அரசு மானியங்களை மக்களுக்கு பணமாக வழங்கும் டைரக்ட் கேஷ் டிரான்ஸ்ஃபர் திட்டத்தை நிறுத்தி வைத்து தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவை மத்திய அரசுக்கு சாதகமான அதிர்ஷ்ட காற்று என்று கருத இடமிருக்கிறது. நல திட்டங்களின் மகுடமாக குறிப்பிடப்படும் இந்த திட்டத்தை முழுமையாக சோதித்து பார்த்து, ஓட்டைகளை கண்டுபிடித்து அடைத்த பிறகே செயல்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு செவிசாய்க்க மத்திய அரசுக்கு கிடைத்திருக்கும் நல்ல சந்தர்ப்பம் இது. இத்திட்டம் அமலுக்கு வரும்போது ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு ரூ.36,000 அன்பளிப்பு போல கிடைக்கும் என்கிறார்கள். குறைந்தபட்சம் ஐயாயிரம் என அதிகாரிகள் கூறுகின்றனர். 25 கோடி பேர் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்கின்றனர். இவர்களுக்காகவும் சற்று மேலே உள்ளவர்களுக்காகவும் மொத்த உற்பத்தியில் 14 சதவீதம் மானியமாக செலவிடப்படுகிறது. கெரசினை எடுத்துக் கொள்வோம். அதன் சந்தை விலை லிட்டருக்கு ரூ.50. ரேஷன் கடைகள் மூலம் ரூ.14க்கு விற்கப்படுகிறது. இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை மானியமாக ஆயில் கம்பெனிகளுக்கு அரசு வழங்குகிறது. அதில் நிறைய ஊழல். ரேஷன் கடை ஊழியர்கள் தொடங்கி உயர் அதிகாரிகள் வரை ஒரு புறமும், தேவைக்கு மேல் வாங்கி வேறு நபர்களுக்கு விற்கும் பயனாளிகள் ஒரு புறமுமாக முறைகேடு பரவலாக இருக்கிறது. எனவே, மக்களை சந்தை விலைக்கே வாங்கச் சொல்லிவிட்டு, மானியத்தை அவர்களின் வங்கி கணக்கில் செலுத்த அரசு தீர்மானித்துள்ளது. 'கிராமங்களில் வங்கி கிளைகள் கிடையாது; கிளை இருந்தாலும் மக்களுக்கு எழுத படிக்க தெரியாது; தெரிந்தாலும் வங்கியில் எடுக்கும் பணம் ஆண்களால் மது அருந்துதல் போன்ற செலவுகளில் கரைந்துவிடும்; மொத்தத்தில் இப்போது கிடைக்கும் மலிவு விலை கெரசினும் கிடைக்காமல் ஏழைகள் இருட்டில் கிடப்பார்கள்' என்று சிலர் கடுமையாக எதிர்க்கின்றனர்.
மாற்றத்தை விரும்பாதவர்கள் எப்போதும் இருக்கத்தான் செய்வார்கள். மானியங்களில் ஊழல் இருக்கட்டும். ஒரு ரூபாயை ஏழையின் கையில் சேர்க்க அரசு 9 ரூபாய் செலவிடுகிறது. அதில் பெரும்பகுதி அனாவசியமான நிர்வாக செலவுக்கு போகிறது. இதற்கெல்லாம் முடிவு கட்டியாக வேண்டும். இல்லையேல் பொருளாதார சீர்திருத்தம் என்பதற்கே அர்த்தம் கிடையாது.
No comments:
Post a Comment