ளாôர்.  முக்கியமான சர்வதேச அமைப்புகளிலும் பதவிகள் அவரை நாடி வருகின்றன. உலகின் பல நாடுகளிலுள்ள தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பான சர்வதேசத் தொழில் அமைப்பின் (இன்டர்நேஷனல் சேம்பர் ஆப் காமர்ஸ்) தலைவராக இருக்கிறார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலருக்கு மேலாண்மைச் சீர்திருத்தங்கள் சம்பந்தமான சிறப்பு ஆலோசகராகச் செயல்படுகிறார்.  உலகின் முன்னணி மேலாண்மை நிறுவங்களான ஹார்வர்டு, எம்.ஐ.டி மற்றும் கெல்லாக் நிறுவனங்களின் இயக்குநர் குழுக்கள் மற்றும் சிகாகோ பல்கலைக்கழகத்தின் அறங்காவலர் குழு உள்ளிட்டவற்றில் பொறுப்பு வகிக்கிறார். மேலும் அவரே கம்பெனிகள், கல்வி நிறுவனம் மற்றும் பொதுச்சேவைக்கான அமைப்பு ஆகியவற்றை நிறுவுகிறார்.  இவ்வாறு தொழில், கல்வி, வியாபாரம், பொதுச்சேவைகள் சம்பந்தப்பட்ட பல முக்கியமான அமைப்புகளில் அமெரிக்காவில் மட்டுமன்றி, சர்வதேச அளவிலும் பொறுப்பு வகிக்கிறார். அவற்றையெல்லாம் ஒருவரே பெறுவது என்பது அசாத்தியமான காரியமாகும். அயல்நாட்டுக்குப் படிக்கச் சென்று வேலைக்கு அமர்ந்த ஓர் இந்தியர் உலக அளவில் அதிகபட்சமான பொறுப்புகளை வகித்தது அண்மைக்காலங்களில் இவராகத்தான் இருக்கக் கூடும்.  கூடவே, பிறந்த நாடான இந்தியாவுக்கும் அவர் தனது பங்கினை அளிக்கிறார். ஹைதராபாதிலுள்ள சர்வதேசத் தரம் வாய்ந்த இந்தியன் பிசினஸ் ஸ்கூல் அவருடன் மெக்கென்சியில் உயர் அதிகாரியாகப் பணிபுரிந்த அனில் குமாருடன் சேர்ந்து ஆரம்பித்த மேலாண்மை நிறுவனமாகும். அவரே அதன் தலைவராகவும் பொறுப்பேற்கிறார்.  இந்தியாவில் சமூக மற்றும் பொருளாதார மாற்றங்களைத் துரிதப்படுத்துவதற்காக அமெரிக்கன் இந்தியா பவுண்டேஷன் என்னும் அரசு சார்பற்ற அமைப்பை ஆரம்பித்தார். ஐந்து கோடி டாலர்களுக்கு மேல் பணம் திரட்டி இந்தியாவின் வளர்ச்சி நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் அமெரிக்காவிலிருந்து செயல்படும் பெரிய அமைப்புகளில் ஒன்றாக அது விளங்குகிறது. மேலும் இந்தியப் பிரதமரின் ஆலோசனைக் குழுவிலும் இடம்பெறுகிறார்.  தன்னுடைய உழைப்பாலும் முயற்சியாலும் இவ்வளவு சாதனைகளைப் புரிந்த அவர் வெளி நாடுகளில் இருந்து சென்று அமெரிக்காவில் குடியேறும் மக்கள் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்தார். அப்படிப்பட்டவர் சென்ற ஜூன் 15-ஆம் தேதியன்று நியூயார்க்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளார். அதனால்தான் தீர்ப்பு சொல்லும்போது அந்தக் குழுவிலிருந்த இரண்டு பேர் கண்ணீர் விட்டனர். மாணவப் பருவத்தில் அனாதையாக ஆக்கப்பட்ட ஒரு மகத்தான சாதனையாளர், சமுதாயத்தின் உயர்ந்த நிலையை அடைந்தவர், தனது பிற்காலத்தில் தண்டனைக்குள்ளாவது என்பது வருத்தத்தை அளிக்கும் விஷயமாகும்.  அவர் மேலுள்ள குற்றங்கள் மேல்முறையீட்டிலும் உறுதி செய்யப்படும்போது தண்டனை அதிகபட்சமாக இருபது ஆண்டு வரைக்கும்கூட கொடுக்க முடியும் என்று சொல்லப்படுகிறது.  அதேசமயம் அவருடைய கடந்தகால வாழ்க்கை, செய்து வந்த சேவைகள் மற்றும் தனது தவறுகளின் மூலம் நேரடியாகப் பயன் பெறாதது ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு தண்டனை வெகுவாகக் குறைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிகிறது.  ரஜத் குப்தா மேலுள்ள குற்றச்சாட்டுகள் என்ன? கோல்டுமேன் சேக்ஸ் கம்பெனியில் அவர் இயக்குநர் குழுவில் இருந்தபோது அந்தக் கம்பெனி சம்பந்தமான விஷயங்களை, அவை முறையாக வெளியாவதற்கு முன்னரே தனது நண்பரான ராஜ் ராஜரத்தினம் என்பவருக்கு ரகசியமாகச் சொல்லிவிட்டார் என்பதுதான் முக்கியமான குற்றச்சாட்டாகும். அதன் மூலம் அவற்றைப் பயன்படுத்தி ராஜரத்தினம் லாபம் சம்பாதிக்க அவர் காரணமாக இருந்து விட்டார்.  55 வயதான இந்த ராஜரத்தினம் இலங்கையில் பிறந்த தமிழர். இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் படித்துப் பின்னர் அமெரிக்காவில் கேலியன் குரூப் என்ற மூலதன நிறுவனத்தை ஆரம்பித்து நடத்தினார். அது உலகின் பெரிய ஹெட்ஜ் பண்ட் நிறுவனங்களில் ஒன்றாக இருந்தது. அதனால் அவரது சொத்தின் நிகர மதிப்பு மட்டும் இன்றைய மதிப்பில் சுமார் ஒன்பதாயிரம் கோடிக்கு மேல் இருந்தது. எனவே அவர் 2009-ஆம் ஆண்டில் இலங்கையில் பிறந்த மக்களில் உலகிலேயே பெரிய பணக்காரராக இருந்தார்.  தனது வியாபார நடவடிக்கைகளுக்காகப் பல கம்பெனிகள் சம்பந்தமான விஷயங்களை, அவை பற்றித் தெரிந்தவர்களிடம் ரகசியமாகப் பெற்று அவற்றைப் பயன்படுத்தி பங்குச் சந்தை மூலம் லாபமடைந்தார் என அவர் 2009-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.  அதற்காக சென்ற ஆண்டு அவருக்கு பதினொரு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ஐநூறு கோடி ரூபாய்க்கு மேல் குடிமையியல் அபராதமும் விதிக்கப்பட்டது. எனவே, தற்போது சிறைத் தண்டனையை அனுபவித்து வருகிறார்.  ராஜரத்தினத்தின் உள்வணிக நடவடிக்கைகளுக்கு உதவி புரிந்ததற்காக அவரது நண்பரான அனில்குமார் என்ற அமெரிக்கவாழ் இந்தியர் 2009-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு அரசுத் தரப்பிலான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்.  54 வயதாகும் இவர் மும்பை ஐ.ஐ.டி மற்றும் அமெரிக்காவின் பிரபலமான வார்ட்டன் மேலாண்மை நிறுவனம் ஆகியவற்றில் படித்தவர். மெக்கென்சி கம்பெனியில் ரஜத் குப்தாவுடன் சிறப்பாகப் பணிபுரிந்தவர். அங்கேயே மூத்த பங்குதாரராகவும் இயக்குநராகவும் உயர்ந்தார். அவுட் சோர்சிங் துறைக்கு மூலகாரணமாக விளங்கியவர். இந்தியாவின் பெரிய தொழில் அமைப்பான சி.ஐ.ஐ.யின் அமெரிக்கத் தலைவராகவும் சமூகத்தில் நல்ல நிலையிலும் இருந்தவர்.  மேற்குறிப்பிட்ட மூவருமே தலைசிறந்த கல்விக்கூடங்களில் நன்கு படித்தவர்கள். கோடிக்கணக்கில் சம்பாதிப்பவர்கள். பெரிய வீடுகளையும் சகலவிதமான செüகரியங்களையும் பெற்றவர்கள். ரஜத் குப்தாவின் சொத்துகள் இந்திய மதிப்பில் 650 கோடி ரூபாய்களுக்கு மேல் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.  அனில் குமாருக்கும் பல கோடிக்கணக்கான ரூபாய்களில் சொத்துகள் உள்ளதாகத் தெரிகிறது. மேலும் ரஜத் குப்தா மற்றும் அனில் குமார் ஆகியோர் சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் உடையவர்கள். இவ்வளவும் இருந்து இவர்கள் ஏன் குற்றம் புரிகிறார்கள்?  ராஜ ரத்தினம் மிகப்பெரிய நிறுவனத்தை நடத்தி அதில் அதிகமாகச் சம்பாதித்த பின்னரும் மேலும் மேலும் சம்பாதிக்க வேண்டும் என்று உந்தப்பட்டார். அதற்காகத் தவறான வழிகளைத் தேர்ந்தெடுத்து அதற்கு ஒத்துழைக்கக் கூடிய வகையில் தனது தொடர்புகளை வலையில் விழ வைத்தார்.  அப்படித்தான் வார்ட்டனில் படிக்கும்போது அறிமுகமான அனில் குமார் மூலம் அவர் கோல்டுமேன் சேக்ஸ் கம்பெனியில் பணியிலிருந்த காலத்தில் ரகசியமான விவரங்களைப் பெறுகிறார். ஆனால், அதற்காக அனில் குமாருக்குக் கிடைத்த தொகை மிகவும் குறைவு. ஆனாலும் தெரிந்தே தவறு செய்தார். ராஜரத்தினத்தை அவரது பேராசை அலைக்கழிக்க, கூடா நட்பின் மூலம் ஏற்பட்ட சபலம் அனில் குமாரை ஆட்கொள்கிறது.  குப்தாவைப் பொருத்தவரையில் தனது நடவடிக்கைகள் மூலம் அவர் எந்த விதமான பலனையும் பெறவில்லை என்று சொல்லப்படுகிறது. ஆயினும் அவர் ஏன் சட்டத்தை மீறி தவறு செய்யத் துணிந்தார் என்பது உறுதியாகத் தெரியவில்லை. பெரிய கம்பெனியை நடத்தி ராஜரத்தினம் அதிக அளவில் சொத்துகளை வைத்திருந்ததால் எதிர்காலத்தில் அவரது உதவியை எதிர்பார்த்து குப்தா அந்தத் தவறுகளைச் செய்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.  எதிர்காலம் பற்றி ஏதேதோ கணக்குகளைப் போட்டு சட்டத்தை மீறிய தனது நடத்தைகள் மூலம் தனக்கிருந்த மரியாதை அனைத்தையும் குப்தா இழந்து விட்டார். வகித்து வந்த பெரிய பொறுப்புகள் அவரைவிட்டுப் போயின. தன்னுடைய கடந்த கால உழைப்பு மற்றும் நடவடிக்கைகள் மூலம் கிடைத்த அங்கீகாரங்கள் மற்றும் நற்பெயர் என எல்லாவும் போய் விட்டன. வாழ்க்கையின் உச்சத்துக்குச் சென்றவர்கள் தலை கவிழ்ந்து கீழே பயணிக்கிறார்கள்.  இவர்கள் அவமானப்படுவதும், தண்டனைக்கு உள்ளாவதும் ஒருபுறம் இருக்கட்டும். இந்தியாவின் நற்பெயருக்கும், இந்தியர்களின் நம்பகத்தன்மைக்கும், நாணயத்துக்கும் அல்லவா களங்கம் கற்பித்திருக்கிறார்கள். பணமும், படிப்பும், புத்திசாலித்தனமும், நேர்மையும், நாணயமும், ஒழுக்கமும் இல்லாமல் போனால் அதனால் என்ன பயன்?  உழைப்புக்கு இளைஞர் சமுதாயம் முன்னுதாரணமாகக் கருதிய நபர்கள் இப்போது தவறான முன்னுதாரணமாக தேசத்துக்கே தலைகுனிவை ஏற்படுத்தி விட்டார்களே என்பதுதான் வேதனை அளிக்கிறது.  



