இந்தியாவிலுள்ள 1,382 சிறைச்சாலைகளில் அதிகபட்சம் 3,33,782 கைதிகளைத் தங்க வைக்கலாம். ஆனால் 3,72,296 கைதிகள் இருப்பதாகக் கூறுகிறது குற்றவியல் ஆவணக் காப்பகம் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரம். அளவுக்கு அதிகமான கைதிகள் சிறையில் அடைக்கப்படும்போது, அவர்களுக்கான அடிப்படை வசதிகளைச் செய்துதர முடியாத சூழல் ஏற்படுவதும், முறையான பாதுகாப்பு வசதிகளைச் செய்யமுடியாத நிலைமை ஏற்படுவதும் தவிர்க்க முடியாதது.
சிறைகளில் கைதிகளாக அடைக்கப்பட்டிருக்கும் 3,72,296 பேரில் 3,56,902 பேர் ஆண்கள். 16,024 பேர் பெண்கள். இதில் ஆயுள் தண்டனைக் கைதிகளாக இருக்கும் 68,935 கைதிகளில், 66,199 ஆண்களும், 2,736 பெண்களும் இருக்கிறார்கள். 4,959 பெண்கள் உள்ளிட்ட தண்டனைக் கைதிகளின் எண்ணிக்கை 1,28,593 என்றால் 10,934 பெண்கள் உள்ளிட்ட விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கை 2,41,200. 2,020 தண்டனைக் கைதிகளும், 3,601 விசாரணைக் கைதிகளும் வெளிநாட்டவர்கள்.
தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு இன்னும் தண்டனை நிறைவேற்றப்படாமல் இந்தியச் சிறைச்சாலைகளில் இருக்கும் 477 கைதிகளில் 465 பேர் ஆண்கள், 12 பேர் பெண்கள். இவர்களில் 174 பேர் உத்தரப் பிரதேசத்திலும், 61 பேர் கர்நாடகத்திலும், 50 பேர் மகாராஷ்டிரத்திலும், 24 பேர் தில்லியிலும் எப்போது தங்களுக்குத் தண்டனை விதிக்கப்படும் என்று தெரியாமல் காத்திருக்கிறார்கள்.
இந்தியாவிலேயே அதிகமான அளவு கைதிகள் உத்தரப் பிரதேசத்தில்தான் காணப்படுகிறார்கள். அங்கே உள்ள 64 சிறைச்சாலைகளில் மட்டும் 82,383 கைதிகள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அடுத்த இடத்தில் இருப்பது மத்தியப் பிரதேசம். பிகார் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இந்தியாவிலேயே அதிக சிறைச்சாலைகள் (215) உள்ள மாநிலமான மகாராஷ்டிரம் கைதிகளின் எண்ணிக்கையில் நான்காவது இடத்தில்தான் இருக்கிறது.
வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால், பல்வேறு சிறைகளில் தங்கள் தாயுடன் 1,729 குழந்தைகளும் அடைபட்டுக் கிடப்பதுதான். இதில் 440 குழந்தைகள், குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை அனுபவிக்கும் 383 தண்டனைக் கைதிகளின் குழந்தைகள். ஆனால், ஏனைய 1,289 குழந்தைகளின் 1,177 தாய்மார்கள் விசாரணைக் கைதிகள். விசாரணை முடிந்து இவர்கள் நிரபராதிகள் என்று நிரூபிக்கப்பட்டாலும், சிறைச்சாலை நினைவுகள் அந்தக் குழந்தைகளின் பிஞ்சு மனதில் பாதிப்பை ஏற்படுத்தாது என்பது என்ன நிச்சயம்?
கடந்த ஆண்டில் மட்டும் 43 பெண்கள் உள்பட 1,332 கைதிகள் சிறைச்சாலையில் மரணமடைந்திருக்கிறார்கள். இதில் 1,244 மரணங்கள் இயற்கையானவை. இயற்கை மரணமல்லாத பட்டியலில் முதலிடம் வகிப்பது தமிழகம்தான். தமிழக சிறைச்சாலைகளில் கடந்த ஆண்டில் நடந்த 15 மரணங்களில் 13 மரணங்கள் தற்கொலைகள் என்றும், ஒருவர் இன்னொரு கைதியால் கொல்லப்பட்டார் என்றும், ஒருவர் "இன்ன காரணம் என்று கூற முடியாத மரணம்' என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சம், விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதுதான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் 2,04,480 ஆக இருந்த விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கை இப்போது 2,41,200 ஆக அதிகரித்திருக்கிறது. இதில் சில விசாரணைக் கைதிகள் ஐந்து ஆண்டுகளுக்கும் அதிகமாகச் சிறைச்சாலைகளில் தங்கள் வாழ்நாளைக் கழித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் குற்றவாளிகளா, நிரபராதிகளா என்று விசாரித்துத் தீர்ப்புக் கூறுவதில் ஏற்படும் தாமதம்தான் இந்த நிலைமைக்குக் காரணம்.
இதுபோல, தீர்ப்பு வழங்கப்படாமல் விசாரணைக் கைதிகளாக இருப்பவர்களின் எண்ணிக்கை பிகாரிலும், உத்தரப் பிரதேசத்திலும்தான் மிக அதிகமாக இருப்பதைப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பிகார், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் மட்டும் ஏறத்தாழ ஒரு லட்சம் பேர் "விசாரணைக் கைதிகள்' என்ற பெயரில் அடைபட்டுக் கிடக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலோர் தவறு செய்யாமல் மாட்டிக்கொண்ட அப்பாவிகளாகவும், தங்களுக்காக வழக்கு நடத்த வழியில்லாத ஏழைகளாகவும் இருக்கக்கூடும்.
ஏறத்தாழ 2 கோடி வழக்குகள் கீழமை நீதிமன்றங்களிலும், 35 லட்சம் வழக்குகள் மேலமை நீதிமன்றங்களிலும் தேங்கிக் கிடக்கின்றன. பல்வேறு நீதிமன்றங்களில் உள்ள கிரிமினல் வழக்குகளில் 6% வழக்குகளில் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படுகிறது. அதாவது, 94% வழக்குகளில் அப்பாவிகளோ, தகுந்த சாட்சியம் இல்லாமல் குற்றம் சாட்டப்பட்டவரோ விசாரணைக் கைதியாகக் காலத்தைக் கழித்த அவலம். உடனடி நீதி கிடைத்திருந்தால் அவர் சிறைச்சாலையில் தேவையில்லாமல் தமது வாழ்நாளை வீணாக்கி இருக்க வேண்டாம்.
1998 உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, உள்ளூர்வாசிதான் ஒருவருக்குப் பிணையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றாலும், பல கீழமை நீதிமன்றங்கள் கைதிகளை ஜாமீனில் விடுவதற்குத் தயங்குகின்றன. அதன் விளைவாக விசாரணைக் கைதிகளால் சிறைச்சாலைகள் நிரம்பி வழிகின்றன. தேவையில்லாமல், விசாரணைக் கைதிகளுக்கும் சேர்த்து அரசு செலவு செய்ய வேண்டிய நிலை. விரைவான நீதி உறுதி செய்யப்படாதவரை, சிறைச்சாலைகள் நிரம்பித்தான் வழியும். பலரது வாழ்க்கை வீணாகும். மக்கள் வரிப்பணமும்தான்...!