(கட்டுரையாளர்: ப. கனகசபாபதி, கோவையிலுள்ள  தமிழ்நாடு நகரியல் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர்).  

நன்றி: Dinamani

Friday, 29 June 2012

காந்தியோடு போகட்டும்

காந்தியோடு போகட்டும்

ரூபாய் நோட்டுகளில் எந்த எந்த தலைவர்களின் படங்களை அச்சிடலாம் என்று பொதுமக்களிடம் கருத்து கேட்கிறது ரிசர்வ் பாங்க். ஆதியில் அசோகர் தூண் மட்டுமே நோட்டுகளில் இடம் பெற்றது. இப்போது மகாத்மா காந்தி இந்திய கரன்சியை அலங்கரிக்கிறார். முதலில் அவரும் 500 ரூபாய் நோட்டில் மட்டும்தான் சிரித்துக் கொண்டிருந்தார். ஊழல் பேர்வழிகள், மோசடிக்காரர்கள், கருப்புப்பண ஆசாமிகள் கையில் அந்த நோட்டு தாராளமாக புழங்கியதன் விளைவாக காந்தி பெயரும் கெடும் ஆபத்து உருவானது. அதனால் 1997ல் இருந்து எல்லா நோட்டுகளிலும் காந்தி அமர்ந்தார். இந்தியா முழுமையும் & சிலர் நீங்கலாக & ஏற்றுக் கொள்கிற சர்ச்சையில்லாத தலைவர் என்பதால் அந்த விஷயத்தில் இதுவரை பிரச்னை இல்லை. கள்ளநோட்டு அடிப்பவர்களும் காந்திஜிக்கு உரிய இடம் அளித்ததால்  நன்றாகவே போய்க் கொண்டிருந்தது. ஒரு துறையோ தொழிலோ சுமுகமாக போய்க் கொண்டிருந்தால் யாராவது ஒருத்தருக்கு தூக்கம் கெட்டுவிடும் என்பது இந்தியாவின் தனித்தன்மைகளில் ஒன்று. ரிசர்வ் பாங்கில் அங்ஙனம் யாருக்கானதோ அறியோம். 'தனியாக இருக்கிறேன், போரடிக்கிறது' என்று தேசப்பிதா கனவில் வந்து கோரிக்கை வைத்தாரா என்பதும். சத்ரபதி சிவாஜி, டாக்டர் அம்பேத்கர், நேரு, இந்திரா உருவங்களை அரசு சிபாரிசு செய்திருக்கிறதாம். இதற்காகவே காத்திருந்ததா அல்லது அரசு சமிக்ஞைக்கு பிறகுதான் வங்கிக்கு ஆசை பிறந்ததா என்பதற்கு விடை உங்கள் கையில். வேடிக்கை தெரியுமா, முதலில் காந்தி பெயரை சொன்னது யார், அங்கீகரித்தது யார், அச்சிட உத்தரவிட்டது யார் என்பதை அறிவதற்கே வங்கியில் ஆவணங்கள் ஏதுமில்லை. தேசிய தலைவர்களை கட்சி, மாநிலம், மதம், ஜாதி, மொழி, இனம் இன்னபிற சிறுவட்டங்களுக்குள் சுருக்கி சொந்தம் கொண்டாடும் மனநிலை மக்களிடம் உருவாகி நீண்டகாலம் ஆகிவிட்டது. அதன் விளைவாக எழுந்த மோதல்களையும் கலவரங்களையும் பார்த்தோம். மாவட்டங்களுக்கும் போக்குவரத்து கழகங்களுக்கும் சூட்டிய தலைவர்களின் பெயரை நீக்க வேண்டிய நிர்ப்பந்தம்  மறந்திருக்காது. 'இந்த தலைவரை எனக்கு பிடிக்காது, எங்கள் தலைவர் படம் போட்ட நோட்டு கொடு' என்று சிலர் முரண்டு பிடிக்கலாம். விரும்பாத தலைவரின் படத்தில் அவதூறாக கிறுக்கலாம். மீசை தாடி வரைந்து கேலி பண்ணலாம். கோபத்தில்  கிழித்து குப்பை தொட்டியில் போட்டு கொளுத்தலாம். திருச்சியில் நடந்திருக்கிறதுதானே. எந்த தலைவருக்கு நோட்டில் இடம் கொடுப்பது என்பது எப்போதும் ஆளும் கட்சியின் உரிமையாயிருக்கும். ஆட்சி மாறியதும், மேற்படி தலைவர் படம் போட்ட நோட்டுகள் செல்லாதென அறிவித்து புதிய தலைவர்களை அறிமுகம் செய்ய புதிய அரசு முன்வரலாம். கோஷ்டிகளோ வெளிநாடுகளோ பலான தலைவர் படம் போட்ட கள்ள நோட்டுகளை சகட்டுமேனிக்கு அச்சிட்டு புழக்கத்தில் விட்டு குழப்பத்தை உண்டாக்கலாம். இந்த விவகாரத்தில் எப்படியெல்லாம் நாட்டில் பிரச்னைகளை ஏற்படுத்தலாம் என்பதற்கு வானமே எல்லை.




நன்றி: Dinakaran

மேம்பால அதிர்ச்சி

மேம்பால அதிர்ச்சி
சென்ட்ரல் ஸ்டேஷன், எல்.ஐ.சி பில்டிங் மாதிரி அண்ணா மேம்பாலம் சென்னையின் பிரசித்தி பெற்ற ஒரு அடையாளம். கட்டி 40 ஆண்டுகள் ஆகியும் பெரிய விபத்து எதுவும் நடந்ததில்லை. பிறகு கட்டிய பல மேம்பாலங்களை விடவும் பலமாக இருப்பதாக நிபுணர்கள் சோதனை செய்து சான்றளித்துள்ளனர். பாலம் கட்டியவர்களுக்கும் முறையாக பராமரித்து வருபவர்களுக்கும் பெருமையில் பங்குண்டு. விபத்தே நடக்காத மேம்பாலம் என்ற பெயரை தகர்த்த பெருமைக்குரியவர் 17எம் பஸ் டிரைவர் பிரசாத். 14 அடி உயரமுள்ள பாலத்தின் நடுப்பகுதியை கடந்தபின் இடதுபுறமாக பிரியும் வளைவில் இறங்கும்போது சுவரை இடித்து கீழே பாய்ந்திருக்கிறது பஸ். திரும்பும்போது வேகத்தை குறைக்காவிட்டால் எதிர் திசையில் இழுத்துச் செல்லும் என்பது வாகனம் ஓட்டும் எல்லோருக்கும் தெரிந்த பாலபாடம். பயணிகளுக்கு தங்கள் திறமையை காட்டுவதாக நினைத்துக் கொண்டு ஆக்சிலேட்டரில் இருந்து காலை எடுக்காமலே ஸ்டியரிங்கை முழுவதுமாக சுற்றும் டிரைவர்களை சென்னை பயணிகள் தினந்தோறும் பார்க்கிறார்கள். பிரசாத் அந்த கோஷ்டிதானா அல்லது செல்போனில் பேசிக் கொண்டே வண்டியோட்டும் ரகமா என்பது விசாரணையில்தான் தெரியும். அவர் பின்னால் அமர்ந்திருந்த 39 பயணிகளின் அதிர்ஷ்டம், தாமதமில்லாமல் மீட்க பொதுமக்கள் விரைந்து வந்துள்ளனர். எட்டடி உயரத்தில் இருந்து விழுந்தாலும் சுவர் சரிவாக இருந்ததால் தாக்கம் அதிகமில்லை. இருந்தும் பஸ் அப்பளமாக நொறுங்கியுள்ளது. மோதலின் தாக்கத்தை உள்வாங்கிக் கொண்டு பயணிகளுக்கு பாதிப்பை குறைக்கும் வகையில் வாகனங்கள் இப்போது வடிவமைக்கப்படுகின்றன.

இந்த பஸ் அப்படிப்பட்டதா அல்லது கட்டுமான செலவை குறைக்க மாற்று பொருட்கள் கையாளப்பட்டதா என்பதை அதிகாரிகள்  விளக்கவில்லை.  அமைச்சர் மகன் வேகத்தடையில் விபத்தில் பலியானதை தொடர்ந்து சென்னையில் வேகத்தடைகள் எல்லாம் சோதிக்கப்படுகின்றன. இந்த விபத்தை அடுத்து மேம்பாலங்களும் பேருந்துகளும் சோதனைக்கு உள்ளாகலாம். அசம்பாவிதம் நிகழ்ந்த பிறகுதான் ஒவ்வொருவரும் தன் கடமையை ஒழுங்காக செய்வார்கள் என்பது ஆரோக்கியமான நிலை அல்ல. உடல் தோற்றம் அழகாக இருப்பதைவிட உள்ளிருக்கும் உறுப்புகளின் இயக்கம் ஒழுங்காக இருக்க வேண்டியது முக்கியம்.




நன்றி: Dinakaran

Monday, 25 June 2012

மத்திய பணிகளுக்கான தேர்வுகள்

மத்திய பணிகளுக்கான தேர்வுகள்

மத்திய அரசின் பொருளாதாரத் துறையின் இந்தியப் பொருளாதாரப் பணிக்கான (இந்தியன் எகனாமிக் சர்வீஸ் - ஐ.இ.எஸ்) தேர்வுகளை மத்தியத் தேர்வாணையம் ஆண்டு தோறும் நடத்தி வருகிறது. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அதிகாரிகளாக நியமனம் செய்யப்படுகிறார்கள்.

இந்தப் பணிக்கான தேர்வு குறித்த அறிக்கை ஒவ்வொரு ஆண்டும் எம்ப்ளாய்மெண்ட் நியூஸ் இதழில் வெளியாகிறது. ஜூன் மாதம் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகும். நவம்பர் மாதம் இந்தத் தேர்வு நடைபெறும்.

இந்திய பொருளாதாரப் பணிக்கான கல்வித் தகுதி:

எகனாமிக்ஸ், அப்ளைடு எகனாமிக்ஸ், பிசினஸ் எகனாமிக்ஸ், எகனாமெட்ரிக்ஸ் ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் முதுநிலைப் பட்டம். வயது: இந்த ஆண்டு ஜனவரி 1 அன்று 21 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். தேர்வு எழுதுபவரின் அதிகபட்ச வயது 30 ஆக இருக்க வேண்டும். இரண்டு நிலையில் இந்தத் தேர்வு இருக்கும். முதல் கட்டத் தேர்வு எழுத்துத் தேர்வாகும்.

இதில் 6 தாள்கள் உள்ளன.

1. General English                           …     100

2.  General Studies                         …     100

3. General Economics I                 …        200

4. General Economics II                …      200

5. General Economics III               …      200

6. General Economics I                  …     200

எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு இரண்டாம் கட்டமாக நேர்முகம் நடக்கும். இது நேர்முகம் என அழைக்கப்படாமல், ஆளுமைத் திறனைச் சோதிக்கும் நிலையாக உள்ளது. இதற்கும் 200 மதிப்பெண்கள். இந்த தேர்வு குறித்து ஜுலை மாத இறுதியில் அறிவிப்பு வெளியாகும்.

தேர்வு மையங்கள்: தமிழகத்தைப் பொருத்தவரையில், சென்னையில் இந்தத் தேர்வை எழுதலாம். இது தவிர இந்தியா முழுவதும் பல நகரங்களில் இத்தேர்வை எழுதலாம்.

தேர்வுத் தேதி, நேரம் குறித்த தகவல்கள் தேர்வெழுதுவோருக்கு அறிவிக்கப்படும்.

இந்தத் தேர்வு முறைகள் சிலவற்றைப் பார்ப்போமா?

மூன்று நாள்கள் தேர்வு நடைபெறும். ஒவ்வொரு பாடத்துக்கும் 3 மணி நேரம் தேர்வு நடைபெறும். பதில்கள் அனைத்தும் கட்டுரை வடிவில் இருக்க வேண்டும். பதில்கள் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும். பதில்களைத் தேர்வர்கள் தங்கள் கையாலேயே எழுத வேண்டும். கையெழுத்து சரிவர புரியாமல் இருக்குமேயானால் மொத்த மதிப்பெண்களிலிருந்து சில மதிப்பெண்கள்

குறைக்கப்படும். சுருக்கமான, முறையான, திறமையான பதில்களுக்கு உரிய மதிப்பு இடப்படும்.

மேலோட்டமான பதில்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படாது. தேர்வில் வெற்றிக்கான மதிப்பெண்களை தேர்வாணையம் தீர்மானிக்கும். தேர்வின்போது சாதாரண வகை கேல்குலேட்டர்கள் உபயோகிக்கலாம்.

இந்தியப் புள்ளிவிவரப் பணி (இந்தியன் ஸ்டாடிஸ்டிகல் சர்வீஸ்)

இந்திய புள்ளிவிவரப் பணிக்கான (இந்தியன் ஸ்டாடிஸ்டிகல் ஸர்வீஸ்) தேர்வும் மத்திய தேர்வாணையத்தால் நடத்தப்படுகிறது. பொருளாதாரப் பணி போலவே இதற்கும் ஜூலை மாதத்தில்தான் அறிவிப்பு வெளியாகும். இந்தியப் புள்ளி விவரப் பணிக்கான கல்வித் தகுதி: புள்ளிவிவரம், அப்ளைடு ஸ்டாடிஸ்டிக்ஸ், கணக்கியல் ஆகிய ஏதேனும் ஒன்றில் முதுநிலைப் பட்டப்படிப்பு.

இந்தத் தேர்வுக்கும் 6 தாள்கள்

1. General English       …………  100

2.  General Studies    …………    100

3.  Statistics I             …………    200

4.  Statistics II            …………    200

5.  Statistics III     …………          200

6.  Statistics IV     …………          200




நன்றி: Dinamani

மாளிகை மட்டுமே வசப்படும்!

மாளிகை மட்டுமே வசப்படும்!

இந்தியாவின் முதல் குடிமகனை, குடியரசின் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்வானது அரசியல்வாதிகளின் அறிக்கைப் போருக்கு மத்தியில் நடைபெற்றுக் கொண்டிருப்பது உண்மையிலேயே துரதிருஷ்டத்துக்குரியது.

இதே நிலைமையில் போனால், இந்தத் தேர்தலின் வெற்றி - தோல்வி என்பது காங்கிரஸ், பாஜக இடையிலான வெற்றி, தோல்வியாகவே பார்க்கப்படும் - கிட்டத்தட்ட வரவிருக்கின்ற மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டம்போல்.

மக்கள் பிரதிநிதிகளாக அல்லாமல், முழுக்க முழுக்க அரசியல்வாதிகளே நாட்டை ஆளும் இன்றைய காலச்சூழ்நிலையில் இந்தியாவுக்குத் தேவை அரசியலுக்கு அப்பாற்பட்ட குடியரசுத் தலைவர். ஆனால், அதற்கான வாய்ப்பை திரிணமூல் காங்கிரஸ் தவிர, அத்தனை கட்சிகளும் ஒருசேர திட்டமிட்டு புறந்தள்ளிவிட்டன.

குடியரசுத் தலைவர் வேட்பாளரை ஆளும்கூட்டணி என்ற வகையில் அறிவிக்கும் காங்கிரஸ், தங்களின் தலைவராக யார் இருக்க வேண்டும் என்று குடிமக்களின் விருப்பத்தை அறிய சிறிதளவும் ஆர்வம் காட்டவில்லை. மாறாக, கூட்டணிக் கட்சித் தலைவர்களை அழைத்து அரசியல் பேரம் நடத்துகிறது.

மம்தா பானர்ஜியுடன் சேர்ந்து, குடியரசுத் தலைவர் வேட்பாளராக அப்துல் கலாமை தேர்வு செய்த சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம்சிங், கடைசி நேரத்தில் மம்தாவை காலைவாரிவிட்டு காங்கிரஸின் பக்கம் செல்கிறார். மத்திய அமைச்சரவையில் சமாஜவாதியை சேர்க்க வேண்டும் என்ற பேரம் அல்ல இதற்குக் காரணம் என தன்னிலை விளக்கமும் அளிக்கிறார்.

இதற்கு ஒருபடி மேலே போய், குடியரசுத் தலைவர் தேர்தல் போட்டியிலிருந்து விலக வேண்டும் என சங்மாவை தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் மிரட்டுகிறார். மீறிப் போட்டியிட்டால் கட்சி கடும் நடவடிக்கை எடுக்கும் என ஊடகங்களை அழைத்து உரக்கச் சொல்கிறார். (குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிட தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சங்மா அவர் வகித்த பதவியை ராஜிநாமா செய்துவிட்டார் என்பது வேறு விஷயம்).

குடியரசுத் தலைவராக விரும்புவதற்கு ஒரு சாமானியனுக்கும் உரிமை உண்டு. அப்படியிருக்கையில், சங்மாவை தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று சொல்வதற்கு பவாருக்கு என்ன உரிமை இருக்கிறது?

கடந்த முறை குடியரசுத் தலைவர் தேர்தலின்போது, "கூட்டணி தர்மத்தை(!)' மீறி மராத்தி மண்ணின் மைந்தர் என்றுகூறி பிரதிபாவை ஆதரித்த சிவசேனை, இப்போதும் கூட்டணி தர்மத்தை மீறி பிரணாபை ஆதரிக்கிறது. இதன் பின்னணியிலும் ஓர் அரசியல் கணக்கு இருக்கத்தான் செய்கிறது என்கிறார்கள்.

பிரதான எதிர்க்கட்சியான பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியோ, முழுக்க முழுக்க இந்த குடியரசுத் தலைவர் தேர்தலை மக்களவைத் தேர்தல் கூட்டணிக்கான முன்னோட்டமாகவே பார்க்கிறது. வேட்பாளரை தேர்வு செய்வதில் கூட்டணியின் அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைக்க முடியாததால், பாஜகவுக்கு நிர்வாகத் திறமை இல்லை என இதிலும் "அரசியல்' செய்கிறது காங்கிரஸ். இரண்டுமுறை தொடர்ந்து ஆட்சியில் இருந்தும், மகளிர் இடஒதுக்கீடு மசோதா, லோக்பால் மசோதா என மக்களுக்குத் தேவையான சட்டத்தை இயற்றுவதற்கு கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைக்கும் "நிர்வாகத் திறமை' இல்லாத காங்கிரஸýக்கு இப்போது மட்டும் எப்படியோ நிர்வாகத் திறமை வந்துவிடுகிறது.

தன்னை முதல்வராக்க வேண்டும் என்ற கோரிக்கையை பாஜக மேலிடத் தலைவர்கள் நிறைவேற்றாத ஆற்றாமையை, "குடியரசுத் தலைவராவதற்கு தகுதி வாய்ந்தவர் பிரணாப்தான்' என இப்போது காட்டுகிறார் கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா.

ஒட்டுமொத்தத்தில் ஒவ்வொரு கட்சியும் ஒரு கணக்கு போட்டு, குடியரசுத் தலைவர் தேர்தலை நகராட்சித் தலைவர் தேர்தல் போல மாற்றிவிட்டன.

120 கோடி பேர் வசிக்கும் இந்த நாட்டில், குடியரசுத் தலைவராக ஓர் அரசியல்வாதிக்குத்தான் தகுதி இருக்கிறது என அரசியல்வாதிகள் நினைக்கலாம்; ஆனால், குடியரசுத் தலைவரை மக்கள் பிரதிநிதிகள்தாம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற முறையை மாற்றி, ஒட்டுமொத்த இந்திய மக்களும் வாக்களித்து தேர்ந்தெடுக்கும் முறையைக் கொண்டுவந்தால், யாருக்குத் தகுதி இருக்கிறது என்பது தெரிந்துவிடும்.

கூட்டணிக் கணக்குப் பார்த்து, கூட்டணிப் பேரங்களுக்கு மத்தியில் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும்வரை, எப்படி பிரதிபா பாட்டீல் ஒரு குடியரசுத் தலைவராக மக்களின் மனதில் நிற்கவில்லையோ, அதேபோல, பிரணாப் குடியரசுத் தலைவரானால், ஒரு பாரம்பரியமிக்க காங்கிரஸ்காரராகவும், சங்மா குடியரசுத் தலைவரானால் ஒரு தேசியவாத காங்கிரஸ்காரராகவும்தான் அறியப்படுவார்கள். குடியரசுத் தலைவர் மாளிகை வேண்டுமானால், அவர்களுக்கு வசப்படலாம், ஆனால், மக்களின் மன மாளிகையில் என்றுமே இடம் கிடைக்காது.




நன்றி: Dinamani

Sunday, 24 June 2012

புதிய பாதை கொடுத்த திரு.தசரத் மான்ஜி

யார் இந்த தசரத் மான்ஜி ?

மறக்கபட்டு வரும் நட்சத்திர உழைப்பாளி

இது ஒருபேரரசன் தன் காதலுக்காக 20000 ஆட்களை அமர்த்தி 22 ஆண்டுகள் கட்டி எழுப்பி, இன்று ஆயிரக்கணக்கான உலக மக்கள் அதிசயிக்கும் தாஜ்மகால் அல்ல. ஒரு விவசாயக் கூலி தனியொரு மனிதனாய் 22 ஆண்டுகள் உழைத்து 60 கிராம மக்களின் வாழ்க்கையை எளிமையாக்க வடித்த காதல் சின்னம்.

Photo: நண்பர்களே மறந்து விடாதீர் அனைவரும் தவறாமல் படிக்கவேண்டிய மற்றும் ஷேர் செய்ய வேண்டிய ஒரு பதிப்பு ...

யார் இவர் ...!!!!!!! திரு.தசரத் மான்ஜி – மறக்கபட்டு வரும் நட்சத்திர உழைப்பாளி.

இது ஒருபேரரசன் தன் காதலுக்காக 20000 ஆட்களை அமர்த்தி 22 ஆண்டுகள் கட்டி எழுப்பி, இன்று ஆயிரக்கணக்கான உலக மக்கள் அதிசயிக்கும் தாஜ்மகால் அல்ல. ஒரு விவசாயக் கூலி தனியொரு மனிதனாய் 22 ஆண்டுகள் உழைத்து 60 கிராம மக்களின் வாழ்க்கையை எளிமையாக்க வடித்த காதல் சின்னம்.

திரு.தசரத் மான்ஜி தான் உருவாக்கிய மலைப்பாதை முன்பு.
பீகாரில் கயா மாவட்டத்தின் கெலார் என்ற கிராமத்தைச் சேர்ந்த திரு.தசரத் மான்ஜி ஒரு நிலமில்லாத விவசாய கூலி. அன்பு மனைவி பாகுனி தேவி வீட்டிற்கு அருகில் மலையின் மறுபுறம் குடிக்கத் தண்ணீர் கொண்டு வரும்போது விழுந்து அடிபட்டார். சிறிது நாட்களில் சுகவீனப்பட மலையைச் சுற்றிக் கொண்டு மருத்துவமனைக்குக் கூட்டிச் சேர்க்குமுன்பே மனைவி இறந்துபோனாள். இந்த மலையின் குறுக்கே ஒரு பாதை இருந்திருந்தால் தன் மனைவி இறந்துபோயிருக்கமாட்டாள் என்று உறுதியாக நம்பினார் திரு.தசரத் மான்ஜி. கெலார் கிராமத்திலிருந்து வஜீரகஞ் என்ற ஊர் சுற்றுப் பாதையில் எண்பது கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. அங்குதான் இவர்களுக்கான மருத்துவ மனை இருந்தது. வஜீரகஞ்க்கு 13 கி.மீ.தொலைவில் பாதை அமைக்க முடியும். ஆனால் யாரும் அதை செய்ய முன்வரவில்லை. விளைவு 30 அடி அகலம், 360 அடி நீளத்திற்கு ஒரு பாதையை உருவாக்கும் பணியை 1959 ஆண்டு மேற்கொண்டார். மக்கள் இவரை பைத்தியகாரனாக பார்த்தார்கள் சேர்ந்து உழைக்கவரவில்லை ஆனாலும் விடாமுயற்சியால் பாதையை 1981 ஆண்டு முடித்தார். 60 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இன்று 13 கிலோமீட்டரில் நகரத்தை அடைகிறார்கள். அன்றாடம் 8 கி.மீ தூரம் பள்ளிக்கு நடந்த அக்கிராமத்தின் குழந்தைகள் 3 கிலோ மீட்டரில் இன்று பள்ளியை அடைகிறார்கள். வழக்கம் போல் வாழ்ந்த காலம் வரை அந்த மாமனிதனின் உழைப்புக்கு மதிப்பளிக்காத அரசாங்கம், 18 ஆகஸ்ட் 2007 அன்று இறந்த அவருடைய உடலை மட்டும் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்தது.


இன்றைய நவநாகரீக மனிதனை எடுத்துக் கொள்ளுங்கள் எல்லாவற்றையும் பணத்தால் கணக்கிட்டு எதை சேமிக்க வேண்டுமோ அதனை சேமிக்காமல் இயற்கையை சுரண்டி தானும் அழிந்து எல்லா ஜீவராசிகளையும் அழிக்கிறான். மக்களுக்காக உழைத்த பெரியவர் திரு.தசரத் மான்ஜி அவர்களின் உழைப்பை நினைவுகூர்வதில் இந்த பதிப்பு மகிழ்ச்சியடைகிறது.

By: Maheshkumar Kuppusamy
திரு.தசரத் மான்ஜி தான் உருவாக்கிய மலைப்பாதை முன்பு.

பீகாரில் கயா மாவட்டத்தின் கெலார் என்ற கிராமத்தைச் சேர்ந்த திரு.தசரத் மான்ஜி ஒரு நிலமில்லாத விவசாய கூலி. அன்பு மனைவி பாகுனி தேவி வீட்டிற்கு அருகில் மலையின் மறுபுறம் குடிக்கத் தண்ணீர் கொண்டு வரும்போது விழுந்து அடிபட்டார். சிறிது நாட்களில் சுகவீனப்பட மலையைச் சுற்றிக் கொண்டு மருத்துவமனைக்குக் கூட்டிச் சேர்க்குமுன்பே மனைவி இறந்துபோனாள். இந்த மலையின் குறுக்கே ஒரு பாதை இருந்திருந்தால் தன் மனைவி இறந்துபோயிருக்கமாட்டாள் என்று உறுதியாக நம்பினார் திரு.தசரத் மான்ஜி. கெலார் கிராமத்திலிருந்து வஜீரகஞ் என்ற ஊர் சுற்றுப் பாதையில் எண்பது கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. அங்குதான் இவர்களுக்கான மருத்துவ மனை இருந்தது. வஜீரகஞ்க்கு 13 கி.மீ.தொலைவில் பாதை அமைக்க முடியும். ஆனால் யாரும் அதை செய்ய முன்வரவில்லை. விளைவு 30 அடி அகலம், 360 அடி நீளத்திற்கு ஒரு பாதையை உருவாக்கும் பணியை 1959 ஆண்டு மேற்கொண்டார். மக்கள் இவரை பைத்தியகாரனாக பார்த்தார்கள் சேர்ந்து உழைக்கவரவில்லை ஆனாலும் விடாமுயற்சியால் பாதையை 1981 ஆண்டு முடித்தார். 60 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இன்று 13 கிலோமீட்டரில் நகரத்தை அடைகிறார்கள். அன்றாடம் 8 கி.மீ தூரம் பள்ளிக்கு நடந்த அக்கிராமத்தின் குழந்தைகள் 3 கிலோ மீட்டரில் இன்று பள்ளியை அடைகிறார்கள். வழக்கம் போல் வாழ்ந்த காலம் வரை அந்த மாமனிதனின் உழைப்புக்கு மதிப்பளிக்காத அரசாங்கம், 18 ஆகஸ்ட் 2007 அன்று இறந்த அவருடைய உடலை மட்டும் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்தது.

இன்றைய நவநாகரீக மனிதனை எடுத்துக் கொள்ளுங்கள் எல்லாவற்றையும் பணத்தால் கணக்கிட்டு எதை சேமிக்க வேண்டுமோ அதனை சேமிக்காமல் இயற்கையை சுரண்டி தானும் அழிந்து எல்லா ஜீவராசிகளையும் அழிக்கிறான். மக்களுக்காக உழைத்த பெரியவர் திரு.தசரத் மான்ஜி அவர்களின் உழைப்பை நினைவுகூர்வதில் இந்த பதிப்பு மகிழ்ச்சியடைகிறது.



இவர்களை எல்லாம் விட்டுவிட்டு நாம் தாஜ்மஹாலை மட்டும் தூக்கிப் பிடிக்கிறோம்.




நன்றி: தமிழால் இணைவோம் (முக நூல்)

மாய நிஜத்தில் மணக்கும் திரைப்படங்கள்

மாய நிஜத்தில் மணக்கும் திரைப்படங்கள்

செறி எயிற்று அரிவை கூந்தலின் நறியவும் உளவோ நீ அறியும் பூவே" என்று சொன்னால் பல்லை நற நற என்று கடிப்பீர்கள். உங்களுக்கு மட்டுமா, இன்றைய தமிழ் வாத்தியார் பையன்களுக்குக் கூட பொருள் புரியாது. ஆனால், அந்நாளில் மன்னருக்குப் புரிந்தது.

 தனது அரசமாதேவியின் கூந்தல் மணம் இயற்கையானதா அல்லது வாசனாதித் திரவியங்கள் பூசிக் கொள்வதால் வந்ததா? தமிழக வளர்ச்சிக்கு மிகத் தேவையான சந்தேகம். அரசர் என்பதால் இறையனாரே ராணிக்கு சாதகமாகத்தான் தீர்ப்பு வழங்கினார்.

 பெண் கூந்தலுக்கு இயற்கையிலேயே நறுமணம் உண்டு என்று அர்த்தமாம். எதிர்த்துக் கேட்டால் எரித்துக் கொல்லத்தான் செய்வார்கள். இந்தத் திருவிளையாடலைத்தான் அரசியல்வாதிகளும் பய பக்தியுடன் கையாள்கிறார்கள். அறிவியல் ரீதியில் உரோமத்திற்குச் சிறந்த மணம் கிடையாது. உண்மையில் சிக்கும் செள்ளும் ஆண், பெண் பேதம் பார்க்காது. இருக்கும் இடத்திற்கு ஏற்ப முடி மணம் மாறும். அவ்வளவுதான்.

 போகட்டும், சுவிட்சர்லாந்துப் பெண் விஞ்ஞானிக்கு ஒரு யோசனை. தம் நாட்டு வங்கியில் இந்திய ஆண் பணம், பெண் பணம் எவ்வளவு என்பது பற்றி அல்ல. ஆணுக்கும் பெண்ணுக்கும் உடல் வாசனை மாறுபடுகிறதா என்பதை ஆராய்ந்தார். ஜெனிவா நகரில் ஃபெர்மெனிச் என்கிற கம்பெனி ஆய்வாளர் கிறிஸ்டியன் ஸ்டர்க்கென்மான்.

 24 ஆடவர்களையும், 25 பெண்களையும் தமது ஆய்வுக் கூடத்திற்கு வரவழைத்தார். நிறுத்திவைத்த "பைக்' வாகனத்தை ஒவ்வொருவராகத் தனித்தனியே 15 நிமிட நேரம் ஓட்டச் செய்தார். அவரவர் வியர்க்க விறுவிறுக்க வந்தவர்களின் அக்குளில் வியர்வை மாதிரிகள் எடுத்துப் பரிசோதித்தார். ஆராய்ச்சியைப் பாருங்கள். தோலில் "அப்பாக்ரின்' சுரப்பிகள் அருளும் நீர்மங்கள். தாய்ப்பாலில் கொழுப்பு சேர்ப்பதும், பாலுறுப்புகளில் வழுவழுப்பு கூட்டுவதும், காதுக்குள் குரும்பி மெழுகு திரட்டுவதும், மேல் தோலில் வியர்வை சுரப்பதும் எல்லாம் அப்பாக்ரின் சுரப்பியின் ஆசீர்வாதம்.

 எப்படியோ, ஆண்களின் அக்குளில் பாலாடைக் கட்டி மணமும் பெண்மணிகளின் உடம்பில் இருந்து வெங்காய வாசனையும் அடித்ததாம். காரணம், பெண்களிடம் ஒரு மில்லி லிட்டர் வியர்வையில் 5 மில்லிகிராம் கந்தகக் கூட்டுப்பொருள் அடக்கம். ஆண்களிடமோ கந்தக அம்சம் பத்தில் ஒருபங்குதான். ஆண் வியர்வையில் பெருமளவு கொழுப்பு அமிலங்கள்.

 உடம்பில் சில நுண்ணுயிரிகள் புரதத்தினைச் சிதைத்து அமிலங்களாக மாற்றுகின்றன. உடல் நாற்றத்தின் அடிப்படை புரொப்பியானிக், ஐசோவாலெரிக் அமிலங்கள். தர்ப்பூசணி தொப்பைகள், கார மசாலா தின்னிகள், நீரிழிவு நோயாளிகள் எனச் சிலரிடம் இந்தத் துர்நாற்றம் "கப்' அடிக்கும். குடிகாரர் அருகில் அழுகல் பழத்தின் வினாகிரி அமில வீச்சம்.

 உடல் மண வேற்றுமைக்கு அவரவர் உணவுப் பழக்கமும், உடை அழுக்கும், குளியல் முறைகளும் காரணம். இங்கிலாந்து நாட்டில் அவர்கள் கார் ஓட்டு கைப்பிடியில் பாக்டீரியாக்கள் எண்ணிக்கை எக்கச் சக்கம் என்கிறது ஒரு புள்ளிவிவரம். இருக்காதா பின்னே? கழிவறையிலும், உணவறையிலும் அசுத்தத்தைக் காகிதத்தில் துடைத்துப்போடும் மேனாட்டவர்க்கு இந்தியர் உடல் நாற்றம் பிடிக்காது.

 ஆனால், எங்கும் மணல், கருங்கல், பளிங்குப் பாறை என்று இயற்கையை உடைத்து விற்கும் குளிர் அறைவாசிக்குப் பணவாடை மட்டுமே பிடிக்கும். அதற்காக இந்தியாவில் கொள்ளை அடித்துவிட்டு இந்தோனேசியாவில் நீந்திக் குளிக்கச்சென்று இருக்கிறார் ஒரு முக்கிய ஜார்க்கண்ட் புள்ளி. அவர் மீது 4,000 கோடி ஊழல் வீச்சம். வடக்கே தாடி, தலைப்பாகைப் பின்னணியில் நிலக்கரி நாற்றம். அது மட்டுமா, தலைமைக்குத் தெரியாமல் சம்பாதித்தவர்களை மோப்பம் பிடித்துப் புலனாய்வுகளும் கைது விசாரணைகளும் தொடர்கின்றன.

 எப்படியோ, தமிழகத்தின் கூவம் தலைநகரிலும் பாய்கின்றதே. தேர்வில் தோற்றவர் போலிச் சான்றிதழோடு அலுவலில் சேர்ந்து, மூன்று ஆண்டுகள் கழித்துப் பிடிபட்டால் ராஜ குற்றம். தேர்தலில் "தோற்றவர்' (?) ஆட்சிக் கூடத்தில் அரசு ஆவணங்களில் கையெழுத்து இட்ட ஆணைகள் என்ன அத்துமீறல்கள் ஆகாதா?

 ஏதாயினும் அரசியின் முடி நாற்றமும், முடி அரசியின் நாற்றமும் எல்லாம் சரிதான். புரட்சிக் கவிஞர் பாடியதுபோல, "உருவினையும், ஒலியினையும் ஒன்றாகச் சேர்த்தே ஒளிபெருகத் திரையினிலே படம் காட்டும் கலை'யில் மணமும் கூட்டும் ஆராய்ச்சி ஒருபுறம் ஈடேறி வருகின்றது.

 முப்பாட்டன் காலத்தில் ஊமைப் படங்கள். பாட்டன் கண்ட பேசும் படங்கள். இன்றைக்கு மணக்கும் படங்கள் ஆக இருப்பது அறிவியல் ஆச்சரியம்தான். அதாவது, திரையில் வரும் சமையல் காட்சிகளின் வாசனை நம் நுனி மூக்கைத் துளைக்க வேண்டும். இதுவே "மணக் காட்சி'.

 ஆரம்பத்தில் 1916-ஆம் ஆண்டு அமெரிக்கத் திரையரங்கில் இந்த உத்தி முதன்முறையாகத் தொடங்கப்பெற்றது. "ரோஜாத் தொட்டி விளையாட்டு' என்ற செய்திக் குறும்படக் காட்சிப் பரிசோதனை அது. மின்விசிறி முன்னால் பன்னீர் வாசனைப் பஞ்சு பொருத்தி அரங்கில் வாசனை பரவச் செய்தனர். பென்சில்வேனியாவின் வன நகரில் "குடும்ப அரங்கு' ஒன்றில் இந்த உத்தி பரீட்சார்த்தமாக அறிமுகம் ஆயிற்று.

 1929 ஆம் ஆண்டு நியூயார்க் அரங்கு ஒன்றில் "அகலவீதி இன்னிசை' என்கிற திரைப்படக் காட்சி. அரங்கின் மேற்கூரையில் இருந்து வாசனைத் திரவியத்தைத் தெளித்தனர் ஊழியர்கள். டெட்ராய்ட் நகரில் மிச்சிகன் திரையரங்கில் "கடற் பருந்து' போன்ற திரைப்படங்களில் இந்த உத்தி இடம்பெற்றதாம்.

 தொடர்ந்து, 1959 ஆம் ஆண்டு "பெரும் சுவருக்குப் பின்புறம்' என்ற திரைப்படக் காட்சியில் வேறு நுட்பம் புகுந்தது. அரங்கின் குளிரூட்ட அமைப்பு வழியாகவே மணப்பொருள்களைப் பரப்பினர். அந்த அமைப்பிற்கு "அரோமா ரமா' (தமிழில் "மணோ ரமா') என்றே பெயர்.

 ஆயினும் 1943 ஆம் ஆண்டு "நியூயார்க் டைம்ஸ் இத'ழில் இத்தகைய "வாசனைக் காட்சி' ("சென்டோ விஷன்') தொடர்பாக இன்னொரு புதுமைச் செய்தி. திரைப்படச் சுருள் விளிம்பில் ஒலித்தடத்திலேயே மணம் கிளப்பத் தேவையான "கேளா ஒலியலைகள்' பதிந்து விட்டால் போதும். மணக்காட்சி திரையில் வரும்போது அந்தக் காட்சியில் வெளிப்படும் மணத்தைப் பார்வையாளர்க்கு உணர்த்தலாமாம்.

 1960 ஆம் ஆண்டுகளில் பிரபல ஹாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர் மைக்டாட் என்பவரின் புதல்வர் ஜூனியர் மைக் டாட் என்பவர் "மர்ம வாசனை' என்று ஓர் திரைப்படம் தயாரித்தார். அதில் வெள்ளித்திரையில் வரும் காட்சிக்கு ஏற்ப திரையரங்கில் மணம் பரவும்.

 எப்படி என்றுதானே? திரையரங்கின் ஒவ்வொரு இருக்கையிலும் ஏறத்தாழ 30 வகை வாசனைத் திரவியங்கள் சிறுகலன்களில் நிரப்பப்பட்டு இருக்கும். அவற்றின் மின் அடைப்புகள் ஒரு குறித்த அலைநீள ஒலியலைகளால் தூண்டப்பட்டுத் திறக்கும். அப்போது அந்தந்த வாசனைத் திரவியக் கலன்கள் விசேஷ மணம் பரப்பும்.

 இதே நுட்பம் இன்று பெருமளவு வளர்ந்து வருகிறது. 1990 ஆம் ஆண்டுகளில் அவெரி கில்பர்ட் என்னும் வாசனை விஞ்ஞானி "டிஜி சென்ட்ஸ்' என்கிற இலக்கவியல் வாசனைத் தொழில்நுட்பக் கம்பெனியில் இந்தத் தொழில்நுட்பத்தை மேம்படுத்தினார்.

 இதில் மரம், புல், தாவரங்கள் ஆகிய முக்கிய மூன்று வித வாசம் மட்டும் வெளிப்படும்படி ஒரு கருவி தேவை. மணக்காட்சிக்கு ஏற்ப அதனை இயக்குவிக்கலாம்தான்.

 இங்கிலாந்தில் "பான் லாப்ரிந்த்' என்ற திரைப்படம் வெளியானது. அதன் விசேஷம் என்னவென்றால், திரையில் தோன்றும் மீன் சந்தையின் கவிச்சை வாடை அரங்கினுள் உணரப்படும்.

 சமீபத்தில் "ஸ்மெல் இட்' என்ற பெயரில் ஒரு கருவி பிரான்சில் அறிமுகமாகி இருக்கிறது. "இதை முகர்' என்று பொருள். மலர்களின் நடுவில் நின்று ஆடினால் சுகந்தம் நம் இமைகளைத் தழுவ வேண்டும்.

 நம் கோடம்பாக்கத்தில் இந்த உத்திகள் நடைமுறைக்கு வர இன்னும் நூறாண்டுகள் ஆகும். இங்கேதான் நாயகர்கள் மணம் இல்லாத வறண்ட பாலைவனங்களில் அல்லவா குதியாட்டம் போடுகிறார்கள்.

 நடிகையரும் நடிகர்களும் மேலாடை சட்டைகளைத் தூக்கி முகத்திரை மறைத்து ஆடும்போது வியர்வை நாற்றம் அரங்கில் சகிக்க முடியாமல் போகுமே.

 ஆனால் ஜப்பானின் சோனி நிறுவனத்தினர்க்கு முற்றிலும் புதியதோர் சிந்தனை தோன்றியது.அதன்படி, மணப்பொருள் கலன்களே தேவையில்லை. காட்சி ஒலி அலைகளின் மேல் அதிர்வெண் கூடுதலான கேளா ஒலியலைகளையும் ஏற்றிப் பரவ விடலாம். அந்தப் புற ஒலியலைகள் காட்சியில் எந்தவொரு ஒலிக்கும் இடையூறாகவும் இராது. கேளா ஒலி ஆயிற்றே!

 பொதுவாக, ஒவ்வொரு வாசனையையும் மூளை ஒரு குறித்த பகுதியில் நிகழும் வேதியியல் மாற்றங்களால் உணர்கிறது. எந்தப் பகுதியினால் அந்த வாசனை உணரப்படுகிறதோ, மூளையில் அந்தந்த இடங்களைக் கண்ணுக்குத் தெரியாத கேளா ஒலியினால் தூண்டிவிட்டால் போதுமே. படம் காண்பவர்க்கு நிகழ் திரையில் தோன்றும் பொருளின் மணம் நிஜத்தில் உணரப்படும். இது புது வகை "மாய நிஜம்'.

 சமீபத்தில் "இணைய மணக்காட்சி' என்கிற அதிநவீனத் தொழில்நுட்பம் குறித்து தென்கொரிய நாடு சிந்தித்து வருகிறது.

 "வாசனை தூண்டும் தொலைப்படக் காட்சிக் கருவிகள்' எனும் அமைப்பு இத்துறையில் 2015 ஆம் ஆண்டிற்குள் தன் கனவை நனவாக்கிவிடும் என்று தெரிகிறது.

 




நன்றி: Dinamani

Saturday, 23 June 2012

இது எங்கே போய் முடியும்…?

இது எங்கே போய் முடியும்…? 

இது ஒன்றும் புதிய செய்தி அல்ல பலரும், பல முறை எழுதியாகி விட்டது, பலரும் பல முறை பேசியாகி விட்டது. ஆன்மிக வாதிகள் முதல் அரசியல் வாதிகள் வரை பலரும் பல மேடைகளில் குரல் எழுப்பியாகி விட்டது. ஆனாலும் எழுதாமல் இருக்க முடியவில்லை, பேசாமல் இருக்கவும் முடியாது. காரணம், பலரும், பல முறை பேசியும், எழுதியும் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே செல்கிறது.

 என்ன, உளறிக் கொட்டுவது போன்று தோன்றுகிறதா? பாழாய் போன மதுபானத்தை மூக்குமுட்டக் குடித்தால்தான் உளறல் வருமா என்ன? அது ஏற்படுத்தும் கொடுமையை நினைத்தாலே மனம் பதறுகிறது, நாக்கு சுழல மறுக்கிறது, வாய் உளறுவது போன்றுதான் தோன்றுகிறது.

 காந்தி பிறந்த இந்த நன்னாட்டில் வாய்மை பெருக்கெடுத்து ஓட வேண்டும். மாறாக தமிழக வீதிகளில் மதுபானம் பெருக்கெடுத்து ஓடுகிறது. உளறல் ஓசை ஊரையே கூட்டுகிறது. வீதிக்கு வீதி கல்விச் சாலைகளை திறக்க வேண்டிய அரசு மதுக் கடைகளையும், மதுபானக் கூடங்களையும் திறந்து வைத்துக் கொண்டு கஜானாவை நிரப்பிக் கொண்டிருக்கிறது.

 கடந்த 2003 வரையில் தனியார் நடத்திக் கொண்டிருந்த மதுபானக் கடையை பின்னர் அரசே ஏற்று நடத்தியது. அன்று மாநிலம் முழுவதும் 7,200 கடைகள். அரசுக்கு ஆண்டு வருவாய் சுமார் ரூ. 3,550 கோடி. இன்றைய கடைகளின் எண்ணிக்கை சுமார் 6,700. ஆனால் வருவாய் சுமார் ரூ. 18 ஆயிரம் கோடி.

 தமிழக அரசுக்குக் கணிசமான அளவில் வருவாயைத் தரும் வணிக வரி, விற்பனை வரி, பத்திரப் பதிவு போன்ற முக்கிய வருவாய் இனங்களில் முதலிடத்தைப் பெறுவது இந்த மதுபான வருமானமாகத்தான் இருக்கும். அரசு பொதுமக்களுக்கு வழங்கும் விலையிóல்லா அன்பளிப்புகளுக்கு நிதியை அள்ளி அள்ளித் தருவது இந்த மதுபான விற்பனை என்ற அட்சய பாத்திரம்தான் என்றால் அது மிகையில்லை.

 சரி, இது ஒரு புறம் இருக்கட்டும். இந்த அட்சய பாத்திரத்திற்கு வாரி வழங்குபவர்கள் ஏழை கூலித் தொழிலாளி முதல் மாடி வீடுகளில் வசிக்கும் பணம் படைத்தவர்கள்தான். அவர்களிடமே கறந்து அவர்களுக்கே கொடுப்பதால் அதுவும் ஓர் சுழற்சிதான் என்று வாதம் செய்யலாம். அந்த சுழற்சி ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்துதான் கவலை கொள்ள வேண்டியதாக இருக்கிறது.

 முன்பெல்லாம் என்றாவது ஒரு நாள் மறைந்து, ஒளிந்து போதை ஏற்றிக் கொண்டவர்கள் எல்லாம் இப்போது வீதிக்கு வீதி மதுபானக் கடை வந்து விட்டதால் அச்சம் மறந்து விருப்பம் போல அருந்தி மகிழ்கின்றனர். கால்யாண வீடு என்றாலும் மது விருந்துதான், இழவு வீடு என்றாலும் மது விருந்துதான். மகிழ்ச்சியானதும், துக்கம் ஆனாலும் பிரதான பானம் மதுதான் என்றாகி விட்ட காலம் இது.

 சரி, பெரியவர்கள் மட்டும்தானா பள்ளி, கல்லூரி மாணவர்களும் இப்போது அரசின் அட்சய பாத்திரத்துக்கு வாரி வழங்க வரிசையில் நிற்கின்றனர்.

 அரசின் மதுபானக் கடைக்கும், அதனை ஒட்டியுள்ள மதுபானக் கூடத்திற்குச் செல்லும் கல்லூரி மாணவர்கள், கழுத்தில் தொங்கும் அடையாள அட்டையைக் கூட அசட்டை செய்துவிட்டு பிடித்த பிராண்டை பெயர் சொல்லிக் கேட்கின்றனர். அப்போதைய தேவைக்குப் போக, அடுத்த நாள் தேவைக்கும் இரண்டு பாட்டில்களை வாங்கிக் கால்சட்டைப் பையில் அங்கொன்றும், இங்கொன்றுமாகத் திணித்துக் கொள்கின்றனர்.

 முழுக் கால் சட்டை அணிந்த இளைஞர்கள்தான் அப்படி என எண்ண வேண்டாம். பள்ளிச் சீருடையிலேயே சென்று சரக்கு வாங்கிக் கொள்ளும் மாணவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அது எப்படி? முதலில் குடிகார அப்பாவின் நச்சரிப்பால் அவருக்கு வாங்கிக் கொடுத்த பழக்கம். அடுத்து, நகரத்திற்குச் சென்று வாங்கி வர முடியாத உள்ளூர் அண்ணன்மார்களுக்கு வாங்கிக் கொடுத்த பழக்கம். அப்படியும், இப்படியுமாக அந்தப் பழக்கம் அரைக்கால் சட்டை அணிந்த மாணவர்களையும் தொற்றிக் கொள்கிறது. இப்படி பாழாய் போகிறது இந்த மாணவர் உலகம். வீடுகளில் ஒதுக்குப்பற அறையில் குடும்பத்தின் ஆண்கள் ஒன்றாக அமர்ந்து மதுபானம் அருந்துவது உண்டு. ஆனால் இப்போது நட்சத்திர விடுதிகளின் மதுபானக் கூடங்களில் ஆண், பெண் உறுப்பினர்கள் மட்டுமின்றி இளைஞர்களும், இளம் பெண்களும் கூட குடும்பத்துடன் மதுபானம், குறிப்பாக பீர் அருந்துவது என்பது சகஜமான ஒன்றாகி வருவதை அங்கு ஆய்வுக்குச் செல்லும் அதிகாரிகளே கண்டு அதிர்ச்சி அடையும் சூழ்நிலை உள்ளது.

 மற்ற மதுபானங்களை விட பீரில் குறைந்த அளவே ஆல்கஹால் உள்ளது என்பதால் அதை ஒரு நாகரிகமான பானமாகக் கருதி குடும்பத்துடன் அருந்தும் போக்கு அதிகரித்து வருகிறது. மதுப் பழக்கம் முதலில் பீரில்தான் தொடங்கும் என்பதை அவர்களுக்கு யார் சொல்வது? இது எங்கே போய் முடியப் போகிறதோ?

 பிரச்னை இத்துடன் முடிகிறதா அதுதான் இல்லை. மதுவுக்கு அடிமையாகி வீட்டுக்கும், நாட்டுக்கும் கேடு உண்டாக்குபவர்களைத் தண்டிக்க வேண்டிய அரசு அவர்களுக்கு மேலும், மேலும் வசதிகளைச் செய்து கொடுப்பதுதான் இன்னும் வேதனை.

 ஓலை கொட்டகைக்கு கீழே அமர்ந்து சரக்கு அடிக்கும் ஏழைத் தொழிலாளியுடன், காரில் வந்து இறங்கும் பணம் படைத்தவர் அமருவாரா? அதற்குதான் எலைட் பார். அங்கு வசதியும் அதிகம், மதுபானத்திற்குக் காசும் அதிகம். அதனால் அரசுக்கு வருமானமும் அதிகம். அதன்மூலம் விலையில்லா பொருள்களை வாரி வழங்கவும் முடியும். அப்படி போகிறது கதை. நிலைமை கைமீறிச் செல்வது நான்றாகவே தெரிகிறது. கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்!




நன்றி: Dinamani

ஏழைகளை மேம்படுத்தாத பொருளாதாரம்!

ஏழைகளை மேம்படுத்தாத பொருளாதாரம்!

பொருளாதார வீழ்ச்சி குறித்து இந்திய அரசை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பொருளாதார அமைப்புகள் எச்சரித்துக் கொண்டிருக்கின்றன. மத்திய புள்ளியியல் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள தகவலின்படி, 2011-12-ஆம் ஆண்டுக்கான கடைசி காலாண்டின் வளர்ச்சி 5.3% ஆகும். இது, முந்தைய காலாண்டில் இருந்த 6.1 சதவிகிதத்தைக் காட்டிலும் மிகக் குறைவாகும். கடந்த ஆண்டின் இதே காலாண்டில் இருந்த 9.2 சதவிகிதத்தோடு ஒப்பிடுகிறபோது, இது மிக மிக மோசமான ஒன்றாகும். இந்த ஆண்டின் மொத்த வளர்ச்சியே 6.5% ஆகத்தான் இருக்குமென்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 8 ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவாகும். பொருளாதாரத்தின் முக்கிய 3 பிரிவுகளான விவசாயம், பொருளுற்பத்தி, சேவைத் துறைகள் சிறப்பாகச் செயல்படவில்லை என மத்திய புள்ளியியல் நிறுவனம் தெரிவிக்கிறது.

 நிகழாண்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 6.9% ஆக இருக்கும் என உலக வங்கி சற்று கூடுதலாகக் கூறியிருந்தாலும், 2012-13-ஆம் ஆண்டுக்கான வளர்ச்சி 7.2% ஆகத்தான் இருக்குமென அது கூறுகிறது. முன்னதாக, 8.5% ஆக இருக்குமென அதே உலக வங்கி கணித்திருந்தது. இன்னொரு விதத்தில் சொல்வதெனில், வரும் ஆண்டுகளில் பொருளாதார மந்த நிலை தொடரும் என அது சுட்டிக்காட்டுகிறது.

 அமெரிக்காவைச் சேர்ந்த கடன் மதிப்பீட்டு நிறுவனமான ஸ்டாண்டர்டு அண்ட் பூவர் (எஸ்&பி), இந்திய பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள மந்த நிலையையும் கொள்கை முடிவுகள் எடுப்பதில் உள்ள அரசியல் தடைகளையும் சுட்டிக்காட்டி, முதலீட்டுத் தர மதிப்பீடான "பிபிபி'யை இந்தியா இழக்கக்கூடும் என எச்சரித்துள்ளது. 2007-இல் முதலீட்டு தர மதிப்பீட்டிற்கு இந்தியா உயர்த்தப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவுக்கு "நிலைத்தன்மை' என்பதிலிருந்து "எதிர்மறை' என்ற தர மதிப்பீடு தரப்பட்டது. எஸ்&பி நிறுவனம் "ஏஏஏ' என்பதிலிருந்து "டி' வரை பல்வேறு தர மதிப்பீடுகளை வைத்திருக்கிறது. ஒரு நாடு "ஏஏஏ' தர மதிப்பீடு பெற்றிருந்தால், அந்த நாடு சிறப்பான பொருளாதார வல்லமை கொண்டிருக்கிறது என்று பொருள். பொருளாதார முட்டுக்கட்டை தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் செயல்பாடு குறித்தும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத பிரதமரான மன்மோகன் சிங் குறித்தும் எஸ்&பி நிறுவனம் விமர்சித்துள்ளது.

 எஸ்&பியின் கருத்துகளால் மத்திய அரசு உண்மையிலேயே துவண்டுபோனது. இது இயற்கைதான். அரசின் செய்தித் தொடர்பாளர்கள் அந்த அமைப்பின் தர மதிப்பீட்டு கணக்கீட்டு முறையை விமர்சித்தனர். அத்துடன் அதன் கணக்கீட்டு முறை வெளிப்படைத் தன்மையுடன் இல்லை என்றும் அவர்கள் குறை கூறினர். அந்த நிறுவனத்தின் மதிப்பீடு நமது பொருளாதாரத்தின் அசலான தன்மையை மாற்றிவிடப் போவதில்லை என்பது உண்மைதான். ஆனால், துரதிருஷ்டவசமாக உள்நாட்டுப் பொருளாதாரத்தை அன்னிய சக்திகள் பாதிக்கும் விதத்திலேயே நமது பொருளாதாரத்தை நாம் இதுவரை நடத்தி வந்திருக்கிறோம்.

 குறிப்பாக, நெருக்கடி மிக்க காலகட்டமான 1990-91 ஆம் ஆண்டில் கடன் தர மதிப்பீட்டு நிறுவனங்களின் பங்கை மறப்பது மிகக் கடினம். அப்போது பணவீக்கம் 17%ஆக கொடிகட்டிப் பறந்தது. நிதி நிலை படுமோசமாக இருந்தது. அன்னியச் செலாவணிக் கையிருப்பு வற்றிப் போயிருந்தது. ஒரு சில வாரங்களுக்கு முக்கியமான இறக்குமதியை சமாளிக்கும் அளவுக்கே இருப்புகள் இருந்தன. இதனால், இந்தியாவுக்கு வழங்கியிருந்த தர மதிப்பீட்டை அந்த நிறுவனங்கள் மிக மோசமாகக் குறைத்தன. விளைவு, வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் தங்கள் வைப்புகளையும் முதலீடுகளையும் திரும்பப் பெறத் தொடங்கினர். வெளியிலிருந்து கடன் வாங்குவது கடினமாயிற்று. இதைத் தொடர்ந்து இந்திய ரிசர்வ் வங்கி தன் வசமிருந்த தங்கத்தை வெளிநாட்டு வங்கிகளில் அடமானம் வைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.

 ஆனால், அந்த அளவுக்கு இப்போதைய நிலை மோசமில்லை. மக்களின் பொருளாதார மேம்பாடு என்பது புறக்கணிக்கப்பட்டதாகவே உள்ளது. முக்கிய காரணிகளான வளர்ச்சி, பற்று மிகுதி ஆகியன மக்களின் வாழ்க்கையில் எந்த பாதிப்பையும் உருவாக்கவில்லை.

 பெரும்பாலான மக்களின் வாழ்நிலை அப்படியே உள்ளது. வளர்ச்சி அதிகமாக உள்ளது என்று கூறிய காலத்திலும் இந்த நிலைதான் தொடர்ந்தது.

 1990-ஆம் ஆண்டிலிருந்து வளர்ச்சி ஆரம்பமானது. ஆண்டுவாரியாக இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வருமாறு: 
1991-92 - 1.4%,
1992-93 - 5.4%, 
1993-94 - 5.7%, 
1994-95 - 6.4%, 
1995-96 - 7.3%, 
1996-97 - 8%, 
1997-98 - 4.3%, 
1998-99 - 6.7%, 
1999-2000 - 7.6%, 
2000-01 - 4.3%, 
2001-02 - 5.5%, 
2002-03 - 4%, 
2003-04 - 8.1%, 
2004-05 - 7%, 
2005-06 - 9.5%, 
2006-07 - 9.6%, 
2007-08 - 9.3%, 
2008-09 - 6.7%, 
2009-10 - 8.4%, 
2010-11 - 8.4%.

 வளர்ச்சி விகிதம் உயர்வாய் இருந்தபோதும், ஏழைகள் ஏழைகளாகவே இருந்தனர். உதாரணமாக, உணவு தானிய உற்பத்தியில் பெரும் வளர்ச்சியை எட்டிவிட்டதாகக் கூறிக் கொள்கிறோம். 2010-11-இல் 24.5 கோடி டன்கள் உணவு தானிய உற்பத்தி எட்டப்பட்டது. 1950-ஆம் ஆண்டோடு ஒப்பிடுகிறபோது இது 5 மடங்கு அதிகம். ஆனால், இந்த உற்பத்தியை மக்கள்தொகைப் பெருக்கத்துடன் ஒப்பிடும்போது, இது ஒரு வளர்ச்சியே அல்ல. பெரு வளர்ச்சிக்கு முந்தைய ஆண்டான 1991-இல் ஒரு தனி நபரின் தானிய நுகர்வு ஒரு நாளுக்கு 510.1 கிராம் ஆக இருந்தது. ஆனால், இது படிப்படியாகக் குறைந்து 2010-இல் ஒரு தனிநபரின் தானிய நுகர்வு 438.6 கிராம் என்றானது. அதாவது, நமது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி அதிக அளவாக இருப்பதாகக் கூறிக்கொண்ட காலங்களில் தனிநபர் தானிய நுகர்வு வீழ்ச்சியடைந்திருந்தது.

 உணவு தானியம் கிடைப்பது மட்டுமின்றி மக்களின் வாங்கும் திறனும் குறைந்துள்ளது. பசி நிறைந்த ஒரு நாட்டின் கிட்டங்கிகளில் உணவு தானிய சேமிப்பு மட்டும் அதிக அளவில் இருந்தது.

 உயர் வளர்ச்சி விகிதம் வேலைவாய்ப்பை அதிகரிக்கவில்லை. இன்னமும் 50 சதவிகித வேலைவாய்ப்பைக் கொண்டிருக்கும் அமைப்புசாராப் பிரிவான விவசாயம் திருப்திகரமாக இல்லை. 1995-2000 ஆண்டுகளுக்கு இடையில் 2.65 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

 விவசாயத்தின் நிலை இன்றைக்கு எப்படி உள்ளது என்பதற்கு இதைக் காட்டிலும் வேறு சான்று தேவையில்லை. நெசவுத் தொழிலாளர்கள், கைவினைக் கலைஞர்கள் நிலையும் மோசமாகவே உள்ளது. நெசவுத் தொழிலாளர்களின் தற்கொலைச் செய்திகள் வந்துகொண்டேயிருக்கின்றன. விவசாயம், சிறு தொழில் பிரிவுகள் தொடர்ந்து மிக மோசமான நிலையிலேயே உள்ளன. வேலைவாய்ப்பைப் பெருக்காத இந்த வளர்ச்சி மக்களின் நலனை உறுதிப்படுத்தவில்லை. மாறாக செல்வமெல்லாம் ஒரு சில இடங்களில் மட்டுமே சேர்வதற்கு வழிவகுத்தது. ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி உயர்வால் மக்களின் வாழ்க்கைத் தரத்தில் மேம்பாடு ஏற்பட்டதற்கான ஆதாரம் எதுவுமில்லை.

 வேலைவாய்ப்புகள் தரமுள்ளவை என்றும் அதன் பணியாளர்கள் கூடுதல் சம்பளம் பெறுகிறார்கள் என்றும் பணிச்சூழல் சிறப்பாக உள்ளது என்றும் கருதப்படுகிற அமைப்புசார்ந்த துறைகளிலும் வேலைவாய்ப்பு குறைந்திருக்கிறது அல்லது தேக்கம் நிலவுகிறது.

 1991-இல் பொதுத் துறையில் 1.9 கோடி வேலைவாய்ப்புகளும் தனியார் துறையில் 76 லட்சம் வேலைவாய்ப்புகளும் இருந்தன. 2010-இல் பொதுத்துறையில் 1.78 கோடி வேலைவாய்ப்புகளும் தனியார் துறையில் 1.07 கோடி வேலைவாய்ப்புகளும் இருந்தன.

 விரிவடைந்துவரும் பொருளாதாரத்தில், அது விரிவடையும் அளவுக்கு வேலைவாய்ப்புகளும் பெருக வேண்டும். துரதிருஷ்டவசமாக அவ்வாறு பெருகவில்லை. 1991-இல் பொதுத்துறையில் 1.9 கோடியாக இருந்த வேலைவாய்ப்பு 2010-இல் 1.78 கோடியாகக் குறைந்தது. கிட்டத்தட்ட 12 லட்சம் வேலைவாய்ப்புகள் குறைந்துபோயின. 1991-ஆம் ஆண்டில் பொதுத் துறையையும் தனியார் துறையையும் சேர்த்து மொத்தமாக 2.67 கோடி வேலைவாய்ப்புகள் இருந்தன. 2010-ஆம் ஆண்டு இரு துறைகளிலும் மொத்தமாக 2.86 கோடி வேலைவாய்ப்புகள் இருந்தன. ஆக, 1991 முதல் 2010 வரையிலான 20 ஆண்டு காலகட்டத்தில் 19 லட்சம் வேலைவாய்ப்புகளே பெருகியுள்ளன. 121 கோடி மக்கள்தொகை கொண்ட ஒரு நாட்டுக்கு இது கடலில் கரைத்த பெருங்காயம் போன்றதாகும். வேலைவாய்ப்பில் அமைப்புசார்ந்த துறைகளின் பங்களிப்பு 7% மட்டுமே. இதன் பொருள், நமது பொருளாதார வளர்ச்சி மக்களின் வாழ்நிலையை மேம்படுத்தவில்லை என்பதுதான்.

 2012 ஜூன் 1-ஆம் தேதிப்படி நமது அன்னியச் செலாவணி கையிருப்பு 285 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். இறங்குமுகத்தில் இருக்கும் இறக்குமதியை அடுத்த 7 மாதங்களுக்கு சமாளிப்பதற்கு இந்தக் கையிருப்பு போதுமானது. 2011 ஜூன் மாதம் நமது அன்னியச் செலாவணி கையிருப்பு 312 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. (ஒரு பில்லியன் என்பது 100 கோடி ஆகும்). அதாவது 27 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதிகமாக இருந்தது. இந்தக் கையிருப்புகளெல்லாம் ஏற்றுமதியால் ஈட்டப்பட்டவை அல்ல. ஏற்றுமதியைக் காட்டிலும் நமது இறக்குமதி அதிகம். இது மோசமான பற்று இருப்பு நிலைக்கு நம்மை இட்டுச் சென்றது.

 2010-11-ஆம் ஆண்டுக்கான வர்த்தகப் பற்றாக்குறை 130.60 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். நிகழாண்டுப் பற்றாக்குறை 45.9 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். இது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் 2.7 சதவிகிதத்துக்கு சமமாகும். சமீபத்திய மதிப்பீட்டின்படி 2011-12-ஆம் ஆண்டுக்கான நடப்புக் கணக்குப் பற்றாக்குறை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் 4 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

 அதிக இறக்குமதிக்கு குறைந்த ஏற்றுமதி திறனே தேவைப்படும். இது வெளிநாட்டுக் கரன்சிகளின் தேவையை அதிகரிக்கும். ஆனால், இந்திய ரூபாயின் மாற்று மதிப்பு இறங்குமுகமாகவே உள்ளது. 2011 ஜூன் மாதம் ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 45 ஆக இருந்தது. 2012 ஜூன் மாதம் ரூபாயின் மதிப்பு 56ஆக வீழ்ச்சியடைந்தது.

 அத்துடன் கடுமையான விலைவாசி உயர்வால் மக்கள் படாதபாடு படுகின்றனர். 2012 மே மாதம் பணவீக்க அளவு 7.55 சதவிகிதத்தைத் தொட்டது. இதன் பொருள் "திருவாளர் பொதுஜனத்தின்' மீதான சுமை பல்வேறு வழிகளில் அதிகரித்து வருகிறது என்பதாகும்.

 துரதிருஷ்டவசமாக பொருளாதாரத்தை நிலைநிறுத்த அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகள் எதுவும் மக்களுக்கு நிவாரணம் தரக்கூடியதாக இல்லை. மாறாக, அவை நிலைமையை மேலும் மோசமாக்கியது. உதாரணமாக, பணவீக்கம் பிரச்னையாக இருந்த அதே காலத்தில் பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தின.

 ஏழைகளும் நடுத்தர மக்களும் நிவாரணம் பெறுவதற்கான உத்திகளை அரசு வகுக்க வேண்டும். முன்னேற்றத்தின் பங்காளிகளாக மக்கள் இருக்கவேண்டும் என்ற கொள்கையை அரசு மேற்கொள்ளாதவரை இந்த நாடு மற்றும் மக்களின் பொருளாதாரப் பிரச்னையைத் தீர்க்க முடியாது. ஆனால், அத்தகைய நடவடிக்கை எடுப்பதற்கான ஆசையோ தொலைநோக்கோ அரசிடம் இருப்பதாகத் தெரியவில்லை.




நன்றி: Dinamani

தேர்தலே அரசியலாகவும், தேர்தலே ஜனநாயகமாகவும்

தேர்தலே அரசியலாகவும், தேர்தலே ஜனநாயகமாகவும்

இந்திய ஊடகங்களில் அதுவும் குறிப்பாக, தொலைக்காட்சிகளில் ஆக்கிரமிப்பு செய்யக்கூடிய இரண்டு பிரச்னைகள் தேர்தல்கள் மற்றும் தேர்தல்களில் வெற்றி தோல்விகளைத் தீர்மானிக்கும் காரணிகள். இந்த இரண்டும் நம் ஊடகங்களைக் குறிப்பாக, தொலைக்காட்சியை ஆக்கிரமித்துக் கொள்கின்றன.

இந்த இரண்டு பிரச்னைகளைப் பற்றி விவாதம் செய்ய நமக்கு நிறையக் கருத்தாளர்கள் தொலைக்காட்சி நிலைய அரங்குகளுக்குப் படையெடுக்கக் காத்திருக்கிறார்கள். எனவே, தொடர்ந்த விவாதம் ஓய்வின்றி நடைபெற்று வருகிறது.

கருத்தாளர்கள் பேசும்போது இந்திய சமூகத்தின் வேறுபாடுகளையும், வித்தியாசங்களையும், ஏற்றத்தாழ்வுகளையும் வைத்துக்கொண்டு உலக அறிஞர்கள் வியக்கும்வண்ணம் விவாதங்களைச் செய்கின்றார்கள். யார் வெற்றி பெறுவார்? எந்தக் கட்சிக்குக் கூடுதல் ஓட்டுகள் கிடைக்கும்? ஏன் ஊழலால் தோற்ற கட்சி மீண்டும் வெற்றி பெற்றது? தேர்தலில் பங்கு பெற்ற கட்சிகள் வாக்குகளை இழந்தது எப்படி? வாக்குகளை அதிகரித்துக்கொண்டது எப்படி போன்ற பல விவாதங்களை முன் வைப்பார்கள் நம் கருத்தாளர்கள்.

ஒருவிதத்தில் பார்த்தால் மக்களாட்சிக்கு இப்படிப்பட்ட ஆழமான விவாதங்கள் தேவைதான். ஆனால், அதே வேகத்தில் மக்கள் மேம்பாடு, சமூகத்தை ஜனநாயகப்படுத்துதல் இவற்றில் உள்ள சிக்கல்கள் பற்றி அறிவார்ந்த விவாதங்கள் நம் ஊடகங்களைக் குறிப்பாக எல்லாத் தொலைக்காட்சிகளையும் ஆக்கிரமிப்பது கிடையாது. எனவே, ஊடகங்களை ஆட்டிப்படைப்பது நம் தேர்தல்கள்தான். இதற்கான காரணங்கள் என்னென்ன என்பதைப் பற்றி ஒரு தெளிவான பார்வையை நாம் கொண்டிருக்க வேண்டும்.

இந்தியாவில் ஆண்டுதோறும் தேர்தல்கள் நடந்தவண்ணம் இருக்கின்றன. ஒவ்வோராண்டும் ஒரு சில மாநிலங்களில் தேர்தல் நடக்கின்றபோது, நம்முடைய ஊடகங்கள், இந்த ஆண்டு நடைபெறும் தேர்தல்கள் இந்திய அரசியலில் ஒரு திருப்புமுனையை மற்றும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று வாதம் செய்வது உண்டு. அதேபோல் இந்த ஆண்டு இந்த ஐந்து மாநிலத் தேர்தல் களம் மிகப்பெரிய மாற்றங்களைத் தேசிய அரசியலிலும் மாநில அரசியலிலும் செய்யப் போகின்றன என்ற வாதத்தை வலுவாக வைத்து ஊடகங்களில் கருத்துகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

அதுவும் குறிப்பாக, உத்தரப் பிரதேசத் தேர்தல் என்பது இந்திய அரசியலைத் திருப்பிப் போடும் சக்தி கொண்டது என்று விவாதித்தனர். இந்த ஆண்டுக்கான தேர்தல்களின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஆட்சிகள் அமைக்கப்பட்டுவிட்டன. அடுத்து குடியரசுத் தலைவர் தேர்தல், அதைத்தொடர்ந்து குடியரசுத்துணைத் தலைவர் தேர்தல் என இந்த ஆண்டிலேயே அடுத்தடுத்து தேர்தல்கள் வரக் காத்திருக்கின்றன.

அடுத்த ஆண்டு பத்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. 2014-ஆம் ஆண்டில் ஏழு மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து அதே ஆண்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற்றாக வேண்டும். இந்தத் தேர்தல் முன்கூட்டியே வந்தாலும் வரலாம் என்று ஆரூடமும் சொல்லப்படுகிறது.

2015-ஆம் ஆண்டு மூன்று மாநிலங்களுக்குத் தேர்தலும் 2016-இல் ஐந்து மாநிலங்களுக்குத் தேர்தலும் நடைபெற்றாக வேண்டும். இப்படி ஆண்டுதோறும் கிராமங்களில் கோயில் திருவிழாக்கள்போல் நம் நாட்டில் தேர்தல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. இத்துடன் உள்ளாட்சித் தேர்தல்கள் வேறு சேர்ந்து கொள்கின்றன. அத்துடன் இடைத்தேர்தல்களும் நடந்து கொண்டுள்ளன. ஆகையால், ஆண்டுதோறும் தேர்தல்கள்தான் அரசியலில் பிரதானப்படுத்தப்படுகின்றன. அடிப்படையில் நம் மக்களாட்சியில், பிரதிநிதித்துவ அமைப்பில் பல சிக்கல்கள் உள்ளன.

உத்தரப்பிரதேசத்தில் இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்ற சமாஜ்வாதிக் கட்சி பெற்ற வாக்குகள் என்பது 29.5 மட்டும்தான். பெறுகின்ற வாக்குகளுக்கும், வெற்றி பெறுகின்ற தொகுதிகளுக்கும் தொடர்பு கிடையாது.

1967-இல் தமிழகத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வாங்கிய வாக்குகள், தி.மு.க.வைவிட அதிகம். ஆனால், வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்த கட்சி தி.மு.க. நாம் இந்த அடிப்படையைச் சீர்செய்யவில்லை என்றால் இந்தியாவில் ஆளும் கட்சிகள் அனைத்தும் ஓட்டு வாங்குவதில் சிறுபான்மை ஆதரவு பெற்ற கட்சிகளாகிவிடும் அவலம் தொடரக்கூடும். அப்படிப்பட்ட சூழ்நிலை, பெருவாரியான மக்களின் கருத்தையும், உணர்வையும் பிரதிபலிக்காத அரசு அமைவதைத்தான் ஊக்குவிக்கும்.

நம் கருத்தாளர்களின் விவாதங்கள் இதுபோன்ற அடிப்படைப் பிரச்னைகளுக்குச் செல்ல மறுக்கின்றன என்பதுதான் எதார்த்தமான உண்மை.

ஆண்டுதோறும் இப்படித் தேர்தல்கள் நடக்கிறபோது இப்படிப்பட்ட வாதங்கள் வருவது உண்மைதான். இருந்தபோதிலும் இந்தத் தேர்தலை வைத்து, தேர்தலில் கிடைக்கும் வெற்றி தோல்விகளை வைத்து விவாதம் செய்து மக்கள் மத்தியில் தேர்தல்தான் மக்களாட்சி என்ற பிரமையை நம்முடைய ஊடகங்கள் செய்துவிட்டன. இது ஒரு கருத்து மோசடி என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு நாட்டில் தேர்தல் நடக்கும்போது மட்டும்தான் தேர்தல் அரசியல், தேர்தல் முடிந்தவுடன், மேம்பாடுதான் அரசியலாக இருக்க வேண்டும்.

ஆனால், நம் நாட்டில் தேர்தலே அரசியலாகவும், தேர்தலே ஜனநாயகமாகவும் மாறிவிட்டது என்பதுதான் வேதனை. தேர்தல் என்பது மக்களாட்சியின் ஓர் அம்சம் என்பதை யாரும் மறுக்க இயலாது. அதுமட்டுமல்ல, அதுதான் மக்களாட்சியின் நுழைவாயில் என்பதிலும் எந்தச் சந்தேகமும் இல்லை. ஒருமுறை கனடா நாட்டு மாணவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது இந்தியாவைப் பற்றி ஒரு கேள்வி எழுப்பினார்கள்.

இந்தியாவில் தேர்தல்கள் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்த அளவுக்கு மக்களாட்சியின் மற்ற அம்சங்கள் மற்றும் கூறுகள் ஏன் பிரபலமடையவில்லையே என்பதுதான் அவர்கள் எழுப்பிய கேள்வி. அத்துடன் இன்னொரு கேள்வியையும் கேட்டார்கள். மேற்கத்திய நாடுகள் ஏன் இந்தியாவை மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று புகழ்கின்றன என்பதுதான் அடுத்த கேள்வி.

மேற்கத்திய நாடுகள் இந்தியாவைப் புகழ்வதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று பொதுத்தேர்தல்களைத் தொடர்ந்து நடத்துவதற்காக. இரண்டு, ஆட்சியை வென்ற கட்சியிடம் தேர்தலில் தோற்றுப்போன கட்சி எந்தவித முரண்டும் பிடிக்காமல், ஜனநாயக ரீதியாக மக்கள் அளித்த தீர்ப்பை மதித்து ஏற்றுக்கொண்டு ஆட்சியை ஒப்படைப்பதற்காக. இவைகளையே சாதனைகளாகக் காண்பித்து, காண்பித்து அரசியல்வாதிகளும் நம் கருத்தாளர்களும் மக்களிடம் தேர்தல்தான் ஜனநாயகம் என நம்ப வைத்து விட்டனர்.

ஆனால், மக்களாட்சியின் மாண்புறு கூறுகளான மற்றவர்களைச் சமமாகப் பாவித்து நடத்தும் மனோபாவம், சகோதரத்துவம், நியாயம், நேர்மை, பொதுஒழுக்க நியதிகள், சட்டத்தின்படி ஆட்சி, மாற்றான் கருத்தை மதித்தல், கருத்துகளின் வலிமையின் அடிப்படையில் முடிவெடுத்தல் போன்ற எண்ணற்ற அம்சங்களை இன்று இந்தியா பின்பற்றுவதே கிடையாது.

இதன் அடிப்படையான காரணம் தேர்தல் என்பது நிறுவனம் சார்ந்தது. ஆகையால் அதை நடத்துவதில் மிகப் பெரிய சிக்கல்கள் இல்லை. ஆகையால், தொடர்ந்து நடத்திக்கொண்டே இருக்கிறோம்.

அதேநேரத்தில், பல தவறான அணுகுமுறைகள் பயன்படுத்தப்பட்டுத் தேர்தல் வெற்றி தோல்விகள் நிர்ணயிக்கப்படுகின்றன. உதாரணத்திற்கு, ஹரியாணாவில் நடந்த மேஹம் இடைத்தேர்தலும், திருமங்கலம் இடைத்தேர்தலும், அதை வழியொற்றி நடத்தப்படும் பல இடைத்தேர்தல்களும். தவறுகளின் மூலம் வெற்றி நிர்ணயிக்கப்பட்டு ஜனநாயக அமைப்புகளைக் கைப்பற்றி நடத்தப்படும் ஆட்சி மட்டும் எப்படி நியாயமாக நடக்கும் என்று எதிர்பார்ப்பது?

இன்னொரு கேள்வியும் எழுகிறது. இங்கே சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது என்பதைவிட ஆளும் கட்சி வைத்ததுதான் சட்டம் என்பதாகத்தான் ஆட்சி நடத்தப்படுகிறது என்பதும் உண்மைதானே?

அதாவது மக்களாட்சியில் உள்ள மற்ற அம்சங்கள் அனைத்தும் மக்களின் நடத்தை மற்றும் மனோபாவம் சார்ந்தது. மக்கள் விழிப்புணர்வு அடைந்து, மக்களாட்சி பற்றி அறிவுபெற்று தெளிவடையாதவரை இந்த மக்களாட்சி சூது செய்வோர் கையில்தான் அகப்பட்டு சிக்கிச் சீரழியும். ஆனால், மக்கள் விழிப்புணர்வடைய, விழிப்புணர்வடைய இந்தச் சூழல் மாறும் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. ஏனென்றால், இந்த மக்களாட்சியைவிடச் சிறந்த அமைப்பை உலகத்தில் இதுவரை நம்மால் உருவாக்க முடியவில்லை.

இதைத்தான் சர்ச்சில் மக்களாட்சியைப் பற்றிக் கூறும்போது, இது ஒரு மோசமான ஆட்சி முறைதான். ஆனால், இதைவிடச் சிறந்த ஒரு ஆட்சி முறையை இதுவரை மானுடம் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆகையால்தான் இதை நாம் கடைப்பிடிக்க வேண்டியுள்ளது என்றார். எனவே இந்த அமைப்பை வைத்துக் கொண்டுதான் நாம் முன்னேறிச் செல்ல வேண்டும். இதற்கு மேல் நமக்கு வழியில்லை.

அந்த நிலையில் நாம் யோசிக்கின்றபோது மக்களை மக்களாட்சிக்குத் தயார் செய்வதுதான் நம் தலையாயக் கடமை.

இன்று நமக்கு என்ன சிக்கல் என்றால், இந்த மக்களாட்சிக்கு மக்களைத் தயார் செய்யும் பணியில் மிக முக்கியமாகப் பணியாற்ற வேண்டிய அரசியல் கட்சிகளை ஜனநாயகப்படுத்துவது என்பதே மிகச் சிக்கலாக இருக்கிறது. இன்னும் நாம் நம் நாட்டில் அரசியல் கட்சிகளையே ஜனநாயகப்படுத்த முடியவில்லை. இந்தச் சூழலில் நாம் நம் சமூகத்தை ஜனநாயகப்படுத்துவது பற்றி இன்று விவாதிக்க வேண்டியுள்ளது. ஆனால், நம் ஊடகங்கள் இந்தத் தேர்தலுக்குள்ளேயே சிக்கிக் கொண்டுள்ளன. அதைத் தாண்டி வெளியேறி சமூகத்தை ஜனநாயகப்படுத்துவதைப் பற்றி விவாதிக்க முன்வரவில்லை. முன்வர முடியவில்லை.

நம்முடைய அரசியல் கட்சிகள் ஒரு சில தவிர்த்து இன்னும் மன்னராட்சி போலவே செயல்பட்டு, பிரபுத்துவ மனோபாவத்துடன் மக்கள் மத்தியில் செயல்பட்டு இன்று அவை செயல்படுவதையே மக்களாட்சி என்று மக்களை நம்ப வைத்துக் கொண்டிருக்கின்றன. எனவே, இந்தத் தேர்தலை வைத்து சூதாடுவதிலிருந்து வெளியேற வேண்டும். ஆகையால் அதை நாம் அடிப்படையில் சீர் செய்தாக வேண்டும்.

இந்தியத் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் தேர்தல் என்பது மிகப்பெரிய கெடுபிடிகளுக்குள் சமீபகாலமாக நடைபெறுகிறது. தேர்தலையே மிகப்பெரிய முறைகேடுகளின் மூலமாக நடத்தியதன் விளைவாகத்தான் இத்தகைய கெடுபிடிகளை நம் தேர்தல் ஆணையம் விதிக்க வேண்டியுள்ளது.

இந்தச் சூழலிலிருந்து விடுபட ஒன்று, இந்தியத் தேர்தல் ஆணையமும், மாநிலத் தேர்தல் ஆணையமும் ஒன்றிணைக்கப்படல் வேண்டும். ஒரே விதிமுறைகள்தான் தேர்தலுக்கு என்று கொண்டு வந்துவிட வேண்டும். கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் பதவியிலிருந்து குடியரசுத் தலைவர் பதவிவரை ஒரே மாதிரியான விதிகளைப் பின்பற்ற வேண்டும். மாநிலத் தேர்தல் ஆணையம் என்பது மத்திய தேர்தல் ஆணையத்தின் பகுதியாக இருக்க வேண்டும்.

அடுத்து ஒரே நேரத்தில் மக்களவைக்குத் தேர்தல் நடத்துவதுபோல் ஒரே நேரத்தில் நாடு முழுவதும் உள்ள சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடத்திட வேண்டும். அதேபோல் அனைத்து மாநிலங்களிலும் உள்ள உள்ளாட்சிகளுக்கும் தேர்தல் நடத்திட வேண்டும். கிராம சபை கூட்டத்துக்கு நான்கு தினங்கள் தேதி குறிப்பிடப்பட்டிருப்பதுபோல், அரசியல் சாசனச் சட்டத்திலேயே தேர்தலுக்கான தேதிகள் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

ஒரே ஆண்டில் குடியரசுத் தலைவர் பதவி, குடியரசுத் துணைத் தலைவர் பதவி, மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் அனைத்தும் முடித்துவிட வேண்டும். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மேம்பாடு மற்றும் முன்னேற்றம் இவைதான் பிரதானப்படுத்தப்பட வேண்டும்.




நன்றி: Dinamani